அன்பு வாகினி எழுதிய சார்லஸ் டார்வின் கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை என்னும் பிரதியை ஓங்கில் கூட்டம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்) இணைந்து 2021ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
உழைப்பாளி வாத்து(மார்ட்டின் வாடெல்) ‘மாடுகளின் ‘வேலைநிறுத்தம்’, துள்ளி (லியோ லயன்னி) அஞ்சாத குட்டி மீனின் கதை, பாஸ்ராவின் நூலகர் (ஜேனெட் வின்டர்) குண்டு மழைக்கு நடுவே நூலகம் காக்கப்பட்ட கதை, மூன்று குண்டு மனிதர்கள் உள்ளிட்ட நூல்களை அன்பு வாகினி மொழிபெயர்த்துள்ளார்.
இவர் உணவுத் தொழில் நுட்பத் துறையில் ஆராய்ச்சியாளராகப் பணி புரிந்து வருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளராக அறியப்பட்டவர்.
சார்லஸ் டார்வின் குறித்த அறிமுகத்தில், டார்வினைக் கடல் பயணங்களால் உருவெடுத்த மேதையாக நமக்கு இப்பிரதியில் அறிமுகப்படுத்துகிறார் அன்பு வாகினி.
இயற்கை, அறிவியல் மற்றும் டார்வின், பீகிள் பயணம், பிரேசிலின் வெப்ப மண்டல மழைக்காடுகள், நிலநடுக்கம் தந்த தெளிவு, பரிணாம வளர்ச்சி ஆகிய ஐந்து உட்தலைப்புகளில் சார்லஸ் டார்வின் பற்றி இருபத்து இரண்டு பக்கங்களில் உரையாடியுள்ளார்.
பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு ஏற்ப மொழிநடையைப் பயன்படுத்தியுள்ளார். சார்லஸ் டார்வின் பயணத்தைப் புனைவு மொழியில் அளித்துள்ளார். டார்வினைப் புதிய கோணத்தில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அமைத்துள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. இப்பிரதியில், சார்லஸ் டார்வினின் இயற்கையுடனான தொடர்பிலிருந்து ‘பரிணாமவியல் கோட்பாடு’ உருவாகும் வரை பேசியுள்ளார் அன்பு வாகினி.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான புவியியலாளர் ஆடம் செட்ஜ்விக், தாவரவியலாளர் ஜான் ஹென்ஸ்ஸ்லோ ஆகிய இரு பெரும்ஆளுமைகளுடனான நட்பு டார்வினின் ஆய்வுப் பயணத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கிறது இப்பிரதி.
மேலும், டார்வினுக்குப் புவியியல் ஆய்வு மீதான ஆர்வத்தின் தொடக்கப் புள்ளியை நமக்கு அடையாளப்படுகிறது. இத்தேடலில் உயிரினங்களின் பன்முகத்தன்மையிலான புதைப்படிவங்களைக் கண்டடைவதிலும் சேகரிப்பதில் அவருக்குள்ள ஆர்வம் பேரார்வமாகப் பரிணமித்துள்ளது. இதனடிப்படையில், ’பரிணாமவியல் கோட்பாடு’ என்கின்ற கோட்பாட்டைக் கண்டடைந்துள்ளார். இக்கோட்பாடானது, அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான மூதாதையர் உள்ளனர் என்பதை வலியுறுத்தியது. இவ்வாய்வு முடிவு மதவாதிகளிடம் உயிரின உருவாக்கம் குறித்த கருத்தியலை அசைத்துப் பார்த்தது.இதனால், உலகளவில் பெரும்சர்ச்சையும் சலசலப்பும் ஏற்பட்டது.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரே குடும்பம், ஒரே மூதாதையர் என்பதான ஆய்வைப் பிற்போக்குவாதிகள் மறுதலித்தனர். இது ஒருபுறம் இருக்க இவரது ஆய்வை அறிவுச் சமூகம் கொண்டாடத் தொடங்கியது.
அது மட்டுமல்லாது இந்த ஆய்வை முன்வைத்துப் பல அறிவியலாளர்கள் அடுத்த கட்ட ஆய்விற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதிதான் உயிரினங்களின் ‘குடும்பக் கிளை வரைபடம்’ உருவானது. சார்லஸ் டார்வின் உலகம் முழுவதும் உள்ள மதவாதிகளுக்கு இன்றும் அச்சுறுத்தக்கூடிய ஆகப்பெரும் அறிவியல் ஆளுமையாகவே திகழ்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
கறுப்பு மற்றும் பழுப்பு நிறங்கள் கொண்ட எலிகளில் வாழ்நாள், இனப்பெருக்கம், எண்ணிக்கை அதிகரிப்பு, தன் சந்ததியைப் பெருக்குதல், இன அழிப்பு இவற்றை இயற்கைத் தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்னும் தலைப்பில் அன்பு வாகினி பேசியுள்ளார். தொடர்ந்து, ஒட்டகச்சிவிங்கி என்னும் உயிரினத்தில் கழுத்து நீளமானவை எப்படித் தன்னைத் தகவமைத்துச் சந்ததியை நிலைபெற வைத்துள்ளதையும் கூறுகிறார். இதில், கழுத்து நீளமில்லாத ஒட்டகச்சிவிங்கியின் சந்ததி மறைவு பற்றிய செய்தியையும் பதிவு செய்துள்ளார் அன்பு வாகினி.
கலாபகஸ் தீவின் கூம்பலகன் பறவைகள், ஆமைகளில் நிகழ்ந்திருக்கலாம் என்பதான சார்லஸ் டார்வினின் பார்வை, ‘இயற்கைத் தேர்வு செயல்முறையில்’ மற்ற உயிரினங்களிலும் நிகழ்ந்ததா? என்பதான ஆய்விற்கு நகர்ந்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருப்பதால், இன்றைய உயிரினங்கள் தொடக்க கால உயிரினங்களுடன் முழுமையாக ஒத்திருப்பதில்லை என்கிற முடிவுக்கும் வருகிறார் சார்லஸ் டார்வின்.
பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு சில மீன்கள் நிலத்தில் வாழும் அமைப்பைப் பெற்றிருந்ததாக ஊகிக்கிறார் சார்லஸ். அதேபோல பெரும்பூனைகளிலிருந்து சிறுத்தை, சிங்கம், போன்றவை பரிணமித்துள்ளன. பரிணமித்த அனைத்து உயிரினங்களும் தங்களைத் தொடர்ந்து தகவமைத்துக்கொண்டே வந்துள்ளன என்பதை நிரூபித்தது அவரது ஆய்வு.
இப்படி அவசியமான பல அறிவியல் செய்திகளுடன் கடல் பயணங்களால் உருவெடுத்த மேதை சார்லஸ் டார்வினை நமக்குள் மிகமிக எளிமையாகக் கடத்துகிறார் அன்பு வாகினி.

