நூல் அறிமுகம்: நிலவுக்குள் பயணம் -முனைவர் சு.பலராமன்

நூல் அறிமுகம்: நிலவுக்குள் பயணம் -முனைவர் சு.பலராமன்


 

முதுநிலை அறிவியல் விஞ்ஞானியாக உள்ள த.வி.வெங்கடேஸ்வரன் அறிவியல் சார்ந்த செய்திகளை, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து படைப்புகளாகப் பதிவு செய்து வருகிறார். அதில் ஒன்று ’நிலவுக்குள் பயணம்’ என்னும் அபுனைவு நூல். 176  பக்க அளவில் 2010ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்நூல் வெளியாகி 13 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தொடக்க நிலை மற்றும் பொதுநிலை வாசகனுக்குத் திறப்பாகவும், அறிவியல்சார் மற்றும் நிலவு குறித்த தேடலில் உள்ள வாசகனுக்கு மேலும் ஒரு கூடுதல் திறப்பாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.

நிலவுக்குள் பயணம் என்னும் நூல் நிலவின் முக்கியத்துவம், செயல்பாடுகள், புதிய தகவல்கள் மற்றும் சந்திராயன் குறித்த அறியப்படாத உண்மைகள் பற்றிய பதிவுகளில் ஆய்வுத் தரவுகள், புகைப்படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றோடு எளிய மொழிநடையில் தொகுத்துப் பேசுகிறது. 23 உள்ளடக்கத்தைக் கொண்ட இந்நூலில் 22இல் வினாக்கள் எழுப்பி உரையாடிச் செல்லும் உத்திமுறையைப் பயன்படுத்தியுள்ளார் த.வி.வெ. மேலும், நிலவு குறித்து ஆழமான ஆய்வைப் பேசும் இந்நூலில் திரைப்படப் பாடல்களின் வரிகளை உட்தலைப்புகளாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?, நீ இல்லாமல் நான் இல்லை, வெண் நிலவே வெண் நிலவே, கன்னத்தில் என்னடி காயம், நிலா காயுதே, என் இனிய பொன் நிலாவே, அன்று வந்தது அதே நிலா போன்றவை)  

இந்நூலின் துணைத் தலைப்பாகச் சந்திராயன் : அறியப்படாத உண்மைகள் என்பதில் சந்திராயன் தோல்வி இல்லை என்பதைப் பறைசாற்றும் குறியீடாக உள்ளது. இதற்கு வலுவூட்டும் விதமாகச் சந்திராயன்-1 விண்கலம் பற்றி ஐந்து முதல் ஆறு வரையிலான உட்தலைப்புகளுக்கு மேல் விரிவாகவும் ஆழமாகவும் உரையாடுவது இந்நூலின் சிறப்பம்சமாகும்.

சூரியக் குடும்பத்தில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் புவி என எட்டுக் கோள்கள் உள்ளன. இதில் புவிக்கான துணை கோள் நிலவு ஆகும். இந்நிலவு ஏற்படுத்தும் வேகத்தடையினால்தான் தற்போது 24 மணிநேர நாள் ஏற்பட்டது. 1000 கோடி ஆண்டுகளுக்குப் பின்பு நிலவு வெகுதொலைவு செல்லும். அப்போது புவியின் ஒரு பகுதியினருக்குத்தான் நிலவு தெரியும் என்பதான ஆய்வுப் பதிவை முன் வைக்கிறது நிலவுக்குள் பயணம். குறிப்பாக நிலாவில் நிலநடுக்கம், வான்பொருட்கள் (பாறைக் கற்கள்) மோதல் முதலிய பேரிடர்களை அடையாளப்படுத்துகிறது. நிலவு குறித்த புனைவுகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கத்தையும் பெற முடிகிறது.

386 கோடி (குறைந்த) செலவினத்தில் சந்திராயன் நிலவுக்கு அனுப்பியது. சந்திராயனில் பயன்படுத்தப்பட்டுள்ள 11 கருவிகளில் ஆறு கருவிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த 11 கருவிகளும் தொலை உணர்வு தொழில்நுட்பம்வழி செயல்படக்கூடியவை என்பது நோக்கத்தக்கது. சந்திராயன் நிலவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது மிகப்பெரிய அறிவியல் சாதனை ஆகும். உலகில் உள்ள ஏழு கண்டங்களைப்போல நிலவு எட்டாவது கண்டமாக அறிவியல் அறிஞர்கள் சிலர் பார்க்கின்றனர். 

நிலவு குறித்த ஆய்வில் கலிலீயோ கலிலீயின் ஆய்வின் தீவிரத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகிறார். மேலும், அவரது ஆய்வு இருட்டடிப்பும், புறக்கணிப்பும் செய்யப்பட்டுள்ளதில் மத நம்பிக்கை வலுவாக இருப்பதைக் காணமுடிகிறது. நிலவின் நாயகன் கலிலீயோ என்று தன் மதிப்பீட்டை அழுத்தமாக முன் வைக்கிறார் த.விவெ.

அண்மைய காலமாக உலக நாடுகளின் பார்வை நிலவு குறித்த ஆய்வில் திரும்பியதற்கான காரண காரணிகளையும் நிலவில் பெயர் பதிவு செய்யும் முறையையும் குறித்து பதிவு செய்துள்ளது. விண்ணியல் ஆய்வில் மனிதர்களைக் கடந்து ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும், இரண்டிரண்டு நாடுகளாக இணைந்து (இந்தியா-ரஷ்யா, ஜெர்மனி-இங்கிலாந்து) கூட்டுமுயற்சியில் நிலவு குறித்த ஆய்வை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கொலம்பஸ் பற்றிய பதிவில் ஆதிவாசிகளின் இயற்கைசார் நுண்ணறிவைக் கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது. கருமை என்பது நிறமல்ல, ஒளியில் பார்வையில் எந்த நிறமும் இல்லாத ஒளியற்ற வெற்றிடமே கருமை. வெண்மை என்பது பல நிறங்களின் கலவை என்பதான அறிவியல் பார்வையையும் அளித்துச் செல்லத் தவறவில்லை.

நூலின் பின்னிணைப்பாக இதுவரை நிலவை அடைந்துள்ள விண்கலங்கள் பட்டியலில் 1959இல் இருந்து 1976 வரைக்கும் இரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் மட்டும் கோலோச்சியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், கூடுதல் பின்னிணைப்பாக நிலவிற்குச் சென்றுவந்தவர்கள் (பிராங் போர்மென், ஜேம்ஸ் லோவல், வில்லியம் அன்ரீஸ், நீல் ஆம்ஸ்டிராங், மைக்கேல் கோலின்ஸ், எட்வின் யூஜின் அல்டரின், யூஷின் செனான், ரோனால்டு இவான், ஹரிஸன் ஸ்மிட்ஸ்…) பட்டியல் மற்றும் விண்கலன் பட்டியலில் 2008லிருந்து நடப்பு வரையிலான பதிவை நிலவுக்குள் பயணம் கோரி நிற்கிறது. 

இந்நூலில் மொழிநடை எளிமையானதாகக் கையாளப்பட்டுள்ளதால் வாசிப்பை விரைவாக்கியும் எளிதில் புரிதலையும் ஏற்படுத்திச் செல்கிறது. சொல்லாட்சியில் பெரும்பாலும் கலைச்சொற்களைப் (மின்கலம், நினைவுத்திறன், அளவி, தானே ஏவு ஊர்தி, உந்துசக்தி, விண்கலன், வன்தட்டு முப்பட்டக கண்ணாடி…) பயன்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. நீண்ட நெடிய கட்டுரைகளாக வார்க்காமல் அளவான பத்தியில் புரிதலோடு அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. புவி பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் என்பதைப்போல நிலவு பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.

*********************

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *