கவிஞர் தினேஷ் பாரதியின் புதிய கவிதைத் தொகுப்பானநதியற்ற ஊர்என்ற நூலின் மூலம் தனது கவிதை பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டுள்ளார் கவிஞர் தினேஷ் பாரதி

 

மொத்தம் முப்பத்தொரு கவிதைகள். இவற்றில் பெரும்பான்மையானவை அவரது அகத்தினுள் கருவாகி உருவானவை என்பதை நான் வாசிக்கையில் அறிந்தேன். இவரது கவிதைகள் அடிமனதில் உருவானவை. ஒரு காட்சியோ, ஓர் ஏக்கமோ, கனவோ, நினைவோ, நமது மனது உருகி ஊற்றிவிடும் ஒரு தருணமோ, ஒரு சிறு சாதாரண செய்கைக்கூட கவிஞனின் பார்வையில் சிறப்பான இடம் பெறுகிறது. உதாரணமாக டாட்டா காட்டும் ஒரு குழந்தையின் செயல் அவரை எங்கெங்கோ யோசிக்க வைத்து, ஒரு கவிதைக்கு வித்திட்டு செல்கிறது . அவரது பார்வையில் இது போன்ற பல தருணங்களை நமக்கு கவிதை விருந்தாக வைத்திருக்கிறார். நான் வாசித்து முடித்தப்பின்ஆஹா.. அருமை..!’ என்று தோன்றியது

 

இவரது கவிதைகளில் மொழி என்பது மிக இயல்பான ஒன்றாக உள்ளது. ‘மொழியை லாவகமாக கையாள்கிறார், இல்லையில்லை, மொழி வன்மையைக் காட்டுகிறார்…’ இப்படிப்பட்ட வரையறைக்குள் அவர் சிக்கவில்லை. இயல்பு மொழியின் வழி கவிதைகள் அவருள் உருவாகையில்தான் தினேஷ் பாரதி என்ற கவிதைக்காரன் வருகிறான் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் மொழியை அவர் இழுத்து வைத்து கட்டிப்போடவில்லை. மாறாக அதை அதன்போக்கில் விட்டு கவிதையை முழுமையடைய விட்டிருக்கிறார். அதுவே கவிதை இனிமையாவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. மேலும் இயல்பான பேச்சு மொழியாக இருக்கும்போது வாசிப்பவர்களுக்கு நெருக்கமாக உணரப்படும். தேவைப்படும்போது மட்டும் ஒரு கவிஞர் மொழியைக் கையாண்டு கவிதை வடிக்கலாம். இந்நூலில் சில கவிதைகளைப் பற்றிக் கூற வேண்டும்..!

 

இந்நூலில் முதல் கவிதையின் கடைசி வரிகளில் சொல்கிறார்,

‘என்றாலும் 

விசேச நாட்களில் 

கோடிவேட்டி கட்டும்போதெல்லாம் 

நினைவில் கமழ்கிறது 

அப்பாவின் இழப்பின் வாசனை.’

 

இழப்பில் ஏதும் வாசனை உண்டா என்றால் இல்லை. ஆனால் கவிஞர் இழப்பில் ஒரு வாசனை உண்டு என்று மொழிந்து நம்மையும் புதியதோர் கண்ணோட்டத்தில் காண வைக்கிறார். இவ்வரிகளின் கடைசியில் மொழியைக் கவிஞர் கையாண்டிருக்கிறார். அதற்கு முன்பான வரிகள் அவைகளாக அமைந்தவை என்று தோன்றுகிறது. அதேப்போல, மொழியில் எளிமையும் அழகாய் அமைந்திருக்கிறது

 

நதியற்ற ஊர் என்ற சிறு கவிதையில் வைகை ஆற்று நீரை எதிர் நோக்கும் ஊரைப் பதிவு செய்திருக்கிறார். ஊரில் உப்பிய வயிறுடனும் ஒட்டிய வயிருடனும் பலர் வைகைக்காக கண்மாயில் காத்திருக்கின்றனர். ஆனால் 

எப்படியும் எட்டிப் 

பார்க்கப் போவதில்லை 

வைகை நதி 

எங்களூர் கண்மாயை..!’ 

நீருக்கு ஏங்கும் ஊர். நதியற்ற ஊர். இதுவே நூலின் தலைப்பு. 

 

புளியமரக் காளிஎன்ற கவிதையில் தனது அப்பத்தா அறிமுகப்படுத்திய ஒரு தெய்வத்தையும் அதனுடனான தனது நினைவுகளையும் சொல்கிறார். ஆனால் மழையில் முறிந்து விழுந்த காளியின் சிலையைப் பார்க்கும்போது

‘ நேத்து சாமிகளுக்குள்ள 

சண்டவர்க்க அதான் 

ஆத்தா வெட்டுப்பட்டுருக்குவென

காளிக்கு ஆதரவாய் அப்பத்தா நின்றாள்.’ 

 

இக்கவிதை கிட்டத்தட்ட ஒரு சிறுகதையைக் கொடுக்க முடிகிற அளவுக்கான கவிதை. மறைந்த எழுத்தாளர்கந்தர்வன்எழுதியசீவன்என்கிற கதைக்கு நெருக்கம் கொண்டிருக்கிறது இக்கவிதை. ஆனால் வளரும் பருவப் பிள்ளைகளின் கண்களுக்கு தெரியும் இயல்பான விஷயங்களுக்கு நம் பெரியவர்கள் இட்டுக்கட்டி சொல்லி வைக்கும் கதைகள் முற்போக்கு பார்வை இல்லாவிடில் காலத்திற்கும் மனதில் ஒரு பொய்யான நம்பிக்கையாய் நிலைத்து விடுகிற அபாயமும் உள்ளது.

 

ட்வெல்த் பர்ஸ்ட் குருப்என்ற கவிதையில் கவிஞர் செய்யும் ஒரு சேட்டை பதிவாகியிருக்கிறது

 

சினிமா மோகத்தால்

இயற்பியல் ஆய்வகத்தில் 

ஆட்டைய போட்ட நாலுகட்டு 

காலாண்டு பேப்பர் கட்டுகளோடு 

நானும் தயாராயிருக்கிறேன் 

கடைசி பரிட்சை எழுதிட்டு 

மதுரை அம்பிகா தியேட்டரில் 

சித்திரம் பேசுதடி படம் பார்க்க.’ சக மாணவர்களையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்

 

இப்படி பள்ளி வாழ்வின் சாகசங்களில் பல உண்டு. விருப்பத்தை நிறைவேற்ற பள்ளியை ஒரு களமாகப் பயன்படுத்தி செய்யும் சாகசங்கள் ஏராளம். அது ஆளாளுக்கு மாறுபடும். நாம் கேட்டால் எல்லாருமே ஒரு கதை சொல்வார்கள். அவர்களது நினைவுகளை ஒட்டி மற்றவரின் கதைகளும் நம்முடன் இணையும். ஆனால் அவை அனைத்துமே சுகமானவை

 

(லேட்) ரம்யா என்ற கவிதை சுருக்கி எழுதப்பட்ட கவிதை. விரித்து எழுதியிருந்தால் அருமையான கதை. லேட் என்றால் இறந்தவருக்கு குறிப்பிடும் லேட் அல்ல. தாமதத்திற்கு குறிப்பிடப்படும் லேட்.

 

பள்ளிக்கு எப்போதும் தாமதமாக வரும் ஒரு மாணவிதான் ரம்யா. லேட்டாக வருவதனால் மற்ற மாணவர்கள் வைத்தப் பெயர் லேட் ரம்யா. இது போன்ற கேலி கிண்டல் எல்லாம் மாணவப் பருவத்தின் இயல்புதான். ஆனால் ரம்யாவின்லேட்டுக்கு பின்னால் இருந்த காரணத்தை அவர்கள் அறிந்தபோது எழுந்த நியாய உணர்வுதான் கவிதையின் கனத்தையே கூட்டிவிட்டது.

மஞ்சள் பூசிய அவளின் 

கன்னத்தில் வழிந்த 

கண்ணீர் கோடுகளில் 

ஒளிந்திருந்தன 

லேட்டிற்கான காரணங்கள்.’

கவிதையாய் சுருங்கிவிட்ட கதை. நல்லதொரு கதையை இப்படி சுருக்கிவிட்டாரே கவிஞர் என்று ஆதங்கம் எழுகிறது.

 

ஆட்டோகிராஃப் கவிதை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் கவிதை. எதை.? பலருக்கும் பழைய புத்தகக்கடையில் புத்தகம் வாங்கிய அனுபவம் உண்டு. அப்படி வாங்கும்போது புத்தகத்தின் முதல் பக்கத்தில், நடுவில் அல்லது கடைசியில், ஒரு பக்கத்தின் கடைசியில் என யாராவது ஏதாவது எழுதியிருப்பார். வரைந்த ஓவியம் இருக்கும். ஏதேனும் ஒட்டப்பட்டிருக்கும். அதையெல்லாம் நாம் பார்த்திருப்போம். அப்படியே கடந்திருப்போம். அதைப்பற்றி யாரிடமும் பேசுவதில்லை. ஆனால்,

 

ஒவ்வொரு புத்தகத்தின் 

முதல் பக்கத்திலும் 

நிரம்பியே இருக்கிறது 

எழுத்தாளர்களின் பேரன்பு’ 

என்ற வரிகளோடு முடிகிறது ஆட்டோகிராஃப் கவிதை

முதல் பக்கம் மட்டுமல்ல ஒவ்வொரு பக்கத்திலும்கூட ஏதேனும் ஒன்று ஒளிந்திருக்கும். அது குறிப்பாக இருக்கலாம். அடிக்கோடு முக்கியம் என்று சொல்லும் நட்சத்திர வரைவோ, அன்பளிக்கப்பட்ட பெயராகவோ, அடி குறிப்பாகவோ, படிக்கப்படாத ஒரு கவிதையாககூட இருக்கலாம்

 

ஒரு புத்தகத்தில், நன்கு தோய்க்கப்பட்ட உதட்டுச் சாயத்தால் இட்ட முத்தத்தின் ஈரம் காய்ந்துவிட்ட பின்பு பேரன்பின் பரிசு பழையப் புத்தகக்கடையில் கிடந்ததையும் பார்த்திருக்கிறேன் நான். ஆனால், அன்பின் பரிசாய் நூல்கள் இருப்பது பெரும்சுகம்

 

அனுஷியாவின் காதல் என்ற கவிதை தோல்வியில் முடிந்த காதல் கதையின் ஓரங்கம். பருவக் காதலை மறுத்து வேறொருவனுக்கு மணமுடிக்கப்பட்டப் பெண், விதவையான கதை. எதேச்சையான ஒரு சந்திப்பில்தான் அவள் சொல்கிறாள்

குழந்தையைக் காட்டி

வெள்ளந்தியாய் சிரித்தபடி

சதீஷ் மாதிரியே இருக்கான்ல, என்றாள்

எனக்கு கண்ணீர் முட்டியது.’

 

சுருக்கி வரைந்த காதல் கவிதை. கவிஞர் விவரிக்கும் பார்வைத் தளம் சிறப்பு. மேலும் இதுபோன்ற பல ஞாபகங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது இக்கவிதை ஒருவேளை அனுஷியாவின் காதலில் இன்னும் சொல்ல வேண்டியவை நிறைய இருக்கும் என்று எண்ண வைக்கிறது

 

இதே வேளையில் கருப்பட்டி அழகி என்ற கவிதையில் தன் ஆசைத்தீர 

முத்தழகு என்றே 

நித்தம் கொஞ்சுவேன்என்று நல்லா கொஞ்சுகிறார் கவிஞர். படித்து பாருங்கள் கொஞ்சல் சுவைக்கும்.! 

 

ஆதிரை பிச்சையிடாதக் காதை என்றோர் கவிதை. ‘வடக்கனுங்கதான் எங்கப் பாத்தாலும்என்று தமிழகம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் ரேசன் கடை அரிசிக்கும் சீமெண்ணெய்காகவும் அலைகிற அலைச்சலை ஒரு கவிதையில் கூறுகிறார்.

கம்பர் இளங்கோ வள்ளுவர் பெயர்களைக் கொண்ட தெருக்களிலும் கிடைக்காத அந்த பொருட்கள் மணிமேகலைத் தெருவிலும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். இது ஒரு உருவகக் கவிதை.

 

மணிமேகலை யார்? அவரிடம் இருந்த சிறப்பு என்ன.? கோவலன் மாதவியின் மகளான கண்ணகி மக்களின் பசிப்பினியை அட்சயப் பாத்திரத்தின் உதவியால் போக்கியவர். அள்ள அள்ள குறையாத உணவு களஞ்சியம் அட்சயப் பாத்திரம். எவ்வளவு பேராயினும் உணவு கொடுக்கும். அப்படிப்பட்ட கதைக்கு சொந்தக்காரர் மணிமேகலை. அவரது பெயர் கொண்ட தெருவில் உணவுக்கு நிற்கிறது ஒரு கூட்டம். அவர்களை இந்திக்காரர்கள் என்ற பொதுப் பெயரில் கூறுகிறார் கவிஞர். மற்றபடி கம்பரையும், இளங்கோவையும் வள்ளுவரையும் கொண்டு வந்திருப்பது அரசியல் பார்வைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. தேசிய அளவிலான பிரச்சனை.! பேசித்தான் தீர்க்க வேண்டும்

மேலும் அம்மா மெஸ்ஸின் அணிந்துரைகள், .எம்.ஆர் மாடுகளுடன் ஒரு பேட்டி, நிறம் மாநிறம் வயது 18, கடவுள்களின் மாநாடு ஆகியவை பரிசோதனைக் கவிதைகள். அதாவது நாம் பொதுவாக வாசிக்கும் கவிதைக்குரிய சொற்கள் அதிகம் இருக்காது. ஆனால் வேறு விதமான சொற்கள் இருக்கும். படிக்கையில் கவிதையின் அழகியல் மனதில் ஏற்படுத்தும் இனிப்பு போன்ற பார்வையை வழங்காமல் போகலாம். வழக்கம்போல இருக்கும் கண்ணோட்டத்தை மாற்றிப் பார்க்கும் ஒரு பார்வை இதற்கு வேண்டும். இப்படிப்பட்ட கவிதைகளுக்கும் இலக்கியத்தில் ஓரிடம் உண்டு. சேலத்தைச் சேர்ந்த சி.மணி என்பவரது கவிதைகள் இப்படிப்பட்ட பரிசோதனைக் கவிதைகளைக் கொண்டவைதான்.! இவற்றைப் படித்து பார்க்கும்போதுதான் சரியாக இருக்கும்

 

கடைசி கவிதை, ஓர் அகதி தனியே நின்று அழுதபோது அதைப் பார்த்த அரசியல் கட்சிகள் சோறு தண்ணி வேணுமா.? ஆளுங்கட்சி சதி, எதிர்கட்சி சதி, சாதி, மதம், சர்வதேச அரசியல் என்று எத்தனையோ கோணத்தில் பலர் பேசினாலும்

‘கடைசிவரை நான் அழுததற்கான 

காரணத்தை கேட்க யாருமே

முன்வரவில்லை’ 

என்று முடிக்கிறார். இது ஒரு அரசியல் வாழ்வியல் கவிதை. கவிதையிலேயே நாம் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் உள்ளது

 

இப்படி நிறைய கவிதைகள் மனதை வருடும். கிள்ளும். உறைய வைக்கும். திணறக்கூட வைக்கலாம். அது வாசிப்பவரைப் பொருத்தது. வாசித்து பாருங்கள். உங்களுக்குள்ளும் ஒரு கதை கவிதையாக இருப்பதைக் காணலாம்

 

கார்த்தி டாவின்சி

        மே, 2023.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *