நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

நூல் அறிமுகம் : பனைவிடலி – கார்த்தி டாவின்சி

 

இந்த நூல் தோழமை எழுத்தாளர் இலக்கியனின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். மொத்தம் 12 சிறுகதைகளை இதில் கொடுத்திருக்கிறார். பல இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்.

முதலில் ‘பனைவிடலி’ என்ற சொல்லாட்சிதான் என்னை ஈர்த்தது. பனையின் பயன்கள் பலநூறு. பனைவிடலி என்றால் பனைமரம் சிறியதாக வளர்ந்து கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும் சொல். விடலி என்பது ‘விடலைப் பருவம்’ என்று நாம் குறிப்பிடுகிறப் பொருள்தான். இளம்பனை மரத்தை இச்சொல்லாட்சியில் அழைப்பது எனக்கு புதியதாக இருந்தது. 

 

நூலுக்குள் இருக்கும் கதைகளில் பனைவிடலி என்பதும் ஒரு கதையாக இருக்கிறது. இது ஒரு உருவகத் தலைப்பு. அக்கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கும் இத்தலைப்பிற்குமானப் பொருத்தம் பிணைந்திருப்பதை நாம் வாசிக்கையில் அறிந்து கொள்ள முடியும். மேலும் இந்நூலின் அட்டைப்படமும் அதையேச் சுட்டிக் காட்டுகின்றன.

 

இந்நூலின் வாயிலாக நீங்கள் நமது ஊர்களின் கிராமப்பாங்கினைத் தரிசிக்கலாம். அந்த கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் நம்முடன் வாழ்ந்தவையாக இருக்கும். நம்முடன் உரையாடிய உயிர்களாக இருக்கும். நாம் அன்றாடம் பார்த்த முகங்களாக்கூட இருக்கும். கிராமங்களின் செழித்த வயல்களின் வழியே கதைகளாக நின்றவர்களை எடுத்து கொடுத்த படைப்பு பனைவிடலி.

 

12 கதைகளும் நமக்கு கிராமத்தின் அழகை எளிமையாக காட்டுகின்றன. அழகியல் மிக்க எழுத்து நடை. பயன்படுத்தும் சொற்களும் சொல்லவரும் விசயங்களும் நன்கு ஒன்றிணைந்து நமக்கு காட்சிகளை விவரிக்கின்றன.

 

ஒரு கவிதையை வாசிப்பதைப்போன்ற உணர்வு கதையின் ஓட்டத்தில் ஏற்படுகின்றது. உள்ளே அவர் பயன்படுத்தியிருக்கும் உவமைகளும் உருவகங்களும் புதுவரவாக அமைந்திருக்கின்றன. அனைத்து கதைகளுமே மனிதனின் வாழ்வியல் துன்பத்தைக் காட்டுவதோடு அதைக் கடந்து வரும் அழகையும் காட்டத் தவறவில்லை. உதாரணமாக 12 கதைகளில் 7 கதைகள் வாழ்வியல் அவலத்தைக் காட்டுகின்றன. ஆனால் பனைவிடலி, காத்தாள், பேரன்பின் கூடு, மழைப் பிரண்டை, உயிர்ச் சக்கரங்கள் போன்ற கதைகள் மனிதனின் வாழ்வியல் அவலத்தைப் புறங்கடாய்ச்சி மேற்கொண்டு பயணப்பட வைக்கிறது. இவற்றில் சக மனிதரை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதிலிருந்து மற்றவர் எப்படியெல்லாம் பார்க்கின்றனர் என்பதுவரை பல்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. கதைகளினூடாக அதைப் படிக்கையில் நாமும் தெரிந்து கொள்ளலாம். 

 

எனக்கு இந்த எழுத்து ஆரம்பத்தில்  பிடிபடாதவாறு தோன்றியது. அவரது எழுத்தை முதல்முதலாகப் படிக்கிறேன் என்பதால்கூட இருக்கலாம். ஆனால்  பின்னர்தான் அவருடைய எழுத்தின் ருசியை அறிந்து கொண்டேன்.

 

1) குமிழித் தூம்பு. 

 குமிழித்தூம்பு என்றால் ஏரி நீரை வெளியேற்றும் வடிகால் மதகு என்று பொருள். 

ஊர் ஊராகப் போய் கிடைப்போட்டு வாத்து மேய்த்து விற்கிறார்கள் வாத்திக்காரியும் அவளது பருவமகள் மயிலாவும். குணவடி என்ற ஊருக்கும் அப்படிதான் வருகிறார்கள். ஊரே அவர்களை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறது. மயிலாவின் அழகைப் பார்க்கவே பல ஆண்கள் அங்கு கூடிவிடுவார்கள். ஒருநாள் மயிலாவைக் காணவில்லை. யாருடனாவது ஓடியிருப்பாள் என்று ஊரார் பேசிக்கொண்டனர். வாத்துக்காரி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுகிறாள். அவளைத் தேற்றக்கூட அவ்வூரில் ஒருவருமில்லை. அவள் ஊரைவிடுடே சென்றுவிட்டாள்.

 

நடவு காலத்திற்காக தேங்கிய சங்கேரியின் நீரை, பூசைப்போட்டு குமிழித்தூம்பு திறந்துவிடுகின்றனர். கதை இப்படி முடிகிறது.  ‘அந்த மகிழ்ச்சியின் ஆரவாரம் எழுந்து அடங்குவதற்குள் திறக்கப்பட்ட சங்கேரி மதகின் குமிழித்தூம்பிலிருந்து கை கால்கள் கட்டுண்டு உப்பிய உடலோடு செத்து மிதந்து வந்தாள் வாத்துக்காரியின் மகள் மயிலா. வாத்துக்காரியின் மகளை ‘எவனோடாவது ஓடிப் போயிருப்பாள்’ என்ற ஊராரும், ஊரோடு சேர்ந்து அவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.’ 

 

அங்கே பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெறுமனே மயிலா என்ற பெண்ணின் பிணத்தை மட்டும் பார்க்கவில்லை மேலும் தங்களது ஊரில் அண்டி பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் எதிர்காலம் சிதைக்கப்பட்டு இருந்ததும் ஊருக்குள் இருக்கும் சிலர் மயிலாவை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான உயிரற்ற ஆதாரத்தையும்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

‘யார் கூடவாவது ஓடிட்டாலோ என்னவோ..’ என்று முன்பு கூட்டத்திலிருந்து சொன்னவன் ஏன் இப்படியாக சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுப்பியது. இதுவே அவன் ஒரு குற்றவாளியாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஊன்றியது. ஆனால் கடைசியில் ‘எவனோடாவது ஓடிப் போய் இருப்பாள் என்று ஊராரும் ஊராரோடு சேர்ந்து அவர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்,’ என்று முடிக்கிறார் ஆசிரியர். அதாவது அந்த ‘அவர்கள்’தான் குற்றவாளிகள். 

 

ஆரம்பரத்தில் கதையானது குணவடி என்ற கிராமத்தைப் பற்றிய விவரணையில் தொடங்கும். பிறகு ஒரு பெண்ணின் மரணத்தில் முடியும். கதையின் போக்கு பிடிபடும்போது மனம் நமக்கு கனத்து விடுகிறது. இதுபோன்ற சில நிகழ்வுகளையும் நாம் நமது வாழ்வில் அனுபவித்திருக்கக்கூடும். இக்கதையைப் படிக்கையில் அப்படிப்பட்ட நினைவுகள் மீண்டும் தூண்டப்படுகின்றன. அவை வலியோ சுகமோ வாசகர்களுக்கான இடம் அது. 

 

‘எத்தனைப் பேரின் மரணத்தைப் பார்த்ததோ அந்தக் குமிழித்தூம்பு’ என்று ஒரு வரி வந்திருந்தால் இன்னும் ஒரு கோணத்தில் இக்கதையை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ‘வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்’ என்று மட்டும் முடித்திருக்கிறார் ஆசிரியர். ஏன் இந்த வரியை நான் சொல்கிறேன் என்றால் மரியாதைக்குரிய இடமான குமிழித்தூம்பு என்ற சொல்லுக்கும் தலைப்பிற்கும் இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்து சொல்லி இருக்கலாமே என்பதால்தான். இதுவே நான் சொன்ன மேல் உள்ள வரி இருந்திருந்தால் தலைப்பிற்கு ஏற்ப கச்சிதமாய் இருக்கும்.  

 

2) பனைவிடலி. 

 

மருதாள் என்றப் பெண், தன் தந்தை யார் என்று அறியும் ஒரு சிறு போராட்டம்தான் பனைவிடலி. தன் தாய் மகிழம்பாளையும் அவரது முள்படுக்கைப் போன்ற வாழ்வையும் சிறுவயது முதற்கொண்டு அறிந்தவள் மருதாள். தாயிடம் கேட்டு கேட்டு நச்சரித்த ஒரே விசயம், அவளது அப்பன் யார்? என்பது. ஒரு கட்டத்தில் யார் என்று சொல்கிறாள் மகிழம்பாள். உடனே அவனைப் பார்க்கச் செல்கிறாள் மருதாள். 

 

மகிழம்பாள் யார்? மருதாள் எப்படி பிறந்தாள்? மகிழம்பாளின் தந்தைக்கு என்னாயிற்று.? இதெல்லாம் கதையில் இருக்கிறது. 

 

அவள் கடந்து வந்த தூரம் அவளது அப்பனைப் பார்க்கும் ஆர்வத்திற்கு இடையூராகவே இல்லை. வெக்கை மிகுந்த தென்கரை என்ற ஊரை அடைந்தாள். பேரை விசாரித்து வீட்டையும் அடைந்தாள். மருதாளை வரவேற்கிறாள் அவளது சித்தி. தன் சித்தியையும் அவரது குழந்தைகளையும் பார்க்கிறாள். வீட்டிற்கு அப்பன் பொத்தாரியும். ‘நீ யாரு.? உம்பேரென்ன.?’ என்று கேட்டவனுக்கு மருதாள் என்று சொன்னவள்தான். அவன் முகம் சுருங்கி விடுகிறான். மனமும் சுருங்கி விட்டவன்தான் பொத்தாரி. எதுவும் பேசாமல் இறுகிப்போன முகத்துடன் நின்றவன் ஒருச்சொல்கூட அவளோடு பேசவில்லை. அவளும் பேசவில்லை. கிளம்பிவிட்டாள். பனை வளைந்து கொடுக்கும். ஆனால் உடைந்து விடாது. அதுதான் பனைவிடலி. இருப்பினும் வாசலில் அவளது சித்தி மரகதம் அவளை அன்பால் அரவணைக்கிறாள். சித்தி மூத்த தாரத்தின் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளமாட்டாள் என்ற பழைய பிம்பம் உடைகிற இடம் இது. அப்பன் பேசவில்லை, மாறாக சித்தி அரவணைக்கிறாள். கிளம்பும்போது கிடைத்த சித்தியின் முத்தம்கூட அன்பானது. அப்போது மருதாள் நினைக்கிறாள்,  ‘என்னைப் பெற்றெடுக்கவில்லை என்றாலும் மரகதமும் என் தாய்தான். உன்னால்தான் நான் பிறந்தேன் என்றாலும் நீ என் அப்பன் இல்லை’ என்று.  

 

பனை மிக அடர்த்தியான மரம். எப்படிப்பட்ட நிலத்திலும் காலூன்றி நிற்கப் பார்க்கும். அடி முதல் நுனிவரை பலருக்கும் பயன் அளிக்கும். இதன் வடிவமாக, உருவமாக நிற்கிறாள் மருதாள். அவளுக்குத் தேவை எல்லாம் இதுதான், ‘ நான் விருட்சம். என்னை விதைத்தது யார்?’ ஆனால் ஊராத கிணற்றில் நீர் பார்க்கத் தேவையில்லை என்பதால் அங்கிருந்து செல்கிறாள் மருதாள். அதுதான் பனை – அடர்த்தியான மரம். 

 

3) தொய்யில் வதனம். 

வண்ணங்களை வாரி பூசிக்கொள்ள விரும்பும் வதனா, கிராமத்து பருவப்பெண். வண்ணங்களைக் காதலிக்கிறாள். நாளும் குளிக்கையில் உடலில் அப்பிக் கொள்கிறாள். கருமையை அதிகம் விரும்புகிறாள். தன் அந்தரங்கங்களில் பூசி அழகு பார்க்கிறாள். அப்படி அவள் காற்றோடையில் குளிக்கும் போது அவளை காதல் கண் கொண்டு பார்க்கிறான் வனக்குறவன் சாந்தன். இதையறியாதவளில்லை வதனா. அவனது கரிய நிறத்திற்குள் தன்னைத் தொலைத்துக்கொள்ள விரும்புகிறவள் வதனா. ஒருநாள் காட்டோடையில் இவர்கள் ஒன்றிணைகிறார்கள். காதல் விளையாட்டில் கருவுருகிறாள் வதனா. ஊர் இதைக் கவனிக்க, இவளை தனித்து வைக்க, சாந்தன் தனித்தலைகிறான். ஒரு வனக்குரவனோடு காதல் கொண்டு கருவுற்று நின்றதால் அதை ஏற்க மறுத்து செய்த காரியம் சாந்தனைக் கழுத்தறுத்து போட்டது. 

 

அவனது பிரிவின் துயர் தாளாமல் காட்டோடைக்கு தப்பி வந்தவளுக்கு ரத்தமு சிந்திய இறந்த சாந்தன்தான் கிடைத்தான். மனது வெடிக்க அழுதவள் அவனது ரத்தத்தையே அள்ளி தன் கருவுற்ற வயிற்றின்மேல் தடவிக் கொள்கிறாள். 

 

தமிழில் ஒரு முறை உண்டு. தமிழரின் பண்பட்ட அடையாளங்களில் அது ஒன்று. குலங்களாக கிடந்த காலத்தில், சாதிப் பிரிவினை என்றால் என்னவென்று தெரியாத காலத்தில் ஒரு குலத்தவர் இன்னொரு குலத்தவரின் இடையே காதல் கொண்டு வாழ்வைத் தொடங்குவர். மலையில் வாழ்ந்தவரா, கீழே மருதநிலத்திலோ முல்லை நிலத்திலோ அல்லது எங்கோ தனக்குரியவரை உறுதுணையாக ஏற்பர். வள்ளியும் முருகனுமே இதற்கு சாட்சி. நிலங்கள் கடந்து குலங்கள் செழித்த காலம் அது. ஆனால் இன்று சாதியில் அழிந்து சீர் கெட்ட நிலையில் இருக்கிறது இச்சமூகம். 

 

வனக்குறவனான சாந்தன் காட்டை ஆள்கிறவன். காடறிந்தவன். அவனைத்தான் ‘காட்டுவாசி’ என்ற சொல்லால் கேவலப் படுத்துகிறோம். இதன் விளைவுதான், ஓர் ஊர்வாழ் பெண்ணை அவன் அடைந்ததால் அவனைக் கொன்றுவிட ஊர் திரண்டது. எவ்வளவு பிற்போக்கான சமூகம். 

 

4) காத்தாள். 

அவளது பெயர் காத்தாள். பசுஞ்சோலை கிராமத்தில் கதிரறுப்புக்கு தன் தாயுடன் வந்தவள் காத்தாள். அறுப்பின்போது உயிரைத் துறந்தாள் தாய். பரிதவித்துபோய் அநாதையாய் நின்றாள் காத்தாள்.

 

ஊரின் பெரியப்பண்ணையார் கொயிந்து பண்ணை. கல்யாணம் காட்சி இல்லாமல் காலங்கடத்தி வந்தவர் தன் கடைசி கட்டத்தில் இருந்தார். அவரது பண்ணையில் ஏராளமானோர் பக்கத்தூரிலிருந்து கதிரறுப்புக்கு வருவார்கள். 

 

பசுஞ்சோலை கிராமத்து சுடுகாட்டின் தகனகர்த்தா பூவான். அடக்கம் செய்து அமைதியாக வழியனுப்பி வைப்பான். காத்தாளின் கணவன். அவளை அவன் மணந்த கணம் மிக மிக முக்கியமானது. இனி வாழ்வில் தனக்கென ஒருத்தரும் இல்லை என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட நேரத்தில் காத்தாளை கரம் பற்றியவன் பூவான். 

 

வேலைக்கு வந்த இடத்தில் இறந்த தாயுடன் வீதியில் நின்றாள் காத்தாள். ஆற்றுவார் யாருமின்றி அநாதரவின்றி நிற்கிறாள். போக்கிடம் இல்லை. தாயின் உயிரற்ற உடலுடன் அவள் தவிக்கும் செய்தி பூவானின் காதுக்கு சென்றது. ஊரே ஒதுங்கியிருந்தும் ஒண்டியாய் வந்தான். காத்தாளின் தாயின் உடலை தகனத்திற்கு தூக்கினான். ஆனால் ஊர் தடுக்கிறது. ‘ஒன்று கூடி நிற்கிற இந்த கூட்டம் முன்னாடி சொல்றேன். தாயை இழந்த இந்த பொண்ணு இந்த நிமிசத்திலேந்து என் பொஞ்சாதி. செத்தவ என் மருதாய். இப்ப இந்த ஊருக்கும் இவங்களுக்கும் சம்பந்தம் இருக்குதானே’ என்றான் பூவான். பெற்றவளைக் காடு சேர்த்தவனோடு அண்டி வாழத் தொடங்கிவிட்டாள் காத்தாள்.

 

கொயிந்து பண்ணைக்கு காலம் முடியும் நேரம். பூவானை வரவழைத்தார் கொயிந்து பண்ணை. அவன் காதில் மட்டும் எதையோச் சொல்லிவிட்டு உயிர்மூச்சை விட்டார். தகன மேடையில் ஊரே கூடி நிற்க, காடு சேர்க்கும் அத்தனைச் செய்முறைகளையும் செய்து வைத்தான் பூவான். கடைசி சுற்றைக் கொயிந்து பண்ணையின் உறவினர் சுற்றி முடித்ததும் பந்தத்தை வாங்கி காத்தாளின் கையில் கொடுத்து கொள்ளி வைக்கச் செய்தான். ஊரே நிற்கும் தகனமேடையில் காத்தாள் யாரென்று அனைவருக்கும் தெரிந்தது. கடைசி காலத்தில் தனது தாய் ஏன் இந்த பசுஞ்சோலைக்கு தன்னை அழைத்து வரவேண்டும் என்ற ஐயம் தீர்ந்தது காத்தாளுக்கு. ‘கனன்ற தீ சுடர்ந்து எரிந்துக் கொண்டிருந்தது’ என்று முடிகிறது இக்கதை. 

 

இந்த கடைசி வரியின் சொற்களில்தான் இக்கதையின் உயிர் இருக்கின்றது. கடைசிலாவது காத்தாள் யார் என்று கதையில் நமக்கு தெரிகின்றது. இவள் மனைவி, என் மகள் என்று வெளிப்படையாக ஊருக்குச் சொல்ல முடியாமல் இருக்கும் கொயிந்து பண்ணை. இவர்தான் உன் தந்தை என்று சொல்லாமல் விட்டு விட்ட காத்தாளின் தாய். காத்தாளை இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றி கரம் பிடித்த பூவான். இந்த மூவரின் வாழ்வோட்டம்தான் கதை. இதில் ஊர்தான் சத்தமில்லாத வில்லன். கொயிந்து பண்ணை திருமணமின்றி வாழ்ந்ததற்கு காரணம்கூட இந்த ஊர்தானோ என்னவோ.!

 

ஆனால் மரணத்தில் நிகழும் அவமானத்தைத் தடுத்து நிறுத்தினான் பூவான். அவன்தான் நாயகன். கதையின் நடுவில் ‘ஒருவர் வாழும்போது நேரும் அவமானத்தைவிட, அவரின் மரணத்தில் நேர்ந்துவிடும் அவமானம் துயரமானது,’ என்ற சொற்கள் மிகவும் துயரார்ந்தச் சொற்கள். கொயிந்து பண்ணைக்கு வாழும்போது அவமானம் இருந்த தோ இல்லையோ, மரணத்தில் இல்லை. அது என்ன அவமானம் என்பதை வாசகர் சிந்தனைக்கு விட்டுவிட்டார் ஆசிரியர். கதையைப் படிக்கையில்தான் அது புரியும். அருமையான கதை. 

 

5) வெளுப்பிக் குளம். 

அந்த ஊரின் அடையாளம் அந்த குளம். தாமரைக்குளம் என்று பெயர் இருந்தாளும் வெளுப்பி அதை ஏலத்திற்கு எடுத்து பல நாட்கள் காத்ததால் வெளுப்பிக்குளம் என்றே பெயராயிற்று. வெளுப்பிக்குளம் என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

அந்த குளம் ஏலம் விடப்படும் போதெல்லாம் எப்பாடு பட்டாவது வெளுப்பிக் குளத்தை ஏலத்திற்கு வாங்கிவிடுவாள். வெளுப்பியிடம் குளம் இருப்பதையே அந்த ஊரும் விரும்பியது. குளத்தில் மீன்கள் நன்கு வளரும். அதை நாளும் பிடித்து  விற்கிறாள் வெளுப்பி. அந்த ஊருக்குள்ளேயே வைத்து விற்பதால் அந்த ஊர் மக்கள் கொஞ்சமேனும் மீன் தின்று வாழ்கிறார்கள். ஆண்டுக்கொருமுறை குளத்தைச் சுத்தம் செய்கையில்கூட சேற்றோடு இருக்கும் மீனை மக்களுக்காக விட்டுவிடுவாள். அதை ஊரார் பிடித்து பல நாட்கள் கருவாடாக்கி உண்பார்கள். 

 

ஆனால் இந்த குளத்தை ஏலம் எடுத்து மீன்கள் பிடித்து வெளியூரில் விற்று காசு பார்க்க நினைக்கும் சின்னசாமி, இந்தமுறை ஏலத்திற்கு இரண்டு லட்சத்தைச் சொன்னபோது அதை வெளுப்பியாலும் மிஞ்ச முடியவில்லை. குளம் அவன் கைக்கு போனது. இந்தமுறை குளம் வெளுப்பிக்குதான் சேரவேண்டும் என்ற வேண்டுதல்கூட நிறைவேறவில்லை. சின்னசாமியின் சுயநலமான ஏற்பாட்டில் குளத்தில் ஏதேதோ செய்து மீன்களை செயற்கையாய் வளரவைத்து வெளியூரில் விற்கிறான். உள்ளூர் மக்களுக்கு சுத்தமாக மீன் கிடைப்பதில்லை. மேலும் குளத்திற்கு வேலி போட்டான். இரவில் பார்த்துக்கொள்ள ஆள் வைத்தான். நீர் முதற்கொண்டு அள்ளிக் கொண்டு போனான் சின்னசாமி. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் வெளுப்பியால் ஒன்றுமே செய்ய முடியாமல் போனது. முழு குளமும் காலியாகிப்போன நேரம் வெளுப்பி குளத்திற்கு மேலே எதேச்சையாகப் பார்க்கிறாள். கழுகுகள் நிறைய குளத்தைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அந்த ஊராருக்கு ஒரு துண்டு மீன்கூட கிடைககவில்லை.

 

இதுவரை தனி நபர்களின் குடும்பக் கதையைப் பார்த்த நாம் இக்கதையில்தான் ஒரு ஊரின் பிரச்சினையை வெளுப்பி என்ற கதாப்பாத்திரத்தை வைத்து பார்க்கிறோம். இதுவே சற்று மாறி இருந்தாலும் கதை வெளுப்பியைப் பற்றியதாகி இருக்கும். இதுவே சற்று நீண்டிருந்தால் கதை முடிவில்லாமல் முடிந்ததைப் போன்றிருக்கும். 

 

இரண்டுக்குமின்றி கதையானது வெளுப்பி, குளம், ஊர் என்று கச்சிதமாக நிறுத்தப் பட்டிருக்கிறது. ஒரு நபரின் பிரச்சனை இல்லை. இது அந்த ஊரின் பிரச்சனை என்றும் அந்த மக்களின் வளம் அந்த மக்களைச் சேராமல் ஒரு முதலாளியின் கையில் மாட்டி சொட்டைத் தட்டப்படுவதை ஊரே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது, யார் என்ன செய்ய முடியும் என்று. அவர்கள்தான் கேட்க வேண்டும். எதுவுமே கேட்காமல் இழப்பதற்கு பதில் கேள்வியாவது கேட்டிருக்கலாம். எதுவுமே அதிகமாக போனால் தவறுதானே.! இங்கே ஏலம் அதிகம். அதனால் குளத்தில் மீனும் இல்லை. மீனிருக்க சிறிது நீரும் இல்லை. 

 

இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் பல அரசு நிறுவனங்களை இக்கதையில் வரும் குளம் என்றும், சின்னசாமியை தனியார் கார்ப்பரேட் கம்பனிகள் என்றும் அவற்றை விற்கிற, குளத்தை ஏலம் விடுகிற ஊர்சபையை அரசு என்றும் நாம் பொருத்திப் பார்க்கலாம். நாம் அனைவரும் கேட்காதவரை அரசு நிறுவனங்கள் விற்கப்படும்.

 

6) கனவின் தாழ்வாரம்.

 

இக்கதை ஒரு பெண்ணின் வாழ்வியல் ஏக்கத்தைச் சொல்லும் கதை. அப்பெண்ணின் வாழ்க்கை அநாதரவாக இருக்கிறது. அதைக் கதையில் வரும் இவ்வரிகளில் அறிந்து கொள்ள முடியும்.

‘பற்றிப்படர பற்றுக்கொடியற்றவள் பவுனு. அறண்டாலும் உருண்டாலும் அது அவளாகத்தான் இருக்க வேண்டும். அவளுக்கு அவளேதான் நலம் விசாரித்துக்கொள்ள வேண்டும். அவள் போட்டக் கோலத்தை அவளேதான் அளிப்பாள். அவள் பூட்டிய வீட்டை அவளேதான் திறப்பாள்.’ 

 

தனக்கென்று யாருமற்ற வாழ்க்கை வாழ்கிறாள் பவுனு. அன்று மாலை தன் காட்டில் வெக்கையில் உழைத்து விட்டு குடிசை வந்தவளுக்கு கதவு திறந்து இருக்கிறது என்று பதற்றம். திறந்து பார்த்தபோது அமர்ந்திருந்தான் கருவண்டு. 

 

யாரோ ஒருவன் தன் வீட்டில் அமர்ந்திருக்கிறான் என்று அவள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவளுக்குள் தன் வீட்டில் தன்னைத்தேடி ஒருவன் வந்திருக்கிறான் என்ற எண்ணமும் தோன்றியது. அது அவளைப் பதறவிடாமல் நிதானப்படுத்தியது. யார் நீ என்று விசாரிக்கிறாள்.  

 

பாதசாரியாக வந்தவன் பசி மயக்கத்தில் இவளது குடிசைக்குள் புகுந்து உணவு தேடியிருக்கிறான். ஒன்றுமில்லை. மயக்கத்தில் அங்கேயே படுத்துவிட்டனைத்தான் பவுனு பார்க்கிறாள். 

 

கருவண்டு ஆடுகளைத் திருடி விற்கிறவன். ஊர் ஊராக அலைகிறவன். போலீசால் தேடப்படுகின்றவன். இப்போது பவுனு குடிசையிலிருக்கிறான். உண்பதற்கு ஒன்றுமில்லை என்றவுடன் கிளம்பிவிட்டான். அவனை வெறுமனே அனுப்பிவிட அவளுக்கு மனமில்லை. கொஞ்சம் எள்ளுருண்டைகளை எடுத்துக்கொண்டு போய் அவனிடம் கொடுக்கிறாள். ஆனால் அவனோ வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அன்றிலிருந்து இருண்ட வெளிச்சத்தில் தனது குடிசையில் அவள் பார்த்த அந்த கண்களை மீண்டும் பார்க்க ஆசைக் கொண்டாள். ஆனால் அவனது தொழில் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. அவனைக் காணவேண்டும் என்ற பலநாள் ஆசை அவளுக்குள் வளர்ந்தது. 

 

ஒருநாள் இரவு, அவளது கதவைத் தட்டினான் கருவண்டு. அவள் கதவைத்திறந்தபோது போலீஸ் அவனைத் தேடிக்கொண்டிருப்பதையும் ஒழிந்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறான். அவளது குடிசைத்தேடி வந்த போலீசிடமிருந்து எப்படியோ அவனைக் காப்பாற்றிவிட்டாள். ஆனால் அங்கிருந்து சென்றவன் அன்று காலையில் பிடிபட்டதாகவும் போலீஸ் அவனை ரத்தம் சொட்ட அடித்து இழுத்துச் செல்வதாகவும் ஒருத்தர் சொல்லக் கேட்டு மனம் கலங்கி நிற்கிறாள் பவுனு. 

 

இக்கதையைப் படிக்கையில் பவுனுக்கு கொஞ்சம் நல்லது நடக்கட்டுமே என்றுதான் மனம் எண்ணுகிறது. பெற்றோர் இல்லை, உறவினர் இல்லை, உடன்பிறப்பு இல்லை, ஊருக்குள்ளும் அவள் இல்லை, தனியாக உள்ள குடிசையில் தனியாக வசிக்கிறாள், தனியாக உழைக்கிறாள், தனியாகவே உறங்கி எழுகிறாள். அவள் வீட்டு கதவை அவளே மூடுகிறாள், அவளேத் திறக்கிறாள். இப்படி ஒரு பெண் தனிமையில் வாழ்கையில் தனக்கென ஒரு துணையை விரும்புவதில் எந்த தவறுமில்லை. ஆனால் அவளது ஆசை நப்பாசையாகவே முடிந்துவிட்டது. அவனுடன் மேற்கொண்டு அவளுக்கு எந்த பந்தமும் ஏற்படும்படி ஆசிரியர் காட்டாமல் விட்டதே நன்று என்று தோன்றுகிறது. 

 

ஒருவேளை அவள் கருவண்டை மணந்திருந்தால் வந்த சொந்தம் வந்த வேகத்தில் சென்றிருக்கும். மீண்டும் அவள் ஆதரவின்றி நிற்கும் நிலைதான் வரும். அவளது வாழ்வைச் சிறப்பிக்க ஒரு துணை இருப்பதே ஆகச்சிறப்பாக இருக்கும். ஆனால் கதைப்படி, கருவண்டு தற்சமயம் அந்த தகுதியுடன் இல்லை. நல்லவேளையாக மீண்டும் அவள் அநாதையாக்கப்படும் நிலை இல்லை. 

 

இது மண்டோவின் கதையை நினைவூட்டுகிறக் கதையாகத் தோன்றியது.  அக்கதையில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணிருப்பாள். அவளிடம் அவ்வபோது வந்து விரைவில் கட்டிக்கொள்வதாக ஆசைக்காட்டி நடித்து பணம் வாங்கும் ஒரு சுயநலவாதியை அன்று அவள் விரட்டி விடுவாள். அவள் படுக்கும் கட்டிலின் கீழ் கிடக்கும் சொறிபிடித்து துர்நாற்றம் அடிக்கும் நாயைத் தூக்கிக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்துக் கொள்கிறாள். ஏமாற்றும் மனிதரைவிட நாற்றம் எடுக்கும் நாயே பெரிது என்று சொல்லும் வலிமிகு தருணம். அப்பெண்ணை நம் பவுனுவுடன் ஒப்பிட்டால் பவுனுவுக்கு தன் வாழ்வை நன்கு மாற்றிக் கொள்ள ஏக வாய்ப்புகளோடு இருக்கிறாள்.

 

மற்றபடி கதையில் இயல்பான மனித ஏக்கங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இரண்டே நபர்களின் உருவங்கள்தான் கதையில் அதிகம் உள்ளன. படிப்பதற்கு இலகுவான கதை. சிரமம் ஏதுமின்றி சொல்லும் காட்சிகள் அனைத்தும் புரிகின்றன. 

 

7) உப்புச்சுவை. 

காளியம்மா மாயன் இருவரும் கணவன் மனைவி. ஆனால் இருவருக்குள்ளும் அன்பும் இல்லை. அரவணைப்புமில்லை. காளியம்மா தன் வீட்டு வேளைகளைக்கூட செய்துக்கொள்வதில்லை. மாயனும் அவளை எதுவும் கேட்டுக்கொள்வதில்லை. அவளது மாமியார்தான் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்வார். தண்ணீர் எடுத்து வரும் வேலையைத்தவிர காளியம்மாவை எந்த வேலைக்கும் பணிக்க மாட்டாள். மாயனின் முகம் எப்போதும் கடுகு பொறியும் சிடுசிடு முகமாகவே இருந்ததில் அவனுடன் ஒட்ட அவளுக்கு பயம் உச்சிவரை கொல்லும். அதனால் அவனைவிட்டு தள்ளியே இருந்தாள். ஒன்றிணைந்து வாழ வேண்டிய வாழ்வில் இருவருக்கும் இணக்கமே இல்லை. 

 

பிணக்கு ஏற்பட்டு காளியம்மா தன் தாய் வீட்டுக்குப் போயிருந்தபோது மாயனின் வீடு தீப்பற்றி எரிந்ததில் அவளது மாமியார் இறந்துவிட்டார். இனி மாயனுக்கு அவளைத்தவிர வேறு யாருமில்லை. 

 

குடும்பத்தைச் சுமந்து பழகாதவள் காளியம்மா. அவளது சமையலில் நடக்கும் ஒரே தவறு உப்பு அதிகம் இருப்பதுதான். அதனால் அவன் சரியாக சாப்பிட மாட்டான். இதை சரிசெய்யவும் அவளுக்கு தெரியவில்லை. ஒருநாள் இது விபரீதமானது. போதையில் வந்த மாயனை வெறும்வயிற்றில் விடுவதற்கு மனமின்றி சோறிட்டாள் காளியம்மா. கொதித்த குழம்பு அப்போதுதான் இறக்கப்பட்டிருந்தது. இதிலும் உப்பு அதிகம். கோபம் கொண்டு அவள் முகத்தை சூடு அடங்காத குழம்பில் முக்கிவிட்டான் மாயன். முகம் வெந்து கதறியவளை அவளது தாய் நீராயிகூட எதுவும் சொல்லவில்லை. 

 

மருத்துவமனையில் சாப்பிடக்கூட முடியாமலிருந்தக் காளியம்மாவைப் பல நாட்கள் கழித்து காணவந்தான் மாயன். அந்நேரம் நீராயி வெளியே சென்றிருக்க, முகம் வீங்கி, அடையாளம் தெரியாமலிருக்கும் காளியம்மாவைக் கடந்து மாயன் செல்ல, யாரோ அவனை அழைத்து இவளிடம் விட்டார்கள். அந்த நிலையில் அவளைக் கண்டதும் அவன் கலங்கிவிட்டான். 

 

இப்போதெல்லாம் நீராயி சரியாக உப்பிட்டு சமைக்கிறாள். அதை முதலில் சாப்பிட்டபோது மாயன் ஆச்சர்யப்பட்டு அவளைப் பார்த்தான். ஆனால் அவள் அனுபவித்த அந்த வலி இப்போது அவன் முகத்தில் கொதிப்பதுபோல இருந்தது என்று முடிக்கிறார் ஆசிரியர். 

 

கதை நன்றாக எழுதப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் கண்முன் வந்து வாழ்ந்து செல்கின்றனர். காட்சிகள் நேரடியாக இருப்பதைப் போன்று அமைந்துள்ளன. அது எழுத்தாளரின் திறமை. 

 

இந்த கதையில் காளியம்மாவின் தாய் நீராயி அவளது கணவன் கட்டையன் ஆகியோரின் கதையும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திடமான மனதுக்கு  சொந்தக்காரி நீராயி. கடுமையான உழைப்புக்கு அதிபதி கட்டையன். இருவருக்குமான உறவையும் இக்கதையைப் படிக்கும்போது காணலாம். 

 

தனிப்பட்ட முறையில் கூறுகையில், சில கதாபாத்திரங்கள் கதையில் இல்லாமல் இருந்தாலும்கூட கதையை முழுமையாக வாசிக்கவும் உள்வாங்கவும் முடியும் என்று தோன்றுகிறது. அதாவது நீராயி கட்டையன் ஆகியோரின் கதை இதில் இடம் நிறைக்கிறது. ஆனால் இதை இல்லாமல் படித்தாலும் உப்புச்சுவை நமக்கு ஒட்டிக்கொள்ளும். மற்றபடி, நாவல் என்ற வகையில் பயன்படுகிற ஒரு கதையமைப்பாக நீராயியின் கதையைப் பார்க்கலாம். சிறுகதைக்குள் இது தேவையை முழுமையாக பெறவில்லை.  எப்படி.?

 

நீராயியின் திடமான கதாபாத்திரம், கட்டையனின் தின்மையான உழைப்பு, எதுவும் இவர்களது மகளான காளியம்மாவுக்கு இல்லை. கணவனை நெருங்க முடியாத, வீட்டு வேலைகளை ஆள முடியாத, சரியான அளவு உப்பு இட முடியாத ஒரு கதாப்பாத்திரம் காளியம்மா. நீராயிபோல பாம்பைப்பிடித்து தன் திடம் காட்டியவள் அல்ல. கடைசியில் தன் கணவனுக்காக எல்லாம் செய்கிறாள். இதே இடத்தில் நீராயி இருந்திருந்தால் அவள் செய்திருக்க மாட்டாள் என்று தோன்றுகிறது. மாயன் காளியம்மாவிற்கு பதிலாக நீராயி, கட்டையன் ஆகியோரே கதையில் முழுமையாக நீடித்திருந்தால் அவர்களது கதை ஒரு முழுமை வடிவத்திற்கு வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வன்மை திண்மையான நீராயி, கட்டையனின் கதை இக்கதையில் ஆரம்பிக்கப்பட்டு விவரிக்கப்பட்டு முடிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீராயி, கட்டையனே கதையில் நிறைந்திருந்தால் முழுமைப் பெற்றிருக்கும். 

 

இதேபோலக் கதையில் உடல்ரீதியான பாதிப்பை முகத்தில் ஏற்படுத்திவிட்ட கணவன் மாயனுக்கு சரியான வகையில் சாப்பாடு செய்து போடும் காளியம்மா ஒரு பாதிப்புக்கு பின் தன்னைத் தகவலைத்துக் கொள்கிறாள். இதுவே ஒரு சாதாரண ஆணுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பின் இந்நேரம் காளியம்மா அவனைவிட அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பாள். ஆனால் இப்படியெல்லாம் இன்றி, எழுத்தாளர் கடைசி வரியில் அவளது பாதிப்பை அவனது பாதிப்பாக பார்க்கும் காட்சியைக் காட்டி முடித்திருப்பதுதான் அருமை.!

 

8) பேரன்பின் கூடு.

 

பனிமலர் என்ற சிறுமி. மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். தன் வீட்டு எழுமிச்சை மரத்தில் கூடுகட்டி வாழும் கருஞ்சிட்டையும் அதன் முட்டைகளையும் மிக ஆசையோடு பார்க்கிறாள். பாதுகாக்க நிறைக்கிறாள். பள்ளியில் தோழி வெண்பாவிடம் அதைச் சொல்லி மகிழ்கிறாள். மூன்று முடைகளில் தனக்கொன்றைத் தரவேண்டும் என்று கேட்டபோது முடியாது என்று மறுத்துவிட்டாள். ஏனெனில் அவற்றை அவ்வளவு விரும்புகிறாள்.  

 

ஒரு குழந்தை தனது ஆசையான, பிரியமான ஒன்றை என்றும் விட்டு தருவதில்லை. அதை தன்னுடனே வைத்துக்கொள்ள நினைக்கும். இது குழந்தையின் இயல்பு. ஆனால் வளர்ந்த மனிதரின் இயல்பும்கூட இதுவேதான். தன்னிடம் இருப்பதை இருப்பதுவரை தன்னுடன் வைத்துக் கொள்வது, பாதுகாப்பது என்பதில்தான் மனித வாழ்க்கை இயங்குகிறது.

 

இக்கதை சிறு குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ளது. பனிமலர் எனும் குழந்தை, அவள் வீட்டு எலுமிச்சைப் பழமரத்தில் கூடுகட்டி முட்டையிட்டிருக்கும் கருஞ்சிட்டு, பனிமலரின் அம்மா. இவ்வாறு மூன்று பேரின் பாசமும் தாய்மையும்தான் கதை. 

 

பனிமலரின் அம்மா இயல்பாகவே ஒரு தாய். கருஞ்சிட்டும் இயல்பாக ஒரு தாய். ஆனால் கதையின் மையக் கதாபாத்திரம் பனிமலர்தான். அவளோ சிறுமி, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி. ஆனால் கதையின் சிறப்பே பனிமலர் தாய்மை உணர்வுடன் சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதுதான். ஆக, தாய்மை என்ற உணர்வு இச்சிறுமிக்கும் உண்டு. தாய்மை என்பது உறவாக மட்டுமேயின்றி அற்புதமான உணர்வும் ஆகும். அதைக் கதையில் பயன்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். 

 

மற்றபடி சிறுவர்களுக்கே உரிய இயல்பான குணங்களுடன் பனிமலர், வெண்பா, இனியன், கருஞ்சிட்டு என்று ஒரு குழந்தைக் கதைக்குரிய அம்சங்கள் கதையில் வந்துள்ளன. அவர்களின் உரையாடல் அருமை, குணங்கள் அருமை, கதையும் அருமை.

 

9) மச்சினி வாய்க்கால்.

 

வைத்தி நிலம் சமைப்பவன். நிலத்தை வளமாக்கும் பண்ணைக்கூலி. அவனை ஏய்க்கும் பண்ணைக்காரர் குட்டைக்காத்தடி. தனது தம்பி இறந்த பிறகு அவனது குடும்பத்தை ஏமாற்றி பெரும்பான்மைச் சொத்துகளை அபகரித்து கொண்ட நல்லவர். விவசாயத்திற்கு உதவாத நிலத்தை மட்டும் அவர்களுக்காக விட்டுக் கொடுத்தவர். 

 

அந்த நிலத்தையும் உயிர்சிந்தி வளர்த்தவள் சுகந்தாள். கடினமான பாட்டாளி. வயல்வெளியில் நடக்கக்கூட தெரியாத தாயையும் சேர்த்து பார்த்துக் கொண்டு நிலத்தையும் ஆள்கிறவள். அப்படியிருக்கையில் அவளுக்கு வந்தது வைத்தியின் மீதான பிரியம். 

 

‘ என்ன வைத்திய்யா மானம் இருட்டிட்டிருக்கே மழ வருமா.?’ என்று கேட்டபோது தொடங்கியது அவர்கள் பழக்கம். அதுவரைப் பூட்டி வைத்திருந்த அவள்மீதான எண்ணங்களை அப்போது வெளியிட்டான் வைத்தி. இருவருக்கும் பழக ஏதுவாக அமைந்தது அந்த மச்சினி வாய்க்கால். அவனுக்காக இவள் சமைத்து கொடுத்தாள். தன் பிறந்தநாளில் பாயாசம் செய்து அவனைத்தேடி வந்து கொடுத்துவிட்டு போனாள். இவளது போக்கைக் கவனித்த அவளின் தாய் கட்டப்பொண்ணு நேராக குட்டைக்காத்தடியிடம் சென்று சேதி சொன்னாள். அடுத்த அறுவடையின் கடைசியில் உழைத்து துவண்டுபோய் வீடு வந்த வைத்தி, அடுத்தநாள் விடியலில் தன் குடிசையில் செத்துக் கிடந்தான். குட்டைக்காத்தடி அங்கு வந்து வைத்துவிட்டு போனத் தூக்குவாளியைக் கண்டப் பிறகுதான் அமைதியானார். இவ்வாறு கதை முடிகிறது. 

 

ஏகாதிபத்தியம் சாமானியனை அண்ட விடாது. உடன் சேர்க்காது. குடும்பத்தில் சேர்க்கவே சேர்க்காது. பண்ணைக்கூலி ஒருத்தன் பண்ணை வீட்டுப் பெண்ணுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும் என்று சொல்லி செல்கிறார் குட்டைக்காத்தடி. வழக்கம்போல உழைப்பவனுக்கு பலன் கிடைப்பதில்லை. அதேபோல ஆண்டான் வீட்டு பெண்ணும் இல்லை. இதுவே இந்த சமூக அவலம். 

 

தம்பியின் குடும்பம் என்றுகூட பாராமல் நிலத்தை ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டவர் குட்டைக்காத்தடி. இங்கே சொத்தை ஆள்வது என்றால் தம்பியாவது ஒன்னாவது என்று அபகரித்தவர் பெண் என்ற உடனே ஒட்டிக்கொண்டார். ஆக எதிரியின் பெண்ணாயிருந்தாலும்கூட தன் வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும். இதைத்தான் கௌரவம் என்று சொல்கிறது. வீம்புக்கு விழுங்கிய கத்தி. சாதி இங்குதான் நுணுக்கமாய் இயங்குகிறது. பையனைக் கொல்ல முடியும் என்றால் முதலில் பையனைத்தான் குறி வைப்பார்கள். அப்படி இல்லையேல் பெண்ணைக் குறி வைப்பார்கள். உயிரைக் கொன்றுவிட்டு அதையும் கௌரவக்கொலை என்று சொல்வார்கள். இதுதான் ஆணவத்தின் உச்சம். தமிழரின் பண்பாடே தோற்கும் இடம். சோலி முடிக்கப்பட்டான் வைத்தி. 

 

ஏமாற்றியவராயினும் சரி, தன் மகளை மாற்ற தன் கணவரின் அண்ணனிடமும் உதவி கேட்கிறாள் கட்டப்பொண்ணு. யாருக்கும் தெரியாமல் வைத்தியின் உணவில் விஷம் கலந்து கதையை முடித்தார் குட்டைக்காத்தடி. இது கதையில் வரவில்லை என்றாலும் வாசகன் புரிந்து கொள்ள ஆசிரியர் விட்டு வைத்துள்ள இடம், இச்மூகத்தின் அவலம். 

 

10) மழைப் பிரண்டை.

 

செவனம்மா கிழவி வளர்ந்தப் பிரண்டையைக் காடு கரடு என்று தேடி அலைகிறாள். அவளுக்காக அல்ல. ஊருக்குள் பெண்களுக்கு ஏற்படும் சடங்களிலும் பிரசவத்திலும் முன்னின்று வழிநடத்துபவள் செவனம்மா. ஆனால் ஒண்டியாக வாழ்பவள். பிறர் வீட்டு உணவையும் உண்ணமாட்டாள். 

 

கட்டமணியின் மனைவி செவனம்மா. அவர்களுக்கு பல நாட்களாக குழந்தை இல்லை. பரிசோதித்ததில் அவளுக்கும் பிரச்சனையில்லை. ஆனால் கட்டமணி தனக்குதான் பிரச்சனை என்று எண்ணிவிட்டான். அவள் பலதும் செய்து பார்த்தாள். அதற்குள் கட்டமணி புண்பட்ட மனதை ஆற்றுகிறேன் என்று டவுனில் பெண்களிடம் புழக்கம் ஏற்படுத்திக் கொண்டான். கட்டமணியை மீண்டும் வாழ்வுக்குள் மீட்க நினைத்தாள். ஆனால் அவனும் தொலைந்தப் புத்தியை மீட்க முடியாமல் தன்னை மாய்த்துக் கொண்டான். அவன் ஆசைப்பட்டது நிறைவேறும் சமயம் கருக்கலைந்து செவனம்மா தனிமரம் ஆனாள். 

 

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையும். ஆனால் ஒரு சில மனிதர்களால் நம் வாழ்க்கையே திசை மாறி அமைந்துவிடும். இது வாழ்வியல் நியதி. இக்கதையில் செவனம்மா என்ற கிழவி தனக்கு நடந்த அவலத்தை விட்டுவிட்டு அந்த ஊர் மக்களின் நல்வாழ்வுக்காக தன் வாழ்வையே ஒப்புவித்துவிட்டாள். செவனம்மாவால் முடிந்தது நம்மில் பலராலும் முடியாதது. 

 

11) உயிர்ச் சக்கரங்கள்.

 

 குழிந்த கண்கள், ஒல்லிக்குச்சி உடம்பு. மனிதர்களின் உறவுகளிலிருந்து தனித்து விடப்பட்டவன். சாதாரண நாள்கூலி. கிடைக்கும் வேலையைச் செய்து பிழைக்கிறவன். நகரத்தின் துண்டிக்கப்பட்ட இடத்தில் இருப்பவன்.  பலருக்கும் கேட்காமலேயே உதவியாக வேலைகள் செய்து கொடுப்பவன். அப்படிப்பட்ட முத்தன் நாளும் தேநீரை இரண்டு கட்டு வீதம் கட்டிக்கொண்டு போவான். காசிருந்தால் பன்.  இல்லையெனில் வெறும் தேநீர்தான். அது அவனுக்கும் அவனது நாய்க்கும். அந்த நாயை தனது நண்பனாகவே பார்க்கிறவன். 

 

நெஞ்செலும்புகள் வரிவரியாய் தெரியும் அந்த நாய்க்கு முத்தனைத் தவிர வேறு யாழுமில்லை. அவன் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரே உயிர் அந்த நாய்தான். தேநீரை மட்டும் குடித்துவிட்டு வீட்டோடு கிடக்கும்.

 

எதிர்வீட்டு கிருஷ்ணனுக்கு அந்த நாயை சுத்தமாகப் பிடிக்காது. காரணம் என்னவாக இருந்தாலும் அவன் செய்த காரியம்தான் தவறு. தன் வீட்டு விசேசத்திற்கு வந்த விருந்தாளியை விட்டுவிட்டு வருவதற்கு போயிருந்த வேளை, உண்ண உணவின்றி துவண்டு போயிருந்த நாய் அவனது வீட்டின் எச்சிலையின் மிச்சம் திண்ணவேண்டி, இரும்பு வாயில் கதவின் கீழ்சந்தில் நுழைய, அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த கிருஸ்ணன் பாதி உடம்பு மாட்டிக் கொண்டிருந்த நாயின்மீதே வண்டியை விட்டுவிட்டான். 

 

ஊரெங்கும் கேட்ட நாயின் கதறல் யாரையும் அசைத்து விடவில்லை. மீண்டும் தரைந்து கொண்டே தன் இடத்திற்கு போய்விட்டது. இதுவரை நிகழ்வு விவரணையாய் இருக்கிறது. இதற்கடுத்து முத்தன் செய்ததுதான் கதையின் உயிர்ப்பான இடம். 

 

நாயின்மீது வண்டியைவிட்ட கிருஷ்ணனால் அதன்பிறகு அச்செயலை அவனாலேயே ஏற்க முடியவில்லை. அந்த இரவெல்லாம் நாயின் ஞாபகமாகவே இருந்ததால் சரியாக தூங்கவில்லை. அதிகாலை எழுந்து வெளியில் பார்த்தபோது அவன் கண்ட காட்சிதான் அவனது மனதை ஆற்றுப்படுத்தியது. 

 

‘பிறப்பொக்கும் எல்லா மனிதருக்கும்’ என்று வள்ளுவர் எழுதியிருந்தால் திருக்குறள் ஒரு படைப்பாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் உயிர்களிடத்து கொள்ளும் அன்பில் உயிர்தான் முக்கிய இடம் பெறுகிறது என்ற பார்வை பல நூற்றாண்டு முன்னர் வள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்றால் அது உயிர்மையின் உன்னதம்தானே. அப்படியாயின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதானே பொதுமறைக்கானச் சிறப்பு. ஆக, அங்கு நடந்தது என்ன என்று நாம் கதையில் படித்து தெரிந்து கொள்வது எழுத்துக்குரிய மரியாதையாகும். 

 

12) கல்மாலைப் பூக்கள். 

 

கொத்துவேலை செய்வது மிகவும் கடினமானது. அதிலும் கோயில் கட்டுவதில் கொத்துவேலை சவாலானது. ஆனால் இதிலே பெண்கள் என்றால் மிகமிகக் கடினம். ஆனால் செங்காயி அந்த வேலையைத்தான் செய்கிறாள். கட்டுமரங்களில் கட்டியிருக்கும் சாரங்களில் ஏறி இறங்கி சித்தாள் வேலை செய்ய செங்காயிதான் கொத்தனார்களுக்கு கையாள். ஒண்டிக்கட்டையாகத் தன் மகளை வளர்த்துக் கொண்டு சித்தாள் வேலை செய்கிறாள்.

 

செங்காயியின் மகள் கொடிலாவும் இப்போது கோயில் கட்டும் வேலையில் சித்தாளாக இருக்கிறாள். மணிக்குட்டி என்பவனிடம் கையாளாக வேலை செய்தபோது சிலைவடிப்பதில் அவனது கைவண்ணம் கண்டு ஆச்சர்யப்பட்டவள் அவன்மீது விரும்பம் கொண்டாள். இருவருக்கும் காதல் வளரும்போதே தடுக்கப்பட்டாள் கொடிலா. மேஸ்திரியும் மணிக்குட்டியைக் கண்டித்து வைத்தார். ஆனால் காதலை விட்டுத்தர யாரால் முடியும்?

 

ஒருநாள் செங்காயிக்கு அடிப்பட்டு பின்மண்டையில் ரத்தம். வைத்தியம் செய்துகொண்டு படுத்தாள். ஆனால் மூன்றாம்நாளே வேலைக்கு வந்துவிட்டாள். அதற்குள் கொடிலாவின் காதல் அனைவருக்கும் தெரிந்திருந்தது. 

 

ஒரு பெருமழை இரவில் இருவரும் சென்றுவிட்டனர். ஒற்றை மகள் சென்ற பாதிப்பில் செங்காயி நொடிந்துபோனாள். வேலையை விட்டு நின்றுவிட்டாள். தன் ஊருக்கே திரும்ப வந்துவிட்டாள். இருப்பதை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தவளை சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வேலைக்கு அழைத்து வருகிறார் மேஸ்திரி. 

 

கோயில் கட்டுமானப் பணிக்கு லாரியில் வந்திறங்கிய குழுவில் கைப்பிள்ளையோடு இருந்த கொடிலா, தன் தாயைப் பார்த்ததும் வந்துவிட்டாள். மகளைக்கண்டு கண் கலங்கித் துடித்தாள் செங்காயி. கோயில் வேலை செய்யும்போது உச்சியிருந்து கீழே விழுந்த மணிக்குட்டி கால் முடமானான் என்ற செய்திக்கேட்டு, பிள்ளைப்பெற்றபோது அனுபவித்ததுபோல வலி வந்து அழுதாள் செங்காயி. குழந்தையின் பெயரைக் கேட்கிறாள் செங்காயி. செங்கமலர் என்று சொல்லக்கேட்டு மீண்டும் வெடித்தழுதாள் செங்காயி. இவ்வாறு கதை முடிகிறது. 

 

நீரோடும் ஆற்றில் வரும் பெரும்பள்ளம்போல, வாழ்வின் ஓட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் விழுந்து விடுகிறோம். வாழ்வில் உயர்வு தாழ்வு இயல்பானது என்றாலும் வாழ்நாள் முழுக்க கூட வரும் ஒரு பாதிப்பை, ஒரு வீழ்ச்சியை எவராலும் தாங்கிவிட முடிவதில்லை. திரும்பிச் சட்டென எழுந்துவிட முடிவதில்லை. அதுதான் மணிக்குட்டிக்கும் கொடிலாவுக்கும் செங்காயிக்கும் நடந்தது. இது வாழ்வியல் தடை. 

 

மனிதருக்குள் கடைசியாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஒருதுளி நம்பிக்கை வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ள ஏதுவாக அமையும். பள்ளத்தில் வீழ்ந்த ஆற்றுநீர் சமநிலத்தில் பயணப்படுவதைப்போல அந்த நம்பிக்கைக்கும் ஒருபாதை அமையும். அப்படிதான் தன் தாயைத் தேடி வந்திருப்பாள் கொடிலா என்று தோன்றுகிறது. முடமான கணவன், கையில் குழந்தை. சித்தாள் வேலை செய்து வீட்டைக் காக்க முடியாது என்ற நிலை வந்திருக்கலாம். அந்த நேரத்தில் தன் தாயைப் பார்த்த கொடிலாவுக்கு நம்பிக்கைப் பிறந்திருக்கலாம் இல்லையா..!  அவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து வாழ்வதாக கதையில் அமையவில்லை என்றாலும் அதைநோக்கி செல்கிறார்கள் என்று வாசகர்கள் எண்ணிக்கொள்ள ஓரிடம் விட்டுள்ளார் ஆசிரியர்.

 

இவ்வாறாக 12 கதைகளும் நமக்கு 12 வாழ்க்கைகளை வாழ்வதுபோன்று உணரவைக்கும் கதைகள் உள்ளன. இது எனது பார்வை. நீங்களும் இந்நூலை வாசிக்கும்போது பார்வை மாறும். வாசித்துப் பாருங்கள். 

முதல் சிறுகதைத் தொகுப்பினை வழங்கிய ஆசிரியருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். 

 

   — கார்த்தி டாவின்சி

       (ஏப்ரல், 2023)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *