nool arimugam : oviyam varayum thoorathu nila - jayashree balajee நூல் அறிமுகம்: ஓவியம் வரையும் தூரத்து நிலா -ஜெயஸ்ரீ பாலாஜி
nool arimugam : oviyam varayum thoorathu nila - jayashree balajee நூல் அறிமுகம்: ஓவியம் வரையும் தூரத்து நிலா -ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் அறிமுகம்: ஓவியம் வரையும் தூரத்து நிலா -ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : ஓவியம் வரையும் தூரத்து நிலா
ஆசிரியர்: கவிதா பிருத்வி
வெளியீடு: அகநி வெளியீடு
பக்கங்கள்: 64
விலை: ரூ. 60

வணக்கம்,

எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் கவிஞர் கவிதா பிருத்வியின் நூலை படித்து மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

நூலிற்கு மணி மகுடமாக கவிஞர் மு. முருகேஷ் மற்றும் எங்கள் ஆசான் தோழர் உமர் பாரூக் அவர்களின் அணிந்துரையோடு அழகாய் துவங்குகிறது.

நூலின் ஒவ்வொரு கவிதைகளும் இயல்பான வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தாலும் அவை கவிதையாய் கோர்க்கப்பட்டுள்ள விதம் புது பரிணாமமாய் விளங்குகிறது. நூலினை வாசித்து முடிக்காமல் வைக்க முடியாது அப்படியான கருத்தாழம் நிரப்பப்பட்ட சமூக சிந்தனை துளிகள்.

இதோ நான் ரசித்து படித்த சில வரிகள்.

“குழந்தையின் கைக்கு
அகப்படுவதேயில்லை
விளையாடும் ஈக்கள்”

குழந்தைகள் விளையாடுவதை உற்று கவனித்தால் அவர்களின் உன்னதமான உலகம் பிரமிப்பை தரும். ஈக்களை பிடிக்க முயற்சிக்கும் குழந்தையின் விளையாட்டு மனதை படம் பிடித்துக் காட்டியுள்ளார் கவிதா தோழர்.

“கதை சொல்கிறது
பழைய வீட்டு திண்ணை
அம்மா இல்லாத வேளை”

திண்ணைகளும் கதை சொல்லும் அம்மாக்களையும் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சொச்சமாகிவிட்டது. அம்மா இல்லாத வெறுமையில் வெறிச்சோடி கிடக்கும் திண்ணையே காட்சியமையாகுகிறது இந்த வரிகளின் வாயிலாக.

“சிட்டுக்குருவி கிரீச்சிட்டது
கூடில்லா கருகிய கிளையில்
வெந்து தணிந்தது காடு”

கார்ப்பரேட் சூழ் உலகில் காடுகள் அழிக்கப்பட்டு வருவது மறுக்க முடியாத உண்மை. அழிக்கப்பட்ட காட்டில் வாழ்வாதாரத்தை இழந்த சிட்டுக்குருவியின் துயரத்தை உணர்த்தும் வரிகள்.

“பசிக்குப் புசித்ததால்
இறந்தது மாடு
நெகிழிக் குப்பை”

வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநல சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். செடிகளையும் புற்களையும் நம்பி வாழும் கால்நடைகள் சில சமயம் நெகிழி குப்பைகளையும் உட்கொண்டு இறந்து விடுகின்றன. ஆறாவது அறிவினை சரியாக பயன்படுத்த தெரியாத மனித இனத்தின் சுயநல பாங்கினை விவரிக்கும் வரிகள்.

“ஏரியில் ஓடும்
வானவில்
சாயப்பட்டறை கழிவு”

நீரின்றி அமையாது உலகு. சாயப்பட்டறைகள் வெளியேற்றும் இராசயனக் கழிவுகள் நீர்நிலைகளில் வெளியேற்றப்படுவது சுற்றுப்புற சீர்க்கேட்டினை ஏற்படுத்திவிடும். நீரை பயன்படுத்த முடியாத தன்மைக்கு தள்ளி விடும். அடுத்த உலகப்போர் நீருக்காக அமையும் என்பதை அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட தூண்டும் வரிகள்.

“கை விலங்கு
நேரம் சிறையானது
கைப்பேசி”

கையின் ஆறாவது விரலாகவும் பிரபஞ்சத்தின் ஆறாவது பூதமாகவும் திகழ்ந்து வரும் கைப்பேசி. அளவாய் பயன்படுத்தினால் நமது கட்டுப்பாட்டில் கைப்பேசியும் அளவிற்கு மிஞ்சினால் அதன் கட்டுப்பாட்டில் நாமும் இருப்பதை வலியுறுத்தும் வரிகள்.

“மரத்தின் வாசம்
சாலைக் கடக்கையில்
லாரியில் மரங்கள்”

காடுகள் அழிந்து வருவதை உணர்ந்து விழித்துக் கொள்ளும் நேரம் வருவதற்குள் மனித இனத்தின் கடைசி தலைமுறையாகி உயிர்வளியற்று
வாழ்வதற்கு தகுதியற்ற கோளாக பூமி மாறிவிடும் என்பதை அழுத்தி பதிக்கும் வரிகள்.

“கனமான பாத்திரங்கள்
வரிசையாக அணி வகுக்கின்றன
புத்தக அலமாரியில்”

ஆஹா.. இப்படியொரு சிந்தனை கவிஞருக்கு. சில புத்தகங்களும் சில கதாபாத்திரங்களும் மனதை கனப்படுத்தி வசீகரிக்கும். அதனையும் ரசித்து எழுதியுள்ளார்.

தொடர் வாசிப்பும் புத்தகங்களுக்காக செலவிடும் நேரமும் நிச்சயமாக பலன் அளிக்கும் என்பதற்கான சான்று தான் தோழர் கவிதா பிருத்வி அவர்களின் கவிதை நூலும். சிறுகதைகள் கவிதைகளை காட்டிலும் ஹைக்கூ கவிதைகள் ஆழமான சமூக கருத்தியலை சுருக்கமாக மூன்று வரிகளில் ஆணித்தரமான எடுத்து வைக்கும் என்பதை அடிக்கோடிட்டு காட்டும். வாழ்த்துகள் கவிதா பிருத்வி. அடுத்த நூலுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

நன்றி.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *