நூல்அறிமுகம் : நாய்சார்-இரா இரமணன் nool arimugam : naaisaar - era ramanan

ஐ.கிருத்திகா அவர்கள் எழுதி எதிர் வெளியீடாக 2021இல் வெளிவந்த ‘நாய்சார்’ சிறுகதை தொகுப்பு 10 கதைகள் அடங்கியது. பத்துவிதமான கதைகள் மட்டுமல்ல பல்வேறு பிரிவினர், பல்வேறு உணர்வுகள், பல்வேறு சூழல்கள் இந்தக் கதைகளில் இயல்பாக வெளிப்படுகின்றன.

முதல் கதையில் கிராம தெய்வம் கருப்ப சாமியும் அவரது குதிரையும் பேசிக்கொள்வது புதுமையாகவும் நகைச்சுவையாகவும் அதேசமயம் கிராமங்களில் கழிப்பறை இல்லாததை இவ்வாறு ஒரு தெய்வத்தின் வாயிலாக கூற முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அரசியல் தலைவர்கள், ஊர் தலைவர்கள் ஆகியோரை அவருக்கு நெருக்கமானவர்கள் புகழ்ந்து பேசுவதை அவர்கள் ரசிப்பார்கள். இதில் குதிரையே அந்த தந்திரத்தை செய்கிறது.
‘அந்நேரம் அவர் முகம் பெருமையில் பிரகாசிக்கும்.கண்கள் ஏகத்துக்கு விரியும்.குதிரைக்கு, அவரை அப்படி காணப் பிடிக்கும். அதனாலேயே முதன்முறை கேட்பதுபோல் கேட்கும்’.
இறுதியில் தன் குதிரையின் ஏக்கத்தைப் போக்குவதற்காக மலங்காட்டு நாற்றத்தையும் பொறுத்துக்கொள்கிறார் கருப்பசாமி. அட ! இப்படியெல்லாம் எம்பதி எனும் பரிந்துணர்வை வெளிப்படுத்த முடியுமா?

அடுத்த கதையில் தன்னை நாய்சார் என்று அழைப்பதையும் பொருட்படுத்தாத ஒரு மனிதர். அவரும் அவரது மனைவியும் அதன் மேல் வைத்திருக்கும் பாசம்.

தொழிற்கலைஞர்கள் தங்கள் தொழிலில் வைத்திருக்கும் ஈடுபாட்டை விவரிக்கும் ‘தவம்’ மற்றும் ‘பிரியம்’. பிரியம் கதையில் ‘மேல்சாதிக்கார’ தாத்தா முடிவெட்டும் நாராயணனிடம் காட்டும் பிரியம் சற்று வித்தியாசமாக தோன்றுகிறது.விதிவிலக்கான மனிதராக இருப்பர் போலும். நாராயணனின் மகன் பள்ளியில் முதல் வகுப்பில் தேறினாலும் இறுதியில் சலூன் கடை திறப்பதாக முடித்திருக்கிறார்.

‘மேல்சாதி’ பையன் சலூன் கடை திறப்பதாக ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் இயக்குநர் பாலச்சந்தர் காட்டினார். இரண்டு விதமான முரண்பாடுகள். கிருத்திகாவின் கதை எதார்த்தமானது.. பாலச்சந்தரின் முடிவு செயற்கையானது.
கணவன் இறந்த இரவன்று ஒரு பெண்ணின் மனதில் ஓடும் உணர்வலைகளை விவரிக்கும் ‘இயற்கை’.

பெரும்பாலும் வயதானவர்கள் அதுவும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு தேவைப்படுவதை வாங்கித்தர யோசிப்பார்கள். அதுவும் வசதி இல்லாதவர்கள் என்றால் பொருளாதார கஷ்டம் வேறு குறுக்கிடும். ‘மெத்த’ கதையில், வேலாயி அவள் படுக்கும் பாய் குத்துகிறது என்று துன்பப்படுவதால் சொந்த மகன் இல்லை அவள் வளர்த்த சொந்தக்கார பையன் மூவாயிரம் அளவு செலவழித்து மெத்தை வாங்கித் தருகிறான். இது கூட விதிவிலக்கானதாகத் தெரிந்தாலும் பாசமும் நேசமும் ஆங்காங்கே இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது. கதை அந்த மெத்தையில் படுக்க ஆசைப்படும் பேரனின் உணர்வுகள் குறித்தது.

இப்படியெல்லாம் சம காலத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர் ‘வாழ்வெனும் பெருந்துயரம்’ கதையில் திடீரென பாரதப் போர் காலத்திற்குப் போகிறார். சங்க இலக்கியம் போல் கதை நடை உள்ளது. புதிதாக மணமானவர்களின் உணர்ச்சி வேகத்தை விரசமில்லாமல் விவரிக்கிறார். இறுதியில் பாரதப் போரில் இறந்த தன் கணவனுக்கு நியாயம் கேட்க திரௌபதியிடம் போகும் அந்தப் பெண், ஐந்து மகன்களை இழந்து நிற்கும் அவள் நிலை கண்டு கை கூப்புகிறாள். ‘தத்தம் வேதனையில் உழன்று தவித்த இரு பெண்களும் தாங்கவியலாது கண்ணீர் வகுத்தனர்’ என்று முடிக்கிறார். திரௌபதியின் இழப்பு அவளுக்காக நடைபெற்ற போரில் ஏற்பட்டது. ஆனால் இந்தப் பெண்ணின் கணவன் இறந்தது அவனுக்காகவோ அவன் குடும்பத்திற்காகவோ இல்லையே என்ற கேள்வி எழுகிறது.

பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் வென்றிருக்கும் ஐ.கிருத்திகா, அவற்றிற்கு மிகவும் தகுதியானவர் என்பதை இந்த தொகுப்பும் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *