Subscribe

Thamizhbooks ad

நூல் விமர்சனம் : காணாமல் போனவர்கள் யார் யார்? – புதியமாதவி, மும்பை


காதலும் வீரமும்தான் படைப்பின் வற்றாத ஊற்று. இது மொழிகள் கடந்து தேச எல்லைகள் கடந்த படைப்பு சூத்திரம். ஆனால் காதலும் வீரமும் மாறிக்கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கிறது என்றால் நான் அப்படி சொல்வது கூட கலாச்சார காவலர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆனால் பிரபஞ்சத்தின் மாற்றமுடியாத விதிகளில் ஒன்று
எது எதெல்லாம் ஜீரணமாகாதோ எதை எல்லாம் செரிக்க முடியாதோ அதை எல்லாம் காலம்  வாந்தி எடுத்து வெளியேற்றிவிடும்.

நேற்று நினைத்தக் காதல் இன்று இல்லை. காதலும் மாறும், காதலர்களும் மாறலாம். அப்படி மாறிக்கொண்டே இருப்பதால்தான் இன்றுவரை கவிதைகளின் பாடு பொருளாக காதல் மாறாமல் இருக்கிறது. நேற்றைய வீரம் இன்று இல்லை. அன்றைய போர்க்களம் இன்று இருக்கிறதா? வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவனையும் சுட்டுக்கொன்ற துப்பாக்கிகளுக்கு என பெரிதாக வீரம் இருந்துவிட முடியும்? அதை வெற்றி என்று யாரால் கொண்டாட முடியும்?

வீரம் என்று சொன்னவுடன் தன் மகன் புறமுதுகிட்டான் என அறிந்த புற நானூற்று தாய் அவனுக்குப் பாலூட்டிய என் முலைகளை  அறுத்து எறிவேன் என்று புறப்பட்ட கதையை இன்றுவரை மேடைகளில் முழங்கி முழங்கி கொண்டாடிக்கொண்டிருப்பவர் நாம். தாய்மையின் வீரத்தைக் கொண்டாடும்
நாம் அறிந்திருக்கவில்லை போர்க்காலத்து தாயின் அவஸ்தையை. இந்திய ஒன்றியத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு எப்போதோ எழுதி வைத்த;புற நானூற்று தாய் தான் பேசுபொருளே தவிர இன்றைய நம் சமகால அக நானூற்று தாய் நினைவுக்கு வருவதில்லை.  இன்றைய முள்ளிவாய்க்கால் போர்த்தின்ற சனங்களின் கதையில் நாம் கேட்கும் தாயின் குரல்  நாம் மேடைகளில் முழங்கும் புற நானூற்று தாயின் பிம்பங்களை சிதைக்கிறது.

நானொரு தாய்
போராட என்னை அழைக்காதே
கொலையுண்டுப்போன எம் புதல்வர்களின்
முற்றாப் பிஞ்சுடலின் ஊனருந்தி
தன் கோரப்பசியாற்று
தாகம் தீர சென்னீரும் குடித்தப்பின்
இன்னுமா தாய்நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?
கடித்துக் குதறி, 
நெரித்தும் எரித்தும்
வடக்கிலும் தெற்கிலும்
உலகெங்கிலுமாக
எத்தனைக் குஞ்சுகளை
விழுங்கிவிட்டாய்
இன்னும் அடங்காத உன் பசி?
நானொரு தாய்
என் மழலைகளை விடு
நாளைய உலகம்
அவர்களுக்கானதாய் மலரட்டும்.. “

எனதருமை தோழி இன்று கனடாவில் வாழும் இன்றைய ஓளவை எழுதிய
இன்றைய புறநானூற்று தாய் இவள்.
இதை எல்லாம் செய்திகளாக, காட்சிகளாக கையறு நிலையில் பார்த்துக்கொண்டு நின்றவர்கள்தான் நீங்களும் நானும். இத்தருணத்தில்
“காணாமல் போனவர்கள்” நண்பர் சண்தவராஜின் கதைகளாக நம்மிடம் பேசுகின்றபோது இது காணாமல் போனவர்களின் வாக்குமூலம். இவர்கள்
காணாமல் போனவர்கள் அல்லர். இவர்கள் “காணாமல் ஆக்கப்பட்டவர்கள்”
இவர்கள் தொலைந்துப்போன மனிதர்கள் அல்லர். உங்களாலும் என்னாலும்
தொலைக்கப்பட்ட மனிதர்கள்.

காணாமல் போனவர்கள் இப்பக்கத்தைக் கையில் ஏந்தி நிற்கும்போது கனக்கிறது. , காரணம் உண்மையில் இப்போது
குற்றவாளிக் கூண்டில் நிற்பது  நானும் தான். இதைப் பற்றி நான் என்ன பேசட்டும்?  எதைப் பேசட்டும்? மன்னிப்பாயா. என்றா!
காலம் கடந்து கேட்கும் மன்னிப்புகளுக்கு அர்த்தமில்லை. அதில்  மனிதாபிமானமும் இல்லை.
எதையும் எங்களால் எழுதிவிட முடியும் .ஆனால், இந்தக் கதைகளை எழுத சண்தவராஜ் போன்றவர்களால் மட்டுமே முடியும்.
போர்க்கால இலக்கியம் war literature என்ற இலக்கிய வகையை இன்றைய தமிழ்ப் படைப்புலத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் நம் ஈழத்தமிழர்கள்தான்.

போர் இலக்கியத்தின் கூறுகளை வரையறை செய்தவர்கள் அப்படைப்புகளைப் பற்றி சொல்லவரும்போது அந்த எழுத்துகள்
The impacts of war on individuals , communities, culture and human values என்று சொல்கிறார்கள். அதாவது போரும் போர்ச்சூழலும் தனிமனிதனிடம் அவன் சமூகத்திடம் அவன் கலாச்சாரத்துடன்  அவனுடைய மனித விழுமியங்களிடம் ஏற்படுத்திய பாதிப்புகளை தாக்கங்களைப் பேசுவது போர் இலக்கியம் . காணாமல் போனவர்கள் கதை தொகுப்பில் இந்தக் கூறுகள் அனைத்தும் படைப்பு வெளியில் வெளிப்பட்டிருப்பதால் இத்தொகுப்பு
“போர் இலக்கிய” வகைப்பாட்டுக்குள் அடங்கும்,

இத்தொகுப்பின் முதல்கதையான “காணாமல் போனவர்கள் “ கதையை எடுத்துக்கொள்வோம். சண்தவராஜ் எழுதுகிறார் ..(பக் 47)
“செத்தவனுகள உயிரோடிருக்கிறானுக எண்டு சொல்லிக் கொள்ளையடிக்கிற கூட்டம் ஒரு பக்கம், காணாமல் போனவனுகள வச்சி அரசியல் செய்யற கூட்டம் இன்னொரு பக்கம் “
இந்த வரிகள் போர் சமூகத்தில் ஏற்பட்ட சமூக பாதிப்புகளைப் பேசுகின்றன.
“புருஷனக் காட்டுறன் எண்டு மல்லிகாவக் கூட்டிப்போறவன் என்னென்ன செய்வானோ “
இந்த வரிகள் அச்சமூகத்தின் கலாச்சாரத்திலும் வாழ்க்கை  விழுமியத்திலும் ஏற்படுத்திய பாதிப்புகளைக் காட்டுகிறது.

கதை முடிவில்
“மகளை ஆரத் தழுவிக்கொள்கிறேன்……… கண்கள் பனிக்கின்றன. எனது மகளை நினைத்தும் என் நினைவில் இருந்து ‘காணாமல் போன’ இளைஞர்களை நினைத்தும் கூடவே என்னுள் காணாமற்போகும் ‘நியாயவாதியை’ நினைத்தும்”
இந்த வரிகளில் வெளிப்படுவது ஒரு தனிமனித உணர்வு. படைப்பின் வழி அதுவே ஒட்டுமொத்த தனிமனித திரளின் உணர்வாக திரண்டு எழுந்து நிற்கிறது. அந்த திரட்சி தான் ‘காணாமல் போனவர்கள்’ கதை தொகுப்பின் அனைத்து கதைகளின் ஊடாக வெளிப்படுகிறது. காணாமல் போனவர்கள் ஒட்டுமொத்த தொகுப்பையும் “காணாமல் போனவர்கள் “ என்ற ஒற்றை மையப்புள்ளிக்குள் கோர்த்துவிட முடியும் என்பதே இத்தொகுப்பின் தனிச்சிறப்பு.

முதல்கதை காணாமல் போனவர்களின் போர் இலக்கிய கூறுகளை விவரித்தேன். இத்தொகுப்பின் இரண்டாவது கதை ‘பயங்கரவாதி’
கதையில் ராணுவத்தினரோடு  நடந்த மோதலில் குண்டடிப்பட்டு இறந்துப்போன ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனைப் பற்றிய செய்தி எப்படி வெளிவருகிறது என்றால் “அவன் பயங்கரவாதி “ என்று. சண்தவராஜ் எழுதுகிறார் அக்கதையில், “ சத்தியமாகச் சொல்கிறேன், அவன் ஒரு பயங்கரவாதி என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன் “ என்று.
இக்கதையில் “காணாமல் போனவர் யார்? வாசகன் தேடிக் கண்டடைய வேண்டியது இவனைத்தான். பயங்கரவாதியின்   நிஜமுகம் காணாமல் போய்விட்டது.
பயங்கரவாதியின் அசல் முகவரி காணாமல் போய்விட்டது.
காணாமல் போன இந்த நிஜங்களிலிருந்து ஒரு 10 வயது சிறுவனைக்கூட
பயங்கரவாதியாக சித்தரிக்க முடியும் என்றால் உண்மையில்
“யார் பயங்கரவாதி?”
கதை 3. விழி மூடா உறக்கம் – என்ற கதையில் நேற்று ‘வாழ்க’ என கோஷம் போட்டவன் , இன்று ‘ஒழிக’ என கோஷம் போடுகிறான். இத்தகைய தலைகீழ் மாற்றம் சாத்தியமா? அல்லது அவர்கள் வேறு! இவர்கள் வேறா?
சண்தவராஜ் எழுதி இருப்பது போல இதை எல்லாம் “சொல்லிப் புரியவைக்க
முடியாது, கண்ணன் ஏன் மாறிப்போனான்? “(பக் 67)
“சில விடயங்களை நினைத்தாலும் பகிரங்கமாக வெளியில் சொல்ல முடிவதில்லை” என்ற ஒற்றை வரியில் கண்ணன் காணாமல் போனது ஏன் ? என்று வாசகனுக்குப் புரிய வைத்துவிடுகிறார் சண்தவராஜா.

கல்நெஞ்சக்காரி – கதையில் காணாமல் போனது குடும்பத்தலைவன்.
நிலைமாறும் உலகில் – கதையில் காணாமல் போனது ஒரு பெண் மட்டுமல்ல, காணாமல் போனது ஒருவனின் மனைவி, ஒரு குழந்தையின் தாய். இருத்தலுக்கான போராட்டத்தில்  நிலைமாறும் உலகில் முதலில் தன்னைத்தானே காணாமல் ஆக்கிக்கொண்டு தொலைந்துப்போவது பெண்ணாகத்தான் இருக்கிறாள்.
நாட்டு நடப்பு –  கதையில்  காணாமல் போனது வேறு யாருமல்ல, தமிழனே காணாமல் போய்விடுகிறான். யாழ்ப்பாணத்துக்காரனாக, மட்டக்களப்புக்காரனாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்கிறானே தவிர
இவன் தமிழனாக என்றுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.
இது தமிழ்ச்சாதியின் சாபம். தமிழனின் தனிக்குணம் என்று சண்தவராஜும் எழுதுகிறார். கடல் கடந்து அகதியாக தஞ்சம் புகும் பனிப்பிரதேசத்திலும் கூட
அவன் மட்டக்களப்புக்காரனாக யாழ்பாணவாசியாக மட்டுமே எஞ்சி நிற்கிறான். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “பொய்மையும் வாய்மையுடைத்து’ சிறுகதை எனக்கு இதற்கு முன் எழுதப்பட்ட சில கதைகளை நினைவூட்டியதுடன், அக்கதைகளின் இரண்டாம் பாகமாகவே இக்கதையை என் வாசிப்பனுபவத்தில் உணர்கிறேன்.

‘அம்மானைக் கும்பிடறானுகள்’ சிறுகதை தொகுப்பு 1994ல் வெளிவந்தது.
இதன் இரண்டாம் பாகமாக அடுத்த ஆண்டு, 1995ல் ‘வில்லுக்குளத்துப் பறவைகள்’ சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. இரண்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீடாக வந்தன, அக்கதைகள் இந்திய அமைதிப்படையும் இலங்கை இராணுவமும் இலங்கை மண்ணில் நடத்திய அராஜங்களை அதிலும் குறிப்பாக பெண்கள் அனுபவித்த சித்திரவதைகளை
பாலியல் வல்லாங்குகளை அவமானப்பட்டதை, அவர்களின் நிர்வாணத்தை
போரின் கொடூரமாக முன்வைத்தன.

இவை சிதைக்கப்பட்ட பெண்ணுடலை
போர்த்தின்ற சனங்களின் கதைகளாக பேசின. அவ்வளவுதான். அடுத்து என்ன? What is next? போர்ச்சூழலில் ஒரு பெண்ணுடல் நிர்வாணப்படுத்தப்பட்டால் அவமானப்படுத்தப்பட்டால் பாலியல் கொடுமையை அனுபவித்துவிட்டால்.. அடுத்து அவள் கதி என்ன? இதெல்லாம் நடந்துவிட்டால் அவள் செத்துதான் போகனுமா? அவளுக்கு எதிர்காலம் இல்லையா? அவள் வாழ்வதற்கான உரிமை கிடையாதா? அவள் காதல் அர்த்தம் இழந்துவிடுமா? செத்துப்போனால் புழுவும் பூச்சியும் அரித்து தின்னும் இந்த உடல்தான் வாழ்க்கையா? அவள் மானம் போய்விட்டதாக கருதும் இச்சமூகம் the so called கற்பு கடலைப்புண்ணாக்கு ஊசிப்போகிற பண்டமா! இதற்கெல்லாம் அவள் எப்படி பொறுப்பாக முடியும்? யார் குற்றவாளி? இங்கே காணாமல் போய்விட்டது  யார்? எது? வாசகனுக்கு இதை எல்லாம் நேரடியாக சொல்லாமல் கதை ஓட்டத்தில் காட்சி வடிவத்தில் ஏற்படும் மன நிலை மாற்றங்களுடன் எழுதப் பட்டிருக்கிறது இக்கதை. இக்கதையின் வடிவம் ஒரு குறும்படத்திற்கான  காட்சிகளாக
Frame by frame விரிகிறது. கதையும் களமும் ஒரு குறு நாவலுக்கானது. அதை ஒரு சிறுகதையாக்கி இருக்கிறார் சண்தவராஜா.

போராளிகள் அதிலும் குறிப்பாக பெண் போராளிகளின் நுண்ணிய உணர்வுகளை மிகவும் கச்சிதமாக வடித்திருக்கிறார் கட்டுரையாளர் .
இத்தொகுப்பில் இரண்டு வித்தியாசமான சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கல்நெஞ்சுக்காரி, இன்னொன்று ஆம்பிளபுத்தி.
இரண்டு கதைகளுமே பெண்ணியத் தளத்தில் பேசப்பட வேண்டியவை கதைகள். இக்கதைகளை ஓர் ஆண் எழுதி இருப்பதும், ஆண் மைய சமூகத்தின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தும் விதமும் ஹைலைட்.
தன் மனைவி பிறிதொரு ஆணுடன் கொண்ட உடலுறவை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அதை தன் நண்பர்களுக்கு காட்டிக் கொண்டு அலைகிறான் கணவன். அந்த உரையாலில் இடம்பெறும் வரிகள்,
‘டேய், முதலில் அவள வேச எண்டு சொல்லுறத  நிப்பாட்டு. நீ என்ன சுத்தமான ஆளே, உண்ட விளையாட்டு எல்லாம் எனக்குத் தெரியாதா?”
“ அண்ண, நான் ஆம்பிளையண்ணே, சேத்தக் கண்ட இடத்தில மிதிப்பன், தண்ணியக்கண்ட இடத்தில கழுவுவன்”
“ ஏன், சேத்தக் கண்ட இடத்திலதான் மிதிப்பிங்களோ? ஆசிட்டக் கண்ட இடத்தில மிதிக்க மாட்டீங்க? இந்த இத்துப்போன கதைய என்னட்ட கதைக்காத, உனக்கு விருப்பம் எண்டா நீ ஊர் முழுக்க மேய்வாய். அவளுக்கு விருப்பம் எண்டா அவள் இன்னொருத்தனோட போனா உனக்கென்ன ரோசம் வருகுது?”
“ நான் மகாத்மா இல்லடாப்பா, சாதாரண மனுசன். ஆனா எனக்கும் பொஞ்சாதி புள்ளைங்க இருக்கு. பெண் சகோதரங்கள்  இருக்கு. உன்ர அக்கா, தங்கச்சி இப்படி நடந்திருந்தா நீ இப்படி வீடியோவைத் தூக்கிக்கொண்டு காட்டித் திரிஞ்சிருப்பியா?”
(பக் 132)

சண்தவராஜாவுக்கு வாழ்த்துகள்.
காணாமல் போனவர்கள் கதை தொகுப்பில் கட்டுரை தொனி எட்டிப்பார்ப்பதை சண்தவராஜா தவிர்த்திருக்கலாம்.
வாசிப்பில் வாசகன் அதைக் கண்டடைவான், ஆனால் ஏனோ
அவரே பதைபதைப்புடன் குறிப்பாக கதை முடிவுகளில் கருத்துப்பரப்புரை
தேவையில்லை. ரத்தமும் சதையுமான மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து பிறக்கும் கதைகள் பேசியதை விடவா அக்கதைக்கான விளக்கவுரைகள்
பேசிவிடும்?
காணாமல் போனவர்கள் சிறுகதை தொகுப்பு புனைவல்ல. புனைவுகளின் ஊடாக கடத்தப்பட்டிருக்கும் காலத்தின் பிரதி இப்புத்தகம்.
சொல்ல முடியாதவற்றை, முழுமையாக சொல்லி முடியாதவற்றை ,
சொல்லத் தயங்கும் பக்கங்களை தன் மனசாட்சி தொலைக்காத மானுடன் எழுதியப் பக்கங்கள் இவை.

காணாமல் போனவர்களின் வாசிப்பில் நீங்கள் போர்த்தின்ற சனங்களின்
கதைகளின் மிச்சமிருக்கும் சிலத் துண்டுகளை , வலியோடும் வாழ்க்கையோடும் போராடிக்கொண்டிருக்கும் வாழ்விலிருந்து காணாமல் போய்விடாமல் தன்னைக் கண்டடைய சண்தவராஜாவின் தலைமுறை
எழுதி வைத்திருக்கும் ஆவணமாகவே பார்க்கிறேன்.

வாழ்த்துகளுடன்..

நூல் அறிமுகம்: புதியமாதவி, மும்பை

நூல் : காணாமல் போனவர்கள் – சிறுகதைகள்
எழுத்தாளர் சண் தவராஜா.
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம். – மே 2023
பக் 144 விலை ரூ 150.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here