நூல் அறிமுகம் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு -இரா.சண்முகசாமி 

நூல் அறிமுகம் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு -இரா.சண்முகசாமி 


நூல் : தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு
ஆசிரியர் : பேராசிரியர் அருணன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம் 2023
வசந்தம் வெளியீட்டகம் 5ஆம் பதிப்பு 2013
வைகை வெளியீடு 1999
விலை : ரூ.370

1999 ஏப்ரல் 10 அன்று முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சென்னையில் வெளியிட முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள். சிபிஎம் தோழர்கள் என்.சங்கரய்யா, கே.வரதராஜன், ஜி.ராமகிருஷ்ணன், டி.லட்சுமணன் மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜனநாயக மாதர் சங்கத் தோழர் மைதிலி சிவராமன் ஆகிய தலைவர்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இந்நூலின் தேவையின் முக்கியத்துவம் ஏன் தேவை என்பதற்கு வெளியீட்டு விழாவே சாட்சி தோழர்களே.

 

ஆம் 1801க்கு முன்பும், 19,20ஆம் நூற்றாண்டிலும் ஏன் இப்போதும் நால்வர்ண கோட்பாடு மக்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை பார்த்தோமானாலும் 1801ல் பிராமணிய தத்துவம் மக்களை எப்படி கெட்டித்தட்டி வைத்திருந்தது என்பதை புரிந்துகொள்ளலாம். ஆம் கிறிஸ்துவம் மட்டும் வராமல் போயிருந்தால் நமது சமூகம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு பின்னோக்கி இருந்திருக்கும் என்பதை நினைக்கவும் சிரமமாகவே இருக்கும்.

 

தாழ்த்தப்பட்டவர்கள் பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை என்று பயணச்சீட்டில் அச்சடித்த வரலாறு மறக்கமுடியாது.

 

தீண்டத்தகாதார் கோயிலில் நுழைந்தால் சிறை தண்டனை இந்து சட்டத்தில் இருந்தது.(இப்போதும் தமிழகக் கோயில்களில் குறிப்பாக கிராமங்களில் இன்னும் இருக்கிறது நுழைய முடியாத நிலை. ஒரு பெருந்திரள் மக்களே விழுப்புரம் அருகே மேல்பாதி என்னும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று கோயில் முன்பு கூடி போராட்டம் நடத்திய சூடு இன்னும் ஆறவில்லை.

 

குழந்தை மணம், பலதார மணம், உடன்கட்டை ஏறுதல் உட்பட பெண்கள் எல்லாவற்றையும் விட கொடுமையான வலியை சுமந்தது.

 

இந்நிலையில் தான் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பணி என்பது மக்களுக்கு தேவையான ஒன்றாக இருந்தது. அது கிறிஸ்தவம் தொடங்கி, பிரம்ம சமாஜம், வைகுண்ட சாமிகள்(அவர் வழியில் தற்போது பால பிரஜாபதி அடிகளார் உள்ளார்), வள்ளலார், வேதநாயகம் பிள்ளை, ஜி.சு.ஐயர், மாதவையா, அயோத்தி தாசர், இரட்டைமலை சீனிவாசன், நாடார்களின் ஆலய நுழைவு போராட்டம், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார், நீதிகட்சி, பெரியார், சிங்கார வேலர், பாவேந்தர் பாரதிதாசன், மகாத்மா காந்தி, அம்பேத்கரின் தாக்கம், ராஜாஜியின் குலக்கல்வி, தீண்டாமை ஒழிப்பு சட்டம், திமுக ஆட்சி, மாதர் இயக்கம், அதிமுக ஆட்சி இறுதியில் 21ஆம் நூற்றாண்டில் என்னவிதமான மாற்றம் தேவை என்பதற்கான நிகழ்ச்சி நிரல் இப்படி மிகவும் சிறப்பாக பரிணாம வளர்ச்சியாய் நூலை வடித்துக் கொடுத்திருக்கிறார் பேராசிரியர்.

நிறைய கற்றுக்கொள்ள இந்நூல் என்னை தூண்டியுள்ளது. இதற்குமுன்பு பலமுறை வசந்தம் வெளியீட்டு நூல்களை பார்த்திருந்தாலும் இந்நூல் கண்ணில் படாமலே இருந்தது. மேதினத்தில் சென்னை பாரதி புத்தகாலயம் சென்றபோது கண்ணில் பட்டது. இந்நூலை முடிக்கும் வரை இடையில் வேறு நூலை எடுக்கவிடவில்லை பேராசிரியர் அவர்கள். அவ்வளவு தகவல் களஞ்சியங்கள் கொட்டிக்கிடக்கு. நான் வாழ்வது என்னவோ 21ஆம் நூற்றாண்டு. ஆனால் 19,20ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்த ஒரு அனுபவம் இந்நூலை வாசித்ததில் ஏற்பட்டது.

சீர்திருத்த இயக்கம் செய்த பணிகளை கண்டுணர்ந்த போதே அங்கங்கே எழுந்த முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆம் மகாத்மா காந்தி பெருந்திரள் மக்களை கவர வேண்டி இருபக்கமும் இருக்கும் மிதவாதிகளை கவரும் வண்ணம் தன்னுடைய செயல்பாட்டைக் கொண்டிருந்தார்.

விவேகானந்தர், “பெண்கள் அதிகம் இருந்ததால் தான் பலதார மணம் ஏற்படக் காரணமாகியது” என்றபோது பாரதியார் தன்னுடைய எழுச்சியை வெளிப்படுத்தியிருப்பார். “மனுஸ்மிருதி எழுதிய காலத்தில் மக்கள் தொகை கணக்கு இல்லையே எப்படி தெரியும் பெண்கள் அதிகமென்று?” என்று கேட்டிருப்பார். ஏனெனில் பலதார மணத்தை அதுவும் தவழும் குழந்தையிலிருந்து மணம் முடிக்கவேண்டும் என்று ஸ்மிருதி குறித்துள்ளதை நினைவுகூர்ந்திருப்பார் பாரதியார்.

 

நாம் இந்நூலை வாசிக்கும்போதே கிறிஸ்தவ பாதிரியார் 1789-1828 காலத்தில் இந்தியாவில் வாழ்ந்தபோது இங்கிருந்த மக்களின் வாழ்நிலையை நேரில் கண்டு எழுதிய நூல் ‘இந்திய மக்கள் (பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்)’. அதிலிருந்து பல மேற்கோள்களை நமக்கு வழங்கியுள்ளார். அந்த நூலையும் வாசித்துவிட வேண்டும் என்று எடுத்து வைத்துள்ளேன்.

நம் பழம்பெருமையை நாம் பேசும் முன்பு நமக்கு முன்பிருந்த வரலாற்றை வாசிக்க வேண்டும் என்று தூண்டிய பேராசியருக்கு மிக்க நன்றி. வைகை வெளியீட்டிலேயே மூத்த தோழர்கள் வாசித்திருப்பார்கள். இளைய தலைமுறைக்கு இந்நூல் மிகவும் தேவையாக இருக்கும். அனைவரும் வாசிக்க வேண்டும்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *