Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள் – சிவஞானம் கி

தமிழ்நாட்டின்
பெண் விடுதலைப் போராளிகள்
வரலாற்றுக் கட்டுரைகள்
பேராசிரியர் சோ மோகனா
முதல் பதிப்பு ஏப்ரல் 2023
பக்கம் 134
விலை ரூபாய் 140
வெளியீடு பாரதி புத்தகாலயம் புக்ஸ் ஃபார் சில்ட்ரன் சென்னை
தொடர்புக்கு;044 24332924

             இந்திய பெண் விடுதலைப் போராளிகளுக்கு  இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கும் ஆசிரியர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கிறார். சோ மோகனா அவர்கள் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்று இன்று பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும் கீழ்நிலை ஊழியர்களுக்கும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போராட்டக்காரர்..தினமும் பல கிலோமீட்டர் பயணம் செய்து இன்னும் தன்னை சமூகத்துடன் பிணைப்பில் வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் அறிவியல், புனைக் கதைகள், வரலாற்று நூல்கள், கண்டுபிடிப்புகள் என பல்வேறு தளங்களில் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

         அந்த வரிசையில் நம் நாட்டில் விடுதலைக்காகப் போராடி சிறை சென்று தனது இன்னுயிரை ஈந்த பெண்  போராளிகளைப் பற்றிய தனது பதிவை நூலாக வெளியிட்டுள்ளார். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்து இந்திய வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு ஒரு கட்டத்தில் வறுமையும் பஞ்சமும் தாண்டவமாடி இந்திய மக்கள் தங்களது எல்லா விதமான வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்துவிட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்ந்த சூழலில் தெற்கே எழுகிறது முதல் விடுதலைப் போராட்ட குரல் .பூலித்தேவன் என்ற மாவீரன் தொடங்கி வைத்த விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் நின்று சுதந்திரமாகிறது எத்தனையோ தியாகிகள் விடுதலைக்காகப் போராடி தங்கள் இன்னுயிரை ஈந்து இந்த சுதந்திரத்தை நமக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

        போராளிகள் என்ற நிலையில் எத்தனையோ கட்டுரைகள் நூல்கள் தியாகிகளைப் பற்றியும் அவர்களது விடுதலைப் போராட்ட வரலாற்றையும் எழுதிச் செல்கின்றன ஆனால் ஆணுக்குச் சமமாக பெண்களும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தன்னலமற்று தன் குடும்பத்தை துறந்து விடுதலைக்காக பாடுபட்ட வரலாறு இதுவரை முழுமையாக தொகுக்கப்படவில்லை. அந்த வகையில் இந்த நூல் பெண் விடுதலைப் போராளிகளைப் பற்றிய அறிமுக நூலாகவும் அனைவரும் பெண் விடுதலைப் போராளிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது.

         தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் விடுதலைப் போராளிகள் விடுதலைக்காக போராடி சிறை சென்று பலவித இன்னல்களுக்கு உட்பட்டு குடும்பத்தை துறந்து தங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் எத்தனையோ வலிகளை சுமந்து கொண்டு கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாங்கள் கொண்ட கொள்கையிலும் எடுத்துக் கொண்ட லட்சியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் விடுதலைக்காக போராடியிருக்கும் வரலாற்றை நமக்குள் எழுச்சியை உருவாக்கும் வண்ணமும் அன்றைய வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தி காட்சிகளாக படம் பிடித்துக் காட்டும் வகையிலும் நெஞ்சில் நினைவுகளாக, ஆறாத வடுக்களாக அவர்களின் வலியைச் சுமக்கும் வகையிலும் எழுதிச் செல்கிறது நூல்.

          நூலின் முன்னுரையில் ஆசிரியர் சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழகத்தின் பெண் விடுதலைப் போராளிகள் பற்றிய அறிமுகத்தை பட்டியலிடுகிறார். ஆனால் அப்பட்டியலும் முழுமையானது அல்ல என்று அவரே ஒப்புக் கொள்கிறார். எத்தனையோ பெண் விடுதலைப் போராளிகள் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் எழுந்து வந்து வீதியில் நின்று போராடி இருக்கக்கூடும் அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு இன்னும் தொகுக்கப்படவில்லை. எனவே பெண்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான வரலாற்றை எழுதும் பொழுது தமிழகத்தின் பெண் விடுதலைப் போராளிகளின் பங்கு அளவிட முடியாத உயரத்தில் இருக்கும் என்பது இந்நூலின் வழியாக அறிய முடிகிறது.

            இதில் 10 விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும் அதேசமயம் அவர்களின் தியாகங்கள் நீர்த்துப்போகா வண்ணம் நம் நெஞ்சில் நிலைக்கும் வகையிலும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று ஆதிக்க சக்திகள் நிறைந்த அன்றைய காலகட்டத்திலும் ஆணுக்குப் பெண் சமமில்லை என்று அடிமைத்தனத்தில் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் நிறைந்த விடுதலைப் போராட்ட வரலாற்று காலத்திலும் தன் குடும்பத்தையும் அவர்களின் எதிர்ப்பையும் தாண்டி எத்தனையோ பெண்கள் தெருவில் இறங்கி போராட்ட களம் கண்ட வீரத்தை இந்த நூல் ஒவ்வொரு வரியாக நமக்குள் கடத்துகிறது.

              பெண்கள் தங்கள் கடமையினைச் செலுத்தும் பொழுது ஆண்களைப் போல இல்லாமல் குடும்பத்தையும் பார்க்க வேண்டும் தேசத்தையும் கவனிக்க வேண்டும் என்ற இரட்டைக் குதிரை சவாரியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும் தாங்கள் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டு தங்கள் உயிருக்கும் குடும்பத்திற்கும் எத்தனையோ ஆபத்துகள் நேரும் போதும் அவற்றைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் போராடும் மனப்பக்குவத்தை வளர்த்து விடுதலைக்காக எண்ணற்ற தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்பதை இந்த நூல் நமக்கு கோடிட்டு காட்டுகிறது.

நூலில் இடம்பெறும் விடுதலைப் போராளிகளின் சில பண்புகள்;

சிவகங்கை ராணி வேலு நாச்சியார்

     ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய முதல் இந்திய பெண்மணி. ஜான்சி ராணியை முன்னிலைப்படுத்தும் வரலாற்று ஆசிரியர்கள் வீரமங்கை வேலு நாச்சியாரைப் பற்றி இன்னும் முழுமையாக அறியும்போது விடுதலைப் போராட்ட வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை உணர முயற்சிக்கலாம்.  8 மொழிகள் கற்று அறிந்தவர் வாள்வீச்சிலும் குதிரை ஏற்றத்திலும் சிலம்பத்திலும் வளரிச் சண்டையிலும் ஆயுதங்களை கையாளுவதிலும் போர்க்களப் பயிற்சி பெற்றவர் தன்னைச் சுற்றி 10 பேரை நிற்க வைத்து கடுமையாகப் பயிற்சி செய்து சிறந்த போர் வீராங்கனையாக  உருவெடுத்தவர். அவரது கணவரால் 2000 படை வீரர்களுக்கு தலைமை வகித்து விடுதலைக்காக போராடியவர். தனது மண்ணை ஆங்கிலேயர்கள் பிடித்துக் கொண்டதற்காக 8 ஆண்டுகள் தனித்திருந்து போராட்டக் களம் கண்டு வெற்றி கொண்டவர். இப்படியான பன்முக திறமை வாய்ந்தவர் வீரமங்கை வேலு நாச்சியார்.

சிவகங்கையைக் காத்த படைத்தளபதி குயிலி

          விடுதலைப் போராட்டத்திற்காக தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த முதல் பெண் குயிலி. தனது தலைவி வீரமங்கை வேலு நாச்சியாருக்காக ஆங்கிலேயர்களின் ராணுவ கூடத்திற்குள் யாரும் அறியா வண்ணம் நுழைந்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டு அவர்களின் ராணுவ தளவாடங்களையும் ஆயுதக் கிடங்குகளையும் தீ வைத்து எரித்து சிவகங்கையைக் காப்பாற்றியவர் குயிலி.

நாகம்மையார் கண்ணம்மாள்

         ஈவே ராமசாமி அவர்களின் மனைவியும் அவர்களின் தங்கையும் விடுதலை போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு விடுதலைக்காக போராடியவர்கள். கள்ளுக்கடை மறியல், கதர் இயக்கப் பிரச்சாரம் ,தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராட்டம் ,பெண் கல்வியின் இன்றியமையாமை ,கலப்பு மணம் ,விதவைகள் மறுமணம், சுயமரியாதைத் திருமணம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக இரவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டவர்கள். கள்ளுக்கடை மறியலுக்காக காந்தியடிகளாலேயே பாராட்டப்பட்ட இந்த இருவருக்கும் தமிழகத்தின் பெண்களுக்கு குடும்பத்தைத் தாண்டியும் தேசத்தின் நலனில் மிகுந்த அக்கறை உண்டு என்பதை நிரூபித்த பெருமை உண்டு.

அம்புஜம்மாள்

         பெற்றோர் வசதி வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நன்கு படித்தவர்கள் .ஆனாலும் தொடர்ச்சியாக மூன்றுமே பெண் குழந்தைகளாக பிறக்கும்போது மூன்றாவது குழந்தை அவர்களால் வெறுக்கப்படுகிறது. இடையில் தோல் வியாதியும் சேர அவரை யாரும் தொட்டுத் தீண்டுவதற்குக்கூட மறுத்து ஒதுக்கி வைக்கிறார்கள். பெங்களூரில் உறவினர் வீட்டில் வசிக்கும் அவர் சிகிச்சைக்கு பிறகு சென்னை திரும்புகிறார் ஆனாலும் அவருக்கு பிறகு பிறந்த தம்பியின் மீது குடும்பம் வைக்கும் பாசம் ஒரு துளி கூட இவருக்கு வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார். பள்ளி செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. வீட்டிலேயே ஆசிரியர்களால் பாடம் நடத்தப்பட்டு அதிலும் தமிழ் இந்தி ஆங்கிலம் சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் கற்றுத் தேர்கிறார் .வீணை வாசிப்பதிலும் தனது திறமையை நிரூபிக்கிறார் .காந்தியடிகள் தமிழ்நாடு வரும்பொழுதெல்லாம் அவரது தந்தை சிறந்த வக்கீல் என்பதால் அவரது வீட்டிலேயே தங்க நேர்கிறது. காந்தியடிகளையும் கஸ்தூரிபா காந்தியையும் நேரில் சந்தித்த அம்புஜம் அவர்களின் எளிமையையும் தேச விடுதலைக்காக அவர்களின் உழைப்பையும் கண்டு வியந்து தானும் தேசிய உணர்வை அடைந்து அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை அழைத்து உலகப்போரில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு சென்னையிலிருந்து மருந்துகள் துணிகள் சேகரித்து அனுப்பினார் .நிதியும் திரட்டி கொடுக்கிறார். இவை அத்தனையும் அம்புஜத்தம்மாளின் 15 வயதில் நடந்த நிகழ்வுகள். நிறைய நூல்கள் எழுதி எழுத்தாளராகவும் மிளிர்ந்தவர். மகாத்மா காந்தி நினைவு மாலை நூல் ,நான் கண்ட பாரதம் நூல் போன்றவை இவரின் சிறப்புப் பெற்ற நூல்கள்.

கடலூர் அஞ்சலை அம்பாள்

          பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். இவர் மரபு என்னும் விலங்கை உடைத்து எறிந்து விட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல சமுதாய வாழ்வும் தான் என்று முழங்கி குடும்பத்துடன் குடும்பத்தினருடன் வீதியில் இறங்கி போராடியவர். எத்தனையோ தியாகிகளின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின அந்த வகையில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வரலாறு நிறையப் பேருக்கு தெரியாமலேயே போய் விட்டது. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் கதர் போராட்டம் நீல் சிலை அகற்றும் போராட்டம் என பலவிதமான போராட்டங்களில் கலந்து கொண்டு தனது ஒன்பது வயது மகளுடன் சிறை சென்றவர். கொண்ட கொள்கைக்காகவும் எடுத்துக் கொண்ட லட்சியத்திற்காகவும் மகளின் எதிர்காலத்திற்காக சிறிதும் அஞ்சாமல் சிறை சென்று தனது போராட்ட உணர்வை வெளிப்படுத்தியவர் .நாட்டில் பல ஊர்களில் உள்ள சிறைகளில் இவர் அடைக்கப்பட்டு இருக்கிறார் .உப்புச் சத்தியாகிரகம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கிறார் .சிறையிலேயே குழந்தை பிறந்துவிடும் என்பதால் சிறை நிர்வாகம் பரோலில் அனுப்பி அவருக்கு விடுதலை கொடுக்கிறது. பரோலில் வந்த அஞ்சலையம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது .சிறையில் இருந்து வந்தவுடன் பிறந்ததால் குழந்தைக்கு ஜெயில் வீரன் என்று பெயர் வைக்கிறார். இப்படியாக தனது உடல் வலியையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தைகளின் நலனை கருத்தில் கொள்ளாமல் 5  வருடங்கள்  சிறைவாசத்தை விடுதலைக்காக மேற்கொள்கிறார்.

தியாகி மதுரை சொர்ணத்தம்மாள்

       பலப்பல போராட்டங்களுக்காக அடி உதை சித்திரவதை சிறைவாசம் ஆகியவற்றை அனுபவித்தவர் பலமுறை காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டவர் ஒருமுறை போராட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு காலை 10 மணியிலிருந்து இரவு பத்து மணி வரை தடியால், செருப்பால் ,பெல்டால் ,கையால், காலால் என எவ்வித பாகுபாடும் இன்றி உடலின் எல்லா இடங்களிலும் அடி வாங்கியவர். அதன் காரணமாக தனது ஒரு பக்க காது செவிடாகிப் போன வரலாற்றை உடையவர். மற்றொரு முறை போராட்டத்திற்காக போலீசாரல் கைது செய்யப்பட்டு அவரும் அவரது தோழி லட்சுமிபாயும் சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் காட்டிற்குள் இரவு நேரத்தில் லாரியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டு நடுக்காட்டில் இறக்கி விடப்படுகிறார்கள். அதுவும் அரை நிர்வாணத்துடன். தட்டுத் தடுமாறி சாலைக்கு வந்து கரை ஏறுகிறார்கள் இருவரும் .இப்படியாக ஏராளமான தியாகங்களைச் செய்தே இந்திய விடுதலை கிடைக்கிறது  இவ்வளவு தியாகங்கள் செய்த சொர்ணத்தம்மாளின் இறுதிக் காலம் எப்படி எங்கே நிகழ்ந்தது என்பதும் அவர் எப்பொழுது இறந்தார் என்ற தகவலும் கூட வரலாற்றில் பதிவாகவில்லை என்பது எவ்வளவு பெரிய பரிதாபம் .

வீரமங்கை பத்மாசனி

  பல விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டு மதுரையைச் சேர்ந்த பத்மாசனி கர்ப்பிணி என்ற நிலையிலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். ஒரு முறை மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து சிறை சென்றார்.சிறை நிர்வாகத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார் அதன் காரணமாக கரு கலைந்து விடுகிறது தனது உடல் வலியை கருத்தில் கொள்ளாமல் வீர சுதந்திரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு விடுதலைப் போராட்ட இயக்கத்திற்காக பொருளுதவியும் செய்கிறார் தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தை பாரதி ஆசிரமம் அமைக்க நன்கொடையாக கொடுக்கிறார்.

கேபி ஜானகி அம்பாள்

“”கடமையை செய்தேன் சன்மானம் எதற்கு “”? என்று தனது விடுதலைப் போராட்ட வரலாற்றுக்காக தியாகி என்ற பட்டயத்தையும் பரிசளிப்பையும் அரசு தருவதற்கு முன்வந்தபோது மறுப்பு தெரிவித்தவர். தான் நாடகத்தின் மூலம் உழைத்துச் சேர்த்த 200 பவுன் நகைகள் உட்பட அனைத்து சொத்துக்களையும் சுதந்திரப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர். சொந்த வீட்டையும் இழந்து வாடகை வீட்டில் குடியேறி விடுதலைக்காக போராடியவர் ஜானகி அம்மாள் .

மணலூர் மணியம்மை

   “”பெண் என்ற காரணத்திற்காகவோ விதவை என்ற காரணத்துக்காகவோ என்னை அடக்கி ஒடுக்க முடியாது என் விருப்பப்படி நடந்து கொள்ள எனக்கு முழு உரிமையும் இருக்கிறது எனக்காக பிறர் முடிவெடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்”” என்று வசை பாடியவர்களை வாயடைக்க செய்த புரட்சி வீராங்கனை மணலூர் மணியம்மாள் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சாதித் தீண்டாமை எதிர்பாளர் ,பெண்ணியலாளர் ,வர்க்கப் போராட்டக்காரர் என பன்முகம் கொண்டவர் .ஆண்களைப் போல் வேட்டியும் மேல் சட்டையும் அணிந்திருப்பார் முடியை வெட்டி கிராப் வைத்திருப்பார் சைக்கிளில் பயணிப்பவர்.

         இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பெண்களின் பங்கு மகத்தானது  ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று இருந்தாலும் அது வரலாற்றில் சரிவர எழுதப்படாததால் வெளி உலகத்திற்கு தெரியாமலே போய் விடுகிறது .அந்த வகையில் பெண் விடுதலைப் போராளிகளை பற்றி நமக்கு இன்றைய காலகட்டத்தில் அறிமுகப்படுத்தி சுதந்திர தாகத்திற்காக பெண்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய போராட்டத்தை நமக்கு நினைவுபடுத்தும் ஆசிரியரின் இந்த நூல் சிறப்பான வரலாற்று நூல்.

Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here