nool arimugam: saathiyai pesathaan vendum - r.esudoss நூல் அறிமுகம்:சாதியைப் பேசத்தான் வேண்டும்- இரா.இயேசுதாஸ்
nool arimugam: saathiyai pesathaan vendum - r.esudoss நூல் அறிமுகம்:சாதியைப் பேசத்தான் வேண்டும்- இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்:சாதியைப் பேசத்தான் வேண்டும்- இரா.இயேசுதாஸ்

ஆசிரியர்:சூரஜ் யங்டே(GQ பத்திரிக்கையால் “செல்வாக்கு மிக்க 25 இளம் இந்தியர்களில் ஒருவர்”என்றும்,Zee குழுமத்தால் “தலீத் இளைஞருள் மிகவும் செல்வாக்கு படைத்தவராக வும்”தேர்வானவர்.இந்த தசாப்தத்தின் சிறந்த புனைவு நூல் அல்லாத புத்தகங்கள் பட்டியலில் “Caste Matters” என்ற இந்த நூலின் மூலநூல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா,ஐரோப்பா,வட அமெரிக்கா என 4கண்டங்களில் படித்தவர்.
ஜோகன்னஸ்பர்க்கிலுள்ள ஓர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற
முதல் தலித் இந்தியர்.இவர் சர்வ தேச மனித உரிமை வழக்கறிஞரும் கூட….
“டாக்டர் அம்பேத்கர் சமூகநீதி விருது”&”ரோஹித்வெமூலா நினைவு அறிஞர் விருதும் பெற்றவர். சாகித்திய அகாதமி விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார்.

384 பக்கங்கள். விலை ரூ450/-. எதிர் வெளியீடு (பதிப்பகம்)

தமிழில்:அனிதா பொன்னீலன்/ ஜனவரி 2022 ..in English 2019.

நூல் முன்னுரை: ஆனந்த் டெல்டும்டே/பிரதாப் பானு மேத்தா(துணைவேந்தர்,அசோகா பல்கலைக்கழகம்/பார்த்தா சாட்டர்ஜி(கொலம்பியா பல்கலைக்கழகம்)

எச்சரிக்கை:(Disclaimer)
இந்த விமர்சனத்தில் உள்ள வாசகங்களை மட்டும் கணக்கில் கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்.எந்தப் பின்னணியில் அது சொல்லப்பட்டுள்ளது என முழுமையான புரிதலைப்பெற நூலை முழுதும் நேரடியாக படிக்கவும்.

ஆறு அத்தியாயங்களாக நூல் உள்ளது. முக்கிய சாராம்சம் மட்டும் பார்ப்போம்.

*பிராமணியத்திற்கு எதிராக பிராமணர்கள் கை கோர்க்கும் வரை சாதியைப் பற்றி பேசத்தான் வேண்டும்…

*அரசியல்,அதிகாரம்,நீதித்துறை..என எல்லா இடங்களிலும் கண்ணுக்குத்தெரியாத கண்ணாடி சுவராக சாதி இழையோடுகிறது.

*உயரடுக்குத் தலீத்துகள் மத்தியிலும் நவீன தீண்டாமை நிலவுகிறது.

*தேர்தல் கால அரசியல் கூட்டணிகளில் தலீத் அரசியல் கட்சிகளை சேர்த்துக் கொள்வதற்கும்,அவர்களுடன் கொள்கை ரீதியாக இணைந்து களப்பணி ஆற்றுவதற்கும் வேறுபாடுகள் உண்டு.

*சாதியா…இன்னுமா இருக்கு…நகரத்தில எல்லாம் காணாமப் போயிட்டு…என்று சொன்னாலும் நகர்ப்பெயர்…தெருப்பெயரை வைத்து ..எந்த ஜாதியினர் எனக் கண்டுபிடித்துவிடலாம்(அம்பேத்கர் நகர்,ஜெய்பீம் நகர்)

*சாதி வாதம் 138 கோடி மக்களை தீண்டி இருக்கிறது.
100 கோடி மக்களை பாதித்திருக்கிறது.
80கோடி மக்களை மிக மோசமாக பாதித்திருக்கிறது.
30 கோடி மனிதர்களின் கௌரவத்தை அடிமைப்படுத்தி இருக்கிறது.

*BPL கணக்கீடு சாதி வாரியாக எடுக்கப்படவில்லை எனினும் அதைக் கணக்கிட ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அளவுகோல் உள்ளது(நிலவுடைமை, வேலைவாய்ப்பு,கல்வி, குழந்தைகள் நிலைமை, சுகாதாரம்,கூரை, குடிநீர், போக்குவரத்து வசதி,TV,Fridge, என பல)1990 ல் 40%- 2000ல் 39%- 2012ல்17%

* தீண்டாமை சாதியமைப்பின் புனிதத்தை காப்பதாக தீண்டத்தக்கவர்கள் கருதுகிறார்கள்!?

*ஆதிச்க சாதியினர் மேலும் ஆதிக்கம் செலுத்த சாதியமைப்பு அனுமதி தருவதுடன் மனித ஆற்றலை கட்டுப்படுத்துகிறது.

*மேல்நிலைத் தகுதியும், திறமையும் கொண்டிருப்பினும் அதை வெளிப்படுத்த தலீத் அஞ்சும் நிலையுள்ளது.

*சாதி சிறப்பதிகாரத்தை அனுபவித்தவர்கள் அது தகர்க்கப்படுவதை விரும்புவதில்லை.

*நலத்திட்டங்களுக்கு எதிரான அணிவகுப்பு நடந்துகொண்டேயிருக்கிறது.

*கல்வி…வேலைவாய்ப்பில் சக சாதியினருக்கு வாய்ப்பை பரிந்துரைகள் செய்து வாங்கித் தருவதின் மூலம் சாதித்திரட்டல்…அதிகாரம் ஸ்த்ரப்படுகிறது.(வணிகம்,தொழிலும்)

*டெல்லியில் 2012ல் நிர்பயா(ஜோதிசிங் பாண்டே)விற்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை உலகின் கவனத்திற்கு வந்தது போல் 2006 ல் கயர்லாஞ்சியில் 40 வயது தாய் சுரேகா போட்மாங்கே,17 வயது 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மகள் பிரியங்கா நிர்வாணமாக வீதிவலம் விடப்பட்டு .. கூட்டுப் பாலியல் வன்மத்துக்கு ஆளாகி பின் பட்டப்பகலில் கொல்லப்பட்டது கவனம் பெறவில்லை..மகன்கள் ரோஷன்(21)சதீஷ்(14)பின் கொல்லப்பட்டனர்.இதை TOI பத்திரிகை வெளியிட்டது.ஆனால் இந்திய சமூகம் கள்ள மௌனம் காத்தது.

*இந்தியாவில் அன்றாடம் 3 தலீத் பெண் கற்பழிக்கப்படுகிறாள்.
ஒவ்வொரு மணிநேரத்தில் 2 தலீத் பெண் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 2 தலீத் வீடுகள் கொளுத்தப்படுகின்றன.

*2014-18 ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற கள ஆய்வின்படி 20 மாவட்டங்களில் 640 கிராமங்களில் தீண்டாமை பல வடிவங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இது ஆதிகாலத்து விஷயமல்ல…அன்றாட நடைமுறை!; 30% இந்தியர் தீண்டாமையை சக மனிதரிடம் காட்ட எந்த கூச்சமும் படுவதில்லை. காவல்துறையும் தீண்டத்தக்கவர் பக்கமே..

*இந்தியா ஓர் சாதிய சர்வாதிகார நாடு. தலீத்துகள் தங்கள் மீதான தாக்குதலை வெளியில் வெட்கப்பட்டு சொல்வதில்லை.

*விமர்சனரீதியாக ஆதிக்கசாதியினருடன் பேசி புரியவைத்துத்தான் அவர்களை வழிக்கு கொண்டு வரமுடியும்.பிறரை வெறுப்பதே வாழ்வின் எரிபொருளாக உள்ளது. சாதி என்பது ஒரு கலாச்சாரப் பிரிவு(Cultural wing)ஒரே குழுவாக..வலுவாக சாதியுணர்வு செயல்படுகிறது.

*இந்தியா புராணங்களால் கட்டமைக்கப்பட்டது.அரசியலமைப்பு ஒன்றே மக்களை இணைத்துள்ளது.மனித நேயத்திற்கு எதிரானது சாதி உணர்வு.

*பனியாக்கள் வசூலிக்கும் அதிக வட்டி.. கெடுபிடிகள் காரணமாகவே விவசாயிகள் தற்கொலை நிகழ்கிறது.

*பாபர் மசூதி இடிப்பு மூலம் மண்டல் கமிஷன் அறிக்கை பின்னுக்கு தள்ளப்பட்டது.
முக்கிய அதிகார மையமாக சாதி இருந்துகொண்டு ..சாதி ஆதிக்க வர்க்கத்தை
ஒருங்கிணைக்கிறது.

*சாதியை அறிந்திருக்கிறோம்;புரிந்திருக்கிறோமா?
தலீத்தாக வாழ்வது மிரட்டலும்,பயமும் இல்லாமல் சுதந்திரமாக சிறகடித்து வாழ கதியற்ற குழு. ஒரே மதத்திற்குள் 70000ற்கும் மேற்பட்ட சாதிகள்..ஒன்றுடன் ஒன்று கலந்துவிடாமல் …ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தீண்டாமை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்திய சாதி பழக்கங்கள் ஒன்றுபடாத தோழமையின் அடையாளம்.

*தலீத் தன்னை ஒரு பௌத்தராக… கிறிஸ்தவராக…சீக்கியராக..காட்டிக்கொள்ளவே விரும்புவார்.தலீத்தாக காட்ட விரும்புவதில்லை.அரசியலில்…முதலாளித்துவத்தில்…
ஈடுபட்டாலும் அங்கேயும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர்.

* தலீத் ஆன்மிகம் குலதெய்வ வழிபாடாகும்.இங்கே தலீத்தே பூசாரி. இதை கைப்பற்றிட முயற்சிகள் உள்ளது.(ஆன்மிக பாசிசம் என்கிறார் காஞ்ச அய்யலய்யா..) ரோஹித் லெமூலா ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவன் உயர் சாதி மனப்பான்மை கொண்ட பகிஷ்காரத்தால் தற்கொலை செய்து கொண்டார்.இது உயரடுக்கு தலீத் மனப்பான்மையின் தோல்வி. .இப்பல்கலைக் கழக துணைவேந்தர் அப்பாராவிற்கு பிரதமர் மோடி விருது வழங்கியதும் தொடர்ந்து நடந்தது.

*இந்தியாவில் 30 கோடி தலீத்துகளை பாதிக்கும் தீண்டாமை பிரச்னை பற்றி பேச
ஐ.நா.சபையில் அனுமதி இல்லை.ஏனெனில் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையாம்.தலீத் பற்றிய விமர்சனம் இந்தியாவிற்கு எதிரான விமர்சனமாம்.

*சாதியின் இருப்பிற்கு பிராமணீயமே முக்கிய காரணம்..SC. ST..என்ற இரு சாதிப்பிரிவும் ஒழிந்துவிட்டால் எல்லா ஜாதியும் ஒழிந்து விடும்.இந்தியத்துவம் மூலமே தலீத்துவம் தேசியமயமாக்கப்பட்டது.குடியரசுத்தலைவராக தலீத்தை நியமிக்கலாம்..ஆனால் பிரதமராகவிடமாட்டார்கள்.தலீத் மீது அதிகாரம் செலுத்த உலகின் எந்த மூலையிலும் மேலாதிக்ககாரர்களுக்கு சிறப்பதிகாரம் உள்ளது.பிராமணத்திட்டமே இந்து திட்டம்.

*தலீத் அன்பு,தலீத் நகைச்சுவை,தலீத் அழகு, என சிறப்பான தனி குணாம்சங்கள் உள்ளன. கேலி செய்து சத்தமாக சிரித்து தன் மீதான தாக்குதலுக்கு வடிகால் தேடுவது தலீத் நகைச்சுவை.

*பழமைவாத சித்பாவன்பிராமணர் பாலகங்காதர திலகர் வினாயகர் சதுர்த்தியை
பிரபலப்படுத்தினார்(பிராமணர் வீட்டில் சிறிய வினாயகர் ஒரே நாளில் வீட்டில் கரைக்கப்பட்டுவிடுவார்;ஆனால் பிரச்சாரபெரிய அளவு வினாயகர் பத்துநாளுக்குப்பின் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெரு நீரில் கரைக்கப் படுவார்)ISRO Satellite
ஆனாலும் 3%ஜாதியாரின் சடங்கு இல்லாமல் விண்ணுக்கு பறக்காது.பிறப்புக்கு
முன்பிலிருந்து தொடங்கி…இறப்புக்கு பின்பும் சடங்குகள் தொடர்கிறது.

* நீதிபதி கர்ணன் மீது கடும் நடவடிக்கை எடுத்த நீதிமன்றம் மேலாதிக்க சாதி நீதிபதிகள் மீது இதைவிட மோசமான குற்றம் இழைத்தோருக்கு தண்டனை கொடுத்திருக்கிறதா?

*தலீத்துகளின் ஆத்திரத்தை அடக்க அரசியலமைப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி அம்பேத்கர் “நான் ஒரு வாடகை குதிரை..என்ன செய்யச்சொல்லி என்னைப்பணித்தார்களோ அதை நான் செய்தேன் “என்றார்.அரசியலமைப்பு என்ற கோயிலை கட்டினேன்..அதில் தெய்வங்கள் குடியேறாமல் …சாத்தான்கள் குடியேறிவிட்டன என விமர்சித்தார்.அதனால் அவரே அரசியலமைப்புச் சட்டத்தை பகிரங்கமாக எரித்ததுடன் மனு சாஸ்த்திரத்தையும் எரித்தார்.

*அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை மதிப்பவர்கள் அவருடைய பிற படைப்புகளை
மதிப்பதில்லை.அவரை பொருளாதார மேதை எனப் போற்றுவர்..எதில்…என கூற
மாட்டார்கள்..அவரை கம்யூனிச விரோதி என்பார்கள்..ஆனால் அரசின் கையில்தான் காப்பீடு., சுரங்கம்..கல்வி… சுகாதாரம்.. இருக்கவேண்டும் என்று கூறியதை மறைத்து
விடுவார்கள்..கூட்டுறவு விவசாயம் நிலச்சீர்திருத்தம் வழி வன்முறையற்ற புத்த
கம்யூனிசம் வரவேண்டும் என்றதையும் அவர் தொழிலாளர் நல அமைச்சராக
இருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றிதையும் மறைப்பார்கள்.

*செயற்கையான சாதி வலைக்குள் சிக்கிக்கொண்ட மேலாதிக்க சாதியினரின் ஏழைகள் தங்கள் விடுதலைக்கு அவர்கள் தலீத்துகளுடன் போராட்டக்களத்தில் கரம்
கோர்ப்பதைத்தவிர வேறு வழியில்லை.

*மதச்சார்பற்ற பிராமணணுக்கும்,மதச்சார்புள்ள பிராமணணுக்கும் மயிரிழை வேறுபாடே உள்ளது.

*அம்பேத்கரின் அரசியல் கட்சியான குடியரசு கட்சி 60 பிரிவாக உள்ளது.படித்த
அம்பேத்கரிஸ்ட்டுகள் அவர் சர்வதேச வாதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல்கொடுத்ததை கவனிக்காமல்,அவர் தேசியவாதியாக ஆங்கிலேயருக்கு ஆதரவளித்தார் என புரிந்து கொண்டுள்ளனர்.

*”அரசாங்கம் உயரடுக்கு எஜமானர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் உருவகம்”
என்கிறார் அம்பேத்கர்.

*அம்பேத்கரை இஸ்லாம்,கிறிஸ்தவம்,சீக்கியம் போன்றோர் தங்கள் மதத்தில் சேர்க்க
கடுமையாக முயற்சித்தாலும்,அவர் நாத்திக-வன்முறை தவிர்த்த கம்யூனிச மதமான
புத்த மதத்தில் சேர்ந்தார்.

*ஆதிதிராவிடசாதிகளிடையே கலப்பின சாதி ஒற்றுமையில்லை.1200 உட்சாதிகள்..அதற்குள்ளும் 4000 துணைசாதிளுடன் தனித்துவத்தை பேணுகின்றனர்.
இந்திய பிராமண அரசியல் கட்சி 1200 சாதிகளிலும் சம்பளம்,வாகனம்,உணவு கொடுத்து தனது முழு நேரப் பணியாளர்களை(விளிம்பு நிலை தலீத்துகள்) நியமித்து பிராமணச்சூழலில் வைத்துள்ளது.

கர்நாடக மேலாதிக்க சாதி அமைச்சரின் காரில் ஒன்றாகச் சென்றதை இவர்கள் பெருமையாக வெளியே பேசுகின்றனர்.கோயிலுக்குள்ளோ..திருமண உறவு
முறைக்குள்ளோ இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அரசியல் சாசனப்படி
இட ஒதுக்கீட்டின் கோட்டாவை நிரப்ப இவர்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன.

அளவு கருதி இனி சுருக்கமாக பதிவிட விழைகிறேன்.எனினும் அதுவும் நீளும் வகையிலேயே எல்லாமுமே முக்கியமாகப்படுகிறது…

*தலீத்துகளை சூரஜ்யங்டா அடையாள தலீத், உயரடுக்கு தலீத்,தீவிர தலீத் என பிரித்து மதிப்பிடுகிறார். அம்பேத்கரும் அவரது காலத்தில் இதை எதிர்கொண்டார்.எம்.சி.ராஜா,ஜெகஜீவன்ராம்,காந்தி போன்றோர் மூலம் போட்டி ஏற்பட்டது.வட்டமேஜை மாநாட்டிலும் எதிரொலித்தது.

*மந்திரி,எம்.எல்.ஏ.,எம்.பி.,இவர்களை சுற்றி ஒரு குழுவாக தற்காலத்தில் செயல்படுவதை பார்க்கலாம்.வக்கீல், டாக்டர், பேராசிரியர் போன்றோரை அரசியல வாதிகள் பயன்படுத்தி கொள்வதை பார்க்கலாம்.ஆனால் சுயநல தலீத்துகளுக்கும் சேர்த்தேதான் பொதுநல தலீத் போராடுகிறார். சாதி ஆதிக்கத்தை எதிர்த்து பேசாத தலீத்துகளையும் பார்க்கலாம்.

3ம் தலைமுறை தலீத் சடங்குகளில் ஈடுபடுவது.,வெஜிடேரியனாக இருப்பது,தான் தலீத் எனகாட்டிக்கொள்ளாமை உள்ளது.இவர்கள் மூத்த அதிகாரிகளின் பிள்ளைகளாக இருப்பர்.வெளிநாடு போவர்.உயர்வேலை பார்ப்பர்.தனது ஜாதி முன்னேற்றம் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.தகுதியா…இட ஒதுக்கீடா..என குழம்புவர்..முதலாளித்துவ கனவில் மிதப்பர்.

*தீவிர தலீத்தோ தலீத்திய பெருமை பேசுவார்..விவாதம்… எதிர்வினை…வன்முறை
இவரிடம் சகஜமா..ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடுவார்..
“வர்க்கம் போராட்டம் உச்சக்கட்டம் அடையும் போது சாதிய அடுக்குகள் மாறிடும்”என்றார் மார்க்ஸ்..சாதியா ,வர்க்கமாக…என்ற விவாதத்தின் போது பிராமண தலீத்துகளைப்பற்றி பேசுகிறார் சூரஜ்…

*உலகத்திலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட இனம் தலீத் பெண் இனம்.. ஜான்சிராணி லட்சுமிபாய் பிராமணப் பெண்.. இவள் முதுகில் குழந்தையை கட்டிக்கொண்டு குதிரை மீது ஏறி வாள்வீச்சு நடத்தியதாக கதை?..ஆம்..கதைதான்..உண்மையில் ஜான்சிராணியை காட்டுவழியாக நேபாளத்திற்கு தப்பிக்க வைத்துவிட்டு போர்க்களத்தில் யுத்தம் நடத்தியவள் ஜால்காரி பாய் என்ற கோரி சாதி தலீத் பெண்..என்பதை இன்றும் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்கள்,தெய்வ வழிபாடு வழி நிறுவுகிறார் சூரஜ்!..

*”உபரி மதிப்பை ஆண் என்று அடையத்தொடங்கினானோ அன்று ஆரம்பமானது பாலினப் பாகுபாடு”என்றார் ஏங்கல்ஸ்.

*புத்தருக்கு ஏற்பட்ட கதியே அம்பேத்கருக்கு ஏற்பட்டது.அவருக்கு இறைத்தன்மை
ஏற்றப்பட்டது. அவரது பிறந்தநாளில் ஏகப்பட்ட புத்தபிட்சுகள் சடங்கு பூசை செய்தனர். ஆனால் அவரது கொள்கைகளை யாரும் பின்பற்றவில்லை.

*மாயாவதி,ஆர்.கே.நாராயணன்,ராம்கோவிந்த் போன்றோர் உயர் பதவிகள் வகித்தாலும் NSSO2010 புள்ளிவிபரம்படி 21%தலீத்துகள் கூரை வீட்டில்..37%தலீத்துகளுக்கு மட்டுமே தூய குடிநீர்..59%தலீத்துகளுக்கு மட்டுமே மின்வசதி..34%பேருக்கு மட்டுமே கழிவறை.. ரூ5000/-ற்கு கீழ் மாதவருமானம் உள்ள தலீத் குடும்பம் 41%..SC/STயில் 4%பேருக்கு மட்டுமே வேலை…

*2019 தகவல்படி 73%நீதிபதிகள் 132குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.
70அரசு செயலர்களில் 3பேர் மட்டுமே SC. 278இணைச்செயலர்களில் SC 24,ST3,OBC10
45 துணைச் செயலர்களில் SC 4,ST3,OBC 10 24உயர்நீதிமன்றங்களில் ஒரு SC..ST கூட இல்லை.

*2017மத்திய பட்ஜெட்டிலிருந்து பட்டியலின் சாதிகளுக்கான துணைத்திட்டம்
ரத்துசெய்ய பட்டது.இதை எதிர்த்து பெரும் போராட்டம் ஏதுமில்லை.
மொத்த பட்ஜெட்டில் SC மேம்பாட்டிற்கு 2.3%,ST மேம்பாட்டிற்கு 2.3% நிதி மட்டுமே
ஒதுக்கப்படுகிறது.(இரண்டு புள்ளி மூன்று சதவீதம்)

*தலீத் முதலாளித்துவத்தை கட்டமைக்க FICCI போல DICCI ஏற்படுத்தப்பட்டாலும்
அவர்களும் மேலாதிக்க சாதியினரையே அண்டும் நிலைமை.வணிகக்கூட்டுறவு
மூலம் சமத்துவத்தை நிலைநாட்ட முயன்ற நிகழ்வு இது.

*இந்திய முதலாளித்துவம் பிராமணர்களால் ஒப்புதல் தரப்பட்டு,பனியாக்களால்
கட்டுப்படுத்துகிறது.LPGஎனும் உலகமயமே வந்தாலும் உள்ளூர் சாதிமயம் தளரவில்லை.

*தன்னுடைய ஆதிக்கத்தை…அதிகாரத்தை காப்பாற்றிக்கொள்ள ஒரு கட்சிக்காரன்
தனது எதிர்க்கட்சிகளுக்கு கூட நன்கொடை கொடுத்து தன்முன்னே கை கட்டி
நிற்க வைக்கிறான்.

*இடதுசாரி இயக்கங்களில்கூட சாதி மேலாதிக்க உணர்வு வளர்ந்து வருவதும்
அதிகார அனுபவிப்பது போக்கு உள்ளதும் கவலைதரக்கூடிய..களைய வேண்டிய
அம்சம் என்கிறார் சூரஜ்..

*தீவிர அம்பேத்கரிய உணர்வும்,தலீத் ஈடுபாடும் அற்ற இடதுசாரி இயக்கம் ஒரு தேவையற்ற திட்டம்.. மார்க்ஸ் அம்பேத்கரை வெகுவாக கவர்ந்திருக்கிறார்
என்பதை அவருடைய நூலகத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

*இந்தியர்களால் அதிகம் நேசிக்கப்படுபவரும்..அதிகம் வெறுக்கப்படுபவரும்
அம்பேத்கர்..

*மூலதனத்தால் நடத்தப்படும் ஜனநாயகம் எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை
உருவாக்கும்..

*”எல்லோரிடமும் ஒருவர்.,.கம்யூனிஸ்ட்
ஒருவரே..எலலாருமாய்…கேப்பிடலிஸ்ட்…

*பிராமணருக்கு எதிராக பிராமணர்கள் என சில தகவல்களை பகிர்கிறார் சூரஜ்..
அம்பேத்கரை படிக்க வைத்தவர் பிராமணர்… வெளிநாட்டில் படிக்க வைத்தவர்
கெய்க்வாட்..நாடு திரும்பிய பிறகு தக்க வேலை கொடுத்தவர் அவரே…தான் இறந்த பின்பும் 2002ம் ஆண்டுவரை அம்பேத்கர் கொள்கைகளை கொண்டுசேர்த்தவர் ரேஜ்
என்ற பிராமணர்.திலகரின் மகன்களான ஸ்ரீதர் பாண்டே,ராம் பந்த் இருவருமே
திலகரின் எதிர்ப்பையும் மீறி அம்பேத்கருக்கு தீவிர ஆதரவு தந்தனர்.ஒரு கட்டத்தில்
திலகர் தனது கேசரி பத்திரிகை மூலம் தன்மகன் ஸ்ரீதர் மீது வழக்கு தொடர்ந்தார்.பத்து ஆண்டுகள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கியதால் மனம் நொந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் சித்பாவன பிராமணரான திலகரின் மகன்.. அம்பேத்கருக்காக…….. எனவேதான் சூரஜ்யங்டா அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்”பிராமணீயத்திற்கு எதிராக பிராமணர்கள் தலீத்துகளுடன் கரம் கோர்க்க வேண்டும்”..

இந்நூலின் நோக்கம் வென்றிட அனைவரும் கை கோர்ப்போம்!..

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *