நூல் : முன்னொரு காலத்திலே
ஆசிரியர் : உதயசங்கர்
வெளியீடு : வம்சி புக்ஸ்
ஆண்டு : முதல் பதிப்பு 2011
பாலசாகித்யபுரஸ்கார் விருது பெற்ற தோழர் #உதயசங்கர் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை கூறி அவரின் ‘முன்னொரு காலத்திலே’ நூல் வாசிப்பை பகிர்கிறேன் தோழர்களே!
“கோவில்பட்டி” எவ்வளவு மகத்துவமான ஊர்! எத்தனை இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய மண்! அந்த மகத்தான மண்ணிலிருந்து தான் இன்று ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதுபெற்ற குழந்தை எழுத்தாளர் தோழர் உதயசங்கர் அவர்கள் நமக்கு உற்சாகமளிக்கிறார். அவர் எழுதிய நூல்தான் ‘முன்னொரு காலத்திலே’. அப்பப்பா எத்தனை ஆளுமைகளுடன் உரையாடியிருக்கிறார்; எத்தனை சோவியத் மண்ணின் இலக்கிய முகங்களை கோவில்பட்டி தெருக்களில் நடமாட விட்டிருக்கிறார் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து. வெறும் டீ தண்ணிய குடித்து எழுத்தோடு விளையாடிய நாட்களை பசுமையாக நினைவு கூறுகிறார். அவர் நினைவு கூறும் ஆளுமைகள் பலரை நினைவஞ்சலியோடும் கண்ணீர் வடித்திருக்கிறார். ஆகச்சிறந்த நண்பர்களின் இழப்பு நமக்கு ஏற்பட்ட வலியாகவே உணர முடியும்.
இந்நூல் 112 பக்கம் தான் ஆனால் நிறைய உலக இலக்கியங்களை இந்த 112 பக்கங்களில் புகுத்தி அந்நூல்களை நமது வீட்டு நூலகத்திலிருந்து மீள்பதிவேற்றவும், வாசிக்க மறந்து தொடாமல் தூசு படிந்து கிடந்த நூல்களை தொட்டு அரவணைக்கவும் நினைவூட்டியும் விட்டார். அப்படித்தான் தோழர் கூறிய வில்ஹெம்ல் லீப்நெஹ்ட், அந்தோன் செகாவத், மாக்ஸிம் கார்க்கி முதல் நம்மூர் தோழர் கு.அழகிரிசாமி, இடைசெவல் நைனா கி.ரா.வும், நம்முடன் பல தளங்களில் இலக்கியத்தை பிழிந்து கொடுத்த தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் இப்படி பல எழுத்தாளுமைகள் கோவில்பட்டி தெருக்களில் உதிர்த்த இலக்கிய முத்துக்களை அள்ளி கோர்த்து மாலையாக இந்நூலில் நமக்கு கொடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆறாவது மாநில மாநாட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. எப்படியோ படிக்க மறந்து அலமாரியில் ஒளிந்துகொண்ட நூலில் இந்நூலும் இருந்திருக்கிறது. தோழர் குழந்தை எழுத்தாளருக்கான விருதை பெற்றபோது வெறுமனே வாழ்த்துச் சொன்னால் நன்றாக இருக்காது அவரின் நூல்களை வாசித்து பதிவிடுவோம் என்று கணினியின் பேரேட்டில் தோழரின் பெயரை பதிவு செய்து தேடிய போது தான் அவர் விருது பெறக் காரணமாக இருந்த 1970, 80 காலகட்ட எழுத்துலக, வாசிப்புலக அனுபவங்களை காண நேர்ந்தது. தோழர் நிறைய நூல்களை குறிப்பிட்டுள்ளார். 1980 வாக்கிலே இவ்வளவு நூல்களை வாசித்திருக்கிறார் என்றால் கோவில்பட்டி எவ்வளவு தூரம் முதிர்ந்த, பழுத்த அனுபவம் கொண்ட நகரமாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது. “யாரது உதயசங்கர்?” என்று இலக்கிய மேதை கந்தர்வன் அவர்களால் தேடப்பட்டு பாராட்டு மழை வாங்கியவராச்சே. அவ்வளவும் உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!!
தோழர் தாய் நாவலை “ஒரே நாளில் வாசித்தேன்” என்கிறார். அப்பப்பா பிரமிப்பாக இருக்கிறது! நாம் ஒருநூலை எடுத்தால் முடிக்க பல நாட்கள் ஆகும். அதற்குள் ஆயிரத்தெட்டு தூக்கம் வந்துபோகும். எப்படித்தான் எந்தத் தடையுமில்லாமல் வாசித்திருப்பார் என்கிறபோது ஆச்சரியம் மேலிடுகிறது. நாம் இன்னும் வாசிப்பில் குழந்தையாகவே இருக்கிறோம் என்று உணர்ந்த தருணமாகவே கருதுகிறேன். அவருடன் நூலை எப்படி வாசிப்பது என்று பயிற்சி எடுக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். தோழர் குறிப்பிட்டுள்ள நூல்களை ஒருவர் வாசித்துவிட்டாலே வாசித்தவர் ஒரு எழுத்தாளராக, சமூக மாற்றத்தின் விழுதாக மாறிவிடுவார் என்பது மட்டும் உறுதி.
எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் குழந்தைகளின் உலகத்திற்காக கடுமையாக உழைத்திட்ட எழுத்தாளர், கவிஞர் தோழர் உதயசங்கர் அவர்களின் கைகளில் விருது தேடிவந்து அமர்ந்துள்ளது. நல்ல சமூக எழுத்தாளன் கையில் வந்தமர்ந்த ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருதுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
எங்களின் மகத்தான இலக்கிய ஆளுமையே தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்! தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்கிற பெருமையே போதும். தொடர்ந்து தங்களோடு வாசகனாக பயணிக்கிறோம் தோழரே!
தோழருடைய நூல்களை தேடித்தேடி வாசிக்கவும், தோழர் குறிப்பிட்ட நூல்களை வாசிக்கவும் நேரம் ஒதுக்குவோம் தோழர்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.