நூல் விமர்சனம்: நெருப்புச் சொற்கள் -செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம்: நெருப்புச் சொற்கள் -செ. தமிழ்ராஜ்



நெருப்புச் சொற்கள்

தோழர் பாண்டிச்செல்வி அவர்கள் காட்டுச்செடி போன்றவர். தன்னியல்பான தனது
படைப்பாற்றல் மூலமாக செயற்கை பூச்சுகளற்று, போராட்ட களமான வாழ்வியலிலிருந்து, தவிப்பும் தகிப்புமாய் சொற்களை தேடியதில் அவரது காடெங்கும் நெருப்பு சொற்களாய் விளைந்துள்ளது. கோபக்கார கவிதாயினிடம் இருந்து பூத்த கவிதைகள் யாவும் சமூகத்தின் புன்னகையேந்தி இருக்கின்றன. நூல் வெளியீட்டு விழாவில் திரண்ட கூட்டமென்பது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடியது. தமுஎகசவின் நகர் புறநகர் தோழர்களோடு இலக்கிய அமைப்புகளின் நண்பர்களும் பெருமளவு திரண்டிருந்தனர். அன்பு சூழ் உலகில் யாவரும் அணிதிரள்வது இயற்கைதானே. தொலைதூர பேருந்து பயணங்களில் சிறுநீர் உபாதையென்பது ஆண்களுக்கே மிகவும் அவஸ்தையானது. இதில் பெண்களின் நிலை பெரும்பாடானது. மூத்திரம் வழியும் நிலையில் கூட வக்கிர ஆண்களின்  பார்வையை தோலுரித்து காட்டுகிறது இக்கவிதை.

அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையைவிட
மூத்திர வாடையே மேலானது

இளம் விதவைகளின் வாழ்வியல் துன்பம் சகிக்கமுடியாதது. எந்நேரமும் கண்கொத்தி
பாம்பாய் காமுகர்களின் பார்வையிலிருந்து பெண்மையை பாதுகாக்க
வேண்டியிருக்கின்றது. உளப்பூர்வமாக பதிவு செய்திருக்கின்றார் தோழர்.

வம்பாக படர்கிறார்கள்
காலணா தராதவர்கள்
தெருவில விழுந்து கிடந்த
கணவனெனும் தறுதலப்பயலே
தேவலமாய் இருக்கின்றது"
அருவெறுப்பூட்டும் ஆடவர் செயல் பதிவாகிறது.
தரித்திரம் மண்டிக்கிடக்கும் வீடுகளில் கூட ஆண்கள் அடுத்த வீடுகளில்
கையேந்துவதில்லை. பெண்களே பிச்சை பாத்திரம் தூக்குகிறார்கள். அந்த யதார்த்தமும் கவிதையாகிறது…

கவி பாரதி
அண்டைவீட்டில் அரிசிக்கு நின்றதில்லை.
செல்லம்மாக்களே குருவிக்கு சோறிடக்கூட
பக்கத்துவீட்டுகதவை தட்டுகிறார்கள்

என மிக அருமையாய் பாரதியை கூட குற்றவாளி கூண்டிலேற்றுகிறார் புதுமை கவிஞர் பாண்டிச்செல்வி.
கோபக்காரியென்றதொரு கவிதையில் தன்னிலை விளக்கமொன்றை தந்திருக்கின்றார்.

கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. துணிச்சலுள்ளோர் வாசித்து கடப்பர்.
ஆண்களின் பார்வை எங்கெல்லாம் பெண்களின் மீது தவறாக படிகின்றது என்பதை
அவதானித்து ஒரு கவிதை எழுதியிருக்கின்றார். காமுக ஆணினம் தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்ள வேண்டிய தருணமிது.
பெண்களின் மனக்குமுறலை இந்த மூன்று வரிகளே உணர்த்திவிடுகிறது. காலந்தோறும் குடும்பத்திற்காக வடித்து கொட்டி வாடிப்போய் நிற்கும் ஒட்டுமொத்த பெண்களின் மனசாட்சியாய் குரல் எழுப்பி நிற்கிறார்.

ஆக்கி பொங்கி போட்டே
காச்சுப்போயின கைகள்
மரத்துப்போயின நாக்கு
நன்றியற்ற உலகு
காசற்ற சிறுமியாய் வாயில் எச்சிலூற ஜவ்வு மிட்டாய் காரனின் கூட்டத்தில் ஏங்கிப் போய் நிற்கும் அனுபவத்தை காட்சிப்படுத்தியிருக்கின்றார். ஏழைகளின் நிலையென்பது ஏக்கமொன்றுதானே.

ஐந்துக்கும் பத்துக்கும் வீதிதோறும் குறி சொல்லி பிழைக்கின்ற ஜக்கம்மாக்களைப்
பற்றியும் கவலைப்படுகிறார். எதிர்காலத்தை சொல்கிறவர்களின் நிகழ்காலப்பாடுகள் எவ்வளவு பரிதாபகரமாய் இருக்கின்றன எனும் கவலையில் ஆழ்ந்து போகிறார் கவிஞர்.

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குதென
குறிசொல்லும் ஜக்கமாக்களுக்கு
எப்ப பிறக்கும் நல்லகாலம்

இப்படி தொகுப்பு முழுவதும் வாசித்து மகிழ சமூக, யதார்த்த, அரசியல், அழகியல்
கவிதைகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஒரு சில கவிதைகள் முடிவுறாமலும் வெற்று
வார்த்தைகளாகவும் தொக்கிநிற்கின்றன. ஜென் கதைகளைப் போல வாசகர்களே உணர்ந்து கொள்ளட்டும் என விட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது. நூல் வடிவமைப்பில் அழகியல் பார்வை குறைவாக இருக்கின்றது. மூன்று வரிக்கவிதைகளை பொருத்தமில்லாமல் ஆங்காங்கே தூவியிருக்கின்றனர். தலைப்பை கூட கவித்துவமாய் யோசித்திருக்கலாம். 80களில் வந்த திரைப்பட தலைப்பு போல் செயற்கையாக இருக்கின்றது. அவிழ்க்கப்படாத முடிச்சு கவிதை நூலை தொடர்ந்து நெருப்புச் சொற்கள்  இரண்டாவது தொகுப்பாய் மலர்ந்திருக்கிறது தொடரட்டும் இன்னும் காத்திரமாக தோழர் க.பாண்டிச்செல்வியின் கவிதைப்பயணம் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை
9965802089.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *