நூல் அறிமுகம் – நாதுராம் கோட்சே -இரா.சண்முகசாமி

நூல் அறிமுகம் – நாதுராம் கோட்சே -இரா.சண்முகசாமி



வாசிப்பை நேசிப்போம்
Book Day
Puthagam Pesuthu

நூல்        : நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்.
ஆசிரியர்  : திரேந்திர கே.ஜா
தமிழில்     : இ.பா.சிந்தன்
வெளியீடு : எதிர் வெளியீடு
ஆண்டு      : ஜனவரி2023
பக்கம்         : 368 பக்கம்
ஆவணங்கள் : 32 பக்கம்

நூலின் வெற்றி ஆடம்பரமற்ற எழுத்துகளில் இருக்கிறது;
நூலின் வெற்றி எல்லாத் தகவல்களுக்கும் உரிய ஆதாரங்களைக் கொண்டுள்ளதில் இருக்கிறது;
நூலின் வெற்றி விறுவிறுப்பான திரைப்படம் ஓடும்போது நுனி நாற்காலியில் உட்கார்ந்து பார்ப்பது போன்ற கருத்துகளை கொண்டிருப்பதில் இருக்கிறது;
நூலின் வெற்றி மூலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யும்போது அதற்கான சுவடே தெரியாமல் மொழிப்பெயர்க்கப்பட்டதில் இருக்கிறது. பெரும் சிரத்தையோடு மொழிப்பெயர்த்து நமக்கு விருந்தளித்த #தோழர்இபாசிந்தன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இப்படி ஏராளமான வெற்றிகளைக் கொண்ட நூல்தான் ‘நாதுராம் கோட்சே’.

பாடப் புத்தகத்தில் ‘கோட்சே என்பவனால் மகாத்மா காந்தி சுட்டுக்கொள்ளப்பட்டார்’ என்று இரண்டு மார்க் கேள்வியுடன் படித்த பாடமாக முடிந்தே போய்விடும் மகாத்மாவின் வரலாறு. அப்படியில்லையெனில் ‘மகாத்மா குறித்து இரண்டு பக்க அளவில் கட்டுரை எழுதுக’ என்று 10 மார்க்குடன் கட்டுரையாக முடிந்துபோவார்.
மேலதிக வரலாற்றுத் தரவுகளுக்கு மாணவர்களுக்கான வாசல் வாசிப்புக்கான தேடல் தான். கல்வியில் அதற்கெல்லாம் நேரம் குறைவு.

இதோ நாதுராம் கோட்சேவை வாசித்ததால் ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்கிறேன் தோழர்களே.

மதவெறியை எப்படியாவது இந்தியாவில் நுழைக்க நரிதந்திர வேலையைச் செய்த ஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு காந்தி பெரும் சவாலாக இருந்ததால் அவரை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் எப்படியெல்லாம் வேலை செய்தது, அதற்காக இளைஞர்களின் மூளையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நஞ்சை விதைத்து காந்தியை கொலை செய்யத் துடித்தது, அதற்கேற்ப கொலை படலம், பின்பு நீதிமன்றத்தில் பொய் பித்தலாட்டம் செய்து சாவர்க்கரை மட்டும் விடுதலை செய்ய செய்த சூழ்ச்சி, அதில் ஏற்பட்ட முரண்பாடுகளை நீதிமன்றத்தின் கண்களுக்குத் தெரியாமல் தடுக்கப்பட்டது, கோட்சேவின் அறிக்கையின் முதல் பக்கத்தை மட்டும் ஆவணப்படுத்தி விட்டு 92 பக்கத்தை ஆவணப்படுத்தாமல் விட்டதன் சூழ்ச்சி, நீதிமன்றம் மட்டும் கோட்சேவின் முதல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால், அதில் உள்ள தகவல்களும், நாக்பூர் ஆர்எஸ்எஸ் அலுவலக ஆவண தகவல்களுக்கும் இடையே இருக்கும் முரண்பாடுகளை வைத்து சாவர்க்கரும் தண்டனையிலிருந்து தப்பியிருக்க மாட்டார்.

இப்படி ஏராளமான தரவுகள் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. வாசிக்க வாசிக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் ஐந்து சதவீதம் கூட தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்கிற சந்தேகம் வந்தது.

அப்பப்பா காந்தி உண்ணாவிரதம் இருக்கும்போது அந்த இடத்திற்கு வந்து ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் ”அந்தக் கிழவன் செத்து தொலையட்டும்” என்று கூச்சல் போட்டபோது அங்கே வந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அவர்களை சத்தம் போட்டு விரட்டினார் என்கிற செய்தி மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. இதெல்லாம் புதிய செய்தி.

நாதுராம் கோட்சே என்னும் இந்துத்துவா வெறியன் என்கிற நபருக்குப்பின் இருக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மகாராஷ்டிரம், டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் எவ்வளவு ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு நாட்டை இந்து தேசமாக கட்டமைக்க வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக செயல்பட்டார்கள் என்கிற தடத்தை நமக்கு மிகவும் சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஆய்வாளர். இதற்காக அனைத்து ஆவணங்களையும் திரட்டியிருக்கிறார். கோட்சே தூக்கு மேடைக்கு போவதற்கு முதல் நாள் இரவு கூட காந்தியவாதிகள் அவனுடைய தூக்குத்தண்டனையை ரத்துசெய்வார்கள் என்று சிந்தித்திருக்கிறான். செய்வதெல்லாம் அயோக்கியத்தனம் வாழ்வது மட்டும் கோழைத்தனம். பரம்பரையே மன்னிப்பு கோஷ்டி தானே. காந்தி கொல்லப்பட்டவுடன் கோட்சே சித்பவன பார்ப்பனர் என்பதை அறிந்த மக்கள் அவன் சார்ந்த சித்பவன பார்ப்பன மக்களை தேடித்தேடி தாக்கினர். இந்நிலை நீடித்திருந்தால் சித்பவன பார்ப்பன மக்களின் நிலை கொடுமையானதாக இருந்திருக்கும். விரைவில் சட்டம் ஒழுங்கு சரிசெய்யப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தகவலை படித்தவுடன் இலங்கை யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்கள் தங்களின் சுயநலத்தால் தனி ஈழம் என்கிற நிலை எடுத்தபோது இலங்கை அரசு தமிழர்களின் வேரையே துண்டிக்கும் வேலையை செய்தது நினைவுக்கு வந்து போனது. இதனால் அப்பாவித் தமிழர்களும் சிக்கி தமிழ் மக்களின் வாழ்க்கையே இன்று வேரோடு சாய்ந்துபோன மரமாக இருக்கிறது.

காந்தி கொலையுண்ட நேரத்தில் இலங்கை போன்ற நிலை இங்கும் வராமல் தடுக்கப்பட்டதால் சித்பவன பார்ப்பனர்கள் பாதுகாக்கப் பட்டார்கள். இதுதான் மனித இயல்பு. ஆனால் ஆர்எஸ்எஸ் இன்றுவரை தன்னுடைய சித்தாந்தத்தை மாற்றிக்கொள்ளாமல் நாட்டை பொருளாதார வலுவிழந்த நாடாக மாற்றுவதில் பெறும் வேலையை செய்து வருகிறது.

கடந்த 2014லிருந்து இந்தியாவின் மக்களின் பொது சொத்துக்களை கார்பரேட்டுகளுக்கு வரைமுறையின்றி கொள்ளையடிக்க வழிவிட்டு மதவெறி விதையை மண்ணில் தூவி வருகிறது. இனிமேலும் இந்த அபாயத்தை நம் மண்ணில் அனுமதிக்க மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இந்நூல் மிகவும் வழிகாட்டியாக இருக்கும். மதவெறியை மண்ணிலிருந்து அகற்றிட இந்நூலை
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *