சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள். முற்போக்கிலும் சரி, புனைவிலும் சரி, எதிலும் சமரசம் ஆகாமல் படைப்புகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.
முதல் கதையான ‘யாசகம்’ முதலாளி தொழிலாளி இடையே காலம்காலமாக நடக்கும் சுரண்டல்களை விவரிக்கிறது. உழைப்புக்கேற்ற கூலியைத் தராமல் ஏமாற்றும் முதலாளியை அவமதிக்க முத்து செய்த செயல் ஆறாத வடு.
மிகவும் ஈர்த்த கதையாக வசீகரித்தது ‘கேமரா கண்கள் மூன்று முறை கண் இமைகளை மூடித்திறந்தால் பார்த்த காட்சிகள் செல்போனில் பதிவாகும் என்கிற புதுவித வினோதமான சூப்பர் பவர் தனக்கு இருப்பதை அறிந்துகொள்கிறான் கதை நாயகன். அந்த அதீத ஆற்றல் காவல்துறைக்கு உதவினாலும் தன் கல்யாண வாழ்க்கைக்கு உதவாது என்பது புரிந்து திக்குமுக்காடுபவனுக்கு, திருமணமும் ஆகிறது. முதலிரவில் பலமுறை கண் இமைகளைத் திறந்து மூடியவனது செல்போனை மறுநாள் காலையில் அவன் மனைவி எடுத்துப் பார்க்கிறாள். அப்போது என்ன ஆனது? கற்பனையாக இருந்தாலும் பதைபதைப்புடன் ரசிக்க வைக்கிறது கதை.
‘அந்திமத் தேடல்’ என்கிற தலைப்பில் இரண்டு கதைகள். ஏன் இரண்டுக்குமே ஒரே தலைப்பு என்ற கேள்விக்கான விடையும் நியாயமும் கதைகளுக்குள் இருக்கின்றன.
புத்தகத் தலைப்புக் கதையும் அறிவியல் புனைவுதான். காதலன் ஒருவன் காதலியின் நினைவுகளை அழிக்க நினைத்து மருத்துவரிடம் வருகிறான். சிகிச்சையின் விளைவால், பகல் நினைவுகள் மட்டுமே அழிகின்றன. இரவின் நினைவுகள் அழியாமலிருக்க கனவிலேயே அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான் என கற்பனையின் வேகத்தை நமக்கும் பரவச் செய்திருக்கிறார்.
மீண்டும் மீண்டும்’ கதையில் திருட்டுக்குற்றத்துக்காகச் சிறை சென்று, திருந்தி வரும் ஒருவனுக்கு நம் சமூகம் என்ன தந்தது, ‘கனவுக்கன்னி’ கதையில் ஒரு பெண் ஆணைச் சந்தேகிப்பது, சிறிது நீண்ட கதையான ‘பருவகால பக்தி’யில் ஒரு மதப்பண்டிகை சமயத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் டி.வி. சேனல் பற்றியது என விதவிதமான அனுபவங்களை நமக்கும் தந்திருக்கிறார். எளிமையான நடையில் சுவாரசியமான களங்களில் புதுமையான கண்ணோட்டங்களில் வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.