சோழ நாட்டில் பௌத்தம் : முனைவர் பா.ஜம்புலிங்கம்
இந்தியாவில் பௌத்தம் ஒரு மதமாக மாற்றப்பட்டுள்ளது. பௌத்தம் ஒரு நெறி. வாழ்க்கை நெறி, அறிவியல் நெறி, சிந்திக்கத்தூண்டும் நெறி, இந்துப் பண்பாட்டின்மீது மாற்றுச் சிந்தனையில் பண்பாட்டை சிந்திக்க வைத்த நெறி, இயற்கையோடும், உலக உயிர்களோடும், செடி கொடிகளோடும், இன்னும் பல இயற்கைப்பொருள்களோடும் வாழத்தூண்டி வழிகாட்டிய நெறி.
பொ.ஆ.மு.2ஆம் நூற்றாண்டளவில் பௌத்தம் குறித்த அறிதல் தமிழ்நாட்டில் பரவியிருந்தது. அதற்கு முந்தைய சிந்தனை முறையை பௌத்தம் இன்னும் கூர்மைப்படுத்தியது.
நூலாசிரியர் முனைவர் பா.ஜம்புலிங்கம், பௌத்தத் தேடலில் சரியான வரையறையை அமைத்துக்கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். சோழ நாட்டில் உள்ள புத்தர் சிற்பங்களை மக்களுக்கு அறியப்படுத்த வேண்டுமென்பதில் மிகவும் கவனமாக இருந்துள்ளார். அதன் வழியில் பௌத்தத்தின் உச்ச நிலையையும், அதன் மீதான தாக்குதலின் விளைவுகளையும் தெளிவாக அறிந்துகொள்ள உதவியுள்ளார்.
பௌத்த மெய்யியல் சிதைவுகள் இந்நூலில் பதிவாகியுள்ளன. அவை இந்நூற்றாண்டின் தற்பொழுதைய வாழ்க்கை, அரசியல் ஆகிய தேடல்களுக்கு மிகத் தேவையான வகையில் சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் முகப்பே மெய்யியலைத் திரிபுபடுத்த முயன்ற முரணில் தலை வெட்டப்பட்டதைச் சுட்டுகிறது.
நூலில் காணப்படுகின்ற புத்தரின் உருவங்களை நினைவுபடுத்தும் படிமங்கள், பௌத்தச் சிந்தனையில் மாற்றங்களை உண்டாக்கி, புத்தரின் மெய்ந்நெறிக்குப் பல வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டதை நினைவூட்டுகின்றன. தீச்சுடர் அறிவின் முதிர்வு நிலையாகவும், சிந்தனையின் உச்ச நிலையின் வெளிப்பாடாகவும் உள்ளது. திரட்சியான முன் நீண்ட நெற்றி, விரிந்த புருவங்கள், அகன்ற கண்கள் ஆகியவை ஆழ்ந்த சிந்தனையையும், சிந்திக்கும் உணர்வையும் சுட்டுகின்றன. நீண்ட காதுகள் உலக அறிவைக் கேட்டலின் குறியீடாகவும், நெற்றிப்பொட்டு அமைப்பு ஆழ்நிலையில் அமைதியின் குறியீடாகவும் காட்டப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 60 புத்தர் சிற்பங்கள் மூலமாக சோழ நாட்டில் அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரங்கள் அல்லது கோயில்களைப் பற்றியும், பொ.ஆ.9ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.13ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில் பௌத்தக்கோயில்கள் சிதைக்கப்பட்டதைப் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் சான்றாக இந்நூல் உள்ளது.
புத்த சிற்பங்கள் சாம்பான், செட்டியார், பழுப்பர், சிவனார், ரிஷி, என்ற பல பெயர்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதைப் பதிவிட்டுள்ளார். புத்தரை அடையாளப்படுத்தும் மக்களின் பெயர்களை தமிழ்ச் சமூக மக்களின் பண்பாட்டோடு ஒப்புநோக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுத் தேவையை நூலாசிரியர் பௌத்த நோக்கர்களின் எண்ணங்களுக்கு விதைத்துள்ளார்.
சிற்பங்களின் உடல் பகுதி, கால்கள், கைகள், தலையை சிதைத்தவர், சைவ, வைணவத்தை ஏற்ற அரசர், மக்களில் சிலரின் வெறிச்செயலாகவே கருதமுடிகிறது. எதிரிகளைவிட உள்பகை மிகவும் மோசமானது, ஆபத்தானதும்கூட.
புத்த உருவ சிற்பங்கள் வழிபாட்டுக்குரியனவாக இருந்துள்ளன என மட்டும் கூறிவிட முடியாது. அவை கல்வி கற்பிக்கும் இடங்களில் இருந்திருக்கலாம். புத்த துறவிகள் தங்கி இருக்க, அறநெறிகளை தெளிவிக்கும் இடமாகவும், மக்கள் கூடி திட்டமிடும் இடமாகவும்கூட இருந்திருக்க வேண்டும்.
மன ஆற்றலால் ஓர் உடலை பலவாகவும், பலவற்றை ஒன்றாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்பதை தியான நிலை, நின்ற நிலை சிற்பங்கள் உணர்த்துவனவாக உள்ளன. அமர்ந்த நிலை தியானத்தை பௌத்தமும் ஜைனமும் முழுமையாகக் கொண்டிருந்தன. அமர்நிலை தியானத்தை வேறு சமய சிற்பங்களில் காணமுடியவில்லை. தியானம் என்ற ஒரு நிலைக்கு மாறுதல் என்ற மன மாசுக்களை நீக்கலை பௌத்தம் முதன்மையாகக் கொண்டது என்பதை புத்தரின் தியான நிலை சிற்பங்கள் உணர்த்துகின்றன.
பௌத்தம் சார்ந்த தேடலின் தேவையைச் சுட்டும் வகையில் சிறந்ததொரு நூலைப் படைத்துள்ள நூலாசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : சோழ நாட்டில் பெளத்தம்
ஆசிரியர் : முனைவர் பா.ஜம்புலிங்கம்
பதிப்பகம் : புது எழுத்து, காவேரிப்பட்டிணம் 635 112, தமிழ்நாடு,
அலைபேசி 98426 47101/63742 30985
பதிப்பாண்டு : 2022
விலை : ரூ.1000