நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

நூல் அறிமுகம் : குறுங்.. – கேத்தரின்

 

குறுங்……

நூலின் தலைப்பே துறுதுறு வென இருக்க, ஏற்கனவே விழியன் அவர்களின் “பென்சில்களின் அட்டகாசம்” நூலை படித்து அதனை மிகவும் ரசித்தவள் என்கிற வகையில் இந்த நூலினையும் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தலைப்பிற்கு கீழே சிறிதாக இருந்த “டீன் வயதினருக்கான குறுங்கட்டுரைகள்” என்பதையும் பார்த்தேன்.

எட்டு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தும் ஆசிரியர் என்னும் வகையில் டீனேஜ் எனப்படும்  பதின் பருவத்தினரை கையாள்வது குறித்து எப்போதும் ஆர்வத்துடனும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடனும் இருக்கும் எனக்கு இந்த நூல் மிகப்பெரிய விருந்தாக அமைந்தது என்பதை இங்கு முதலில் குறிப்பிட விரும்புகிறேன். 

 ஆசிரியர் விழியன் அவர்கள் பதின்பருவ மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பங்களை தெளிவுபடுத்தும் விதமாக இந்து தமிழ் திசையின் “வெற்றிக் கொடியில்” ‘சின்ன சின்ன மாற்றங்கள்: என்ற தலைப்பில் எழுதிய 27 குறுங்கட்டுரைகளின் தொகுப்பாக  இந்நூலை அளித்துள்ளார்.  பாரதி புத்தகாலயத்தின், புக்ஸ் ஃபார் சில்ட்ரன் வெளியீடாக வெளி வந்துள்ளது.

குறுங் பற்றிய விமர்சனம் எழுத நினைக்கும் போதே  அது ஒரு  நெடுங் கட்டுரையாக மாறும் எனத் தோன்றுகிறது. 

27 கட்டுரைகளும் பதின்பருவத்தினருக்கான 27 உலகங்களை காட்டுகின்றன. சின்ன சின்ன மாற்றங்கள் என்ற தலைப்போடு துவங்கும் முதல் கட்டுரையில் குழந்தைகளை குழப்பத்தில் வைத்திருக்கும் பதின்பருவம் பற்றிய மிக எளிமையான விளக்கத்தோடு ஆரம்பித்து இந்த பதின்பருவம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் பருவ காலத்தில் எப்படி மாற்றங்களை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதை தெளிவாக கூறுகிறார். இறக்கைகள் வேண்டுமா என்ற தலைப்பில் இப்பருவத்தினருக்கே உரிய கற்பனை குறித்து விளக்கி கற்பனையில் ஈடுபடுவது எவ்வித வளர்ச்சியை தரும் என்பதை பற்றியும் கூறுகிறார். இக்கட்டுரையை படித்த பின்பு இவ்வயதினருக்கே உரிய கற்பனை உலகில் இருக்கும் மாணவர்களை கையாள்வது எவ்வாறு என்பது குறித்த ஒரு சிறு தெளிவு கிடைக்கிறது. வட்டத்தின் முக்கியத்துவத்தையும் சக்கரங்கள் இல்லா உலகை கற்பனை செய்து பார்க்கக் கூறும் விழியன் நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் சக்கரத்தில் இயங்குவதை விரிவு படுத்தி விளக்குகிறார். அதன் தொடர்ச்சியாக வட்ட சக்கரங்கள் கொண்ட சைக்கிள் பயில்வதால் இறக்கைகள் முளைக்கும் என்று உற்சாகப்படுத்துகிறார். 

வரலாற்று பாடத்தை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுகளும் பெயர்களுமே பெரும் சுமையாக இருப்பதை சுலபமாக இறக்கி வைக்கும் விதத்தை ஆண்டுகளும் வரலாறும் கட்டுரையில் தெளிவுப்படுத்துகிறார். வரலாற்று பாட ஆசிரியரான எனக்கு ஆண்டுகளும் வரலாறும் படித்தபோது அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடங்களை மேலும் எளிமைப்படுத்துவதற்கான ஒரு உந்துதலை தந்துள்ளது.

கணக்கும் இனிக்கும், அறிவியல் மனப்பான்மை போன்ற தலைப்புகளின் கீழ் ஒவ்வொரு பாடத்தையும் எவ்வகையில் அணுக வேண்டும் என்று விளக்கும் விதம் மிகவும் அழகு. இவர் எழுதி இருக்கும் விதத்தில் இப்பாடங்களை அணுகினால் நிச்சயம் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும். 

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவ்வாய்ப்புகளை  முன்னேறுவதற்கான படிகளாக பயன்படுத்த வேண்டும்.   மேடைக்கு முந்து என்கிற கட்டுரையில் பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்பதின் நீட்சியாக மேடைக்கு முந்து என்கிற ஒரு புது சொற்றொடரை உருவாக்குகிறார். இங்கு மேடை என்பதனை பிரம்மாண்ட மேடையாக அல்லாமல்  குழுவில் மாணவர்கள் முன் பேசுவது, வகுப்பறையில் மாணவர்கள் முன் பேசுவது, பள்ளியில் மாணவர்கள் முன் பேசுவது இவற்றையும் கூட மேடையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதனை அறிவுறுத்துகிறார்.

8,9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் மாணவர்களின் குறிக்கோள் எது என்பதனை பற்றி சற்று தெளிவு ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் அவர்களது குறிக்கோளை நோக்கி பயணிக்க இயலும். இக்குறிக்கோளை எப்படி உருவாக்கிக் கொள்வது? எதனை நோக்கி கொண்டு செல்வது? என்பவற்றை உயரங்களை பெரிதாக்கு எனும் கட்டுரையில் கூறும் உதாரணம் மிகத் தெளிவாக மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பதின் பருவத்தினரை கையாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெருந்துணையாக அமைந்துள்ளது. இதற்கு தினசரி வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் செய்தித்தாள் வாசிப்பின் அவசியத்தையும் வேறொரு கட்டுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

கற்றலின் வளர்ச்சி  தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி என்பதாகும் . உங்க ஊரை தெரியுமா என்னும் கட்டுரையில் உள்ளூரில் இருக்கும் தெருக்கள் முதல் தபால் நிலையம் நூலகம் குடிநீர் குழாய், குடிநீர் தொட்டிகள் போன்ற அனைத்து அமைப்புகள் பற்றி தெரிந்து கொண்டு மாணவர்களே வரைபடங்களை தயாரிக்கும் தேவையும் அதனால் மாணவர்களின் மனதில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மனதில் எழும் வினாக்கள் குறித்தும் விளக்குகிறார். என்ன என்ன இருக்கிறது என்பதை பற்றி ஆராயும் போது தான் இல்லாதவை பற்றிய தெளிவும் அவற்றை எப்படி பெற வேண்டும் என்ற தேடலும் மாணவர்களிடம் உருவாக்கும். அந்தத் தேடல் ஓர் முழுமையான அனைத்தும் நிறைந்த ஓர் ஊரை உருவாக்க கூடும் என்பது நிச்சயம்.

பல்வேறு இடங்களில் பல்வேறு அளவுகளில் நூலகங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் முழு நேர பயன்பாட்டில் இல்லாததின் வேதனையை “தொடப்படாத நூல்கள் என்பது ஒரு கலாச்சார அவமானம்” என்ற பஞ்சின் மூலம் மனதில் ஏற்றுகிறார். இவற்றை சரி செய்ய மாணவர்களால் இயலும் என்பதனை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

சினிமா என்பது வெறும் கதை, ஆடல், பாடல், ஹீரோ, ஹீரோயின், வில்லன் மட்டும் அல்ல. குறிப்பாக சினிமாவில் வரும் டைட்டில்களை பார்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு அண்மை காலங்களில் வளர்ந்து வரும் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் பெயர்கள் அறிமுகமாவதும் அதன் வழியாக அவர்களின் தேடலில் தங்களுக்கான ஆர்வத்தையும் தங்களது எதிர்கால துறையையும் மாணவர்கள் கண்டடைய கூடும் என்கிறார். 

பதின்பருவத்தில் மாணவர்களை மிக அதிகம் பாதிப்பது ஒப்பீடாகும். அனைவருக்கும் ஒப்பீடு என்பது அவசியம் ஆனால் அந்த ஒப்பீடு நமக்குள்ளேயே நமக்கான ஒப்பிடாக இருக்க வேண்டும். சமமற்ற இருவரின் ஒப்பீடாக தற்போதைய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ள  ஒப்பீடுகளால் துவண்டு போகாமல் நம்மோடு நம்மை ஒப்பிட்டு முன்செல்ல வழி காட்டுகிறார் விழியன்.

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு விசேஷ இடங்களில் குழந்தைகள் அதிகம் காணப்பட்டதையும் தற்போது அதே நிகழ்வுகளில் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதையும் கவனித்து நமது கவனத்தையும் அதை நோக்கி திருப்புகிறார். குழந்தைகளிடம் வீட்டிற்கு பத்திரிக்கை வந்தால் கட்டாயம் தங்களை அழைத்து செல்ல அடம் பிடிக்கவும் கற்றுத் தருகிறார் விழியன். இவ்விழா கூடுகைகள் வெறும் உறவினர்களின் கூடல் மட்டுமல்ல அங்கு இருக்கும் ஒவ்வொரு விவரமும் ஒவ்வொரு வாழ்க்கைத் தளத்தை தெளிவுபடுத்தும் விஷயம் என்பதை அனைவரும் ஏற்கும் விதத்தில் விவரித்துள்ளார்.

இக்கட்டுரைத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு “வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டுமா?”.  இதில் அண்மையில் வெளிவந்த பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் பற்றிய வீடியோ குறித்து குறிப்பிடுகிறார். இதற்கான காரணத்தை விவாதித்து அதற்கான வழிகளையும் விவரிக்கிறார்.  அவ்விஷயத்தில் மாணவர்களாக நாம் என்னவேல்லாம் செய்ய முடியும் என்பதனை விவரிக்கும்  விதத்தில் விழியனின் சமூக விழிப்பு வெளிப்படுகிறது. 

எல்லா கட்டுரை பற்றியும் நானே எழுதி விட்டால் நீங்கள் படிக்க என்ன இருக்கும்? 

இந்த புத்தகம் அனைத்து தரப்பினருக்குமான நூலாக கருதுகிறேன். ஏனெனில் அனைவரின் வீட்டிலும் பதின்பருவ குழந்தைகள் தற்போது அல்லது எதிர்காலத்திலோ வருவார்கள். எனவே இப்போதே வாங்கி வைத்து படித்து விடுவதும் வாய்ப்புள்ளவர்கள் இதனை பரிசு பொருட்களாக தருவதும் சிறப்பு சேர்க்கும்.

கேத்தரின்

கடலூர்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *