நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்

நூல் அறிமுகம்: ஒற்றைவாசம் -ஜனநேசன்

   காமம் பற்றி சீருடையான் கண்டு  மொழியும் “ஒற்றைவாசம் “  

   [தேனிசீருடையான் எழுதிய“ஒற்றைவாசம்” நாவல் அறிமுகம்-ஜனநேசன்] 

    ஒருமனிதன் தன் வாழ்நாளில் தான் உற்றதில் , பெற்றதில்  சிலவற்றை  சகமனிதர்க்கு பகிரவேண்டிய அவசியத்தை உணரத்தொடங்கும் கணத்தில்  அவன் படைப்பாளியாக உருக்கொள்கிறான் . அதை  எழுத்திலோ, ஓவியத்திலோ , பாட்டிலோ ,சிற்பத்திலோ  வெளிப்படுத்த முனைகிறான் .

 வாழ்வெனும் விரிந்தகன்ற வெளியில் அக்கலைஞன் தன்பார்வையை ஈர்த்த ஒருசிறுபகுதியை புனைவெனும் வெண்திரையில் வண்ணமும் , எண்ணமும் , குழைத்து , தான் கண்டதை,  காண நினைப்பதை , கற்றதை , கற்பிக்க விரும்புவதை புனைவென்னும் தூரிகை கொண்டு மறுபடைப்பு செய்வதே நாவல்  எனும் புதினம். 

 1 ] தனது  சொந்த வாழ்வையே புதினமாக எழுதுவது, 2] தன்னைச் சுற்றி நிகழ்ந்ததை  எழுதுவது, 3] நிகழ விரும்பியதை எழுதுவது ,4] முன்பு எழுதப்பட்ட காவியத்தை தன்நோக்கில் வியாக்கியானித்து விளம்புவது … இப்படி பலவகைமை உண்டு .இதில் தேனி சீருடையான் தனது வாழ்வை மூன்று புதினங்களில் தந்து ,முதல்கட்டத்தைத் தாண்டி , இரண்டாம்கட்டத்தில் எழுதிய, வேப்பங்கிணறு போன்ற  நாவல்களுக்கு அடுத்து  புதினம் “ ஒற்றைவாசம்” ,  மொத்தக்  கணக்கில்  இது ஆறாவது புதினம். இனி அடுத்தடுத்த வகைப்பாடுகளில் எழுதும்    வல்லமை உள்ளவர் சீருடையான் எனும் நம்பிக்கையைத் தரும் புதினம் இது !.

  உயிர்வாழ்தலின்  இருத்தலை இயக்குவிப்பது பசி  எனும் விசையே . இது வயிற்றுப்பசி ,   இதன் மறு தலை உடல்பசி .இவ்விரண்டும்  நிறைவேறியபின் கிளைக்கும்  பல்வேறு பசிகள்    மனித பரிணாமத்தை அடுத்தடுத்த  கட்டங்களுக்கு நகர்த்துகின்றன . வயிற்றுப்பசியைத்               தீர்த்து நிமிர்ந்த சாதாரண மனிதனை ,  அடுத்த பசியான காமம் அவனை உறுத்தியும், உந்தியும் தள்ளும் பாடுகளை எதிர்கொள்ளுவதையும்  இரு உறுபசிகளும் தணிந்து கனியும்போது மணக்கும் அன்பும், நேசமுமே “ஒற்றைவாசம் “ புதினம் ! காமத்துக்கு  வாசம் உண்டென்பதை குறுந்தொகைப்பாடல்  “… நறியவும் உளதோ   நீயறியும் பூவே “             என்று அஞ்சிறைத்தும்பியை  வினவுகிறதை  நாமறிவோம்.  ஆனால் ,அந்த காமம்  அன்பாக எப்படி கமழ்கிறது , கூறுபோட்டு தனித்தனியே  பிணைத்து  பிரித்து வைத்துள்ள சமூக கட்டுமானங்களை எவ்வாறு ஊடறுத்து  மனிதர்களை  இணைக்கிறது  என்பதை “ஒற்றைவாசம் “ மூலம் தேனி சீருடையான் உணர்த்துகிறார்  

 முல்லை ஆறு ,வைகையாய்   விரிந்து பாய்ந்து செழித்த பழைய மதுரை மாவட்டத்தின்  இரு பகுதிகளான  தேனி , நிலக்கோட்டை என்ற இரு ஊர்ப்பகுதிகளில்  வசிக்கும் இரண்டு அடிதட்டுக் குடும்பங்களையும் அவர்களைச் சுற்றிய வாழ்வியல் பாடுகளையும் பின்னி, பிணைந்து நடமாடும் மனிதர்களான  சுகந்தன் , நாகராசன்,மாரிச்சாமி, ஜோதி, சுவாதி, சாந்தி,தங்கவேல், சவுந்திரபாண்டி ,மாரியப்பன் போன்றவர்களை  காமச்சுழல் அலைகழிப்பதை , அதிலிருந்து   மீள்பவரை,  இரையாகுபவரை மண் மணக்கும் சொற்களில், மண்ணுக்குரிய பண்பாட்டுச்சூழலில்  நெருடல் இல்லாமல்  சரளமான நடையில் புதினத்தை சீருடையான்  நகர்த்துகிறார் .  உடற்பசி அத்துமீறுவதற்கு  தனிமனிதர்கள்  மட்டுமல்ல சாதீயகட்டுமானம், சீர் சினத்தி எனும் சமூக  சம்பிரதாய பிடிமானங்கள்  தரும் அழுத்தங்களே என்பதை  மிக லாவாண்யமாக  இப்புதினத்தில் அவிழ்க்கிறார். 

   அலைகழிக்கும் உடற்பசியிலிருந்து  வாழ்வின் திசைவழியில்  கதைமாந்தர்களில்  சிலர் கற்பு உடலில் இல்லை, உள்ளத்தில் தான் என்றும்  , உடற்பசியை தீர்ப்பது மட்டுமே வாழ்வல்ல , சகமனிதர்களை அரவணைத்து வாழ்வதே  முக்கியம் என்று சிலரும் ,அமைந்த வாழ்வியல் சூழலில் கிடைத்த துணையோடு  முடிந்தவரை சிறப்பாக வாழ்வதே என்று சிலரும் நம்முன் வாழ்ந்து காட்டுகிறார்கள் . வாழ்வைப் புரிந்துகொள்ளாதவர்கள் சிலர் அடையாளமின்றி வீழ்கிறார்கள். பணமே வாழ்வில்  வெற்றியை தீர்மானிப்பத்தில்லை . சகமனிதருடன்  நேசபாவமும் , அயரா உழைப்புமே  முன்னேற்றத்திற்கு  பாதை பாவுகிறது என்பதையும்  நிகழ்த்திக் காட்டுகிறார்கள் . வாழ்வில் நெருக்கடி முற்றுகையில்  சாதீயம்  நொறுங்குகிறது! .  இவை அனைத்தையும் நெருடலற்று   மக்கள்மொழியில்  உணர்வோட்டமான  இயல்பு நடையில்  கதைமாந்தர்கள்  வழி தேனி சீருடையான் சொல்லுகிறார் .இப்புதினத்தை  வாசிக்கையில்  ஒற்றைவாசம்  கமழ்த்தும்  பல பரிமாணங்களை உணரலாம் !

  சுகந்தனும், ஜோதியும், சுவாதியும், சாந்தியும், அம்மாவும் , குழந்தைப் பேறில்லா இருளாயி பெரியம்மா  , சிவந்தநாதன், பசுங்கிளி, பெரியராவுத்தர், பரமத்தேவர்  போன்ற மனிதர்களோடு, முல்லையாறும் , மழையும், வெயிலும்  பாத்திரங்களாகி  இப்புதினத்திற்கு  வாசனை ஊட்டச் செய்திருக்கிற  தேனி சீருடையானின்  படைப்பாளுமையை  இந்நாவலை  வாசிப்பவர்  உணருவர் !. இந்நாவலை  ஈர்ப்பான  அட்டைபடத்தோடு, சிறப்பாக கட்டமைத்த அன்னம் வெளியீட்டார் கதிரும் பாராட்டுக்குரியவர்.!

“ஒற்றை வாசம் “- நாவல்.

ஆசிரியர்; தேனி சீருடையான்.

பக்; 255 .விலை. ரூ. 270/.

அன்னம் வெளீயீடு.தஞ்சாவூர்.7 .

 

   

 

  

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *