தற்போது தோழர் தேனி சீருடையான் அவர்களின் ‘’ ஒற்றை வாசம் நாவல் ‘’ வாசிக்க கிடைத்தது . அன்னம் பதிப்பாக வெளி வந்திருக்கும் இந்த நாவல் உண்மையில் வாழ்க்கையை தனது இருநூற்றி ஐம்பத்து ஐந்து பக்கங்களுக்குள் மீள் ஆய்வு செய்து நமது கைகளில் தந்து விட்டுப் போகின்ற ஒரு அற்புதமான படைப்பாகும்..
ஒற்றை வாசம் என்பது உண்மையில் பூக்கள் தரும் வாசமல்ல. இந்த உலகத்தில் என்றுமே தீராத ஒற்றை வாசமாக சுற்றிக்கொண்டேயிருப்பது உண்மையில் நம்மிடம் அன்பு செலுத்தும் மனிதர்களிடன் உயிர் தான் என்பதை அற்புதமாக இந்த நாவலில் படைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
தோழர் சீருடையான் அவர்களின் கதை உலகம் எப்போதும் சிறு வியாபாரிகள் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். வாழ்க்கைக்காக இந்த சமூகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டங்களையும் அதில் அவர்கள் எவ்வாறு சமூகத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதையும் , தன் பிழைப்பு சார்ந்து அவர்கள் சமூகத்தில் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதையும் எப்போதும் தனது படைப்புகளில் உணர்த்தியே செல்வார்.
ஒரு தனிமனிதன் குடும்பமாக மாறி சக சமூக மனிதர்களை சந்தித்து வாழ்க்கையை எவ்வாறு நடத்திச் செல்கிறான் என்பதை அந்த அந்த காலகட்டங்களின் பின்புலத்தோடு வாசகர்களுக்கு எளிய வார்த்தைகளில் உணர்த்தி செல்வதில் அவர் எப்போதுமே தனித்துவமானவர்.
அந்த வகையில்’’ ஒற்றை வாசம் ‘’ என்ற இந்த நாவலும் சுகந்தன் என்கிற ஒரு சிறு வியாபாரியின் வாழ்வை கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட சமூக நாவலாகவே இருக்கிறது.
சுகந்தன் என்ற சிறு வியாபாரியின் வாழ்க்கைக்கும் இந்த சமூகத்திற்கும் உள்ள உறவு என்ன ? அவன் இந்த சமூகத்திற்கு செய்கின்ற பணிகள் என்னென்ன ? இந்த சமூகம் அவனுக்கு எவ்விதமான வாழ்க்கையை கையளித்திருக்கிறது என்பவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து இந்த நாவலைப் படைத்துளள்ளார்
சமூக வாழ்க்கையில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு பிரித்தறிய முடியாதபடி இயங்கும் வாழ்வியலின் உட்கூறுகளை ஆழமாக ஆய்வு செய்து சுவை குன்றாமல் படைத்துள்ள நாவலாசிரியரை நாம் முதலில் பாராட்ட வேண்டும்.
பாத்திரப்படைப்புகளின் வழியாகவே இந்த முழுநாவலும் நகர்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது
சுகந்தனும் ஜோதியும்.
சுகந்தன் என்னும் ஒரு 27 வயதான இளைஞன் தான் இந்த கதையின் நாயகன். அவனின் பார்வையின் வழியே தான் இந்த நாவலின் பெரும் பகுதி நகர்கிறது. அவன் ஒரு தள்ளுவண்டி வியாபாரி. வாழைக்காய் கொடோனுக்கு சென்று மொத்த வியாபாரிகளிடம் புகை மூட்டம் போடப்பட்ட வாழைப்பழங்களை சல்லிசான விலையில் பெற்றுக்கொண்டு , அதை அரிமா தள்ளு வண்டியில் வைத்து தேனி சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சிற்றூர்களுக்குச் சென்று இலாபத்திற்கு விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறான். பாரஸ்ட் ரோட்டில் ஒரு குடிசை வீடுதான் அவர்களுடையது- அவனது தாயும் தந்தையும் தினக்கூலிகள் தான்.
அவன் வாழ்க்கையில் பெரிய கனவுகள் என்றோ .பெரிய லட்சியங்கள் என்றோ ஏதுமில்லை .
முன்னொரு காலத்தில் அவனது குடும்பம் வறுமையின் பிடியில் இருந்தது. உண்ணுவதற்கு உணவு கூட கிடைக்க பெறாமல் இருந்த காலகட்டம் அது . ஆனால் தற்போது அவனுக்கு மூன்று வேலை உணவும் கிடைக்கிறது அவனுடைய அதிகபட்சமான ஆசை வியாபாரத்தில் அம்பானி அதானி ஆகவேண்டும் என்பதல்ல. தேனி பேருந்து நிலையத்தில் சொந்தமாக ஒரு பாதையோரக் கடை போட வேண்டும் அவ்வளவுதான்.
இவ்வளவிற்கும் நடை பாதை வியாபாரிகளை போலிஸ் அவ்வப்போது தன் படை பரிவாரத்தோடு வந்து அடித்து துன்புறுத்துவதை அவன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறான். இருந்தாலும் அவனுக்கு அப்படி ஓர் ஆசை மனதில் இருக்கிறது.
வாழைக்காயை மொத்தமாக இறக்குமதி செய்து அதை புகை மூட்டம் போட்டு வியாபாரிகளுக்கு லாபத்திற்கு பிரித்துக் கொடுக்கும் மாரிச்சாமி மாமா என்பவரோடும் , தேனி பழைய பேருந்து நிலையத்தில் நடைபாதையில் ஒரு பழக்கடை வைத்திருக்கும் நாகராஜ் அண்ணனோடும் பழகி அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்து வியாபார நுணுக்கத்தை அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்கிறான்.
தினமும் சந்திக்கும் எளிய மனிதர்களிடம் அன்பாக உரையாடிக்கொண்டு தன் சீவிதத்தை கடத்திக் கொண்டே போய்க்கொண்டு இருக்கிறான் . அவனது தாய் தந்தையரும் அவனைப் போலவே கூலி வேலை செய்பவர்கள் தான். அவனுக்கு ஒரு சகோதரி இருக்கிறாள். அவளை போடியில் ஒரு ஆசிரியருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள் . அவர் மனைவி வீட்டை மதிப்பதேயில்லை. ( ஒரு முறை கூட இந்த நாவலில் ஆசிரியர் தலைகாட்டவேயில்லை ) தாய் மாமன், அம்மாயி வழி உறவுகள் தேனிக்கு அருகில் உள்ள வயல் பட்டியல் வசிக்கின்றன , இப்படி வாழ்க்கை போகும் சூழ்நிலையில் தான் அவனது இருபத்தி ஏழாவது வயதில் அவனுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பிக்கிறார்கள்
நிலக்கோட்டை அருகில் கொங்குளம் என்ற ஒரு கிராமத்தில் தங்கவேலு என்பவரின் வீட்டில் ஏற்ற பெண் இருப்பதாக அறிந்து அங்கே பெண் பார்க்க செல்கிறார்கள் . .தங்கவேலுவிற்கு பெரிய குடும்பம் மொத்தம் ஆறு குழந்தைகள் .ஜோதி சுவாதி என்ற இரண்டு பெண் குழந்தைகளோடு நான்கு பையன்கள் .,அவர் மனைவி ஆறு குழந்தைகளை பெற்று கொடுத்து விட்டு முப்பத்தி ஒன்பது வயதிலேயே நோயில் காலமாகி விடுகிறாள்.
.ஜோதிக்கு இரண்டு அண்ணன்கள் இரண்டு தம்பிகள் ஒரு தங்கை .எல்லோரும் எளிய குடிசை வீட்டில் வசிக்கிறார்கள் அந்த குழந்தைகளை எல்லாம் அம்மாவின் நிலையிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டியது அவளது பொறுப்பாக இருக்கிறது. தங்கவேலு ஒரு சிறிய பலசரக்குடைய நடத்துகிறார் .மாப்பிள்ளை வீட்டார் வரதட்சினையாக கேட்கும் இரண்டு புவுன்களை கூட ஜோதிக்கு போட்டு அவரால் அவளை திருமணம் செய்து தர இயலவில்லை
ஜோதி அழகோ அழகு சுகந்தனின் பார்வையில் சொன்னால் அக்காவும் தங்கையும் மயிலும் குயிலுமாக இருக்கிறார்கள் அடுத்தவர்கள் பார்வையில் படும் போது வைரம் வைடூரியமாக ஜொலிக்கிறார்கள் .சுகந்தனுக்கு பெண்ணை பார்த்ததும் மிகவும் பிடித்து விடுகிறது ஆனால் சீர் செனத்தி பேச்சுகளால் கல்யாணம் தட்டிப் போய்க் கொண்டே இருக்கிறது .
இதற்கிடையில் தன்னால் இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இந்த வரன் வேண்டாம் என்று சொல்லி விட்டு அவனது வீட்டார் மதுரைக்கு வேறொரு பெண்ணை பார்ப்பதற்காக அவனை நைச்சியமாக அழைத்துச் செல்கிறார்கள் .
மீனாட்சி அம்மன் கோவிலுக்கெல்லாம் சென்று முறையாக காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து விட்டுத்தான் மதுரையில் பெண்ணைப் பார்க்க செல்கிறார்கள் .அம்மாச்சியும் அவர்களுடன் வருகிறாள்.
பெண்ணைப் பார்த்தவுடனே பெரும் அதிர்ச்சி அவனுக்கு . .கல்லில் அலங்கோலமாக செய்யப்பட்ட அவலட்சணமான உருவமாக அங்கே அந்த பெண் தோற்றம் அளிக்கிறாள். சுகந்தன் , அவளது அக்கா , சுகந்தனோடு வந்த பழக்கடை வியாபாரி நாகராஜன் அண்ணன் உட்பட யாருக்குமே அந்தப் பெண்ணை பிடிக்கவில்லை . ஆனால் அது வசதியான குடும்பமாக தெரிகிறது. பெண்ணின் அப்பா கொத்தனார் வேறு வழி இல்லாமல் போய் கடிதம் போடுகிறோம் என்று சொல்லி விட்டு மீண்டும் தேனிக்கே திரும்பி வருகிறார்கள்
தேனிக்கு வந்த பிறகு சுகந்தனுக்கு திருமணம் என்ற ஒன்று ஜோதியோடுதான் விதிக்கப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொருவரும் முடிவு கட்டி விடுகிறார்கள். இந்த முறை திருமணப் பேச்சுவார்த்தைக்காக சுகந்தனின் தூரத்து உறவினர் அருணாச்சலம் பெரியப்பாவை நிலக்கோட்டைக்கு தங்கவேலுவிடம் பேச அனுப்பி வைக்கிறார்கள். அவரின் மூலமாக பலவிதமான இடையூறுகள் தீர்க்கப்பட்டு திருமணம் வெற்றிகரகமா முடிகிறது . ஆனால் திருமணம் முடிந்த அந்த வசந்தத்தை வாழ்வின் சொர்க்கத்தை சுகந்தன் பரிபூரணமாக அனுபவிப்பதற்குள் வாழ்க்கை அதை அவனிடமிருந்து பறித்துக் கொள்கிறது.
வழக்கம் போல ஜோதிக்கும் அவளது மாமியாருக்கும் மாமியார் மருமகள் சண்டை ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது . அதற்கும் முதலில் மழை தான் காரணமாக இருக்கிறது. இதில் தான் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் சுகந்தன் தடுமாறுகிறான்.
ஜோதிக்கு மழையை ரசிக்கப் பிடிக்கிறது . ஆனால் அவளது மாமியாருக்கு அவள் அப்படி செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை . நான்கு காசு சம்பாதிக்க வேண்டும் அதற்கு மருமகள் ஒத்தாசையாக உடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள் அவள்.
ஜோதி இயற்கையை ஒரு சிறு குழந்தை போல் அனுபவிக்க நினைக்கிறாள் . மழை அவளது பிரியமான தோழி . இந்த கற்பனை சுகந்தனுக்கு புரிந்தாலும் அவனது வீட்டில் இது யாருக்கும் புரியவில்லை.
இந்த சண்டை சிறிது சிறிதாக பெரிதாகி உச்சபட்சமாக குடும்பத்திற்குள் ஒரு வெடிப்பை ஏற்படுத்துகிறது.
ஜோதி தனது தந்தையுடன் தனது பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். வேறு வழியில்லாமல் சுகந்தனும் அதற்கு சம்மதிக்கிறான்.
பக்கத்து வீட்டுக்காரர்களான சிவந்த நாதனும் ( அவர் மார்க்ஸிஸ்ட் கட்சித் தோழர் ) அவரது மனைவி பசுங்கிளியும் சுகந்தனுக்கும் அவனது அம்மாவிற்கும் புத்திமதிகள் சொல்லி ஜோதியை அவளது பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஒரு மனமாற்றம் அவளுக்கு தேவைப்படும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்
ஜோதியில்லாத வாழ்க்கை சுகந்தனுக்கு வெறுத்துப் போய் விடுகிறது . அவனை அந்த நிலையில் காண சகிக்காத அவனது நலம் விரும்பிகள் ஒவ்வொருவரும் அவனுக்கு புத்திமதிகள் சொல்லி ‘’ நீ சென்று ஜோதியை மறுபடி அழைத்து வா ‘’ என்று அனுப்பி வைக்கிறார்கள் அவனும் அவ்வாறே மனைவியின் வீட்டுக்குச் செல்கிறான் அங்கே அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
ஜோதி அவனைப் பார்த்ததும் பழசை எல்லாம் மறந்து விட்டு அவனை மகிழ்ச்சியாக வரவேற்கிறாள் . தங்கையை தள்ளியிருக்கும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு சிறிய இடைவெளியில் அவனோடு தனிமையில் உல்லாசமாக இருக்கிறாள் . அவளது தந்தை வீட்டிற்கு வந்த பிறகு அவரும் அவனை அருமையாக வரவேற்கிறார் .உணவெல்லாம் ஆன பிறகு ஜோதியை அவன் ஊருக்கு அழைத்துப் போக கேட்கும் போது அங்குள்ள பெரியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜோதியை அவனோடு அனுப்ப முடியாது என்று சொல்கிறார்கள். அதற்கு ஜோதியும் உடன் படுகிறாள்.
ஜோதி அவனோடு வாழ வேண்டும் என்றால் அவன் உடனே ஊருக்கு சென்று உடனடியாக ஒரு தனி வீடு பார்த்து அவளோடு தனிக் குடித்தனம் ஆரம்பிக்க வேண்டும் .அப்பொழுது மட்டுமே தனது மகனை அனுப்பி வைப்பேன் என்று தங்கவேலு உறுதியாக அவனிடம் சொல்லி விடுகிறார் .
சுகந்தன் மீண்டும் மனம் உடைந்து போய் தனியாகவே தேனிக்கு திரும்பி வருகிறான். வந்த பிறகும் இங்கே அவனுக்கு வியாபாரத்தில் ஒட்டுதல் இல்லாமல் போகிறது. மனிதர்களோடும் ஒட்டுதல் வரவில்லை . பேருக்குஅரை உயிராக அலைகிறான். அவனை யாராலும் தேற்ற முடியவில்லை.
தன் தாயோடு சண்டை போடுகிறான். தந்தைக்கு அவனை காணவே சகிக்கவில்லை . வேறு வழியில்லாமல் அனைவரும் ஒன்று கூடி விவாவித்து சிவந்தநாதன் பசுங்கிளியின் யோசனைப்படி இவர்களின் நிலத்திலேயே இவர்களது வீட்டிற்கு அருகில் இன்னொரு குடிசை வீட்டை அவனுக்கு கட்டி கொடுக்கிறார்கள்.
இன்னொரு குடிசை வீடு அங்கே எழுப்பப்பட்ட பிறகு ஜோதியை சுகந்தன் அழைத்து வருகிறான் . ஜோதி மிகவும் மகிழ்ச்சியாக இந்த புதிய வீட்டில் வந்து பால் காய்ச்சுகிறாள். தனிக் குடித்தனத்தை ஆரம்பித்த பிறகு அவர்களுக்கு .வாழ்க்கை அர்த்தமுள்ளதாகப் போகிறது . வருடங்கள் மாயமாக உருண்டு செல்கின்றன .
மாமியாருக்கும் மருமகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டாலும் மீண்டும் நட்புணர்வும் உடனே எழுகிறது . இப்பொழுதெல்லாம் அவளுக்கு முன்பு போல மாமியாரால் தொல்லை இல்லை .
அவர்களுக்கு ஒரே ஒரு குறை தான் உள்ளது
திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை .ஆனால் அந்தக் கவலைக்கும் காலம் சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது .
நான்கு வருடங்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது . அதற்கு கயல்மணி என்று பெயர் வைக்கிறார்கள். . அந்தக் குழந்தையை பெற்றெடுக்க முதல் பிரசவத்திற்கு தாய் வீட்டுக்கு செல்லும் ஜோதியால் குழந்தை பிறந்ததும் அங்கு நீண்ட நாட்களாக இருக்க முடியவில்லை . அதற்குள் அவளது குடும்பம் பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுகிறது.
பொறுப்பற்ற தந்தை அக்கறையற்ற அண்ணன் தம்பிகள் கல்யாணத்திற்கு காத்திருக்கும் வயதுக்கு வந்த தங்கை என அந்தக் குடும்பத்தின் பொருளாதார சூழல் ஜோதியை மிகவும் அலைக்கழிக்கிறது.
அதுவும் தவிர தங்கை தனது சுவாதி அங்கே டொம்பு தெருவில் பன்றிகள் வளர்க்கும் குடும்பத்தை சேர்ந்த மாரியப்பனோடு பழக ஆரம்பிக்கிறாள். ஆனால் மாரியப்பன் கீழ் ஜாதிக்காரன் என்று ஜோதியும் அவளது தந்தையும் அவளை இகழ்கிறார்கள் ஆனாலும் கீழ் ஜாதி என்றால் தான் என்ன அவர்களும் மனிதர்கள் தானே என்று சுவாதி பழக ஆரம்பிக்கிறாள் . இந்த மன உளைச்சலில் ஜோதிக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை . தன்னை விரைவில் வந்து அழைத்துச் செல்லுமாறு சுகந்தனுக்கு கடிதம் எழுதுகிறாள் .மேலும் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. அங்கு இருந்தால் அதை நன்றாக வளர்க்க முடியாது என்றும் , எழுதுகிறாள்.
சுகந்தனும் அவனது அம்மாவும் அக்காவும் உடனடியா நிலக்கோட்டைக்கு சென்று ஜோதியையும் குழந்தையும் தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள் .பேரக் குழந்தைக்கு கொடியை எடுத்துப்போட்டுக்கூட தங்கவேலுவால் அனுப்ப முடியவில்லை. சுகந்தன் தான் அவரிடம் இரகசியமாக கொடி எடுப்பதற்கு காசு கொடுக்கிறான்.
குழந்தையுடன் ஜோதி சொந்த வீட்டிற்குள் நுழைந்த நேரம் நல்ல நேரமாக ஆரம்பமாகிறது..அந்த வீட்டில் செல்வம் பெருக ஆரம்பிக்கிறது .விரைவிலேயே குடிசை வீடு காரை வீடாக உயர்கிறது . வீட்டிற்கு கரண்ட் எடுக்கிறார்கள் ஒரு குழந்தை இரண்டு குழந்தைகளாகின்றன. இரண்டுமே ஆண்குழந்தைகள். கயல் மணி முத்து முருகன் என இரண்டு ஆண் குழந்தைகள் இப்போது அவர்கள் .இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்களான சிவந்த நாதன் பசுங்கிளியின் மகள் நந்தினியும் பள்ளிக்கு செல்கிறாள்.
தள்ளுவண்டி வியாபாரியாக இருந்த சுகந்தன் ஒரு கேரளாக்கார சிறு வியாபாரியின் துணையோடு மொத்த வியாபாரியாக மாறும் சூழல் உருவாகிறது . அதை அவன் கச்சிதமாப் பிடித்துக் கொண்டு முன்னேறுகிறான். ஏற்கனவே அவன் ஒரு சொந்த தள்ளுவண்டியை வாங்கிக் வைத்திருந்தான் . இப்பொழுது பெரிய வியாபாரியாக மாறுகிறான். அவன் கேரளாவுக்கே சென்று அந்தந்த சூழலுக்கு தகுந்த மாதிரியான பழங்களை அங்கிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து இங்கே கொண்டு வந்து சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு விற்று நல்ல லாபம் சம்பாதிக்கிறான்
இதுவரை வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்காமல் சம்பளத்திதற்கு புளி தட்ட சென்று கொண்டிருந்த ஜோதியும் கூட அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் தேங்கி இருக்கும் காய்கறிகளை வாசலில் வைத்து வியாபாரம் செய்து நல்ல லாபம் சம்பாதிக்கிறாள்.சிறுவாடும் சேர்த்து வைக்கிறாள். அது பின்னர் ஒரு காரை வீடு கட்டும்போது கைகொடுக்கிறது.
அவள் புளி தட்ட வேலைக்குப் போன இடத்தில் அங்கே பாண்டியம்மாள் என்ற ஏழைப் பெண்ணோடு பழக்கம் ஏற்படுகிறது. . அவளையும் தன் பக்கத்து வீட்டை வாடகைக்குப் பிடித்துப் கொடுத்து தன் அருகில் தங்க வைத்துக் கொள்கிறாள். அவளையும் அவளது மகள் அருணாவையும் இவர்கள் குடும்பம் நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள். அருணாவையும் படிக்க வைக்கிறார்கள். ஏழைக்கு ஏழைகள் தான் உதவியாக இருக்க முடியும் என்பதை இந்தப் பக்கங்களின் ஊடாக ஆசிரியர் அவ்வளவு நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். பாண்டியம்மாள் இவர்களது வியாபாரத்திற்கு உதவியாக இருக்கிறாள்.
சிவந்த நாதன் தோழர் கட்சி அலுவலகத்தில் கட்சி சார்பாக வழக்கறிஞராக இருக்கிறார் .அவர் அவ்வப்போது வந்து சுகந்தன் குடும்பத்தில் ஏற்படும் பூசல்களை தீர்த்து வைக்கிறார் .குடும்பமும் வியாபாரமும் வளர்ச்சி பெறுகிறது. கூரை வீடு காரை வீடாக மாறுகிறது. அதில் மேல்மாடி எடுக்கிறார்கள். வாழ்க்கையில் வசந்தம் வந்து சேர்கிறது .
இவ்வாறு போய் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நாள் ஜோதிக்கு சென்னையிலிருந்து ஒரு கடிதம் வருகிறது .கடிதத்தை எழுதியவள் சுவாதி என்று அஞ்சல் காரர் சொல்கிறார். ஜோதி நடுங்கும் கரங்களோடு கடிதத்தை பிரித்துப் படிக்கிறாள்.
அவளுக்கு மனக் கண்முன் பழைய வாழ்க்கை வந்து போகிறது. ஜோதி அவளது தந்தை வீட்டிற்கு குழந்தைப் பேற்றுக்கு போயிருந்த போது தான் சுவாதியை கடைசியாகப் பார்த்தது. .அவள் டொம்ப தெருவில் இருக்கும் பன்றி மேய்க்கும் குடும்பத்தை சேர்ந்த மாரியப்பனோடு சேர்ந்து காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் விடுகிறாள்.
அவர்கள் அங்கிருந்து கால்நடையாக செம்பட்டிக்குச் சென்று அங்கே இருந்து சென்னைக்கு ரயில் ஏறிவிடுகிறார்கள்.
இந்த இருபது வருட காலகட்டத்தில் அவர்கள் அங்கே பன்றிப் பண்ணை வைத்து வியாபாரம் செய்து அதன் மூலமாக பெரும் பணக்காரர்களாகி விடுகிறார்கள். அவனது பண்ணையிலேயே பத்து பேர் இப்பொழுது வேலைக்கு இருக்கிறார்கள். தனி பங்களாவும் காரும் இப்போது அவர்களுக்கு உள்ளது. அவர்களுடைய மகளுக்கு அதாவது சுவாதியின் மகளுக்கு ஜோதி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில் அவள் தன் அக்காவை காண விரும்புவதாகும் வந்தால் பேசுவாளா என்றும் கேட்டு எழுதியிருக்கிறாள்.
சுகந்தன் அவர்களை தங்கள் வீட்டுக்கு வரச் சொல்லுகிறான் மாரியப்பன் குடும்பம் படகு போன்ற காரில் வந்து சுகந்தனின் வீட்டுக்கு முன்னால் இறங்குகிறது. மாரியப்பனிடம் எந்த ஜாதி வித்தியாசங்களும் தெரியவில்லை . அனைவருடனும் அவன் சுமூகமாக பழகுகிறான் .சுவாதியின் பெண் குழந்தை ஜோதி என்ற ( ஸ்வர்ணமுகி ) இப்போது இளம் மங்கையாக கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்
அற்புதமான சந்திப்பு அது . இப்பொழுது சிவநந்தனின் மகள் நந்தினிக்குக்கும் கயல்மணிக்கும் காதல் பிறக்கிறது . அது போலவே அருணாவுக்கும் முத்து முருகனுக்கும் காதல் . சிவ நந்தன் பசுங்கிளி என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனாலும் அந்த திருமணத்திற்கு ஜோதி ஒத்துக் கொள்கிறாள் .
இவர்களின் திருமணம் அற்புதமான முறையில் நடக்கிறது ஆயிரம் பேருக்கு மேலே இந்த திருமணத்திற்கு வந்திருந்து உணவு உண்டு வாழ்த்தி விட்டு செல்கிறார்கள்
ஒரு காலத்தில் தன் தங்கை ஒரு டொம்பை தெருவில் குடி இருக்கும் கீழ் சாதிக்காரனை காதலித்து விட்டாள் என்று அவளை திட்டிக் கொண்டிருந்த ஜோதி, இப்பொழுது தனது மகன்களுக்கு வாய்த்திருக்கும் திருமணப் பெண்கள் யார் அவர்கள் என்ன ஜாதியை சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே திருமணம் முடிக்க சம்மதிக்கிறாள்.
காலம் இப்படி மனிதர்கள் ஒரு புரட்டு புரட்டிப் போடுகிறது வாழ்க்கையில் நமது கருத்துக்களை அனுபவங்களை வாபஸ் வாங்க செய்கிறது.
வாழ்க்கை இவ்வளவு வசந்தமாக போய்க்கொண்டிருக்கும் போது தான்ஒரு நாள் ஜோதிக்கு உடல் நலம் இல்லாமல் போகிறது . மேல் மாடியில் தன் அறையில் கண்ணை மூடியவள் தான் ,பிறகு நோய்மையினால் கண்களை திறக்கவே முடியவில்லை.. வெளியே மழை பெய்கிறது. ஜோதி இப்போது விழிகளை திறக்க வேண்டும் .
இவன் அவளை பெயர் சொல்லி அழைத்து அழைத்து மழையை காட்டுகிறான் ஆனால் அவள் விழி திறக்கவில்லை .ஒவ்வொரு நிமிடமும் அவளது உடல் ஒவ்வொரு உருக் கொண்டு விடுகிறது. திடீரென்று அவளது உடல் சூடாகிறது குளிர்ந்த நீரால் துணியில் முக்கி ஒற்றி எடுத்த பின்பு அது குளிர்ச்சி அடைகிறது .
பக்கத்து தெருவில் இருக்கும் செவிலி அவளை வந்து பார்த்துவிட்டு சுகந்தனிடம் ‘’ இனிமேல் ஊசி போட்டாலும் பலன் இல்லை அந்த உடல் ஏற்றுக் கொள்ளாது நீங்கள் தைரியமாக இருங்கள் ‘’ என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.
இதற்கிடையில் பேரன்களும் பேத்திகளும் மருமகளும் போட்டி போட்டுக் கொண்டு மாமியாரை கவனிக்கிறார்கள். ஆனாலும் ஜோதிக்கு வாய் பேச முடியவில்லை. எப்போதாவது சுய உணர்வு திரும்பும் போது கை சாடையினால் சுகந்தன் சாப்பிட்டு விட்டானா என்று ஜோதி கேட்கிறாள். சுகந்தன் மௌனமாக தலையசைக்கிறான் . கண்ணீர் முட்டுகிறது.
அவன் மீதான அவளது காதல் இன்று வரை அவளது இதயத்தை விட்டு போகவே இல்லை .
அவளது இறுதி நொடிகளில் சுகந்தன் ஏதோ ஒரு நினைவு வந்தவனாக அவளைப்பார்த்து ‘’ உனக்கு காபி வேண்டுமா ‘’ என்று கேட்கிறான். அவள் வேண்டும் என்று தலையசைக்கிறாள். எதற்கும் கொடுத்துப் பார்க்கலாம் என்று காப்பியை கொடுக்கிறார்கள் . அவன் கொடுத்த காபியை ஆவலாக மிடறு மிடறாக வாங்கி குடிக்கிறாள். ஆச்சரியமாக இருக்கிறது ஆனால் இவர்கள் யாருக்குமே தெரியாது அதுதான் அவள் குடிக்கும் கடைசி காபியாக இருக்கப்போகிறது என்பது.இதுதான் இறுதி தீர்த்தம் போல
கடைசி இரவில் சுகந்தன் அவள் அருகிலேயே கட்டிலுக்கு கீழேயே படுத்து உறங்குகிறான். பலவித கவலைகளினால் நீண்ட நேரம் தூங்காமல் இருந்தவன் தன்னை அறியாமலேயே காலையில் சற்று நேரம் அதிகம் தூங்கி விடுகிறான். அவன் எழுந்து பார்த்த போது அவள் உடலில் ஏதோ மாற்றம் தெரிகிறது. அவள் அவனிடம் இறுதியாக சொல்லி விட்டுக்கூட விடை பெற்று செல்லவில்லை.
அந்த உடல் அதில் துளி கூட வெப்பம் இல்லை . முழுவதும் குளிர்ச்சியடைந்து மழை போல இருக்கிறது.
மழையின் ரசிகை வெளியே மழை தூவிக் கொண்டிருக்க அதை பார்க்க மனம் இன்றி பறந்து போய் விட்டாள். இந்த மானிடப் பூவில் இருந்த ஒற்றை வாசம் நிரந்தரமாக இதை விட்டுப் பிரிந்து விட்டது . இத்தனை ஆண்டு காலம் அவனோடு இணை பிரியாமல் வாழ்ந்தவள் இப்போது இல்லை.
.நாவலாசிரியரின் வார்த்தைகளிலேயே பார்க்கலாம்.
‘’ மனிதம் என்ற ஒற்றை வாசம் பரவிக் கிடந்த நெஞ்சுக்கூட்டை தொட்டு தொட்டு பார்க்கிறேன் பச்சை தண்ணியாய் விறுவிறுத்து கிடந்தது ‘’ என்று கதையை முடிக்கிறார் இந்த மகத்தான கலைஞர் .இவ்வளவுதான் வாழ்க்கை என்பது இதற்கு மேல் இதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்பது புரியவில்லை .
தேனி மாவட்டமும் கதையோட்டமும்
இந்த கதைக்குப் பின்புலத்தில் எழுத்தாளர் தேனி மாவட்டத்தின் சிறப்பு கூறுகளை சிறப்பித்துக் கூறுவது தான் கதையின் சிறப்பே.
தனது அலுக்காத வர்ணனைகளின் வழியாக அந்தக் கால தேனியை அற்புதமாக கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் . பாரஸ்ட் சாலை , தேனி அரண்மனை புதூர் , அங்கு இருக்கும் வயல்வெளிகள் ,வயல்பட்டி சத்திரப்பட்டி பிசி பட்டி, வீரபாண்டி , புலிகுத்தி என்ற பகுதிகளை அற்புதமாக இவர் கதையோட்டத்தோடு சித்தரித்துப் போகிறார்
எளிய மனிதர்கள்
அது போலவே சுகந்தன் எதையும் அளவுக்கு அதிகமாக பெரிய தத்துவ ஞானி போல் சிந்திப்பது கிடையாது .ஒவ்வொரு கணத்திலும் ஒரு ஜென் துறவி போல் வாழ்க்கையை எதிர் கொள்கிறான் அது துயரமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதில் மூழ்கி திளைக்கிறான் பின்பு அதிலிருந்து விடுபட்டு மீண்டும் எதார்த்தத்திற்கு வந்து சேருகிறான் காலப்போக்கில் ஒவ்வொரு அனுபவமும் வந்து சேர சேர வாழ்க்கை அவனுக்கு புலனாகிறது அவன் மனைவி மரணித்துக் கொண்டிருக்கும் போது கூட அவன் அழுது புலம்பாமல் ஒரு யோகியைப் போல அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ,
இந்த பாத்திரத்தின் வழியாகவே தோழர் சீருடையான் தான் நினைத்ததை சொல்கிறார் என்பது வாசிப்பவர்கள் அனைவருக்குமே தெரியும் ஆனால் எந்த இடத்திலும் வழிந்து தனது கருத்தை சொல்வதற்கு அவர் முயல்வது கிடையாது .
கொட்டக்குடி ஆறு
இந்தக் கதையில் கொட்டக்குடி ஆறு கூட மிகவும் முக்கியமானதாக இருக்கிறது .அடிக்கடி சுகந்தன் அதில் மூழ்கி குளிக்கும் போது அவன் துயரத்தையும் மனக்கவலைகளையும் அதிலேய முழுக்கு போட்டு விட்டு வந்து விடுகிறான். ஆரம்பத்தில் இருந்து கொட்டக்கு ஆறு ஓடிக்கொண்டே இருக்கிறது . ஒரு மகாநதி போலவே அந்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் வாழ்க்கையும் ஆற்றுத் தண்ணீர் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.
ஜோதி
அடுத்ததாக ஜோதி என்ற அற்புதமான படைப்பு கதையின் நாயகி அவள் தான். வாழ்க்கை அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்று தந்து கொண்டேருக்கிறது .புதிய புதிய செய்திகளை கற்றுக் கொள்கிறாள். அழகின் இறுமாப்பு அவளிடம் ஆரம்பத்தில் இருந்தாலும் அழகால் ஆவது ஒன்றும் இல்லை என்று விரைவிலேயே தெரிந்து விடுகிறது . இளமையின் தழும்பலில் வயதுக்கோளாறில் சௌந்தரத்திடம் ஒரு முறை தன்னை இழந்து விடுகிறாள். அதற்காக அவள் கொள்ளும் மன உளைச்சல்களும் , அவஸ்தைகளும் அவளை பேய் பிடித்தவள் போலாக்கி , பேயை ஓட்ட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்குகிறது .அதற்கு பின்பு யாரிடமும் அதை பகிர்ந்து கொள்ளாமல் காலத்தின் போக்கில் அவள் தன்னையே புதுப்பித்துக் கொள்கிறாள். தன் கணவனுக்கு தான் உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
பெண்களின் மீது பாலியல் கொடுமையை எவ்வாறு ஆண்கள் சுமத்துகிறார்கள் என்பதை கண்ணாரக் கண்டு அப்படிப்பட்டவர்களை வெறுக்கிறாள். அவள் ஒரு காலத்தில் தனது ஊரில் இருக்கும் தங்கம் என்னும் கீழ் சாதிப்பெண் எப்படி அவளுடைய பெற்றோர்களால் படிக்க வைக்கப்பட்டு அங்கே இருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியாக பணிபுரிகிறாள் என்பதை நினைத்துப் பார்த்து ‘’ஒரு கீழ் சாதிக்காரிக்கு இருக்கும் வைராக்கியம் தனது தந்தைக்கு இல்லையே என்று கவலை கொள்கிறாள். ‘’
ஆனால் இந்த சாதி சார்ந்த மதிப்பீடுகளை எல்லாம் காலம் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது .கீழ் சாதி மேல் சாதி உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி எல்லாமே இங்கு பொருளாதாரத்தால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்று அவளுக்கு நன்கு புரிகின்ற நாளில் , அவளது தங்கை ஒரு டொம்பு சேரிப் பையனோடு வீட்டை விட்டு ஓடிப் போகிறான்.
இருபது வருடங்கள் கழித்து திரும்பி வரும் அவளையும் ஏற்றுக்கொள்கிறாள். தன் குழந்தைகளுக்கும் சாதி பார்க்காமல் திருமணம் செய்து வைக்கிறாள். காலம் அவளையும் அவளது கணவனையும் பொதுவுடமை கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அது அவளுக்கு வாழ்க்கையை புகட்டிக் கொண்டே இருக்கிறது அவளும் அதை புரிந்து கொள்கிறாள் .
ஒரு கட்டத்தில் அர்த்தமற்று தன் மாமியாரோடு சண்டை பிடித்ததற்காக வருத்தப்படுகிறாள் தன் கணவனுக்கு அவனுடைய வியாபாரத்தில் அத்தனை உதவியாக இருக்கிறாள்.
பெண் நினைத்தால் எந்த குடும்பமும் தழைக்கும் என்பதற்கு ஈடாக அவள் தான் அந்த வீட்டிற்கு முதலில் கரண்ட் எடுக்க வேண்டும் என்று யோசனை சொல்கிறாள். பிறகு குடிசை விட்டை மாடி வைத்த காரை வீடாக கட்ட வேண்டும் என்று கணவனோடு சண்டையிடுகிறாள். பெரிய வியாபாரியாக அவன் அடையும் ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னும் அவள் தான் ஒளிந்திருக்கிறாள்.
அவளுக்கு முன்பே சுகந்தன் இறந்து விட வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். ஏனென்றால் இவள் முதலில் போய் விட்டால் அவனை கவனித்துக் கொள்வதற்கு ஆளில்லாமல் போய் விடுமே. ஆனால் அது மட்டும் கடைசியில் நிறைவேறவேயில்லை.
ஆனால் அவளுக்கு சுய உணர்வு இருக்கும் வரையிலும் அவள் தன் கணவனின் மீது உயிராய் தான் இருக்கிறாள் என்பதற்கு அங்கங்கே நிறைய காட்சிகள் உண்டு . அவன் கையால் தரும் இறுதி காப்பியை அவள் ஆனந்தமாக குடித்துவிட்டு இறுதியாக கண்களை மூடி விடுகிறாள். இனி அவள் வாழ்க்கையில் சாதிப்பதற்கு எதுவும் இல்லை . வாழ்க்கையை பூரணமாக , முழுமையாக வாழ்ந்து முடித்து விட்ட ஒரு பேரமைதி அந்த முகத்தில் தெரிகிறது.
சுவாதி
இதைப்போலவே ஜோதியின் தங்கை சுவாதி தனது அக்காவைவிட அழகில் பல மடங்கு உயர்ந்தவள் . ஆனால் அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லாதவள். தந்தை தனக்கு திருமணம் செய்து வைப்பார் செய்து வைப்பார் என்ற காத்திருக்கிறாள் . ஆனால் தந்தையின் போக்கு சரி இல்லை , தாய் இறந்த பிறகு தனது தந்தை இத்தனை வயதிலும் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு கொண்டு பொருளையும் பணத்தையும் இழக்கிறார் என்பது தெரிய வரும் போது அவள் உடைந்து நொறுங்கிப் போகிறாள். அவர் வயது வந்த தன் மகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை .
ஆனால் மகள் கீழ் சாதிப்பையனோடு பழகுகிறாள் என்பது தெரிந்ததும் அவருக்கு அர்த்தமற்ற கோபம் வருகிறது . சகோதரர்களும் அவளுக்கு உதவ முன்வரவில்லை. ஒரு கட்டத்தில் அவள் தனது அக்கா மகனை தூக்கி வைத்துக்கொண்டு ‘’ நீதான்டா வந்து சித்திக்கு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கணும் ‘’ என்று துயரத்தோடு சொல்கிறாள்.
பெண்கள் ஏன் எப்பொழுதும் ஆண்களையே சார்ந்திருக்கிறார்கள் ? ஏன் ஆண்கள் பொருளாதாரத்தை எப்பபோதும் தங்கள் கைகளிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அவளுக்கு புரியவேயில்லை .
அவளது தந்தை அவளைப் பார்த்து ‘’ அடுத்த வீட்டில் போய் அடுப்பூதும் உனக்கு எதுக்கு படிப்பு ‘’ ? என்று கேட்கிறார் . இந்த அவலங்களை எல்லாம் அவள் நினைத்துப் பார்க்கிறாள் . கடைசியில் தனது குடும்பத்தால் தனக்கு திருமணம் செய்து வைக்க இயலாது என்றவுடன் தானே தன் துணைவரை தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். ஆனாலும் அவள் அக்காவின் மீது வைத்திருந்த பாசம் சற்றும் குறையவே இல்லை . கடைசியில் அக்காவை சந்தித்து அவள் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டு அவளுடைய அன்பைப் பெற்ற பிறகுதான் அவளுக்கு குற்ற உணர்ச்சி குறைகிது.
கடைசி காலத்தில் தனது அக்காள் சுயநினைவற்றுக் கிடக்கிறாள் என்ற செய்தி தெரிந்தவுடன் பதை பதைத்து இரவோடு இரவாகவே கிளம்பி வருவதாக சொல்கிறாள். ஆனால் அவளது அக்காவை அவள் உயிரோடு பார்க்க முடியவில்லை. இப்பொழுது அவளது அழகு முகத்தில் காலம் முதுமையை எழுதி சென்றிருக்கிறது . வயதான பாட்டியாகி விட்டது போல் தோன்றுகிறது அவளுக்கு.
காலம் தான் எத்தனை அற்புதமாக வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது மனிதர்களுக்கு.
மழை
அடுத்ததாக மனிதர்களுக்கு சமமாக இயற்கையின் பேரதிசயமான மழையை ஒரு அற்புதமான பாத்திரமாகவே இந்த நாவலில் படைத்துள்ளார் தோழர் சீருடையான். அவர்கள் . நாவலின் தொடக்கமாக
‘’ எழுந்து பால்கனிக்கு வந்து வீதியை எட்டிப் பார்த்தபோது தூரல் பெருமழையாக வலுவடைந்து கொண்டிருந்தது . பெரிய பெரிய நீர் உருண்டைகள் வானத்திலிருந்து விழத் தொடங்கின . காலையிலிருந்து வானம் தூறுவதை நிறுத்தவில்லை . வெகு நாட்களுக்குப் பிறகு பூமியை நனைக்கும் மழையே முழுமையாய் ரசிக்க இயலாதவனாய் இருந்தேன் . அதன் ஓர்மையை உள்வாங்க முடியவில்லை .
மழை பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஐந்து கூறுகளில் ஒன்று அதாவது ஐம்பூதங்களில் முக்கிய படிவம்,
அதை நாவலாசிரியரின் வார்த்தைகளிலேயே சொல்லலாம்
‘’ மழையே நீ அழுகிறாயா சிரிக்கிறாயா உன்னை புரிந்து கொள்ளவே முடியவில்லைய . உனது ரசிகையும் தோழியுமான ஜோதி படுக்கையில் சுய நினைவில்லாமல் கிடக்கிறாள் . நீயோ வீண்மின்களையும் நிலவையும் விழுங்கி விட்டு ஏப்பம் விடுவது போல் காற்றை வெளியிடுகிறாய். உனக்கு இரக்கம் இல்லை போலும் . எப்போதெல்லாம் நீ பூமி பரப்பை அணைக்கிறாயோ அப்போதெல்லாம் நடுவீதிக்கு வந்து கும்மாளம் போட்டாலே அவளை நினைவில்லையா உனக்கு ? ‘’
‘’ கதவை திறந்து நின்ற போது முகத்தில் பறந்தது சாரல் கூடவே ஊதக்காற்றும் . திரைச்சீலையால் முகத்தை துடைத்தேன் திரைச்சீலையில் ஈரம் அப்பி இருந்தது’’
. மேலே குறிப்பிட்ட பதிவுகள் எல்லாம் சுகந்தனின் பார்வையில் மழை எப்படி அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது என்பதை உரைக்கும் .
மழை ஒரு பாத்திரப்படைப்பாக இந்த நாவலில் உடன் வந்து கொண்டே இருக்கிறது கடைசி வரையிலும் அதாவது ஜோதி தனது இறுதி உறக்கத்தை உறங்கும்போது கூட வெளியே மெல்லிய தூறல் போட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு வேளை அது அவளுடைய தோழியை அழைத்துப் போகவே வந்து விட்டது போல் தோன்றுகிறது இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு.
தேனி வட்டார வழக்கு
: தேனி வட்டார மொழி என்பது தோழர் சீருடையானிடமிருந்து பிரிக்கவே முடியாது என்பதற்கு ஒவ்வொரு பக்கத்திலும் அந்த வட்டார வழக்கு பரவிக் கிடக்கிறது .அதை வாசிப்பதற்கு அவ்வளவு அழகாகவும் இன்பமாகவும் இருக்கிறது . இதோ சிலவற்றை அவரின் வார்த்தைகளிலேயே படித்து இன்புறலாம்
அக்கா தன் தம்பியிடம் பெண் பார்க்க போகும் போது சொல்கிறாள் ‘’ பொண்ணு என்ன கூறுல இருந்தாலும் சரி கொடுத்துட்டு வந்துரு . மத்தத பிறகு பார்க்கலாம் ‘’
‘’ சரி கொடுக்கிறது என்ன தூக்கிட்டு வந்துட மாட்டானா என நினைத்தபடி சரி என்று சொன்னேன் ‘’
‘’ கூரைசாப்புல மறைத்திருந்த குடிசைக்குள் தலை குனிந்து நுழைந்த போது இடது புறம் இருந்த முட்டு திண்ணையில் இரண்டு இளைஞர்களும் 50 வயதை தாண்டிய பெரியவரும் அமர்ந்திருந்தனர் ‘’
‘’சாதி மான் அவரைப் போல உலகத்துல யாரையும் பார்க்க முடியாது ‘’
சுகந்தனுக்கும் அவனது அம்மாவுக்கும் நடக்கும் உரையாடலை தேனி வட்டார மொழியில் அவ்வளவு அற்புதமாக கையாண்டு கொண்டிருக்கிறார் தோழர்.
‘’ அவுங்களும் பாவம் தான் இருக்கவங்க எம்புட்டும் செய்வாங்க இல்லாதவங்க என்ன செய்ய முடியும் ? நம்மளும் அந்த திசையில் இருந்து தானே வந்திருக்கோம் ‘’
‘’ ஆமாமா அதைத்தான் நானும் சொல்றேன்
நாமளும் ஆளாயிட்டோம்ல’’
இந்த மொழி அங்கங்கு நகைச்சுவைக்கும் பயன்படுத்துகிறது . தங்கவேலு பற்றி சொல்லும் போது
‘’ ஏன் மாமா என்ன சந்தேகம் அவர் சகவாசம் சரி இல்லையே என்னத்த கண்டிக்க ‘’ என்றபடி
‘’ கடையில உட்கார்ந்து கருங்குரங்கு மாதிரி ஒரு பொம்பளை நோண்டிக்கிட்டு இருந்தாரு அப்புறம் ரெண்டு பேரும் உள்ள போயி கதவை சாத்திக்கிட்டாங்க ‘’
கிராமத்தில் பெண் உடலின் மீது ஆணின் பார்வை எப்படி படர்கிறது எவ்வாறு அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை ஒரு இடத்தில் அற்புதமாக சொல்லியிருக்கிறார்
விடு மாமா என்று திமிறினாள்
‘’ நாளைக்கு பார்க்க போறது இன்னைக்கே பார்க்கிறேன் ‘’
‘’ ஐயோ உனக்கு நாளைக்கு சோத்தை இன்னைக்கு திங்க முடியுமா ‘’ ?
‘’ நீ எதையும் சொல்ல வேண்டாம் , மாமா வந்தர காட்டு காக்கா போல குஞ்சுகளுக்கு தீனி போட்டு அலைஞ்சுகிட்டு இருக்காரு பாவம் ‘’
‘’ சரி பாப்பா உன் மச்சினனுக்கு கண்ணால வச்சு இருக்கு கொய்யா கிட்ட சொல்லி எல்லாரும் வந்துருங்க ‘’
‘’ இந்த ஒரு வாரமா கொறவி கிடக்க என்னன்னு பாக்கணும் இல்ல ‘’
கிராமத்து மனிதர்களது அறியாமையை அற்புதமாக சொலவடைகள் மூலம் வெளிப்படுத்துகிறார் ஜோதியின் மன உளைச்சளைக் கண்டு அவளுக்கு பேய் பிடித்து விட்டதாக எண்ணி ஒரு வைத்தியரை அழைத்து வருகிறார் தங்கவேலு
அவர் சோலி போட்டு உருட்டிப் பார்த்துவிட்டு ஜோதிடம் சொல்கிறார்
‘’ பயப்படாத பாப்பா உன் மேல சாமி இறங்கி இருக்கு உன்னையே நோக்கிகிட்டு இருக்கு. சாமி பார்வைங்கறது நெருப்பு பார்க்கிற மாதிரி . வெந்து போகும் உனக்கு கல்யாணம் ஆகணும் காலம் பூரா சந்தோஷமா இருக்கணும் கல்லெடுத்து வீசினாலும் சொல்லம்பு தொடுத்தாலும் மேனி நோகாமல் சந்தோசமா இருக்கனும் இதுக்காக ஒரு சின்ன சாங்கியம் அம்புட்டு தான் ‘’
‘’ முறைத்து பார்த்து நம்ம வீட்டுக்கு சாமி வந்தா தாங்குமா திமிங்கலம் அவ கண்ணுக்குள்ள புதைஞ்சிருக்கு மீனோட பார்வையை வீடு தாங்குமா ? அம்மாயி கன்னத்தில் போட்டுக் கொண்டார் . ஆத்தா என் பேரனுக்கு உன்ன போல செல்வாக்கியமுள்ள மகராசி கிடைக்கணும் ‘’ என்றாள்.
‘’ என்ன அவசரம் ஒரு மாசம் முப்பது நாள் உப்புனு ஊதுனா பறந்துரும் ‘’
மாமியார் தனது மருமகளைப் பற்றி சொல்லும் போது
‘’ ஏழை காட்டு சிறுக்கி ஏப்பம் கூடிப்போச்சு இப்படியே விட்டுட்டைனா உன்னை இடுப்புல தூக்கிட்டுப் போயி சந்தையில் ஏலம் போட்டுருவா ‘’
இந்த எளிய மனிதர்களின் மொழியிலேயே வாழ்க்கையின் மகத்தான தத்துவங்களை போகிற போக்கில் சொல்லிப் போகிற இடங்கள் உண்டு .சுகந்தன் வீரப்ப அய்யனார் கோவிலுக்கு சென்று தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் போது அங்கே உள்ள ஒரு பரதேசி அவனுக்கு எவ்வாறு உபதேசம் செய்கிறார் பாருங்கள்
‘’ சாகணும்னு நினைக்கிறது தான் வாழ்க்கைல நாம செய்யற பெரிய தப்பு எதுனாலும் பேசி தீர்த்துக்க வழி மாறி போக வேண்டாம்’’ சாகத் துணிந்த மனம் பூசாரியின் வார்த்தைகளால் மாறிப் போனது . இவ்வளவுதான் இவர் அதிகபட்சமாக சொல்லும் தத்துவம் .
வாழ்க்கை யதார்த்தமாக மனிதர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று கொண்டே இருக்கிறது நாம் செய்ய வேண்டியது அதற்கு இசைவு காட்டுவது தான். அது நம்மை அழைத்துக் கொண்டு நமக்கு காட்டித் தரும் தரிசனங்களை கண்கொட்டாமல் பார்த்து நமது மூளைக்குள் சேமித்துக் கொள்ள வேண்டியதுதான் இதுதான் ஆத்மீக அனுபவம் .
வாழ்க்கையோடு எந்த எதிர்ப்பையும் காட்ட வேண்டியது இல்லை .இந்த வாழ்க்கை யாரையும் வஞ்சிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை .அப்படி நினைப்பதெல்லாம் மனிதர்கள் தான் . இயற்கை இவர்களுக்கு கொடுக்க வேண்டும் இவர்களுக்கு கொடுக்கக் கூடாது இவர்கள் உயர்ந்த ஜாதி இவர்கள் தாழ்ந்த ஜாதி என்று எப்போதும் பிரித்துப் பார்ப்பது இல்லை இது அத்தனையும் செய்வது மனிதன்தான் .
இந்த மனிதன் எளிமையாக இருக்கிறான். அதன் பின்னே ஆட்டுக்குட்டி போல் சென்று கொண்டிருக்கிறான். அது அவனுக்கு ஒரு எளிய இனிய மகிழ்ச்சியை காட்டுகிறது. அவன் உலகம் அப்படி மகிழ்ச்சி நிறைந்து இருக்கிறது
நாகராஜன் போன்ற மனிதர்கள் பேராசைப்பட்டு வசதியான இடத்தில் பெண் கட்ட வேண்டும் என்று கடைசி வரையிலும் காத்திருந்து காத்திருந்து அதை தொலைத்து விடுகிறார்கள்.
சுகந்தன் மகன்களின் திருமணத்திற்கு நாகராஜ் வருகிறார் அப்பொழுதும் அவருக்கு திருமணமாகவில்லை கண்ணுக்குக் கீழே கருவளையம் விழுந்து பரிதாபமாக காட்சியளிக்கிறார் கிடைக்கிற வாய்ப்பை தவறவிட்டவன் மீண்டும் மீண்டும் மேல எழுந்து வருவதில்லை என்பதை போகிற போக்கில் சொல்லிக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.
இந்த வாழ்க்கைக்கு பெரிதாக அர்த்தம் ஒன்றுமில்லை இதில் வருகிற சிவந்த நாதன் தனது தத்துவார்த்த முறையில் மிக அழகாக பதில் சொல்லும் இடம் உண்டு
‘’ நிலம் பொழுது இரண்டும் முதல் பொருள் என்று தொல்காப்பியர் வரையறை செய்தார் அவற்றுக்கு அந்த அந்தஸ்து கிடைக்க மனிதனின் இயக்கமே காரணம் மனிதனும் மற்ற ஜீவராசிகளும் இல்லாவிட்டால் நிலமும் காலமும் கணக்கு வரையறைக்குள் வர முடியுமா ? பிரபஞ்ச வழியில் கோடிக்கணக்கான கிரகங்கள் சுழன்று கொண்டிருக்கின்றன அவையெல்லாம் உயிர் இல்லாத உடம்புகள் தான் ‘’
இவ்வளவுதான் வாழ்க்கைக்கு இவர் கொடுக்கும் விளக்கம் அதாவது கண்டவர் விண்டிலர் என்ற கதை போல வாழ்க்கையை முழுதாய் வாழ்ந்து பார்ப்பவர்கள் அதைப் பற்றி பெரிதாக எடுத்துரைப்பதில்லை அதில் திளைத்து திளைத்து மூழ்கி விடுகிறார்கள் அதுபோலதான் சுகந்தனும்.
சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை என்னும் கனியை அவர்கள் கையில் வைத்துக் கொண்டு அது கீழே விழுந்து விடாமல் பத்திரமாக சுவைக்கிறார்கள் அதன் ருசி அவர்களின் சந்ததிகள் எல்லாருக்கும் சென்று சேருகிறது. இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் அன்பை பெற்று அன்பை வழங்கி அன்பினால் நிறைந்த மகிழ்ச்சியாக இருப்பது தான் வாழ்க்கை ‘’
இந்த நாவலை வாசிக்கும் போது அந்த அனுபவம் துல்லியமாக கிடைக்கிறது. மீண்டும் ஒரு அற்புதமான நாவலை தந்த தோழர் தேனி சீருடையானை நாம் பாராட்ட வேண்டும்.
இந்த நாவலின் குறைகள் என்றால் சிலவற்றை சொல்லலாம் இந்த நாவல் வாழ்க்கைய அற்புதமாக படம் பிடிப்பது உண்மைதான் ஆனால் மிகக் குறைந்த பக்கங்களுக்குள் ஒரு நெடுங்கததை போல இது முடிந்து விடுகிறது . இதில் பிரதான பாத்திரங்களான சுகந்தனும் ஜோதியும் மட்டுமே நமது மனதில் அழுத்தமாக வாழ்கிறார்கள் .ஆனால் அதுபோல மற்ற பாத்திரங்கள் நிலையாக நிற்பதில்லை . இதில் வருகிற அத்தனை பாத்திரங்களையும் தோழர் இன்னும் அற்புதமாக வார்த்திருக்கலாம் .அதற்கு அவர்களுக்காக இன்னும் ஒரு நூறு பக்கங்களை ஒதுக்கியிருந்தால் இந்த நாவல் இன்னும் செம்மையாக அமைந்திருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
கொட்டக்குடி ஆறு தேனியில் ஓடிக்கொண்டே இருக்கிறது .சுகந்தன் தனது நல்லது கெட்டதுகளை அதனிடம் சொல்வி விட்டு ஒரு முழுக்குப் போட்டு வருகிறான். இந்த ஆற்றைப் போலத் தான் அவனது வாழ்க்கையும் ஓடிக்கொண்டே இருக்கிறது
தொடங்கிய இடமும் தெரியவில்லை முடியும் இடமும் தெரியவில்லை ஆனால் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு உயிரோடு இருக்கிறது என்று பொருளாகிறது அதன்படியே இந்த வாழ்க்கையும் ஓடிக் கொண்டே இருக்கிறது .இந்த வாழ்க்கைக்கு ஒர் அர்த்தம் இருக்கிறது. இந்த நாவலுக்கும் கூட அப்படித்தான்.
தங்கேஸ்