“விடுதலைத் தழும்புகள்“
நூல் : விடுதலைத் தழும்புகள்
ஆசிரியர் : சு.பொ.அகத்தியலிங்கம்
வெளியீடு :
2021 பாரதி புத்தகாலயம்
1998 தமிழ்ப் புத்தகாலயம் விலை : ரூ. 545.
ஆகச்சிறந்த ஊடகவியலாளர், எழுத்தாளர், தீக்கதிர் பொறுப்பாசிரியர் என பல தளங்களில் மிகச்சிறப்பாக உழைத்திட்ட தோழர் சு.பொ.அகத்திலியங்கம் Su Po Agathiyalingam அவர்கள் 1998ல் எழுதிய ஆகச்சிறந்த நூல் தான் “விடுதலைத் தழும்புகள்”.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து நமக்கு வழங்கியிருக்கிறார். பல வரலாற்று நூல்களில் சுதந்திரப் போராட்டச் செய்திகளில் தமிழகத்தின் பங்கு குறைவாகவே காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்நூலில் தமிழகத்தின் எந்த மூலையில் யார் ஒருவர் போராட்டத்தில் குதித்திருந்தாலும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். இது நூலுக்கு கூடுதல் சிறப்பு. மேலும் நாம் பள்ளியில் துண்டு துண்டாகத்தான் சுதந்திரப் போராட்ட செய்தியை படித்திருப்போம். இந்நூலில் நாம் இளம் வயதில் படித்த இரண்டு மார்க் விடையெல்லாம் விரிவாக படித்தறியலாம். நமக்கு அதிகம் தெரிந்த வரலாறு ஒத்துழையாமை இயக்கம், அகிம்சை போராட்டம் இப்படி மகாத்மா காந்தியடிகள் கண்டெடுத்த போராட்டத்துடன், பிரிட்டிஷாரின் கொடுமையான ரௌலட் சட்டம், மக்களின் கிலாபத் இயக்கம் போன்ற எண்ணற்ற போராட்ட வடிவங்களை முழுமையாக அறிந்துகொள்ளலாம். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பல நூல்களை தேடி அலைந்து படிப்பதையும் விட இந்த ஒரு நூலிலே அ முதல் ஔ வரை சுதந்திரப் போராட்டத் தழும்புகளை ஒருங்கே காணலாம் வாசிக்கலாம். வாசிப்பது மட்டுமல்ல நம் உள்ளத்தில் சுதந்திரத் தீ என்றும் மாறாமல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும்.
252 தழும்புகள் தலைப்புகளாக வடிவெடுத்து தீக்கதீா் நாளிதழில் தோழர் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.
இந்நூலுக்கு விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் அணிந்துரையும், கல்வியாளர் பேராசிரியர் வே.வசந்திதேவி அவர்களின் முன்னுரையும் நூலுக்கு முத்தாய்ப்பு அணிந்துரை.
1998ல் எழுதப்பட்ட நூல் பாரதி புத்தகாலய வெளியீடாக 2021ஆகஸ்டில் வந்தபோது தான் அதுவும் மதுரை புத்தகக் கண்காட்சியில் 2022ல் கண்ணில் பட்டது. அதுமுதல் தொடர்ந்து வாசித்து வந்தேன் சீரியலாக. மறுபடியும் மறுபடியும் வாசித்த பின்புதான் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் தோழர்களே.
அப்பப்பா போராட்ட வீரர்களின் எவ்வளவு நிஜ மாந்தர்களை நமக்கு காட்டியிருக்கிறார்!
இந்நூல் இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக்கொண்டிருப்பார். இளையவர்களோடு முதியவர்களும் வாசிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பில் இடைவெளி இருக்கிறது. வாசிப்பது மட்டுமல்ல அனைவரின் வீட்டு நூலகத்திலும் இந்நூலுக்கு இடஒதுக்கீடு அளித்து அந்த ஒதுக்கீட்டை இழக்காமல் அடுத்தவரும் பயன்படுத்த அதாவது வாசிக்க உதவ வேண்டும்.
மிகச்சிறப்பான விடுதலைத் தழும்புகளை தொகுத்து 592 பக்க ஒரே நூலாக வழங்கிய தோழருக்கு மனமார்ந்த நன்றி!
குடும்பத்தில் கூட்டாட்சி முதல் புரட்சிப் பெருநதி ஈராக இன்னும் அதையும் தாண்டி நிறைய நூல்களை நமக்கு வழங்கிய தோழரின் இந்நூல் நமக்கு பொக்கிஷமே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.