பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவ்வப் போது சில நூல்களைக் குறித்து பேசுவார்.. அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். ஊடக வெளிச்சம் புத்தகங்கள் மேல் பாய்வது நல்ல, ஆரோக்கியமான விசயம்.. அதுவும் கமல்ஹாசன் போன்ற உலகம் அறிந்த பிரபலங்கள் அந்த நூல் குறித்த பேசும் போது, வார்த்தைகள் மேலும் கூடுதல் கவனம் பெறுகிறது.. கடந்த ஆண்டு, பிக் பாஸ் நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து பேசி, மக்களிடையே அப்படியொரு கவனம் பெற்ற நூல் தான் “நிறங்களின் உலகம்”..
தேனியின் முன்னோடி படைப்பாளிகளுள் ஒருவரான தோழர் தேனி சீருடையான் எழுதிய நாவல்..
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, 1996 ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 2008 ல் தான் வெளிவந்திருக்கிறது. அதை 2014 வாக்கில் தான் நான் வாங்கினேன். 2022 அக்டோபரில் தான் வாசிக்க எடுத்திருக்கிறேன்.. ஒரு படைப்பு உருவாகி , அச்சாகி, வாசகர் கைகளில் சென்றடையவும், அதை வாசிக்கவும் எவ்வளவு பெரிய கால இடைவெளி..? குற்ற உணர்ச்சி தான் பொங்கி வருகிறது..!
பிறக்கும் போது இருந்த கண் பார்வையை , இரண்டாம் வகுப்பு படிக்கும் போது இழந்து விடுகிற பாண்டி என்கிற குழந்தையின் கதை தான் இந்த நாவல்.. பார்வை இழப்பு ஒருபுறம், பாண்டி வீட்டில் தாண்டவமாடும் வறுமை இன்னொரு புறம், அவனது தந்தையின் குடி, கூத்து ஒரு புறம், அவர்களின் அறியாமை இன்னொரு புறம்… ஆக, நாலா புறமும் சுற்றிச் சுழன்றடிக்கும் இந்தச் சூறாவளியில் சிக்கிய பாண்டியின் வாழ்க்கை எப்படி சிக்கி, சின்னா பின்னமானது..? அதில் இருந்து அவன் மீண்டானா? இல்லையா? என்பது தான் கதை..!
சுந்தர் சருக்கை எழுதிய குழந்தைகளுக்கான தத்துவம் என்கிற நூலில் விவாதத்திற்காக ஒரு கேள்வியை முன்வைப்பார்.. “பார்வையற்றவர்களின் கனவுகள் எப்படி இருக்கும்..? அவர்கள் நிறங்களை எப்படி உணர்வார்கள்..?” நான் இந்த கேள்வியை நண்பர் ஒருவரிடம் கேட்டு விடை அறிய முயன்றேன்.. இந்த நூலை வாசிக்கும் போது பார்வை அற்ற மாற்றுத் திறனாளிகளின் சிரமங்கள், உணர்வுகள், அவர்களின் கல்வி முறை என அவர்களின் உலகை ஓரளவு நம்மால் அறிந்து கொள்ள முடியும்..!
பார்வை இல்லையென்றாலும் அவர்களது பிற புலன் உணர்வுகள் மூலம் அனைத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. எங்கும் செல்ல வேண்டும் என்றாலும் யார் துணையும் இல்லாமல் சென்று வர முடிகிறது. நாவலில் ஒரு இடத்தில் பாண்டி அப்பா வேலை செய்யும் கடைக்குப் போக வேண்டும் எனும் போது ஒரு கால் தார்ச் சாலையில், இன்னொரு கால் வெறும் தரையில் என ஒரு கணக்கு வைத்து நடந்து செல்வது போல, ஒவ்வொருவரையும் அறிந்து கொள்ள சின்னச் சின்ன குறிப்புகளை மனதில் நினைவு வைத்துக் கொள்வது என இயலாமையால் துவண்டு போகாமல் மாற்றுத் திறன்கள் மூலம் அதை ஈடு செய்து கொள்கிறார்கள்.. ஒவ்வொரு வார்த்தைக்கும், வார்த்தைகள் இணைந்த வாக்கியங்களுக்கும் வேறு வேறு நிறங்கள் உண்டு பாண்டிக்கு..! சந்தோச நிறங்கள் சில.. சோக நிறங்கள் சில..!
சுப்பு மாமா செய்த உதவி தான் மிக முக்கியமானது என்றாலும் பாண்டிக்கு கிடைத்த நண்பர்கள் பத்மநாபன், பாண்டுரங்கன், கன்னியம்மா ஆகியோர் தான் நடப்பதற்கும், படிப்பதற்கும் மட்டுமின்றி வாழ்வதற்கும் வாசிப்பதற்கும் வாசிப்பின் மூலம் மிகப் பெரும் அறிவுலகில் நுழைவதற்குமான வழிகாட்டிகளாக கிடைக்கின்றனர்.. அவர்கள் இல்லையென்றால் நாவலின் போக்கு வேற மாதிரி இருந்திருக்கும்..! நமக்கு இப்படியொரு நாவலே கிடைக்காமல் போகவும் வாய்ப்புகள் உண்டு..
60, 70 களின் தமிழக அரசியலையும் நாவலின் கதைக் களம் நமக்கு உணர்த்துகிறது.. திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக அமைந்த இந்திப் புரட்சி, ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த, வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேரை (குழந்தைகள் உட்பட..) குடிசையில் வைத்து கொளுத்திய படுகொலை சம்பவம், அறிஞர் அண்ணாவுக்கு வந்த புற்று நோய் பேசப்பட்ட அளவுக்கு கூட அந்தப் படுகொலைச் சம்பவம் பேசப்படவில்லை என்கிற துயரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நாவலில் வருகின்றன.
நேரு, படேல், லால்பகதூர் சாஸ்திரி, காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்ற அன்றைய காலகட்ட தலைவர்கள் எல்லோரும் நாவலில் வருகிறார்கள்.. ஆனால் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் தலைவராக இருந்த தந்தை பெரியார் ஒரு இடத்தில் கூட வரவில்லை..!
உணர்வுப் பூர்வமாக பேசும் போது அறிவையும் துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிற பாண்டுரங்கன், இந்தியா – சீனா போர் தொடங்கி, சீனாவில் மாசேதுங் நடத்திய மக்கள் புரட்சி வரைக்கும் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் பொன்னுச்சாமி கதாபாத்திரங்கள் முக்கியமானவை. ஆனால் அதற்காகவே ஆசிரியர் பொன்னுச்சாமி , பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்யப்படுவதும், பசியால் வாடி அவர் மரணம் அடைவதும் அவ்வளவு எளிதாக வாசித்து கடக்க முடியாத பக்கங்கள்..!
இந்தியா – பாகிஸ்தான் போர் உருவாக்கிய விவாதங்கள் கதையில் வருகிறது. போரில் இந்தியா வெற்றி பெற்றாலும் கூட, போரைத் தொடர்ந்து நாட்டில் உருவான வறுமை, உணவுக்கான திண்டாட்டம் குறிப்பிடத்தக்க செய்தியாக பார்க்க வேண்டி இருக்கிறது. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் அனைவரும் ஒவ்வொரு திங்கள் கிழமையும் இரவு உணவை நாட்டிற்காக தியாகம் செய்தனர். பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற குழந்தைகள் உட்பட அதைக் கடைப்பிடித்தனர் என்பது வியப்பூட்டும் செய்தி.. போர் குறித்த விழிப்புணர்வுக்கான செய்தி..!
பார்வையற்றோர் பள்ளியில் ஒவ்வொரு வேளைக்கும் தனக்கு உணவு கிடைத்தாலும் உணவில் கை வைக்கும் போதெல்லாம் தன் வீட்டில் தாண்டவமாடும் வறுமையும் அம்மா, அக்காவின் துயரம் மிகுந்த வாழ்க்கையும் நினைவுக்கு வந்து வந்து, அந்த உணவை மனதார, ரசித்து ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு பாண்டியை சங்கடப்படுத்துகிறது..
இத்தனைக்கும் இடையே பாண்டி கல்வி, வாசிப்பு, கலை இலக்கியம், விளையாட்டு, சாரணர், செஞ்சிலுவை சங்கம் என அனைத்திலும் சிறந்து விளங்கி, ஆண்டு விழாவில் எக்கச்சக்கமான பரிசுகளை வாங்குகிறான். தேர்விலும் சிறந்து விளங்கிய பாண்டி பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கிறான்.. ஆனால்.. படிப்பு முடிந்து விட்டதால், பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் இருந்து தேனியில் இருக்கும் தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற நினைப்பே பாண்டிக்கு பெரும் சித்திரவதையாக இருக்கிறது. காரணம், அங்கு வரவேற்க காத்திருக்கும் வறுமை..!
பாண்டி அடுத்து என்ன ஆனான்..? வாழ்க்கை சூறாவளி அவனை என்ன செய்யப் போகிறது..?? இந்த கேள்விகளுடன் முடிகிறது நாவல்..
தோழர் தேனி சீருடையானின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை கேட்டறிந்த பிறகு “உன்னுடைய சொந்த வாழ்க்கையின் துயரக் கதைகளே சொல்லி மாளாதவை.. நீ ஏன்யா வேறு கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறாய்.. உன் கதைகளையே எழுது..!” என்று தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஒரு மேடையில் சொன்னதாக எனக்கு ஞாபகம்.. ஆம், இந்த கதையில் வருகிற துயரம் மிகுந்த வாழ்க்கையை எதிர்கொண்ட அந்த சிறுவன் பாண்டி, வேறு யாருமில்லை, நம் தோழர் தேனி சீருடையான் தான். இது அவருடைய சுய சரிதை நாவல்..!
புத்தகம் பேசுது இதழில் வெளிவந்த தேனி சீருடையான் நேர்காணல் குறித்து தோழர் தமிழ்ச் செல்வன் எழுதிய கட்டுரைதான் நூலின் முன்னுரையாக அமைந்துள்ளது.. மனம் வலிக்க வலிக்க தான் வாசிக்க வேண்டி இருக்கிறது.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது. வாசிங்க..!
தேனி சுந்தர்