நலவாழ்வு சேவைக்கான உரிமை
ஏன்? எதற்காக? எப்படி?
(பொது விவாதத்தற்கான கொள்கை குறிப்பு)வெளியீடு : அறிவியல் வெளியீடு,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
விலை ரூ : 90/-
ஆங்கிலத்திலும் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.
Right to Healthcare Why? What? How
A Policy Brief for Public Discussion Rs 100
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுக்கும் நல்வாழ்வு சேவைக்கான உரிமைச் சட்டம் ( Right to Healthcare) குறித்து மக்களிடையே பொது விவாதத்திற்கான கொள்கைக் குறிப்பே இந்தப் புத்தகம்.
ஆக, இது புத்தக அறிமுகம் என்பதைவிட நலவாழ்விற்கான உரிமைச் சட்டத்தை வென்றெடுக்க துவக்கப்பட்டுள்ள மக்கள் இயக்கத்தை அறிமுகம் செய்வதாகும்.
டாக்டர் டி.சுந்தரராமன் அவர்களின் கருத்தாக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆரோக்கிய இயக்கக் கருத்தாளர் குழுவினரால் வடிவமைக்கப்பட்டது.
இது ஒரு சட்ட முன் வரைவு குறித்து என்பதால் நீங்கள் ஒரு வரியைக்கூட ஊன்றி படிக்காமல் கடந்து செல்ல இயலாது. ஒவ்வொரு வரியும் ஆழமான சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது. இப்புத்தகத்தின் வடிவமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. 29 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடிகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயங்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளன. எளிதில் உள்வாங்குவதற்கு உரிய வகையில் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படித்து முடிக்கும் போது இந்த இயக்கத்தைப் பற்றிய தெளிவும் சமூகமே திரண்டெழுந்து இதனை துரிதப்படுத்த வேண்டியதின் அவசியமும் உணரமுடியும்.
மக்களின் நலவாழ்வு (Health) என்பது அரசுகளின் முன்பு உள்ள பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றல்ல. மாறாக, இந்திய அரசும் மாநில அரசுகளும் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.
தற்போதைய அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி நலவாழ்வுச் சட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மசோதா தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருப்பது மகிழ்ச்சியானது. எந்த ஓர் உரிமையும் சட்டத்தால் மட்டுமே அடைந்துவிட முடியாது. சட்டத்தை உருவாக்கவும் அதனை முழு உணர்வுடன் செயல்படுத்தவும் பின்புலமாக மக்கள் அணிதிரட்டல் தேவை. மக்கள் நலவாழ்வு (Health) சட்டம் உருவாக்குவது ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மக்கள் இயக்கங்களின் வெகு நாளைய கோரிக்கையாகும்.
இதில் தெளிவு பெறுவதும் தேவையான இயக்கங்களை முன்னெடுப்பதும் சமூகச் செயல்பாட்டாளர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
நலவாழ்வுக்கான (Health) உரிமை என்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளடக்கியது.
1. உடல் நலனைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளுக்கான உரிமை.
இதனைச் செயல்படுத்துவது என்பது சமூக சமத்துவமின்மையை கட்டுப்படுத்துவது. அனைவருக்கும் நல்ல உணவு, குடிநீர், சுற்றுச் சூழல் மற்றும் வாழ்வாதரத்திற்கு வேலையினை உத்தரவாதப்படுத்துவது.
2.மருத்துவச் சேவைகளுக்கான உரிமை: அனைவருக்கும்
.தரமான இலவசமான மருத்துவச் சேவை என்பதே நமது கோரிக்கை.
இதனை பட்டியலிடும் போதே நமக்கான சந்தேகங்கள் வலுக்கிறது. அனைவருக்கும் தரமான இலவசமான மருத்துவச் சேவை தேவையா? சாத்தியமா? இதற்கான தெளிவினையும் இந்த புத்தகம் விளக்குகிறது.
நலவாழ்வு (Health) உரிமை என்பது புதிதல்ல. சர்வதேச அளவில் ஏற்றுக் கொண்ட ஒன்றுதான்.உலகில் 73 நாடுகளில் அமுலாக்கத்தில் உள்ளது.
அமெரிக்க தவிர்த்த பல வளர்ந்த நாடுகள் செயல்படுத்துகின்றன. ஆரோக்கியமான குடிமக்கள் மூலம் இந்த நாடுகள் வளமான நாடுகளை உருவாக்கின எனச் சொல்லலாம்.
தாய்லாந்து, கியூபா, பிரேசில் ,கோஸ்டாரீக போன்ற நாடுகள் முன்னணியில் அமுல்படுத்துகின்றன.
இந்தியாவிலும் அசாம் மாநிலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
“அனைவருக்கும் இலவச நலவாழ்வு” கோருவது என்பது, சமூக நீதியினையும் பொருளாதார வளர்ச்சியினையும் இது உள்ளடக்கியுள்ளது என்பதால்தான் .இது தற்போதுள்ள பொருளாதார கொள்கைக்கு மாற்றினை உருவாக்கும் என்கிற நம்பிக்கையில்தான்.
ஆனால், அரசாங்கங்கள் இதைபுரிந்து கொண்டுள்ளனவா?
நலவாழ்வு உரிமைச் சட்டதை யார் உருவாக்க
வேண்டும் ? ஒன்றிய அரசா? மாநில அரசா?
நலவாழ்வு உரிமைச் சட்டத்தின் பிரதான அமசங்கள்
எவை இருக்க வேண்டும்?
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இச்சட்டத்தின் பயன்களை பெறுவதற்கு உத்தேச சட்டத்தில் அடிப்படை அம்சங்கள் தேவைகள் என்ன?
போன்ற கேள்விகளுக்கும் இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கும் போது விளக்கங்கள் பெறலாம்.
ஆரம்ப சுகாதார சேவை ,மருத்துவ மற்றும் நலவாழ்வு மையங்கள் , மக்களைத்தேடி மருத்துவம் போன்ற தற்போதுள்ள மருத்துவச் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் தகவல்கள் தரப்பட்டுள்ள.
மருத்துவக் கல்வியையும் நலவாழ்வு சேவை உரிமைகளையும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் வழிமுறைகளும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற தேவையான நிதி,மனித வளங்களை அரசு மேம்படுத்த வேண்டும். நலவாழ்வு சேவைக்கான நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் ஏற்கனவே அமுலில் உள்ளது. உத்தேச நலவாழ்வு உரிமைச் சட்டம் எவ்வாறு ஒன்றுக்கொன்று உதவியாக இருக்க முடியும் என்பதையும் விளக்குகிறது.நல்வாழ்வைச் சட்டமாக்க அனைத்து அம்சங்களும் இந்த புத்தகம் விவாதிக்கிறது.
மக்கள் பங்கேற்புடன் இந்தக் குறிப்புகள் விவாதப் பொருளாக மாறும் போது இது மேலும் செழுமையடையும்; சட்டம் உருவாக்க உந்து சக்தியாகமாறும்.
சமூக செயல்பாட்டாளர்கள் அனைவரின் கைகளிலும் இந்தப் புத்தகம் தவழவேண்டும்.மக்கள் நலவாழ்வு உரிமை பேசு பொருளாக மாற வேன்டும்.
அர்த்தமுள்ள பேச்சு உலகையே மாற்றும். மாற்றுவோம்!
கு.செந்தமிழ்ச்செல்வன், 9443032436
ஆரோக்கிய இயக்க மாநில கருத்தாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.