“கடசல்” நாவல்
ம. காமுத்துரை
எழுத்து பிரசுர வெளியீடு
டிசம்பர் 21. 293 பக்கங்கள். விலை ரூபாய் 350/-
“மகாராஜன் இன்ஜினியரிங் லேத் அண்டு வெல்டிங் ஒர்க்ஸ்” பட்டறை நாவலின் ஆரம்பத்தில் உள்ள நிலை… நாவலின் முடிவின் போது என்ன நிலை என்பதே கதையின் மையமாகும்.
கைலாசம் – மனைவிசெண்பகம்-ஆரம்பப்பள்ளி செல்லும் மகள் சகுந்தலா.. இரண்டாம் குழந்தை இது ஒரு குடும்பம் .
பாண்டி -கண்ணன் – செந்தில் இவர்கள் ஒரு பிரிவு.
வசந்தா இவள் தம்பி பாலு ..இவளுடைய கண்டக்டர் கணவன் ..
மற்றொருபுறம் பட்டறை ஓனர் மகாராஜன்.. இவர்கள்தான் முக்கியமான கதாபாத்திரங்கள். என்றாலும் பட்டறையில் கைலாசத்தின் கீழ் வேலை கற்றுக்கொள்ளும் பாண்டிதான் நாவலின் முக்கிய கதாபாத்திரம்.. கதாநாயகன் என்று கூட சொல்லும் அளவுக்கு அவன் நாவலின் ஆரம்பம் முதல் கடைசி வரை நம் மனதில் நிற்கிறான்.. இப்படிப்பட்ட அரிய(rare) கதாபாத்திரங்களை நம் ஊரில் கூட பார்க்க முடியும்.
சூது வாது இல்லாமல் பட்டறை முதலாளி மகராசன்.. கைலாசம் ..அவனது குடும்பத்தினர்.. அவனது தொடுப்பு என எல்லோரிடமும் அல்லாடுகிறான் பாண்டி.
தினசரி இரவு பட்டறையில் ராத்தங்கும் பாண்டி காலையிலேயே எழுந்து பட்டறையை கூட்டி.. வாசலுக்கு தண்ணி தெளித்து சுத்தம் செய்துவிட்டு.. கைலாசம் வந்த பிறகு வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அவளது மகள் சகுந்தலாவை சில நேரங்களில் பள்ளிக்கூடத்திலும் விட்டுவிட்டு குறித்த நேரத்திற்குள் பட்டறைக்கு திரும்ப வேண்டும் . மதியம் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும்போது கைலாசத்திற்கு அவனது வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்து வர வேண்டும்.. சமயத்தில் அவனது தொடுப்பு வீட்டிற்கும் கைலாசம் சொல்லும் வேலையை செய்ய வேண்டும்..இது தனது தினசரி வாடிக்கை வாழ்க்கையாக பாண்டிக்கு இருக்கிறது.
வேலை கற்றுக் கொள்வதற்காக நேக்கு போக்காக நடந்து கொள்வதுடன்… தினசரி அடி உதை வசவு வாங்குவதும் வழக்கமாகிவிட்டது.
ஒரு நாள் கைலாசம் மகள் சகுந்தலாவை பள்ளி மணி அடிப்பதற்குள் கொண்டு போய் சேர்ப்பதற்காக அவன் வேக வேகமாய் சைக்கிளில் கொண்டு செல்கிறான்.. சகுந்தலா பையிலிருந்து சிலேட்டுக்குச்சிகீழே விழுந்து விடுகிறது .உள்ளே கொண்டு போய் விடும்போது சகுந்தலா பரீட்சைக்கு இன்னைக்குள்ள காசு கட்டணும் காசு குடு என்று பாண்டியை மல்லு கட்டுகிறாள். கேட் வாட்ச்மேனும் விரட்டுகிறான்… லேட்டா வந்தவர்களை டீச்சரும் விரட்டுகிறார்.. அதை எப்படி பாண்டி சமாளிக்கிறான் என்பதை வாசகர்களே… நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
ஒரு தெருவில்… காலனியில் குடியிருக்கும் பெண்கள் தங்களில் ஒருத்திக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது எப்படி எல்லாம் உதவிக் கொள்கிறார்கள்.. அதே நேரத்தில் எப்படி குடும்ப ரகசியங்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.. புருசனை எப்படி சமாளிப்பது.. வழி தவறுபவனை…குடிகாரனை…ஓட்டல் சாப்பாடு தேடுபவனை…தன் வழிக்கு கொண்டு வருவது என்பதையெல்லாம் நாவல் முழுவதும் ஆங்காங்கே நேரடி காட்சியாய் வர்ணிக்கிறார் ஆசிரியர்..
ஒரு கோயில்.. டீக்கடை.. குடியிருக்கும் வீடு.. பட்டறை ..சந்தைகள்..தெரு.. ஆற்றங்கரை என்று எதை எடுத்தாலும் அதை பற்றிய முழு வர்ணனையை துல்லியமாக நுணுக்கமாக நம் முன்னே காட்சியாய் படம் பிடித்து காட்டுகிறார் ஆசிரியர். அதே போல்தான் ஆட்களைப் பற்றியும்! ஒரு நாய் படுக்கும் அளவுக்கு இடம் இருந்தது ..கர்ப்ப கிரகத்தில் பூசாரி மட்டுமே நிற்க இடம் இருந்தது என்பது போன்று அளவு ரீதியான வர்ணனையும் விஷூவலாக உள்ளது.
வாழ்க்கை என்றாலே அகமும் புறமும் சேர்ந்ததுதானே.. அளவான.. டீசன்டான அக சம்பவங்கள் நாவல் முழுவதும் நம்மை ‘போரடிக்காமல்’ கொண்டு செலுத்துகிறது.
கைலாசம் நல்லவனா கெட்டவனா என கடைசி வரை புரியவில்லை.. பட்டறையில் நவீனத்தை உள்வாங்கி மாறிக்கொள்ள தெரிந்த அவன்.. தன் மனைவிக்கு மட்டும் பூசாரியை வைத்து பேய் விரட்டுகிறான் என்றால் அவள் அப்படியே இருக்கட்டும்.. நாம் தொடுப்புகளோடு சுற்றுவோம் என்ற உள்மன திட்டத்தாலா என்பதை ஆசிரியர் இந்த கதாபாத்திரம் மூலம் நம்மையே ஊகிக்க விட்டுவிட்டார் போலும்..
கதையில் வரும் பாண்டி தவிர செண்பகம் உட்பட எல்லோருமே அவரவர் பிழைப்பு.. அவரவர் வாழ்க்கை.. அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் ..யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று செயல்படுவதை நாவல் எதார்த்தமாக சொல்கிறது.
தனது செயல்பாடுகள் காரணமாக உடல்- மன நலமின்றி பேய் பிடித்தாடும் தன்மனைவிக்கு உதவுவதற்காக வரும் வசந்தாவையும் வசப்படுத்துகிறானா..அல்லது வசமாகின்றானா கைலாசம் என்பதும் நாவலில் எதிர்பார்த்த திருப்பம்தான்…ஆனால் நாவலின் இறுதியிலும் செண்பகத்திற்கு பேய் பிடிக்கிறது?!.. வசந்தாவின் தம்பி பாலுவும் வசந்தா கணவனும் கைலாசத்துடன் ஓடிப்போன வசந்தாவை கேட்டு…. மகாராஜனை வந்து பிளாக் மெயில் செய்யும் போது அதை எப்படி செந்திலுடன் சேர்ந்து சமாளிக்கிறான் என்பதும் சுவையாகவே உள்ளது.
இட்லியும் தோசையும் ஒரே மாவில்தான் என்று ஒருத்தி கூற.. மற்றொருத்தியோ டேஸ்ட் மாறுமில்ல என்கிறாள். நான்கு நண்பர்கள் வேலைக்கு லீவு போட்டுவிட்டு அருவிக்கு சென்று குளித்து கும்மாளம் அடிப்பதும்.. குடித்துவிட்டு அரட்டை அடிப்பதும் நமது இளமைக் காலத்திலும் கடந்து வந்ததுதான்..
நவீன தொழில்நுட்பத்தின் வருகைக்குப் பின் பழைய தொழிற்சாலைகள் ..பட்டறைகள்.. தொழிலாளர்கள் எப்படி புதிய தொழில்நுட்பத்தை உள்வாங்கி உயிர் பிழைக்கிறார்கள் அல்லது சமாளிக்க முடியாமல் நலிந்து போகிறார்கள் என்பதை” கடசல்” நாவல் கணக்கச்சிதமாய் நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.. படிப்படியான மாற்ற வளர்ச்சிகளுடன்..!
எப்படித்தான் இப்படியான உருவகங்களை.. உதாரணங்களை.. சொலவடைகளை.. அனுபவங்களை ஏராளமாக கொண்டு வந்து கொட்டுகிறார் என்று பிடிபடவில்லை. ஒவ்வொன்றையும் உற்று நோக்கி.. ஆழமாக உள்வாங்கினால் மட்டுமே.. ஒரு சின்ன விஷயத்துக்கு கூட இவ்வளவு பெரிய விளக்கமான வர்ணனைகள் சாத்தியம்..லேத் பட்டறை தொழில் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள கடசல் நாவல் ஒரு நல்ல பாடமாகும்..
தேனிக்கு வரும்போது பட்டறை பாண்டியை அவசியம் நேரில் பார்க்க வேண்டும்!..

