புத்தக விமர்சனம்
தோழர் சொ.பிரபாகரன் ‘ராமசேஷன் என் நண்பன்’ என்னும் நாவலை மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
சொ.பிரபாகரன் இதற்கு முன் ‘நாய் சங்கிலி’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும், ‘மறைக்கும் மாயநந்தி’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். சர்வதேச மகளிர் தினம் உருவாவதில் முக்கிய பங்காற்றிய அலெக்சாண்டிரா கொலண்டையின் நான்கு நாவல்களை ‘காதல்’ என்ற தலைப்பில் தமிழில் கொண்டுவந்திருக்கிறார். அறிவியல் இயக்கம் சார்பாக அ.வள்ளிநாயகம் அவர்களுடன் இணைந்து பாரதி புத்தகாலயத்திற்காக டோட்டோசான் சன்னலிலே சின்னஞ்சிறுமி என்ற புகழ்பெற்ற ஜப்பானிய செவ்வியல் குழந்தை இலக்கியத்தை அளித்துள்ளார்.
‘நாய் சங்கிலி’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட மருதா பதிப்பகத்தார், ‘ராமசேஷன் என் நண்பன்’ என்னும் இந்த நாவலையும் தானே வெளியிடத் தயாராய் இருப்பதாகக் கூறவே அவர் மூலம் இதனையும் வெளியிட்டிருக்கிறார்.
ராமசேஷன் என் நண்பன் நாவல், மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைகளை, அவர்களது பண்பாடு, அறம், அரசியல், இயங்கியல் குறித்து அலசுகிறது. இதன் கதைமாந்தர்களை, சொ.பிரபாகரன் மிகவும் அற்புதமாகவே சித்தரித்திருக்கிறார். குறிப்பாக ராமசேஷன், மிசஸ் ராமசேஷன், பிரபாகரன், சமிக்ஷா முதலானவர்களின் குணாதிசயங்களை மிகச் சிறந்த சிற்பி செதுக்கியிருப்பதுபோலவே செதுக்கியிருக்கிறார்.
சமீபத்தில் மாதவராஜ் எழுதிய ‘கிளிக்’ நாவல் படித்தபோது, பூங்குழலி எப்படி நம் நெஞ்சைவிட்டு வெகுகாலத்திற்கு நீங்கமாட்டாரோ அதேபோன்றே இந்நாவலில் வரும் சமிக்ஷாவும் நம் நெஞ்சை விட்டு நீங்க மாட்டார்.
ஓர் ஆணாதிக்க சிந்தனை வலுவாக இருந்திடும் ஒரு சமுதாயத்தில், ஆண்கள் குறைவாகவும், பெண்கள் அதிகமாகவும் சம்பாதித்திடும் நிலை உருவாகும் குடும்பங்களில் கணவன்-மனைவிக்கிடையே உருவாகும் பிரச்சனைகளை மிகவும் சிறப்பாகவே சொ.பிரபாரகன் இதில் கையாண்டிருக்கிறார்.
பணத்தை எப்படியாவது தன் மனைவியைக் காட்டிலும் அதிகமாக சேர்த்திட வேண்டும் என்ற வெறியுடன் பல்வேறு சில்லரைத்தனமான காரியங்களில் ஈடுபடும் ராமசேஷன் கடைசியில் தான் சீரழிந்து சின்னாபின்னமானபின்னர் தன் தவறை உணர்கிறார்.
இதேபோன்றே கதைமாந்தர்கள் ஒவ்வொருவரையும் தனி வார்ப்பாக சொ.பிரபாகரன் சித்தரித்திருக்கிறார்.
ஜெயகாந்தன் கதைகள் வெளியாகி சுமார் ஐம்பதாண்டுகளாகிவிட்டன. அவருடைய கதைகளில் பல இப்போதும் நம் நெஞ்சைவிட்டு நீங்காது இடம் பெற்றிருக்கின்றன. கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள் நம்முடன் ஒட்டி உறவாடிக்கொண்டே இருக்கின்றன. அதேபோன்றே இந்நாவலில் வரும் ராமசேஷன், பிரபாகரன், சமிக்ஷா போன்றோரும் நம்மைவிட்டு நீங்க வெகுகாலம் பிடித்திடும்.
ராமசேஷன் – பிரபாகரன் எப்படி நண்பர்களானார்கள்? ராமசேஷன் அகில இந்திய அளவில் இயங்கிடும் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரிகள் மட்டத்தில் இருப்பவர். பிரபாகரன் அந்த நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது நேர்காணலுக்கு வந்திருப்பார். ஆரம்பத்தில் மோதலுடன் ஆரம்பிக்கும் இவர்களின் சந்திப்பு, படிப்படியாக நட்பாக மாறுகிறது. இதனை மிக நுட்பமாக சித்தரித்திருக்கிறார்.
அதேபோன்றே முற்போக்குவாதியான பிரபாகரனை, சமிக்ஷா சந்திப்பதையும் அவர்களிடையே அரும்பி, மலர்ந்திடும் நட்பையும் மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
ராமசேஷன் தம்பதியரின் வாழ்க்கையையும், பிரபாகரன்-சமிக்ஷா தம்பதியரின் வாழ்க்கையையும் படித்துப்பாருங்கள்.
-ச. வீரமணி.
ராமசேஷன் என் நண்பன் (நாவல்)
ஆசிரியர்: சொ. பிரபாகரன்
வெளியீடு:
மருதா, 77, தாமரை தெரு, பிருந்தாவன் நகர்
கோயம்பேடு மார்க்கெட் பின்புறம், பிருந்தாவன் நகர்,
சென்னை – 600 092.
செல்போன்: 9500061608, 9382116466.
மின்னஞ்சல்:[email protected]
பக்கங்கள் : 80, விலை : ரூ.80/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.