nool arimugam : valarilam paruvathinarukkana ongil kootam noolkal - i.p.sindhan நூல் அறிமுகம் : வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் - இ.பா.சிந்தன்
nool arimugam : valarilam paruvathinarukkana ongil kootam noolkal - i.p.sindhan நூல் அறிமுகம் : வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் - இ.பா.சிந்தன்

நூல் அறிமுகம் : வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள் – இ.பா.சிந்தன்

வளரிளம் பருவத்தினருக்கான ஓங்கில் கூட்ட நூல்கள்

தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் நிறைய வெளிவருகின்றன. குழந்தைகள் நூல் என்று பொதுவாக அடையாளப்படுத்தப்பட்டு சிறார் நூல்கள் வருவதுண்டு. அவற்றை வாசித்துப் பார்த்தால் பொதுவாகவே 12 வயதுக்குக் கீழே உள்ளவர்கள் வாசிக்கும் வண்ணம்தான் உருவாக்கப்பட்டிருக்கும். மிகச்சமீபத்தில்தான் நூல்களை வயதுக்கேற்ப அடையாளப்படுத்தும் வழக்கம் நம்மிடம் அதிகரித்திருக்கிறது. அப்படியாக அடையாளப்படுத்தும்போதுதான், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான நூல்கள் போதுமான அளவில் இல்லையென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குழந்தைகளா என்று கேட்டுவிடாதீர்கள். இந்த சமூகத்தில் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு கிடைக்கப்பெறாத 18 வயதுக்குக் கீழே இருக்கிற அனைவரும் குழந்தைகள்தான். 18 வயதுக்குக் கீழே இருக்கிற குழந்தைகளால் இந்த சமூகத்தில் வாக்களிக்க முடியாது, சட்டத்தை மாற்ற முடியாது, சட்டத்தைத் தீர்மானிக்க முடியாது, அரசு அலுவலகங்களில் பணிபுரிய முடியாது. இப்படியாக சமூகத்தின் எவ்வித முடிவெடுக்கும் அதிகாரமும் இல்லாதவர்கள்தான் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். ஆகவே அவர்கள் அனைவரும் குழந்தைகள்தான். அப்படித்தான் ஐநா சபையும் சொல்கிறது. உலக அரசுகளும் சொல்கின்றன.

அப்படி இருக்கும்போது இந்த 12 வயதுக் குழந்தைகளை நாம் ஏன் கண்டுகொள்வதே இல்லை? நாம் கண்டுகொள்ளாததால் அவர்கள் என்ன ஆகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறோமா?

12 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் இலக்கியத்தின் பக்கம் வராமல் இருப்பதற்கும், புத்தக வாசிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்கும் பெரியவர்கள் சொல்லும் காரணங்களைப் பார்த்தாலே பல உண்மைகளை நாம் புரிந்துகொள்ளலாம்.

1. ‘இந்த டீனேஜ் பசங்க இருக்காங்களே… எப்பவும் போனும் கையுமா தான் இருப்பாங்க. வாட்சப், ஸ்னாப்சாட், இன்ஸ்டான்னு அதுலயே இருந்தா எப்படி புக்கு படிப்பாங்க’ என்பது பெரியவர்களின் முதல் வாதம். ஆனால் உண்மை என்னவென்றால், செல்போன் அடிமைத்தனம் என்பது குழந்தைகளின் பிரச்சனை மட்டுமில்லை. அதற்குப் பின்னால் ஒரு சர்வதேச சந்தை இருக்கிறது. நம்மை எப்படியெல்லாம் அடிமையாக வைத்து, நம்மை சுரண்டலாம் என்று உலகின் மிகப்பெரிய ஆய்வாளர்களின் உதவியுடன் செய்யப்படுகிற முயற்சிகளின் காரணமாகத்தான் நாமெல்லாம் செல்போன் அடிமைகளாக இருக்கிறோம். அது குழந்தைகளை மட்டுமில்லாமல் பெரியவர்களையும்தான் பாதிக்கிறது. குழந்தைகள் எப்போதும் போனும் கையுமாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்லும்போதே நம் வீட்டுக் கண்ணாடியில் ஒருமுறை நம்மை நாமே பார்த்துக்கொண்டு சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். இவர்கள் சொல்வதைப் பார்த்தால், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளின் காலையில் 5.45 இல் மணியில் இருந்து 6.45 வரையிலும் மட்டுமே பெரியவர்கள் போனை பயன்படுத்திவிட்டு, அதன்பிறகு அந்த போனை அப்படியே பீரோவில் பூட்டி வைத்துவிட்டு, மீண்டும் அடுத்த மாதம் ஒன்றாம் தேதியன்றுதான் திரும்பவும் அந்த போனை எடுப்பார்கள் என்பது போலவே பெரியவர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் போனைப் பயன்படுத்துகிறோம் என்கிற விவரத்தை எடுத்துப்பார்த்தாலே, குழந்தைகளைவிடவும் பெரியவர்கள்தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்துவிடும்.

2. இரண்டாவதாக சொல்லப்படும் காரணம் என்னவென்றாஅல், ‘12 வயசு தாண்டிருச்சின்னா, ஸ்கூல் புத்தகத்தைத் தவிர வேற எதையும் படிக்கக் கூடாது. ஏன்னா அடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருது. அதுக்கப்புறம் 12 ஆவது பொதுத்தேர்வு வரும். அதனால் அதுக்கெல்லாம் படிக்கவே நேரம் போதாது. வேணும்னா கல்லூரி போனபிறகு படிச்சிக்கட்டும்’ என்கிறார்கள் பெரியவர்கள். ஆக, 12 வயதில் இருந்து 18 வயது வரைக்கும் பள்ளிக்கூட நூல்களைத் தவிர வேறு எதையுமே படிக்காமல் ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே அறிவை முடக்கிட வேண்டும் என்பதாக அவர்களை அடைத்துவிடுகிறோம்.

3. மூன்றாவதாக சொல்லும் காரணம் என்னவென்றால், ‘அட நீங்க வேற. 12 வயசுக்கு மேல உள்ள குழந்தைங்க படிக்கிறதுக்குலாம் நூல்களே இல்லை. தமிழில் அதெல்லாம் எங்கே வருது? ஆங்கிலத்துல நிறைய வருது. எதுவுமே இல்லன்னா எப்படி படிப்பாங்க குழந்தைங்க’ என்று பலரும் சொல்வதைக் கேட்க முடியும்.

இந்த மூன்று காரணங்களில் முதல் இரண்டு காரணங்கள் என்பது பொதுவாக நம் சமூகத்தில் இருக்கிற பெரிய காரணங்கள். அவற்றை ஒரேநாளில் சரி செய்துவிட முடியாது. தனிநபர்களாலும் மாற்றிவிட முடியாது. ஆனால் இந்த மூன்றாவது வாதத்தை நாம் முயற்சி செய்தால் கொஞ்சமேனும் சரி செய்யலாம். ‘12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான நூல்களே இல்லை. நூல்களே இல்லை. இல்லவே இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதற்கு பதிலாக, அவற்றை உருவாக்குவதற்கான சிறிய முயற்சியையாவது எடுத்து, ஒரு படியாவது முன்னேறினாலே பெரிய சாதனைதான்.

அதைத்தான் பஞ்சுமிட்டாய் பிரபுவின் முன்முயற்சியால் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய ஓங்கில் கூட்டம் என்கிற அமைப்பு செய்துவருகிறது. 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கான நூல்களை மட்டுமே உருவாக்குவதுதான் அந்த அமைப்பின் குறிக்கோள். அதனை முதலில் அமேசான் கிண்டிலில் வெளியிட்டுவிட்டு, பின்னர் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரனின் பதிப்பாக வெளியிடுகிறார்கள்.

இதுவரை 25 நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள். 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நூல் வெளியிட வேண்டுமென்றால், அந்த வயதுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதுதான் மிகமுக்கியம். ஒரு 5 வயது குழந்தையிடம், ‘ஒரு காட்டில் ஒரு புலி இருந்திச்சா. அது ஒரு யானையைப் பாத்து என்ன சொல்லிச்சின்னா…’ என்று கதை சொன்னால், நிச்சயமாக அந்த 5 வயசு குழந்தை நன்றாக இரசித்துக் கேட்கும். ஆனால் அதுவே ஒரு 12 வயசு குழந்தையிடம் அதே கதையை சொல்லிப்பாருங்களேன். “புலி எப்படிப் பேசும்? அப்படியே பேசினாலும் அது எப்படி யானைக்குப் புரியும்?” என்று நேராகவே கேட்டுவிடுவார்கள். அதுக்கு மேல் கதையையும் படிப்பார்களா என்பது சந்தேகமே.

ஆக, 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைங்களுக்கு என்னவெல்லாம் சொல்வது சரி, எதையெல்லாம் அவர்களிடம் பேசமுடியும் என்பதையெல்லாம் கவனமாகப் பார்க்க வேண்டும். இதற்கு சர்வதேச உதாரணங்கள் இருக்கின்றனவா என்று கேட்டால், நிறைய இருக்கிறது.

இரஷ்ய குழந்தைகள் இலக்கியத்தில், 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கம்யூனிசம் உள்ளிட்ட பல தத்துவங்களைப் பற்றியெல்லாமும் கூட நேரடியாக எழுதுகிறார்கள். அதுவே தென்னமெரிக்க நாடுகளில் வெளியாகிற இலக்கியங்களில், அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஸ்பெயின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று அரசியலை எல்லாம் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளிடம் புத்தகங்கள் வழியாகப் பேசுகிறார்கள். வடகொரிய சிறுவர் இலக்கிய நூல்களுமே கூட அப்படித்தான். வடகொரியாவின் முந்தைய அதிபராக இருந்த கிம் யொங் இல் என்பவர் பல சிறார் நூல்களை எழுதியிருக்கார். அதில், கடவுள் நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பும் விதமான நூல்கள், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக எப்படித் தயாராக இருப்பது எனச்சொல்லும் நூல்கள் நிறைய வெளியாகிருக்கின்றன. அப்படியே ஐரோப்பிய நூல்களைப் பாத்தோமென்றால், தனிமனித சுதந்திரத்தை அந்தந்த வயதிற்கு ஏற்றமாதிரி கதை வழியாகச் சொல்கிறார்கள். ஓர்பாலின ஈர்ப்பு, திருநர் திருநங்கையர்கள் பற்றிய தகவல்களை இலைமறை காயாக அந்த வயது குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்கள். வீட்டிலும், தன்னுடைய நட்பு வட்டத்திலும், சொந்த பந்தத்திலும் இறப்புகள் நடந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைக்கூட கதை வழியாக சொல்கிறார்கள். அதேபோல, அம்மாவும் அப்பாவும் விவாகரத்து செய்துகொண்டால், அதை குழந்தைகளுக்குப் புரியவைக்கிற நூல்கள் கூட அந்த வயதினருக்கு ஐரோப்பாவில் வெளியாகின்றன.

ஒவ்வொரு நாட்டிலும் 12 வயதுக்கு மேலுள்ள குழந்தைகள் வாழும் சூழலும், அங்குள்ள பிரச்சனைகளும் வேறுவேறாக இருக்கிறதென்பதால், அதற்கேற்ற மாதிரியான கதைகளை அந்தந்த நாடுகளில் நூல்களாக எழுதுகிறார்கள்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *