nool arimugam: otrai vaasam - alli udhayan நூல் அறிமுகம்: ஒற்றை வாசம் - அல்லிஉதயன்
nool arimugam: otrai vaasam - alli udhayan நூல் அறிமுகம்: ஒற்றை வாசம் - அல்லிஉதயன்

சம காலமோ, முந்தைய காலமோ… அவை பதிவு செய்யப்படும் விதங்கள் பற்பல. கவிதை, கட்டுரை, கதை என வடிவங்களில் வரலாறுகளும் வாழ்க்கை முறைகளும், விதந்தோதப்படுகின்றன. கலைஞன் இதில் சகல உரிமைகளும் பெற்றவனாய் இருக்கிறான். அவன் தேர்ந்து கொள்வதற்கு உவப்பானவை எவை என்பதை எழுத அமரும் தருணங்கள்கூட தீர்மானிக்கின்றன.

இதை இதை இப்படி இப்படிச் சொல்ல வேண்டும் என்கிற உள் மன அவசம் ஒரு நாள் வடிவெடுக்கும்போது அது தன் வசதியையும், வாய்ப்பையும் தகவமைத்துக் கொள்கிறது.

உரைநடையில் முன்மொழியப்பட்ட எண்ணற்ற காவியங்கள் பின்னாட்களில் கவிதா ரூபம் கொண்டு எழுந்ததையும் காண்கிறோம். கவிஞர்கள் கண்ணதாசன், வாலி இதிகாசங்கள் பலவற்றை கவிதை வடிவத்தில் தந்திருப்பதையும் காணலாம். இயேசு காவியம் போன்றவை அதில் அடக்கம்.

தேனி சீருடையானின் வாழ்பனுபவங்கள் கதைகளாகக் கிடைக்கிறபொழுது அது வாசகனுக்கு ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளையொட்டிய சமூக பொருளாதார வரலாற்றை முன்னெடுப்பதாக அமைந்துவிடுகின்றன.

மேலோட்டமாக இதை ஒரு கதைசொல்லல் முறை என்று மட்டும் பார்ப்பதற்கோ, ஒரு வழியாக பொழுது கழிந்தது என்று போவதற்கோ அன்றி அதில் காணும் தரிசனங்கள் வாசகன் மனதை அசை போட வைப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

‘ஒற்றை வாசம்’ தருகிற உணர்வுகளும் அவ்விதத்தே வாசக அனுபவங்களை விட்டுச் செல்கின்றன.

நேரப் போக்கிற்காகப் படித்தல், நேர்த்திக்காகப் படித்தல், நிலைமைகளை-வாழ்க்கையை- உள் வாங்கிக் கொள்வதற்காகப் படித்தல் என மூன்று வகை வாசகர்களையும் திருப்திப்படுத்துகிற எழுத்துமுறை ஒரு படைப்பாளனுக்கு அமையும்போது அவன் எழுத்தை ஆள்கிறவன் என்கிற தகுதியைப் பெற முடியும். அந்த முயற்சியில் வெற்றியை ஈட்டும் முனைப்பில், தேனி சீருடையான் இருப்பதாகவே கருத முடியும்.

ஒரு தொடக்கம் அதன் இறுதியைச் செழுமைப்படுத்துகிறது என்கிற உணர்வுகள் ஒரு படைப்பைக் கையாளுகிறவன் என்கிற முறையில் எனக்கும் உண்டு.

‘தனித்துவமான மாடி அறை அது. அள்ளி வைத்த இலைச் சருகுபோல் சுருண்டு கிடந்தாள் ஜோதி.’ இது போதும், ஒரு படைப்பை நகர்த்துவதற்கும் வாசக கவனத்தை ஈர்ப்பதற்கும்.

துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது என்று ஒரு நாவலாசிரியர் தொடங்கினால் அது வெடித்துத்தான் தீர வேண்டும் என்பார் காலஞ்சென்ற எழுத்தாளர் ஜெயகாந்தன்.

அது ஒரு கோணத்தில் ஒரு வரலாற்றுப் பதிவை எடுத்துரைக்குமானால், தேனி சீருடையானின் அந்தத் தொடக்கம் எளிமையின் விளிம்புகளில் ஆட்பட்டு வாழ்க்கைச் சதுரங்களில் உயிர்ப்போடு விளையாடிய ஒரு குடும்ப சகாப்தத்தைத் தெள்ளெனக் காட்டுகிறது எனலாம்.

நாவல் முழுக்க ஜோதியின் ஒற்றை வாசம் கமகமத்துக் கொண்டேயிருக்கிறது.

நிலக்கோட்டையும் தேனியும் ஒன்றுக்கொன்று சோர்வில்லாமல் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு வரியில் சொல்வதனால் இரு குடும்பங்களின் உறவும், ஒழுங்கும், வாழ்வும் அதன் ஏற்றத் தாழ்வுகளுமே நாவலைப் பின்னியெடுத்துச் செல்கின்றன.

இந்நாவலைப் படிக்கும் எவரும் இது ‘நெலக்கோட்டதான’ என்று விட்டு விட்டுச் செல்ல முடியாத அளவிற்கு அதன் வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.

கடைவீதிகள், திருவிழாக்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள், உணவு முறைகள், ஓரஞ்சாரங்கள் என்று அத்தனையையும் அத்துபடியாய்ப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

நாவலில் பெரும் பகுதியைப் பெண் பார்க்கும் படலமே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.

மச்சினன்மார்கள் அதிகம் உள்ள வீட்டில் பெண் எடுத்தால் பிரச்சனைகள் வளரும் என்பதற்கு மாறாக இதில் வரும் கதாநாயகனின் தாய் அதையே விரும்புகிறாள். அதற்காக அவள் சொல்லும் காரணங்கள் அலாதியானது.

பிறக்கப் போகும் பிள்ளைகளுக்கு தாய்மாமன்கள் நான்கு என்றால் வீடு நிறைந்து ததும்பும். ஆளுக்கொரு சீர் செய்து வளம் பெருக்குவார்கள். உறவின் முறையில் கொடுக்கல், வாங்கல் என்றால் வெளிவட்டம் தேடாமல் நிறைவு பெறும் எதைச் சுமை என்று சமூகம் கருதுகிறதோ அதையே சுகம் என்று உணர வேண்டும் என்பதைத் தாயின் நிலைப்பாடு காட்டுகிறது.

எளிய மனிதர்களின் பெரும்பாலும் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறித்திளைப்பார்கள். கணவன்மார் சொல்லைக் கேட்பதைவிட ஜோளியன் சொல்லைக் கேட்கும் மனைவிமார்கள் இன்றளவும் உண்டு. எத்தனை பகுத்தறிவு பாசறைகள் தோன்றினாலும் ராசி பலன்களில் மூழ்கித் திளைப்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம். இன்றைய தொலைக்காட்சிகள்-ஊடகங்கள் அதற்கு உதாரணங்கள்.

வறுமைப்பட்ட பாத்திரப் படைப்புக்களை முன் நிறுத்துவதில் தேனி சீருடையான் தனித்த கவனம் பெறுகிறார். அந்த நேரம் பார்த்து ஒரு சிறுமி சமையலறையிலிருந்து வெளியில் வந்தாள். சிறுமி என்றால் சடங்கானவளாய்த்தான் இருக்க முடியும். சாயம்போன சீட்டி பாவாடை கட்டி அரைச் சீலையைத் தாவணியாக்கி இருந்தாள். மூக்குத்திக்கும், தோடுக்கும் பதிலியாய் வேப்பங்குச்சிகள் செருகப்பட்டிருந்தன. ஜோதியின் தங்கை சுவாதியை இவ்விதம் அறிமுகப்படுத்தும்போது அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த நிலையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்துவிடுகின்றன.

இப்படி ஒரு குடும்பத்தில் பெண் எடுக்கச் செல்லும் சுகந்தன் ஒரு வாழைப்பழ வியாபாரி. அதுவும் வாடகைத் தள்ளுவண்டியில் தெருத் தெருவாக, ஊர் ஊராகச் சென்று விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறவன்.

அவனது வண்டி செல்லும்போது காட்டும் காட்சிகள் தேனியின் ரம்மியத்தைப் பறைசாற்றுகின்றன. இப்படி ஒரு பகுதியில் வாழ்வதை உணராத ஒருவர் இந்நாவலை வாசிக்க நேர்ந்தால் நிச்சயம் பெருமைப்படுவார்.

முல்லை ஆறு, கொட்டக்குடி ஆறுகள் உருவாகி பெருகி வழிந்தோடும் காட்சிகள் அழகியல் வெளிப்பாடாய்க் கும்மாளமிடுகின்றன. நதிகள் பாடுகின்றன. காலமெல்லாம் பாடிக்கொண்டே இருக்கின்றன. பாறைகள் தடுக்கினாலும், பள்ளத்தாக்கில் தலைகீழாய்க் கவிழ்ந்தாலும் அவை தன் பாடல்களை நிறுத்துவதே இல்லை.

வழிநெடுகிலும், வண்டிசெல்லும் ஊர்களிலும் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’ என்பதை வியப்புடன் வெளிப்படுத்தவே செய்கின்றன. இதில் சாதாரண பழவண்டிக்காரன் சந்திக்கும்-எதிர்கொள்ளும்-பிரச்சனைகள்… எதிர்நீச்சல்தான்.

எளிய வீடுகளில் வலிய உணவு வகைகள் குறித்த சித்திரமும் முக்கியமானவை.

சோளக்களி, வெந்தயக்களி, அகத்திக்கீரை, கூட்டுச்சாறு, புளித்தண்ணி என்று பட்டியலிட்டு வருபவைகளும், அதன் செய்முறைகளும் இன்றைய குடும்பத் தலைவிகள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஏனெனில் இன்றைய வாழ்க்கை சிறுதானிய உணவு முறைகளைச் சிபாரிசு செய்ய வேண்டிய இடத்தில் வந்து நிற்கிறது. துரித வகை உணவுகளால் அரிதான வாழ்க்கையை இழந்து தவிப்போர் அறிந்து கொள்ள விரும்பும் முறைகளை நாவலாசிரியர் பல இடங்களில் பட்டியலிடுகிறார்.

இன்றைய சாலையோரக் கடைகளின் நிலைமைகள் வேறு. அன்றைய கடைகளின் நிலைமைகள் வேறு. ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் தெரியும் அன்றைய சாலையோரக் கடைகள். காடா விளக்கு, சிம்னி விளக்கு, அரிக்கோன் விளக்குகளின் வெளிச்சத்திலும், மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் போராடி கடை நடத்தி குடும்பங் குட்டிகளை காப்பாற்றியவர்கள்தான் அன்றைய சாலையோரக் கடை வியாபாரிகள். அதிலும் அதிகார வர்க்கத்தினிடமிருந்தும், நீதிமன்றம், காவல்துறை என்று அலைக் கழிப்பதே வாழ்க்கையாகக் கொண்ட சாலையோர வியாபாரிகளின் அவலம் சொல்லி மாளாது.

இந்நிலையில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் கடை என்பது அன்றைய நிலையில் ஓரளவிற்கு அங்கீகாரம், சற்றே உயர்ந்த நிலை.

இதில் பெட்ரோமாக்ஸ் பயன்படுத்தும் முறை குறித்து ஆசிரியரின் நினைவாற்றல் மிக்க பதிவு கண்முன் நிற்கிறது. அதன் வெண்திரியை, ‘பெண்ணின் நெஞ்சுக்கூடுபோல் தொங்கியது’ என்று வர்ணிக்கிறார்.

பொதுவாகவே நாவல் முழுவதுமே, பெண்மய ஓட்டம் ததும்புகிறது. ‘நிலக்கோட்டை ஊர் ஓர் அழகிய மங்கை’ என்கிற வர்ணனையோடு சேர்த்தே சுகந்தன் பெண்களைப் பார்க்கும்போக்கு தெரிகிறது. ‘யாரைக் கண்டாலும் ஆசை’ என்று ஒரு எழுத்தாளர் தன் நாவலுக்குத் தலைப்பிட்டிருப்பார். அதுபோலவே சில நேரங்களில் சுகந்தன் காம இச்சையில் களம் காணும் மனிதனாகவே வெளிப்படுகிறான். எனினும் அவன் ஒருத்திக்கு ஒருவனாகவே அவளில் திளைப்பவனாகவே காட்சிப்படுத்தப்படுகிறான்.

மேலும், அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, பெண்கள் எளிதில் ஆண்களின் இச்சைக்குப் பலியாகி விடுவதை செளந்தரம்-ஜோதி உறவின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

குடும்பப் பொருளாதாரம் தூர்ந்த நிலையில், உடன் பிறந்த அண்ணன், தம்பிமார்களோ, அப்பா மற்றும் சொந்த பந்தங்களோ- தாயற்ற தன்னை- கரையேற்றி விடமாட்டார்கள் என்கிற அவநம்பிக்கையில் சோரம் போவதையும் காணமுடிகிறது. ‘அவன் பாட்டுக்கு கொத்தித் தெளித்துவிட்டுப் போய்விட்டான். வித்துப் பொதுமி இலைவிட்டால்?’ இப்படி ஜோதி நொந்து நூலாகிறாள்.

இயற்கை வர்ணனைகள் ஒரு புறம், பெண்கள் குறித்த வர்ணனைகள் மறுபுறம் என பொதுவாக உணர்வுமய சித்திரம் ஒன்றை தேனிசீருடையான் இந்நாவலில் வரைந்தளிக்க முனைகிறார்.

‘உருண்டை முகத்தில் பதிந்த அகன்ற கண்களும் நெஞ்சுமேடும் முனிவனையும் வசீகரிக்கும். அப்பேற்பட்ட அழகி அவள்.’ கிணற்றில் விழுந்த சுந்தரி குறித்து இவ்விதம் பதிவு செய்கிறார்.

‘அவெ பேச்ச நம்பி பாவாடையத் தூக்கிட்டியாக்கும்’

‘புதருக்குள் அமுக்கினான்.’

இவை வாழ்வின் எதார்த்தங்கள் என்றாலும் இலை மறை காயாய்ச் சொல்ல வேண்டிய பொறுப்பு சமூகப் பார்வை கொண்ட படைப்பாளிக்கு அவசியமாகிறது.

வெளியில் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகும் பெண்கள் உள்மன அழுத்தங்களுக்கு ஆளாகி, பேந்தப் பேந்த விழித்துத் திரியும் காலங்களில் ஆறுதலாய், ஆதரவாய்ப் பேசி ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் அவர்களுக்குப் பேய் பிடித்துவிட்டதாய்க் கதை கட்டும் குரூரங்கள் ஆழமாய்க் காட்டப்பட்டுள்ளன.

முன் கூறியதுபோல், இங்கும் ஜோசிய விவரணைகள், லக்கன பலன்கள் என ஆழ்ந்த புரிதலுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிய மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் ஓர் அம்சமாகவே ராசி பலன்களைப் பார்த்துத் திரிகிறார்கள் என்பதையும் காணமுடிகிறது.

இவற்றில் நம்பிக்கை இல்லாத போதிலும், இதன் தாத்பர்யங்கள் குறித்த ஞானம் ஆசிரியருக்கு வாய்த்திருப்பது நாவலைக் கட்டமைக்கும் காரணிகளில் ஒன்றாகவும் மாறிவிடுகிறது.

கோயில் குளங்கள், திருவிழாக்கள், தீச்சட்டிகள் என்று போகும்போது அதனை அம்பலப்படுத்தவும் ஆசிரியர் தயங்கவில்லை. ஏற்கெனவே அவர் எழுதிய, ‘அருள்’ சிறுகதையிலும் அருள் பாதி, மருள் பாதி என்கிற சூட்சுமத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதில் தீச்சட்டி எப்படி சூடு தாக்காமல் தகவமைக்கப்பட்டிருக்கிறது என்கிற குட்டையும் உடைத்து விடுகிறார்.

நாவலில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள் நினைந்து போற்றத்தக்கதாய் மாறிவிடுகின்றன. லாரி ஓட்டுநரான பரமத்தேவரின் பாத்திரப் படைப்பைக் குறிப்பிடலாம்.

அம்புட்டா! என்றார் அவரது மனைவி, ‘கொறச்சுக்கப்பா…’

‘பழத்துக்கு ஒரு பைசாதே லாபம். ஒங்ககிட்ட அதிகம் வாங்குவனா?’ பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் மகள் பரமத்தேவர் சொன்ன காசைக் கொண்டு வந்தாள்.

‘நீதே எம் மக, ஒங்கம்மாவுக்கு இன்னம் அந்தக் களவாணி புத்தி போகல பாத்தியா?’

காசை வாங்கிக்கொண்டு அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன்! ‘கள்ளிக்காட்டில் அகில் முளைத்த மாதிரி!’ என்று பத்தாப்பில் படித்திருக்கிறேன். பரமத்தேவர் அகில். அதன் வாசம் பாம்புகளை அண்டவிடாது.

‘திருமணத்திற்கு ஒண்ணே கால் ரூபா மொய்’ என்கிற பதிவு நாவலின் காலகட்டத்தைக் கண்முன் விரிக்கிறது.

வீட்டுவாசலில் தார்ப்பாய் விரித்து பந்தி நடந்தது. இதுதான் அக்கால நிலை. இன்றைக்குப்போல் திரும்பிய புறமெல்லாம் திருமண மண்டபங்கள் என்றில்லாத நிலையில் வீடுகள்தான் அன்றைக்கு கல்யாண வைபோகங்களுக்கான இடங்கள்.

அம்மாவுக்கும், ஜோதிக்கும் முரண்கள் தோன்றியபோதும், தீவிரமடையும்போதும், தோழர் சிவந்த நாதனே முன் நிற்கிறார். காட்டுச் சாலையில் அவரது மனைவி பசுங்கிளி உட்பட பிணக்குகளைத் தீர்க்கும் மாமருந்துகளாகத் திகழ்கின்றனர். ஜமால் ராவுத்தரின் பங்களிப்பும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகிறது. பிணக்குகள் மாறி இணக்கங்கள் ஏற்படும்போது குடும்பம் வளர்கிறது; தொழிலும் வாழ்வும் செழிக்கிறது. அத்தனைக்கும் அடியுரமாய் ஜோதி ஜொலிக்கிறாள்.

மொத்தம் 46 அத்தியாயங்களில், பெரும் பகுதி, ‘ஆஹா… கல்யாணம்’ என்ற வகையிலேயே சென்று விடுகிறது. சுகந்தனுக்கும் ஜோதிக்குமான திருமண பந்தமே நாவல் முழுக்கப் பேசப்படுகிறது. இது இயல்பும்கூட.

சத்தமில்லாமல் நடக்கிற சில விஷயங்கள்போல், கலப்பு மணங்கள் வருகின்றன. அவை தன் முற்போக்கு திசைவழியை படைப்பாளி வெளிப்படுத்துவதற்காக தருவிக்கப்பட்டதைப்போல் துருத்தியும் தெரிகின்றன.

சுவாதி பன்றி மேய்ப்பவனுடன் கொள்ளும் உறவு; திருமணம் இத்யாதிகள்; ஜோதியின் தம்பிகள் மேற்கொள்ளும் காதல் திருமணங்கள்.

உச்ச நிகழ்வாய், சிவந்தநாதனின் சம்பந்தியாய் மாறும் சுகந்தன்.

இவைகள் இயல்பாக மாறாமல் வலிந்து சொல்லப்பட்டதைப்போல் இறுதிப் பக்கங்களை நிறைத்திருக்கின்றன. தொங்கு சதை போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவதைப் புறக்கணிக்க முடியவில்லை.

மொத்தத்தில் பெண்ணின் சிறுமை, பெருமை, மகிமை பேசும் நாவலாய் இது மிளிர்ந்திருக்கிறது.

தன்மை இளைத்து இளைத்து, வார்த்து வார்த்து குடும்பம் எனும் படகில் ஓட்டை விழாமல் பாதுகாக்கும் பெண்ணின் ஒற்றை வாசம் நாவல் நெடுகப் படிந்திருக்கிறது.

இந்நாவலில் தனித்துக்கூற வேண்டியவற்றுள் பழமொழிகள், சொலவடைகள் இருக்கின்றன. அக்கால மக்களின் மொழி நடை ஆசிரியருக்குக் கைவந்த கலையாய் இருக்கிறது.

நொட்டாங்கை, தலக்குடுத்து, ஏடாசி, ஏனம், லவுதம், பண்டுதம், ரெட்டிச்சநாள், ஒலம்படி, ஒருசாச்சு, எச்சுமச்சா, வேகாளம், கீசரி மேசரி, தூரக்கடுவு, லக்கணக்கூடறு, தம்பாயமில்லாம கெம்புனாரு, நீர்ச்சோங்கு, சீர்செனத்தி, வித்துப் பொதுமி, வெறுக்கு வெறுக்குன்னு என்று நாவல் முழுக்க வழக்குச் சொற்கள் பெருகி இருப்பது படைப்பாளியின் உற்று நோக்கலைப் பறைசாற்றுகிறது.

‘சட்டியில் இருப்பதுதான் அகப்பைக்கு வரும்’ என்பதைப்போல, படைப்பாளியின் பாடுபொருள் ஒன்றேபோல் தொடர்வதிலிருந்து மீள வேண்டும். அவரின் ‘கடை’ நாவல் துவங்கி ‘ஒற்றை வாசம்’ வரை, ‘பழ’ வாசம்.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *