noolarimugam: kutravaalikoondil athani modi - ra.yesudass நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி - இரா.இயேசுதாஸ்
noolarimugam: kutravaalikoondil athani modi - ra.yesudass நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி - இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: குற்றவாளி கூண்டில் அதானி மோடி – இரா.இயேசுதாஸ்

கூட்டுக் களவாணிகளின் ஊழல் சாம்ராஜ்யம்..
குற்றவாளி கூண்டில் அதானி மோடி“(நூலின் பெயர்)

ஆசிரியர்கள்: ஐ ஆறுமுகநயினார்
ஆறுக்குட்டி பெரியசாமி

நூல் அறிமுகம்:இரா.இயேசுதாஸ்

நூல் வெளியீடு:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) தமிழ்நாடு.

நூலுக்கு முன்னுரை: தோழர் கே பாலகிருஷ்ணன் சிபிஎம் மாநில செயலாளர்

“இத்துனூண்டு விலையில் இம்மாம் பெரிய மேட்டரா?!” என்று வியக்கும் வகையில்( ஐந்து ரூபாய் விலையில்) 12 லட்சம் கோடிரூபாய் சொத்து மதிப்பு எப்படி அதானிக்கு காட்டப்பட்டது என்பதை புள்ளி விவரங்களோடு புட்டு புட்டு வைக்கிறது 24 பக்க நூல்!.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தினுடைய வரலாறும் பின்னணி பற்றியும்…. செபி என்னும் காவல் நாய் ஏன் குரைக்கவில்லை என்பது பற்றியும் …SHELLஎனும் கூடு மட்டுமே இருக்கக்கூடிய போலி கம்பெனிகள் பற்றியும்… ஆடை தள்ளுபடி போல அதானி தள்ளுபடி பற்றியும்… ஊதி பெரிதாக்கப்பட்ட சொத்து மதிப்பு பற்றியும் …கம்பெனிகளை ரேட்டிங் செய்வதற்கான விலை பற்றியும்… கண்காணிப்பு குழுவும் அதானி வசம் இருப்பது பற்றியும்… நரேந்திர மோடி -அதானி இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய கூட்டு களவாணித்தனம் பற்றியும் …பாஜகவின் கள்ள மவுனம் பற்றியும் …மக்கள் நிச்சயமாக நல்ல தீர்ப்பை 2024ல் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் இந்த நூல் விதைக்கிறது.

2014ல் குஜராத்திலிருந்து டெல்லி பாராளுமன்றத்திற்கு நரேந்திர மோடி தனது நண்பர் அதானிக்குச் சொந்தமான விமானத்தில் தான் வந்தார் என்பதை குறிப்பிடும் நூல் ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போதும் அதானியை மட்டுமே அழைத்துச் சென்றதன் மர்மத்தை ஆதாரத்தோடு விளக்குகிறது.

செபி விதிமுறைகளின் படி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நிறுவனர் குடும்பம் 75% க்கு மேல் பங்குகளை வைத்துக் கொள்ள கூடாது.. மீதியை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ,தனி நபர்கள் வைத்திருக்கலாம். இதை கார்ப்பரேட் ஜனநாயகம் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் பங்குகளில்அம்பானி குடும்பம்56% அன்னிய நிறுவனங்கள் 24 சதவீதம்.. உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 16% மீதி சிறு முதலீட்டாளர்கள். அதேபோல இன்போசிஸ் பங்குகள் கையிருப்பு நிறுவனர் நாராயண மூர்த்தியின் குடும்பம் 15% மட்டுமே வைத்துள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் 36 சதவீதம் உள்நாட்டு நிறுவனங்கள் 33 சதவீதம் மற்றவை சிறு முதலீட்டாளர்கள் ..அம்பானியோ நாராயண மூர்த்தியோ செயற்கையாக தங்களது பங்குககளின் விலையை உயர்த்திக் கொள்ள முடியாது. ஆனால் நம்ம அதானி 74.98% பங்குகளை தன் குடும்பத்திலேயே வைத்துள்ளார்..! மீதி பங்குகளும் பெரும்பாலும் ஷெல் கம்பெனிஎனும் போலி கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளதை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.

ஹிண்டன்பர்க் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ஒரு நிறுவனத்தைப் பற்றி விசாரிக்கிறது என்று பார்த்தால் கணக்கியலில் முறைகேடுகள்.. முக்கியமான பதவிகளில் தகுதியற்ற நபர்கள் நியமனம்… வெளிப்படுத்தப்படாத ரகசிய பரிவர்த்தனைகள்.. சட்டவிரோத நெறிமுறை அற்ற வணிகம் ஆகிய சூழல் ஏற்படும்போது தகவல் கிடைக்கும் போது விசாரணை நடத்துகிறது

ஒரு பங்கின் விலை நியாயமானதா.. அதிகமானதா… என கண்டுபிடிப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை என்கிறது நூல். இது மிக மிக எளிது. பங்கு மதிப்பு ஆராய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட அளவுகோள்கள் இருந்தாலும் Price/Earning Ratio எனும்பி/இ விகிதம் ஒன்றுதான் முக்கியமானது. அதாவது ஒரு பங்கின் மார்க்கெட் விலைக்கும் ஒரு பங்கின் வருடாந்திர சம்பாத்தியத்திற்கும் உள்ள விகிதம் .வங்கி வைப்புத் தொகை ரசீதை உதாரணமாகக் கொண்டால் எட்டு சதவீதம் வருடாந்திர வட்டி…. எட்டு ரூபாய் சம்பாதிக்க நூறு ரூபாய் முதலீடு.. ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறது ..சுமார் 13 ரூபாய்.. ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறதோ அதுதான் பி/இ விகிதம். வைப்புத் தொகையின் பி/இ விகிதம் 13 என்று கொள்ளலாம்..

பிபிசி நிறுவனம் மீது தாண்டி குதிக்கும் வலதுசாரிகள்… என் மீது வழக்கு போடு நான் தயார் என்று ஹின்டன் பர்க் அறிவித்தபோதிலும் இங்கே உள்ள செபியும் ரிசர்வ் வங்கியும் நடவடிக்கை எடுக்கும் என்று வாய்மூடி மௌனமாக இருப்பதே பெரிய அளவில் தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்பதற்கு சான்றாகும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர் வங்கி டெபாசிட்டை விட கூடுதல் ரிட்டர்ன் எதிர்பார்க்கக் கூடியவர்… கொஞ்சம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர்… ஆக பிஇ விகிதம் 26 இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம்..ப்ளூசிப் என சொல்லப்படும் மிகப்பெரிய வலுவான நிதி ஆதாரம் கொண்ட கம்பெனிகளுக்கு பிஇ விகிதம் 30- 35 கூட இருக்கலாம் ..அதிகமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் ..இதற்கு மேல் இருந்தால் தவறு இருக்கிறது என்று அர்த்தம்.ரிலையன்சுக்கு பிஇ விகிதம்25; டிசிஎஸ் க்கு31; எல் அண்ட் டி க்கு 32; ஹிந்துஸ்தான் யூனியன் லீவருக்கு 62;

மாருதி சுசுகி 36 ;ஸ்டேட் வங்கிக்கு 12; ஏசியன் பெயிண்ட்ஸ்க்கு 70; ஆனால் அதானி நிறுவனங்களின் பிஇ விகிதம் எவ்வளவு தெரியுமா? அதானிஎன்டர்பிரைசஸ் 758 ?!அதானி கேஸ் 635?! அதானி கிரீன் எனர்ஜி 442?! அதானி ட்ரான்ஸ்மிஷன் 252! அதானிவில்மா 97 ..இது மிகச் சிறிய கம்பெனி ..அதானி துறைமுகம் 25 ..இவை எல்லாம் அண்மையில் வந்தவை.

இந்த சாதாரணமான அடிப்படை கணக்கை வைத்து அதானி நிறுவனம் எவ்வளவு தூரம் மோசடியில் ஈடுபட்டு இருக்கிறது.. எப்படித தன் சொத்து மதிப்பை பலூன் போல வீங்க வைத்திருக்கிறது. …என்பதை ஒரு சாதாரண மனிதன் கூட புரிந்து கொள்ளலாம்.

முன் அனுபவம் இல்லாதவர்களும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று விதிகள் திருத்தப்பட்ட உடனேயே 2018ல் மோடி ஆறு விமான நிலையங்களையும் தனியார் மயமாகும் என்றபோது அத்தனையையும் வாரிச் சுருட்டினார் அவரது நண்பர் அதானி.

கிருஷ்ண பட்டினம் துறைமுகத்தின் நிகர மதிப்பு கடன் போக 2020 ஜனவரி மாதத்தில் ரூபாய் 7360 கோடி என்று மதிப்பிடப்பட்டது. அதானிக்கு 75% உரிமையை ரூபாய் 5520 கோடிக்கு விற்பது என்று ஒப்பந்தமானது. மறுமதிப்பீடு செய்து இப்போது அதானி ரூபாய் 3375 கோடி கொடுத்தால் போதும் என்று ஒப்பந்தத்தை திருத்தி விட்டது பாஜக அரசு. அதாவது ரூபாய் 2145 கோடி ரூபாய் தள்ளுபடி. ஆடித்தள்ளுபடி போல இது அதானிக்கு தள்ளுபடி.!

அதானியின் சொத்து மதிப்பு 85 சதவீதம் மிகை மதிப்பீடு என்று சுட்டிக் காட்டுகிறதுஹிண்டன்பர்க். ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக உள்ள உண்மை மதிப்பை12 .5 லட்சம் கோடி ரூபாயாக சந்தையில் காட்டப்பட்டிருந்தது. அதனால்தான் உலகப் பணக்காரர்களில் மூன்றாம் இடத்தில் இருந்து தற்போது 37ஆம் இடத்திற்கும் கீழே தள்ளப்பட்டு இருக்கிறார் அதானி.

உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஒரு உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.. ஆனால் பிஜேபி கட்சியோ ராகுல் காந்தி இத்தாலி பெண்ணுக்கு பிறந்தவர் என்று பதில் கூறிக்கொண்டு நாட்டு மக்களை திசை திருப்ப எத்தனிக்கின்றது .முழு விவரங்களும் மக்கள் மத்தியில் செல்லும்போது 2024 ல் மக்கள் இந்த கூட்டுக் களவாணி அரசை வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று நம்பலாம் என்று
நம்பிக்கையை விதைக்கிறது இந்த ஐந்து
ரூபாய் விலையில் வெளிவந்துள்ள சிறு நூல்..

2014 இல் உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்திலிருந்தஅதானி 2022 இல் ஆரம்பத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறினார்.. அறிக்கை வந்த பிறகு கீழே பின்னோக்கி சென்று கொண்டே இருக்கிறார். 12.5 லட்சம் கோடி ரூபாய் சொத்து இன்று ரெண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று அம்பலப்பட்டு இருக்கிறது.

இது தேசத்திற்கு எதிரான வெளிநாட்டு சதி என்று நம் நாட்டு தேசியக் கொடியினை பின்னணியில் வைத்துக்கொண்டு பேட்டியளிக்கிறார் அதானி நிறுவன நிர்வாகி என்பதையும் நூல் சுட்டிக்காட்டுகிறது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *