“காவியமா நெஞ்சில் ஓவியமா”
ஆம் இந்நூல் ஆகச்சிறந்த காவியம். நம்மை போராடத் தூண்டும் காவியம். நம்மை ஆதிக்கம் செய்பவர்களை காட்டிக்கொடுக்கும் காவியம்.
நூலின் ஆசிரியர் கவிஞரா இல்லை எழுத்தாளரா இல்ல வழக்கறிஞரா இம்மூன்றில் யார் என ஆராய்ந்தால் இம்மூன்றுக்குமே சொந்தக்காரர். அதையும் தாண்டி சமத்துவ சமூக சிந்தனைப் போராளி என்கிற பட்டமும் வழங்கலாம்.
கவிதை நூலென்று தனியாக வாசித்திருந்போம். ஆனால் கட்டுரை தொடங்கும்போதும், ஆங்காங்கேயும் கவிதையை இழையாக பின்னியிருப்பார். அது ஆடையாக நெஞ்சில் படரும்.
சமகாலச் சமூக, அரசியல், பண்பாட்டு அதிர்வுகள் அனைத்தும் கொண்ட பல ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியீடாக ‘பூஜ்ஜிய நேரம்’ நூல் மிகச்சிறப்பான தரவுகளைக் கொண்டு வந்துள்ளது. தலைப்பே தனி அழகு.
ஆகச்சிறந்த இலக்கிய ஆளுமைகள் தோழர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் அருணன் ஆகியோரின் பாராட்டுரை நூலுக்கு கூடுதல் சிறப்பு.
கட்டுரைகள் பதினான்கும் நம்மைச்சுற்றி நடக்கும், நடந்த, நம்மீது தொடுக்கப்பட்டுள்ள கல்வி, பொருளாதார, சுற்றுச்சூழல் மீதான மோசடித்தனங்களே ஆசிரியர் அம்பலப்படுத்தியிருக்கிறார். அவர் வழக்கறிஞர் என்பதால் ஆதாரங்களை ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் கொண்டு நிறுத்தியுள்ளார்.
வாசனை மூக்கில் வந்தால் நாக்கில் எச்சில் ஊறுவது போல் கோடைக்காலம் வந்தாலே கொடைக்கானல் நமக்கு முன் வந்து நிற்கும். அப்படிப்பட்ட சீர்மிகு கொடைக்கானல் எப்படி பாதரசத்தால் பாழ்பட்டு குடிநீரெல்லாம் பாதரசம் கலந்த பாதரச நீராகவே மாறிய அவலங்களை கண்முன் கொண்டு வந்திருப்பார். பதற்றம் இயல்பாகவே வந்தது. மலையில் புதைக்கப்பட்ட பாதரசக் கழிவுகளால் மழை நீர் மாசுப்பட்டு சமதளத்திற்கு ஓடிவந்த நீர் பல ஆறுகளில் கலந்து இன்னும் தீராத சோகமாக இருப்பதை போபால் விஷ வாயுவால் நேரடியாக மக்கள் மாண்டனர். அதைவிட பலமடங்கு அபாயம் கொடைக்கானல் மலையில் இன்னும் இருக்கிறது என்றால் நமக்கு எப்படி இருக்கும். பாதுகாப்பு குறைபாடான நிறுவனங்களை தம் நாட்டில் அனுமதிக்காத நாடுகள் ஏமாந்த நாடுகளில் தாராளமாக இறக்குமதி செய்கின்றனர் சீர்கேடுகளை. அப்படித்தான் அமெரிக்க இந்துஸ்தான் லீவர் லிமிடெட் கம்பெனி என்னும் பாண்ட்ஸ் நிறுவனம் கொடைக்கானலை காவு வாங்கியிருக்கிறது. பாதரச தெர்மா மீட்டர் செய்யும் கம்பெனியில் உடைந்த பாதரச கண்ணாடி கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சிறுவன் தன் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் ரத்த வாந்தி எடுத்து இறந்து போனான். இதுபோல் நிறைய துயரங்கள். ஆனால் எதுவுமே தெரியாமல் நாம் அடுத்த கோடைக்கு கொடைக்கானல் இளவரசியை பார்க்க ஆவலாக கிளம்பி விடுவோம் ‘தென்மதுரை வைகை நதி’ என்ற இனிமையான பாடலை காதில் கேட்டுக்கொண்டே. ஆனால் இனிமேல் ‘பாதரச வைகை நதி’ என்று மாற்றிப் பாட வேண்டும். ஆம் வைகை அப்படி கருகி கிடக்கிறது மலைகளின் இளவரசி கருகியதால். இன்னும் மக்களின் தொழிலாளர்களின் சட்டப் போராட்டம் ஓயவில்லை. இந்தப் படுபாதக பாதரச கம்பெனியின் தலைவர் தான் 2015 பிப்ரவரி 3 அன்று பிரதமர் மோடியை சந்தித்து தூய்மை இந்தியா திட்டத்துக்கு 700 கோடி முதலீடு செய்வதாக வாக்குறுதி அளித்தார். பாழ்படுத்தப்பட்ட கொடைக்கானலை சீர்செய்ய மனம் வராதவர் தான் தூய்மை இந்தியாவுக்கு போயிட்டாரு எவ்வளவு நகைமுரண்.
ஒரு கட்டுரைக்கே இவ்வளவு தூரம் வந்துள்ளோம். இன்னும் 13 கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.
ஆண்ட சாதி, அண்டா சாதி என்று வரலாறு தெரியாமல் சிலர் சாதிப்பெருமையில் புல்லரித்துப் போயிருப்பர். ஆனால் பெரும்பாலான குழுக்களை பிரிட்டிஷார் குற்றப்பரம்பரையாக்கி கேள்வியில்லாமல் கைது செய்து அவ்வளவு கொடுமைகளை செய்திருப்பார்கள். அவர்கள் யார்யார் என்று இந்நூலில் ‘திருநங்கைகள் மீது படிந்திருக்கும் குற்றப்பரம்பரைப் பொதுப்புத்தி’ என்னும் தலைப்பில் காணலாம். இக்கட்டுரையை படித்தபின்பாவது சாதி மோகத்திலிருந்து வெளியே வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
நீட் தேர்வால் உயிரிழந்த சகோதரி அனிதா இந்நூலில் ஆசிரியருடன் உரையாடல் நிகழ்த்துவார் தான் இறந்த பின்பும் இல்லையில்லை கொலை செய்யப்பட்ட பின்பும் கைதேர்ந்த எழுத்தாளரின் பேனா முள் வழியாக.
குண்டர்கள் விடுதலை. ஒல்லியர்கள் பதற்றம்.
குண்டர் சட்டம் குறித்த கட்டுரை ‘நான் வளர்கிறேனே மம்மி’. குண்டர் சட்டம் மெல்ல வளர்ந்த விதம் குறித்து எழுதியிருப்பார்.
‘இருட்டறையில் நிகழும் நீதிபதிகளின் நியமனம்’
“இத்தனை நீதிபதிகள் இருந்தும் ஏனில்லை ஜட்ஜ்,
ஒரு பெண் தலைமை நீதிபதி”
ஆம் இப்போது வரை உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் தலைமை நீதிபதி இல்லையே என்பதை நாம் யோசிக்கவே இல்லையே.
நீதிபதிகளின் நியமனம் குறித்த பார்வை மிகவும் சிறப்பு. இன்று பல வழக்குகள் எப்படி நடைபெறுகிறது என்று கண்கூடாக பார்த்து வருகிறோம். குறிப்பாக சாதகம் பார்க்க சொன்னது முதல் பலப்பல அதிசய நிகழ்வுகளை தினம் தினம் கண்டு வருகிறோம். அந்த முரண்பாடுகள் உருவாகக் காரணமாக நடைமுறைகளை மாற்றி நீதிபதிகள் நியமன முறைக்கு நல்ல அருமையான ஆலோசனைகளை வழங்கியிருப்பார். ஏனெனில் எழுத்தாளர் வழக்கறிஞராச்சே.
இன்னும் இதுபோல் துடிப்பான கட்டுரைகள் உள்ளே இருக்கிறது. தோழர்களை அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.
மிகச்சிறப்பான நூலை வழங்கிய தோழருக்கு மனமார்ந்த நன்றி!வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
இரா.சண்முகசாமி – புதுச்சேரி.
ஆசிரியர் : மு.ஆனந்தன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : 2022 இரண்டாம் பதிப்பு
விலை : ரூ. 150