எஸ். ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan) எழுதிய நூலக மனிதர்கள் (Noolaga Manithargal)- நூல் அறிமுகம் - https://bookday.in/

நூலக மனிதர்கள் – நூல் அறிமுகம் 

நூலக மனிதர்கள் – நூல் அறிமுகம் 

மௌனத்தில் மனதை மெருகூட்ட செய்யும் இரு ஸ்தலங்கள் ஒன்று தியான ஸ்தலம் மற்றொன்று நூலகம். இதன் அடிப்படையில் தனது பள்ளிப் பருவத்திலிருந்து எழுத்தாளுமையாய் வெளிப்படும் நாள் மட்டும் எஸ். ரா. வின் இலக்கிய பயணத்தை செதுக்கிய நூலகங்களை பற்றிய தொகுப்பே இந்நூல்..

எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் சென்று வந்த நூலகங்களைப் பற்றியும் சில அற்புதமான நூலகர்களை பற்றியும் கடந்து வந்த நூலகத்தில் தன்னை வியப்பூட்டிய நூலக மனிதர்களைப் பற்றியும் வியந்து எழுதிய எழுத்து மணிகளே இந்நூலில் 2021 ஆண்டு புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது..

கிட்டத்தட்ட 32 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது.. கட்டுரைகள் என்று சொல்வதை விட ஒவ்வொரு அத்தியாயமும் கதை வடிவில் உண்மை சம்பவங்களாய் நுணுக்கத்தோடு சுவாரசியமாக கையாளப்பட்டுள்ளது ஆசிரியரால்..

புத்தக வாசிப்பின் சுவாரசிய விளையாட்டாக நூலகத்திற்கு வரும் ஒரு 60 வயது முதியவர் தானெடுத்த ஒவ்வொரு நூலையும் வாசித்து முடித்ததும் அதனுள் வைக்கும் ஒத்த ரூபாய் நோட்டு யாரை சென்றடைகிறது என்று அறியாமலே தன் வாசிப்பை மதித்து, வாசித்த புத்தகத்தையும் மதித்து, திரும்ப அதனை வாசிக்கவிருக்கும் மனிதரையும் மதித்து தான் செய்யும் சிறு மகிழ்வாக எண்ணும் அவரது அகமகிழ்வு நம் மனதினுள் பெருமகிழ்வை விதைத்து செல்கிறது…

தான் ஏழு வருடங்களுக்கு முன்பாக படித்த ஒரு புத்தகத்தை தேடி வந்து அதையும் கண்டுபிடித்து சுவாரசியமாய் வாசித்து சென்றவரை குறித்தும் இந்நூலில் காணலாம் அதே சமயம் பீமன் மகாபாரதத்தில் ஒரு புத்தகத்தை படித்து சமைத்தான் அந்த புத்தகத்தை தேடும் ஒரு நபரின் நகைச்சுவை போக்கையும், நம்மைப் போல youtube பார்த்து சமையல் செய்வதை போல சமையல் சார் புத்தகங்களை தேடி அதனை வீட்டுக்கு சென்று recipe தயார் செய்யும் மக்களின் அன்றாட மனநிலையையும் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் தூண்டுகிறது..

*தக்ஷண இந்தியா சரித்திரம்* பழைய காலத்து அரிய தகவல்களை கொண்ட பயண நூல் இந்நூலை படிப்பதற்கு ஆர்வம் காட்டி நூலகத்தினின்று நூலை எடுத்துச் சென்றவரை விரட்டி விரட்டி தேடிப்பிடித்து, வெறித்தனமாய் நேரத்தை செலவிட்டு, கடைசியில் கண்டு பிடித்து, எடுத்த நாளின் மறு நாளே கொண்டு வந்து ஒப்படைத்த ஒரு வினோதமான நபரைப் பற்றி வியந்ததோடு மட்டுமல்லாது, பணம் பதவி அதிகாரம் ஆகியவற்றை துரத்தி செல்லும் இன்றைய மனித கூட்டத்தில் ஒரு புத்தகத்தை துரத்தி துரத்தி சென்று படிக்க ஆர்வத்துடன் படித்து சென்ற மனிதரின் மனப்போக்கை வித்தியாசப்படுத்தி காட்டி சென்றது எஸ். ரா வின் எழுத்தாணி..

இன்னொரு அத்தியாயத்தில் வேடிக்கையான ஒரு வாசகரை பற்றிய குறிப்பு.. தான் எப்பொழுதும் தேடி செல்லும் நாவலில் அதை பற்றிய விமர்சனத்தையும் அந்த புத்தகத்திற்குள்ளே எழுதிவிட்டு ஒருவேளை புத்தகம் சுவாரஸ்யமாய் முடியாவிட்டால் புத்தகத்தின் கடைசி பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள climax ஐ கிழித்தும் விடும் புத்தக சுவாரசியர்களை வேடிக்கையாக படம் பிடித்துக் காட்டி செல்வார் எஸ்.ரா அதனால் நூலகருக்கும் புத்தக வாசிப்பாளருக்கும் இடையேயான விவாதங்களை நகைச்சுவை உணர்வோடு மௌனமாய் சொல்லி செல்கிறது இந்நூல்..

1948 Tamilnadu Public Library Act.
நாம் கட்டுகிற சொத்து வரியோ அல்லது வீட்டு வரியோ அதில் இருக்கக்கூடிய 10% நூலகத்திற்கு எடுத்து வைக்கப்படுகிறது என்பது இந்நூலில் இருக்கும் கூடுதல் தகவல்.., இப்படியாக நம்மையும் அறியாமல் நாம் நூலகத்திற்கு உதவுகிறோம் என்ற மனநிலையோடு சேர்த்து அதற்கான ஈடுபாட்டையும் நாம் நூலகத்திற்குள் சென்று காணும் ஒரு வாய்ப்பினை ஏன் ஏற்படுத்தக் கூடாது என்று சிந்திக்கத் தூண்டி செல்கிறது சில பகுதிகள்..

ஒருபுறம் முகவரி இன்மையால் நூலகத்திற்குள் நுழைய முடியாத அகதிகள் நிலை, மற்றொரு பக்கம் அழைப்பிதழ் விடுத்தும் நூலகத்திற்குள் ஒருமுறையாவது எட்டிப் பார்க்காத பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் நிலை… யதார்த்தத்தின் உச்சகட்டம்.. ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் எஸ்.ராவின் பார்வையில் நாமும்.. படிப்பறிவில்லாத வயதானவர்களின் ஏக்கங்களும் வாசிப்பை நேசிக்கும் பல்வேறு சிறு தொழில் புரியும் ஏழை மக்களின் மன ஓட்டங்களும் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது இந்நூலில்..

இன்னொரு இடத்தில் நூலை வாங்கி செல்பவர் அதனை திருப்பித் தராததால் திருடர் பட்டம் கட்டி விடுவர் அதாவது நூலை திருடுபவர் ஆனால் எஸ். ரா. வின் கணிப்பு படி “நூலகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையே கம்மி அதை ஒருத்தர் வந்து எடுத்துட்டு போய் படிச்சாத்தான் என்ன அதை திருடிட்டு போய் படிச்சு அதுல இருக்க நாலு விஷயங்கள கத்துக்கிட்டு அதன்படி செஞ்சாதான் என்ன?” இப்படி சில விநோதமான கண்ணோட்டத்தோடு நூலின் நகர்வு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது..

பொது நூலகங்கள், கிராமப்புற நூலகங்கள் ஆகியவற்றைப் பராமரிப்பது நமது கடமை என்பதை சொல்லி செல்வதோடு அதனை சீர் படுத்தும் கடமையும் நமக்கே என்பது நாம் அறிந்ததே… அத்தோடு நில்லாது *நம் பள்ளிகளின் நூலகங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன அதனை நாமும், மாணவர்களும் நம்மை செதுக்கும் சிற்பிகளாக பயன்படுத்தி வருகிறோமா?*

யோசிப்போம்!!
செயல்படுத்துவோம்!!
சிறந்த சிற்பங்களாக மாறுவோம்!!

நூலின் தகவல்கள் : 
நூல் : நூலக மனிதர்கள்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
நூலின் அறிமுகம் எழுதியவர் : 

✍🏻சுகிர்தா குணசீலி அ
திருநெல்வேலி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *