அறிவியல் மற்றும் அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) எழுதிய நூலகாலஜி (Noolagalogy) : நூல் அறிமுகம் - https://bookday.in/

நூலகாலஜி (Noolagalogy): நூல் அறிமுகம்

நூலகாலஜி (Noolagalogy): நூல் அறிமுகம்

தமிழின் முன்னணி அறிவியல் மற்றும் அறிவியல் புனைக்கதை எழுத்தாளர் {ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan)} தன் அறிவியல் புனைக்கதை நூல்களுக்காக சாகித்திய அகடமி விருது தமிழ் வளர்ச்சித் துறை விருது உட்பட பல பரிசுகளை பெற்றுள்ளவர் சிறார்களுக்காக 150 க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த மூத்த படைப்பாளி என்ற பெருமைக்குரிய ஆயிஷா இரா நடராசன் அவர்கள் எழுதிய நூல் நிலையங்கள் பற்றிய தொகுப்பு நூல் இது.

ஆதியில் பிறந்த மனிதன் இனக்குழுக்களாக பிரிந்து பல்வேறு கண்டங்களை அடைந்து தனது வாழ்க்கைப் பாதையை சீர்படுத்திக் கொள்ள தொழில்களை தொடங்க ஆரம்பித்தான். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சைகை மொழியில் ஆரம்பித்த அவனது பயணம் மொழியின் வழியே புதிய புதிய உயரங்களைத் தொட உதவியது அந்த வகையில் அறிவின் தேடல்களான புத்தகங்களின் வழியே புதியதொரு உலகத்தைப் படைப்பதற்கு அவனுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.

அறிவுச் சுரங்கங்களாகவும் அறிவுப் புதையல்களாகவும் பொதிந்திருக்கும் நூல்களின் ஆலயமே நூலகங்கள். அத்தகு நூலகங்கள் எங்கெல்லாம் எப்படி பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஒரு மாபெரும் அரசை வீழ்த்துவதற்கு நூலகம் உதவி இருக்கிறது என்பதையும் ஒற்றை மனிதரால் நடத்தப்பட்ட நூலகம் ஒரு புதிய தலைமுறையையே உருவாக்கியது என்பதையும் தானே கைப்பட எழுதி தானே வெளியிட்டு தனக்குள்ளேயே வைத்துக் கொண்ட நூலக மனிதரைப் பற்றியும் இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு நூலகத்தின் தோற்றம் வளர்ச்சி பாதுகாப்பிற்காக தனது உயிரையே கொடுத்தவர்கள் பற்றிய சரித்திரத்தை இந்த நூல் பேசுகிறது. வாசிப்பை இயக்கமாகக் கட்டமைத்ததால் அதிகாரத்தால் கடும் தண்டனைகளுக்கும் எண்ண முடியாத கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டவர்களுக்கு நூல் எவ்விதமான பயன்பாடுகளை அள்ளித் தருகிறது என்பதையும் இந்த புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது. மக்களிடையே மறுமலர்ச்சியையும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் புதிய புதிய எல்லைகளை அடைவதற்கான பாதைகளை அமைத்துக் கொடுக்கும் நூல்களைப் பாதுகாக்கும் நூலகங்களின் வளர்ச்சியையும் அதற்காக தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் வழங்கி பொதுவெளியில் சிறந்ததொரு மனிதர்களாக உலாவிக் கொண்டிருந்த மக்களைப் பற்றியும் இந்தப் புத்தகம் 13 கட்டுரைகளின் வழியாக சிறப்பானதொரு நூல் நிலையத்திற்குள் சென்று வந்த அனுபவத்தை கற்றுத் தருகிறது.

நூல்களை வாசித்து அறிவை மேம்படுத்திக் கொள்ள உதவும் நூலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து தற்கொலைக்கு முயலும் ஒருவர் அதே நூலைக் கண்டு மனம் திருந்தி மிகப் பெரிய பல கோடி வருமானம் ஈட்டி பல கோடி மக்களை வாசகர்களாகக் கொண்ட சுய முன்னேற்ற எழுத்தாளராக உருமாறுகிறார். தற்கொலைக்கு முயன்ற போது அவர் படித்த புத்தகத்தின் பெயர் “நான் இறப்பதற்கு முன்” உலகின் தலைசிறந்த சுய முன்னேற்ற நூல்கள் 32 எழுதி மிகச் சிறந்த விற்பனையாளராகக் கருதப்படும் தனது வாழ்க்கை வரலாற்றையே மக்களுக்கான சுய முன்னேற்ற நம்பிக்கை நூலாகத் தருகிறார் ஓக் மாண்டினோ.
மனிதனால் மனிதனின் தலையீடுகளால் புவியில் ஏற்படும் விபரீத மாற்றங்களை 1930 களிலேயே புவி பரிணாமத்தின் அடுத்த படிநிலையாக அறிவித்து சுற்றுச்சூழலியல் புவி வெப்பமடைதல் பருவநிலை மாறுபாடு என 21 ஆம் நூற்றாண்டின் சிக்கல்களை முன்னறிவித்து அதிர்ச்சி அளித்தவர் வெர்னாட்ஸ்கி. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இவர் தனது ஊரில் உள்ள நூலகம் தரைமட்டமாக்கப்படுவதை எண்ணி அந்த நூலகத்தில் உள்ள நூல்களை அனைத்தையும் அழிந்து போன ரயிலில் பாதுகாப்பாக வைத்து பிறகு அதை நூலகமாக மாற்றிக் காட்டியவர்.

கல்வியறிவு பெற்ற சமூகம் தன்னை உணரவும் அதன் வழியே உலகத்தை கற்றுணரவும் பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்த புரட்சியாளரின் மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா. சோவியத் புரட்சியில் முக்கியப் பங்காற்றியவர். லெனின் அவர்களின் துணைவியார். அது மட்டுமல்ல அவரது சிறப்பு. புரட்சிக்கு பின் அமைந்த சோவியத் அரசாங்கத்தில் பெண்கள் ஒரு சதவீதம் கூட கல்வியறிவு இல்லாத நிலையில் அவர்களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து 80,000 நூலக வாசிப்பு மையங்களைத் திறந்து அதன் வழியே ஆயிரக்கணக்கான பதிப்பகங்களை உருவாக்கி நூல்களை எல்லோரது வசமும் கொண்டு செலுத்தியவர் அவர். உலகிலேயே ஒரு நூலகத்தில் உயிர் துறந்த மேதை எனும் ஒப்பற்ற புகழோடு குரூப்ஸ்கயா மாஸ்கோ லெனின் நூலகத்தில் பயிற்சி வகுப்பின் இடையில் மரணம் அடைகிறார்.

ஒரு மனிதனின் மூளையைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதிவிட முடியும்? 10 20 என சொல்ல முடியும். ஆனால் அறநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களும் 1300 ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கிறது என்றால் அந்த மூளையின் சிறப்பை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம் அல்லவா. மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் மூளையைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட புத்தகங்களும் ஆய்வுக் கட்டுரைகளும் அவரது மூளையின் சிறு பகுதியும் பத்திரமாக பாதுகாக்கப்படும் இடம் பிலடெல்ஃபியா நூலகம். 18 மொழிகளில் வெளிவந்துள்ள இந்த நூல்களில் ஐன்ஸ்டீன் மூளையைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இவரது மூளை அறிவியல் ஆராய்ச்சிக்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு பல அறிஞர்களின் கைகளுக்குச் சென்று சேர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு நுழைந்து விடக் கூடாது என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் நூலகங்களை மூடியது அதே சிவப்பு அடையாளத்தோடு சிலந்தி மனிதன் அதை இன்னும் பல லட்சம் நூலகங்களாக திறக்கவும் வைத்தது காலத்தின் விசித்திரம்.

நூலகத்தில் பல எழுத்தாளர்களின் நூல்கள் பல மொழிகளில் இடம் பெற்றிருக்கும். ஆனால் ஒரே எழுத்தாளர் தனது கைப்பட எழுதிய பிரதிகளைக் கொண்ட நூலகம் ஒன்று செயல்பட்டது என்றால் அது எழுதிய எழுத்தாளரின் சிறப்பை அல்லவா குறிக்கிறது. அந்த நூலகம் முழுவதும் ஒருவரே எழுதிய நூல்களால் ஆனதாக இருந்தது. அந்த உலகத்தில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நூலுக்கும் வரிசை எண் தரப்பட்டிருந்தது. அதைவிட அதிர்ச்சி அவை ஒரே ஒருவர் தனது முத்தான கையெழுத்துப் பிரதிகளால் எழுதியது மொத்தம் 317 நூல்கள். அவை அந்த தனித்து மரித்த நூலகன் மூலமே எழுதப்பட்டது. இந்த நூல்களின் வழியே ஏறத்தாழ 600 கண்டுபிடிப்புகள் பிற்காலத்தில் கண்டறியப்பட்டன.அப்படி ஒரு மாபெரும் விஞ்ஞானி தான் நிக்கோலாய் டெஸ்லா. இவரது வீழ்ச்சி எடிசன் என்ற ஒரு மனிதரின் பொறாமை குணத்தால் நிகழ்ந்த வரலாற்றை அறிவியல் உலகம் இருட்டடிப்பு செய்து வைத்திருக்கிறது. எங்கே தனது கண்டுபிடிப்புகள் தனக்கு பணத்தை சம்பாதிப்பதற்கு டெஸ்லா இடையூறாக இருப்பார் என்று எண்ணி அவர் மீது அவதூறுகள் பரப்பி அவரை விஞ்ஞானியாக ஏன் மனிதனாகக் கூட உலகத்தில் நடமாட விடாமல் மாபெரும் கொடுமைகளைச் செய்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். இன்று நாம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் வைஃபை என்று அழைக்கப்படும் இணைய சேவை வரை அனைத்தும் டெஸ்லா அவர்களின் கண்டுபிடிப்பு என்பதை இந்த நேரம் நாம் நினைவில் கொள்ளுதல் அவசியம்.

ஒரு நூலகம் மனிதர்களுக்கிடையே அறிவைப் பெருக்கி கண்டுபிடிப்புகளுக்கு வழி செய்யும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் ஆனால் மறைவாக செயல்பட்ட ரகசிய நூலகம் ஒரு நாட்டில் புரட்சியே ஏற்படுத்தி புதியதொரு குடியரசு ஆட்சியை மலர வைத்தது என்றால் அதை நடத்திய போராளிகளின் அறிவுப்புலமை வெளிப்படுகிறது அல்லவா. ஹங்கேரியில் நடைபெற்ற எர்வின் ஸ்ஸாபோ நூலகம் அது.

மிதக்கும் நூலகம் என்ற பெயரில் ஆந்திராவில் நிறைய இடங்களில் படகுகளின் மூலம் மனிதர்களுக்கு வாசிப்பதற்கான மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கிக் காட்டியவர் தமிழகத்தின் பொதுவுடமைத் தோழர் சிங்காரவேலர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் தோழர் பட்டூரி நாகபூசனம்

வங்காளத்தில் பள்ளி பாடசாலை செய்தித்தாள் என்று எதுவுமே நுழைய முடியாத 36 கிராமங்களுக்கு பல மைல் தூரம் தனது தோள்பையிலும் தலையிலும் தானே தனது சொந்த செலவில் வாங்கிய புத்தகங்களைச் சுமந்து சென்று சாதாரண மக்களின் வாசிப்பை மேம்படுத்தி தனது வாழ்நாளையே தியாகம் செய்த மாபெரும் நூலகர் போலன் சர்க்கார் ஏற்படுத்தியது நடமாடும் நூலகம் என்ற இயக்கம். இதன் வழியே இந்தியா மற்றும் பங்களாதேஷ் இலக்கியங்கள் வங்காள மக்களுக்கு பரிச்சயமாகின. நடக்கும் நூலகம் 2011 இல் வங்கதேச அரசின் உயரிய விருதான எக்குஷே படக் அவருக்கு வழங்கப்பட்டது. தான் இறக்கும் 98 வயதில் இறந்து போவதற்கு 6 நாட்களுக்கு முன்பு வரை நடக்கும் நூலகமாக இருந்து மக்களுக்கு அறிவு வழி காட்டியவர் போலன் சர்க்கார்.

ஒருமுறை இரு முறை அல்ல கல்நெஞ்சக் கயவர்களால் மூன்று முறை திட்டமிட்டு தீயிட்டு கொளுத்தப்பட்ட பெருங் கனவு பொதிந்து கிடந்த நூலகம் யாழ் நூலகம். ஒரு லட்சம் புத்தகங்கள் 4800 ஓலைச்சுவடிகள் 1800 கையெழுத்து பகுதிகள் என அனைத்தையும் எரித்த சதிச் செயல் மீண்டும் அந்த யாழ் நூலகத்தை கட்டமைப்பதற்கு மக்களிடையே மாபெரும் எழுச்சியை விதைத்தது என்றால் நூல்களின் மீதும் அவை தரும் வழிகாட்டிகளின் மீதும் மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே வெளிப்படுத்துகிறது.

மனிதன் தனக்கான மன உளைச்சல் துயரம் சிக்கல் அவமானம் அதீத பதட்டம் என அனைத்துத் துன்பத்திற்கும் வடிகால் தேடும் ஓர் கலங்கரை விளக்கமாக நூல்களைத் தேட துவங்குகிறான். ஒரு நூலகம் திறக்கும்போது சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். அந்த வகையில் மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் பொறாமை பழிக்குப் பழி வாங்குதல் வன்முறை எண்ணம் போன்றவற்றையெல்லாம் களைந்து அவனை புதிய புதிய சிந்தனைகளுக்குள் நுழைத்து உலகையே ஒன்றிணைக்கும் மாபெரும் கருவியாக நூல்கள் திகழ்கின்றன. அத்தகைய நூல்களை பாதுகாக்கும் நூலகங்கள் எத்தனை பேர் உழைப்பிலும் தொடர்ச்சியான போராட்டத்திலும் தொடங்கப்பட்டு இருக்கும் என்பதையும் நூலகங்களின் வரலாற்றையும் இந்த புத்தகம் அறியத்தரும் அதே வேளையில் இன்னும் இன்னும் நூல்களைத் தேடி வாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் புதியதொரு பாதையையும் காட்டி விடுகிறது. இதுபோன்ற நூல்களை வாசிக்க வைத்து மேலும் மேலும் நூல்களின் மீதான எனது அறிவுத்தேடலை விரிவாக்கும் பேராசிரியர் சோ.மோகனா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.

நூலின் தகவல்கள் : 

நூல் : நூலகாலஜி (Noolagalogy)
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் (Ayesha Era.Natarasan) 
பக்கம் :  96
விலை :  ரூ. 90
வெளியீடு  : பாரதி புத்தகாலயம் 
முதல் பதிப்பு  : டிசம்பர் 2023
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/noolagalogy/

நூல் அறிமுகம் எழுதியவர் : 
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)

அன்பு மொழி(2024) என நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. Senthil Kumar

    Very very excellent lines. I like it so very much.
    Thank you Respected.Era.Nadarajan sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *