நான் மருத்துவ துறையில் இருப்பதால் பொதுவாகவே மருத்துவ நூல்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் தமிழில் வரும் எல்லா மருத்துவ நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அல்லோபதி மருத்துவர்கள் தமிழில் எழுதும் மருத்துவ நூல்களில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்ததால் பின்னர் அந்த நூல்களை வாங்குவதை தவிர்த்து வந்தேன். மரபு மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிப்பதில் கவனம் செலுத்தி வந்தேன். டிஸ்கவரி பதிப்பகத்தில் வெளியான டாக்டர் வள்ளுவர் நூலின் தலைப்பும் அட்டைப்படமும் பார்த்ததும் ஈர்த்தது. ஆசிரியர் அல்லோபதி மருத்துவர் என்பது மட்டும் சிறு உறுத்தலாக இருந்தது. இருப்பினும் மரபு மருத்துவம் கூறும் கருத்துகளை முற்றாக மறுதலிக்கும் அல்லோபதி மருத்துவர்கள் மத்தியில் திருக்குறளில் உள்ள மருத்துவம் குறித்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியரின் மீது மதிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டு நூலை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
காலம் காலமாக திருவள்ளுவர் மீது தமிழாசிரியர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமே ஈடுபாடு இருப்பது வழமை. ஆனால், ஒரு மருத்துவருக்கு திருக்குறள் மீது நாட்டம் ஏற்பட்டு அதனை நேசித்து அதில் உள்ள கருத்துகளை உள்வாங்கி எல்லாருக்கும் பயன்படும் வகையில் நூலாக மாற்றி வெளியிடப்பட்டது போற்றப்பட வேண்டியது.
எனக்கு நூலில் பல இணக்கமான இடங்கள் இருப்பினும் சில முரண்பாடுகள் உள்ளன. இணக்கமான செய்திகளை பேசிவிட்டு இறுதியாக முரண்பாடுகளை பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்று கூறும் அல்லோபதி மருத்துவர்களை தான் நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் குறள் கூறும் “துய்க்க துவர பசித்து” என்ற கருத்தை உள்வாங்கி பசித்த பிறகு சாப்பிட வேண்டும் என்று தான் படித்த அல்லோபதி மருத்துவம் பாடத்திட்டத்திற்கு எதிராக உள்ள உண்மையை உணர்ந்து பதிவு செய்து இருப்பது சிறப்பானது.
இன்னொரு முக்கியமான கருத்து மனதிற்கும் உடலுக்குமான தொடர்பு குறித்து தெளிவான பார்வையை முன் வைத்தது. மனம் தான் உடலில் ஏற்படும் நோய்களுக்கு மூல காரணம் என்பதை குறளை முன்வைத்து பல இடங்களில் மனதை பேணி காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருப்பது சிறப்பானது.
அல்லோபதியில் மனநலப் பிரச்சினை என்றால் அதற்கு தனியாக சிகிச்சை தருவதும் உடல் பிரச்சினைக்கு தனியாக சிகிச்சை தருவதும் நடந்து வரும் தற்காலத்தில் மனதையும் உடலையும் இணைத்து பார்க்கும் சிந்தனை மிக முக்கியமானது.
அதே போல வயிற்று பசியை பேசும் போது உடல் பசியான காமத்து பசி குறித்தும் பதிவு செய்து இருப்பது சிறப்பானது. பசித்து சாப்பிடுவதை காமத்தோடு பொருத்தி ஒரு சிறந்து விளக்கத்தை தந்தது மெச்சத்தக்கது.
மக்கள் மெய் தீண்டல் என்னும் குழந்தைகளுக்கு இருந்த உவமை குறளை தனது நோயாளிகளின் உடலோடு பொருத்தி அவர்களை தொட்டு அன்பு செலுத்தி மருத்துவம் பார்ப்பதன் மூலம் பாதி நோய் தானாக சரியாகிவிடும் என்று பதிவு செய்த இடத்தில் அவரின் மகத்தான மனிதநேயம் நம் கண்முன்னே விரிகிறது.
மரபு மருத்துவ பார்வையில் இருந்தே நான் நூலை வாசித்ததால் சில இடங்களில் முரண்பாடு எழுந்தது. பசித்து சாப்பிட்டால் நோயில்லை என்று பேசிவிட்டு பிறகு பல இடங்களில் ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுவது முரணாக உள்ளது.
அதே போல மனநலத்தை பாதுகாக்க மனதை திசை திருப்ப வேண்டும் என்ற பதிவு உவப்பாக இல்லை. மனதை சரியாக கையாள வேண்டும் என்றால் பகவத் அய்யா கூறும் வழிமுறைகளை பின்பற்றினால் மிகச்சிறந்த பலன் கிடைக்கும். அதற்கு அவரின் நூல்களான தியானத்தை விடு ஞானத்தை பெறு, கவலைகள் அனைத்திற்கும் தீர்வு மற்றும் ஞான விடுதலை ஆகிய நூல்கள் உதவும்.
இன்னொரு முக்கியமான கருத்து என்னவென்றால் மருத்துவர் வள்ளுவர் மீது கொண்ட மிகையான நாட்டத்தினால் எல்லா குறள்களிலும் மருத்துவத்தை தேடுவது பலனை தராது என்பது எனது தனிப்பட்ட கருத்து. ஏனெனில் திருக்குறள் மனிதர்களுக்கு பொதுமறை என்று கூறப்பட்டாலும் அது தனித்தனியாக பிரித்து பார்க்கப்பட வேண்டியது. துறவிகளுக்கான துறவு அதிகாரம் போல குடும்பத்தில் இருப்போருக்கு காமத்துப்பால் அதிகாரம். இரண்டையும் ஒன்றாக்கி புரிந்து கொண்டால் குழப்பம் ஏற்படுத்தும். அது போல வெவ்வேறு நோக்கத்தில் எழுதப்பட்ட குறள்களில் மருத்துவம் இருப்பதாகவும் கருதுவது மிகையாக எனக்கு தெரிகிறது.
அட்டைப்படத்தில் வள்ளுவருக்கு ஸ்தெதஸ் கோப், வெள்ளை அங்கி மாட்டி இருப்பது பார்க்க ஈரப்பாக இருந்தாலும் கருத்து ரீதியாக முரண்படுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அல்லோபதி மருத்துவம் உருவாகாத காலத்திய நபரை தற்போதைய மருத்துவ அடையாளத்திற்குள் அடைப்பது முரணானது.
சித்த மருத்துவம் செழிப்பாக இருந்த காலத்தில் உருவான குறளை அப்போதைய காலத்தோடு வைத்து பொருத்தி பார்த்து பொருள் புரிந்து கொள்வது மேலும் சிறந்த புரிதலை தரும்.
எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் திருக்குறள் மீது ஆசிரியருக்கு ஏற்பட்டு இருக்கும் ஈடுபாடு மிக சிறப்பானது. இந்த நூலை அல்லோபதி மருத்துவர்கள் மற்றும் மக்கள் எல்லாரும் வாசித்தால் அவர்களின் சிகிச்சைக்கு பேருதவியாக அமையும்.
நூல் -டாக்டர் வள்ளுவர்
ஆசிரியர் – மரு.முருகு சுந்தரம்
பதிப்பகம்-டிஸ்கவரி
விலை-200
இரா.செந்தில் குமார்
தொட்டியம்