ச.தமிழ்ச்செல்வன் எழுதிய சாமிகளின் பிறப்பும் இறப்பும் என்னும் அபுனைவு பிரதி அறுபத்து நான்கு பக்கங்களுடன் 2011ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர், திறனாய்வாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கங்கத்தின் மதிப்புறு தலைவர் என பன்முக ஆற்றலோடு இயங்கி வருகிறார். வெயிலோடு போய், வாளின் தனிமை, மிதமான காற்றும் இசைவான கடலலையும், இருளும் ஒளியும் – அறிவொளி இயக்க அனுபவங்கள், ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள், ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது, இருட்டு எனக்குப் பிடிக்கும், நான் பேச விரும்புகிறேன் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். நாளிதழ், சிற்றிதழ், சிறுபத்திரிக்கைகளிலும் தனது பங்களிப்பையும் தொடர்ந்து அளித்து வருகிறார். சிறார்களுக்கான படைப்புகளை வழங்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
சாமிகளின் பிறப்பும் இறப்பும் பிரதியானது, ‘துளிர் அறிவியல்’ மாத இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. கடவுள் நம்பிக்கை குறித்துக் கேள்விகளை எழுப்புகின்ற கட்டுரைகளாக உள்ளன. இக்கட்டுரைகளில் ச.தமிழ்ச்செல்வன் குழுவாகக் கிராமம் கிராமமாகச் சென்று சேகரித்து வந்த பல நாட்டார் தெய்வங்களின் கதைகளைத் தரவுகளாகப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகளுக்காகப் பேராசிரியர் நாவானமாமலை, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பேரா.தொ.பரமசிவன், முனைவர் தருமராஜ் மற்றும் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தார் ஆகியோரைத் தொடர்ந்து வாசித்திருப்பது கவனிக்கத்தக்கது.
சாமிகளின் பிறப்பும் இறப்பும், எத்தனை எத்தனை சாமியடா…!, மனிதரிடம் அடிவாங்கும் சாமிகள்…, நெருப்புக் கேட்டுப் பரிதவித்த சாமிகள், ஒரு வார்த்தையால் உயிரை மாய்த்த சாமி, குடும்ப சாமி, குலசாமி, கும்பிடாத சாமி, பிடிமண் சாமிகள், ‘டவுசர் சர்ச்’சும் குடைக்காத்த சாமியும், ஐஸ் காளியம்மன், என்றும் எங்கும் ஏழைச்சாமிகள், பெண்ணைக் காத்த பக்கீர், இந்து மக்கள் இஸ்லாமியப் பெயர், நல்லதும் கெட்டதும் தரும் சாமி, மக்கள் சாமிகளும் மதச் சாமிகளும், ஏழைச் சாமிகள்-பணக்காரச் சாமிகள், கடவுள் உண்டா? இல்லையா? பதினாறு உட்தலைப்புகளில் பேசுகிறது.
சாமிகள் பிறந்த மற்றும் இறந்த கதையை நாட்டார் வழக்கியல் கதைகள் மூலம் வி(வ)ரித்துச் செல்கிறார் ச.தமிழ்ச்செல்வன். நாட்டார் கதை வழக்கில் மக்கள் கூடுதலாகப் பல சம்பவங்களை இணைத்து கதைகளாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இணைத்திருக்கலாம் என்று கருதுகிறார். தெய்வங்களைச் சிறுதெய்வங்கள், பெருதெய்வங்கள் என்று பிரிக்கின்றனர். சாதி, மதம் கடந்து காதல் செய்தவர்களை வாழவிடாமல் செய்துள்ளது நமது தமிழ்ச்சமூகம். இதில், உயிரிழந்தவர்களைச் (தற்கொலை, படுகொலை) சாதி பார்க்காமல் சாதாரண மக்களையே சாமியாக்கி வழிபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தெய்வங்களைச் சிறுதெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
உயிரிழந்த உடலைத் தீ மூட்டுவதற்கு ஊர் மக்கள் நெருப்புத் தர மறுத்ததால் பல தெய்வங்கள் உருவாகியுள்ளன. பிணத்தை எரிக்கக்கூட நெருப்பு கிடைக்காமல் பரிதவித்தவர்களே இங்குச் சாமிகளாக உள்ளனர். உடன் வாழ்ந்த மனிதர்கள் சாதாரணமாக சாகாமல் பரிதவித்துச் செத்தால் அவர்களைத் தெய்வமாக மக்கள் வழிபட்டுள்ளனர். முத்தாலம்மன் சாமி பிறந்த கதையைக் கூறுகையில், அது அடி வாங்கும் சாமி என்றும் ஒரு நாள் சாமி என்றும் கூறுகிறார்.
முத்தாலம்மன், சாதி காரணமாக மக்கள் கையால் ஆண்டுதோறும் அடிபட்டு வருகிறது. சாமி பெரிசா? சாதி பெருசா? என்னும் கேள்வியை எழுப்புகிறார். மேலும், காதல் பிரிவதில்லை சாதிதான் பெரிது என்று நம் சமூகம் இன்று முத்தாலம்மனை அடித்துக் கொண்டிருக்கின்றனர் என்று பதிவு செய்கிறார் ச.தமிழ்செல்வன். தமிழ்ச்சமூகம் சாதி மறுப்பு (மாற்று, கலப்பு) காதல் திருமணத்தால் சுயசாதிக்குப் பேராபத்தும் அது உடையும் என்றும் மிகச்சரியாக உள்வாங்கியிருப்பதைக் காணமுடிகிறது.
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழ்ச் சமூகத்தில் மிகவும் பிரபலமடைந்த ஒன்று. இது உருவான பின்னணி அரசியலைத் தோலுரித்துக் காட்டுகிறார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற கருத்து இன்னும் அரசாங்கத்தால் முடியவில்லை என்று பதிவு செய்கிறார். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்யவேண்டிய பள்ளிக் கூடம் மற்றும் பாடப்புத்தகங்கள் பேசாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். குலசாமியைப் பின்பற்றித் தொழுவதன் பின்னணியில் சாதிப் பற்று குடிகொண்டிருப்பதை அப்பட்டமாக்குகிறார். ’இளைஞர்களிடத்துச் சாதி கிடையாதல்லவா?’ என்று ஓர் இடத்தில் ச.தமிழ்செல்வன் பதிவு செய்கிறார். இப்பதிவு விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது. கிறித்துவ மதத்திலுள்ள சாதிய உள்முரண்களைத் தெளிவுபடுத்துகிறார்.
மக்கள் சாமிகளும் – மதச் சாமிகளும், ஏழைச்சாமிகள் – பணக்காரச் சாமிகள், குடும்பசாமி, குல சாமி, கும்பிடாத சாமி என்றெல்லாம் சாமிகளை வகைப்படுத்துகிறார். இவற்றில், கும்பிடாத சாமி என்பது பற்றிக் கூறுகையில், ’மின்னல் வெட்டி’ இறந்தவர்க்கு அந்த இடத்திலேயே ’கல்நட்டு’ சாமியாக்கி விடுவார்கள் என்கிறார். ஆனால், இந்தச் சாமியை யாரும் கும்பிட மாட்டார்கள் கேட்டால், அது கும்பிடாத சாமி அல்லவா! என்பார்களாம். கொலை, தற்கொலையால் இறந்தவர்களை கும்பிட்ட மக்கள் இடி, மின்னல் விழுந்து செத்தவர்களை ஏன் கும்பிடவில்லை? என்று கேள்வியை முன் வைக்கிறார். மேலும், இதனை மண்டை அரிக்கும் கேள்விதானே! ஆய்வுக்குரிய கேள்வி என்றும் கூறுகிறார் ச.தமிழ்செல்வன்.
கொலை, சாவு இல்லாமல் கூட சாமிகள் உருவாகி உள்ளது பதிவு செய்துள்ளார். ஐஸ்காரர் ஒருவர் சொன்னதை நம்பி சாமி உருவாகியுள்ளது. சாமிகள் பற்றிய எந்தக் கதையானாலும் ஆய்வு செய்து புரிந்து கொள்வதுதான் நமக்குத் தேவையான அறிவியல் பார்வையாக இருக்க முடியும் என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ச.தமிழ்செல்வன்.
கிறித்தவ மதத்தில் சாதி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் விதிவிலக்காக சாதியத்தைப் புகுத்தியுள்ளனர். இதற்குப் பெரும் போராட்டமே நடந்துள்ள கதையை நேர்த்தியாக விளக்கிச் செல்கிறார். இஸ்லாமிய மதத்திலும் ஏழைச்சாமி உருவான நாட்டார் கதையும் கூறுகிறார். சாமிகளின் பெயரை பிள்ளைகளுக்கு வைக்கும் பழக்கம் உள்ளது அது ஒரு அன்பின் வெளிப்பாடாக அடையாளமாக உள்ளது என்கிறார். தமிழகத்தில் பல பகுதிகளில் நாகூர் கனி தேவர் நாகர்கோனி நாடார் என்று இந்துக்கள் கூட இப்படி பெயர் வைக்கிறார்கள். ஆனால், இது என் மதம் உன் மதம் என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பவர்களை மதவாதிகள் என்று சொல்கிறோம் என்பதைப் பதிவு செய்கிறார்.
மதவாதிகள் தான் இப்படி எந்த சாமி பெயரையும் எந்த மதத்துக்காரரும் வைக்கும் நல்ல பழக்கத்தை தடுக்கிறார்கள் வரும் வாழ்க்கையாவது நாம் இதை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார் ச.தமிழ்செல்வன். கிறிஸ்தவ மதமும் வைஷ்ணவ மதமும் எப்படிப் பணக்கார சாமிகளாக மாறின என்பதைக் கூறுகிறார். நல்லதும் கெட்டதும் கருப்புசாமி என்னும் தலைப்பில் யாகங்கள் எப்படி உருவாகி வளர்க்கப்பட்டன என்பதையும் பிராமணர்கள் இதை பயன்படுத்திய விதத்தையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறார்.
அறிவியல் பூர்வமாக வரலாற்றுப் பூர்வமாகச் சாமிகளைக் கற்றுக்கொள்ளும் நாம் நாட்டுப்புற தெய்வங்களைச் சிறுதெய்வங்கள் என்று சொல்லக்கூடாது என்கிறார் ச.தமிழ்ச்செல்வன். அவற்றை மக்கள் படைத்த தெய்வங்கள் அல்லது மக்கள் தெய்வங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் மற்ற சாமிகளை மன்னர் படைத்த சாமி அல்லது மதசாமி என்று சொல்லலாம் என்கிறார்.
சாமிகளின் பிறப்பும் இறப்பும் பிரதி மொழிநடை எளிமையாகப் புரியும் வகையில்யிலுள்ளது. மேலும், ‘கலோகியல்’ பேச்சு வழக்கில் ஆங்காங்கே பேசிச்செல்வது இரசிக்க வைக்கிறது. கடவுள் இல்லை என்பதான கோட்பாட்டில் நின்று பேசும் தமிழ்ச்செல்வன். மேலும், மக்கள் தெய்வம் பெருந்தெய்வமா? இல்லை சிறுதெய்வமா? என்பதான கருத்தியலில் சிறுதெய்வங்களே என்று தன் பார்வையை முன்வைக்கிறார். ’மனித உருவில் கருணையின் வடிவமே கடவுள்’ என்று காரல்மார்க்ஸ் கூறிய கருத்தியலை மேற்கோள்காட்டிக் கடவுள் என்னும் சொல்லாடலை அர்த்தப்படுத்த முயற்சி செய்கிறார். ’கடவுள் இல்லை’ என்பதை நிரூபிக்க பல தரவுகளுடன் புதிய மற்றும் மாற்று உரையாடல் கையில் எடுத்துக்கொண்டு புரிதலை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது ஒன்றாகும்.
நூலின் இறுதி வரியில் ச.தமிழ்ச்செல்வனுக்குச் சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைக் கூறுகிறார். அவர் தான் பகுத்தறிவோடு வாழத் தொடங்கியுள்ளதாகப் பதிகிறார். நீங்க எப்படி? என்று முன்வைக்கும் படைப்பாளியின் கேள்விக்கு, வாசகர்களின் பதில் கடவுள் இல்லை என்றும் பகுத்தறிவோடு வாழப் போகிறேன் என்றும் கூறுவர் என்பதே நிதர்சனம். மேலும், ’மதம் ஒரு சட்டை போலத் தானே?’ என்பதான சிந்தனைப் பதிவு வாசகர்களின் மனத்தைக் கிளரும். சாமிகளின் பிறப்பும் இறப்பும் பிரதி வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. ஒன்பதாவது பதிப்பைக் கடந்துள்ள நிலையிலும் இப்பிரதியானது எக்காலத்திலும் பேசப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தில்லை.