noolarimugam: oor er uzhavan - yesudoss நூல் அறிமுகம்: ஓர் ஏர் உழவன் - இரா.இயேசுதாஸ்noolarimugam: oor er uzhavan - yesudoss நூல் அறிமுகம்: ஓர் ஏர் உழவன் - இரா.இயேசுதாஸ்

“ஓர் ஏர் உழவன்” என்ற பெயரில் திரு.இரா.பாலகிருஷணன் இ.ஆ.ப.அவர்கள் எழுதிய நூலை ரோஜாமுத்தையாஆராய்ச்சி நூலகம்,பாரதி புத்தகாலயம், திருச்சி களம் இலக்கிய அமைப்பு ஆகியன இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ளன.முகப்பு ஓவியம் டிராட்ஸ்கி மருது. 208 பக்கங்கள் ..விலை ரூ200/ கனமான தடித்த அட்டை..தரமான வடிவமைப்பு.. நூலின் இடையே பொருத்தமான படங்கள் வாசிப்பை இலகுவாக்குகிறது.சங்கச்சுரங்கம் தொடரில் மூன்றாம் பத்தாக பத்துக் கட்டுரைகளும் ஆதியும் நவீனமும் அளவுடன் கலந்து நம் உணர்வுகளுக்கு உணர்ச்சி ஊட்டுகின்றன.

சங்க இலக்கிய வரிகள்-அகழ்வாராய்ச்சி சான்றுகள்-தொடர் முன்னேற்றம் இவற்றை நுணுகி ஆய்ந்து சிந்துவெளியில் இருந்து வைகை வரை உள்ள தொடர்பை மறுதலிக்க முடியாத வகையில் A Journey of A Civilization -Indus to Vaigai… நூல் மூலம் நிலைநாட்டிய பாலகிருஷ்ணன் அவர்களின் தமிழ் இலக்கிய புலமைப்பின்னணி இந்நூலை வாசிப்போருக்கு சங்க இலக்கிய விருந்து படைக்கிறது.

1.முதல் கட்டுரை“ஓர் ஏர் உழவன்”…
சங்க இலக்கியங்களில் உழவன், ஏர் குறித்த சொல்லாடல்கள்,திணையும் திணை சார்ந்த வாழ்வியல் முறைகளும், வேளாண்மையில் ஆண்-பெண் பங்கேற்பு, உழவு மற்றும் போருமே அன்றைய தொழிலாக இருந்தது, நிலக்கொடை, மனுநீதி காட்டும் வேளாண்மை,உணவை பகிர்ந்து உண்ணுதல்,உணவு எனில் அன்று வரகு-தினை-கொள்ளு-அவரை என நான்கு மட்டுமே….உபரி உற்பத்தியால் வணிகம் ஆரம்பித்தது…என்று விவரிக்கும் ஆசிரியர் தான் ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்தபோது சிறுதானியங்களை எல்லாத்தரப்பு மக்களுக்கும் சத்துணவாக அரசுத்திட்டம் மூலம் கொண்டு சென்றதை சொல்கிறார்.மேலை நாடுகள் வேளாண்தொழிலுக்கு வழங்கும் அதிகப்படியான மானியத்தின் அவசியத்தை பேசுகிறார்.
கடன் வாங்கி கொடையளித்த சங்க கால ஆட்சியர்களின் அறத்தை இக்கட்டுரை கூறுகிறது.

2.கூர் உளி குயின்ற கோடு…. என்பது கட்டுரை தலைப்பு… அன்று தொடங்கி இன்று வரை கல்வியையும்,கையெழுத்தையும் நம்பி வளர்ந்த-வளரும் சமூகம் தமிழ்ச்சமூகம் என நிறுவுகிறது இக்கட்டுரை. மதுரை உதயன் என்ற பொறியியல் அறிஞர் யூனிகோட் முறையில் “தமிழியை”(Tamili) பயன்படுத்தி திருக்குறளை வெளியிட்டார்.சிந்துவெளியிலிருந்து வைகை வரை பரவியிருந்த பானைத்தடம் ,பூசாரித்தலைவன்(Priest King) பற்றி விவரித்து பின் வந்த ஆரியப்பண்பாடு எப்படி மாறி இருக்கிறது என கட்டுரையில் கூறப்படுகிறது. பாரதி அழகுதமிழ் யூனிகோட் எழுத்துருக்களை பாரதி புத்தகாலயம் குறுந்தகடாக வெளியிட,தமிழை கணிணியில் அழகுபட எழுத உருவாக்கியதில் திருவாரூர் மாவட்ட அறிவியல் ஆசிரியர்கள் மோகனப்பிரியா,பெருமாள் ராஜ் ஆகியோரின் சிறப்பான பங்களிப்பை கட்டுரை எடுத்து கூறுகிறது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகல்கள் பற்றி சங்க இலக்கியங்கள் பேச…அதற்கு சாட்சியாக தற்போது நடுகல்கள் கிடைத்துள்ளன.எழுத்து நிலை மண்டபங்களில் இதிகாச காட்சிகள் வர்ணிக்கப்பட்டன. பச்சைக்குத்துதல்-தொய்யில் எழுதுதல்..Tatooing..என அன்றுமுதல் இன்றுவரை தொடரும் கலை குறிப்பிடப்படுகிறது. அகம்-புறம் என இரு பிரிவின் இலக்கிய வளர்ச்சி..அதன்வழி எழுத்தின் வரலாற்றை நவீன காலம் வரை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.

3.“ஓதம் சுற்றியது ஊர்”கட்டுரை தலைப்பு..
ஊர்.. வீடுகளில் நீர் மூலம் ஈரம் சூழ்வது என்பது அன்று சங்ககாலம் முதற்கொண்டு இன்றுவரை உள்ள நிலையை கட்டுரை கூறுகிறது.
சிந்துவெளி நாகரிகம் அழிந்தது வெள்ளப்பாதிப்பால்தான்…அங்கே எழுப்ப்ப்பட்டிருந்த சுவர்கள் வெள்ளத்தில் இருந்து நகரைப்பாதுகாக்கவே என்கிறது கட்டுரை.
மதுரை வெள்ளத்தை அடைக்க புட்டுக்கு மண் சுமந்த சிவன்…2015 சென்னை வெள்ளம்..வைகை நதியின் சமநிலை ஓட்டம் பற்றி எல்லாம் கட்டுரை விளக்குகிறது.

4.“ஆரியர் கயிராடு பறை”.. கட்டுரை தலைப்பு..
அண்மைக்காலம் வரை நாம் பார்க்கும் கழைக்கூத்து-தான் கயிறாடல்.. இதைப்பற்றி சங்க
இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.
சங்க இலக்கியங்கள் ஆரியருக்கும் இமயமலைக்கும் உள்ள தொடர்பு, ஆரியரின் திசை வடக்கு என்பதையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளது.சங்க காலத்தமிழர் காலத்திலிருந்தே தமிழருக்கும் ஆரியருக்குமிடையே முரண்பாடுகள் நிறைய இருந்ததை பல செய்யுட்கள் கூறுகிறது.
இமயமலையில் தங்கம் இருக்கிறது;அங்கே வில் கொடி பொறிக்கப்பட்டுள்ளது… ஆரியர்கள் இங்கே வந்து மல்யுத்தம் நடத்தினர்..இருவரிடையே வணிகத்தொடர்பு இருந்தது.. ஆரம்பத்திலிருந்து
சாதாரண இலக்கிய நடை பின்பு பக்தி இலக்கியமாக மாறியது..போன்ற பல செய்திகள் உள்ளன.தேம்பாவணியில் கூட ஆரியர் என்ற வார்த்தைகள் பல இடங்களில் உள்ளன.
கழைக்கூத்தாட்டத்தின் போது எழுப்பப்பட்ட ஒலி பறையோசை..
கழைக்கூத்து என்பது ஆரியக்கூத்தாகும்.
அன்று பறையிசை என்பது அன்று திருமணம்,சாவு என எல்லா இடங்களிலும் இடம்பெற்றது.

5.“எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு”. கட்டுரை தலைப்பு.
ஏறு தழுவுதல், காளையின் திமில்-கொம்புகள் பற்றி இந்திய துணைக்கண்டத்தில் 5000 ஆண்டுகளாக இலக்கிய பதிவுகளும்.. அகழ்வாய்வு சான்றுகளும் தொடர்கிறது.இன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் கூறப்படும் வர்ணனைக் காட்சிகள் அன்றும் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது.
நடுகல்களில் பதிவுள்ளது.சிந்துவெளியில் முத்திரைகள் கிடைத்துள்ளது.நின்றுகுத்தி மாடு,ஏறு தழுவி வென்ற ஆடவனையே திருமணம் செய்தல்…நவீனகால ஜல்லிக்கட்டு…திரைப்படங்களில் ஜல்லிக்கட்டு பற்றி எல்லாம் கட்டுரை விளக்குகிறது.

6.“செய்தி கொன்றார்க்கு உய்தி இல்”கட்டுரை தலைப்பு.
நன்றி கெட்ட செயல் செய்வோருக்கு தப்பிக்க வாய்ப்பே இல்லை என கூறும் சங்க இலக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.புலவர்கள் மேற்கொள்ளும் சமரச முயற்சிகள், ஆட்சியாளர்களுக்கு தரும் அறிவுரைகள் இடம் பெற்றுள்ளது. இராவணன் இறக்கும் தருவாயில் லட்சுமணன் சென்று அவரிடம் அறிவுரை பெற்றது….. காந்திஜி சுடப்பட்ட போது கோட்சேவை பிடித்த காவலர் ரகுநாய்க் குடும்பத்தினருக்கு ஒடிசா அரசு வாழ்வாதார உதவி செய்தது பற்றி எல்லாம் சுவாரசியமான செய்திகள் உள்ளன.

7.“பெரும் கை யானை” கட்டுரை தலைப்பு.
யானைக்கும் மனிதனுக்கும் இடையேயான தொடர்பு …உறவு…அன்று முதல் இன்றுவரை புதிராக உள்ளது..இருவரில் யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று தெரியாது.இது பற்றி நிறைய பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.(ஜெய மோகனின் யானை டாக்டர் நாவல் படிக்கலாம்) சிந்துவெளியில் யானை முத்திரைகள் கிடைத்துள்ளது. அண்ணல் யானை..அண்ணல் எருமை..என்ற வார்த்தையில் அண்ணல் என்ற வார்த்தை “கம்பீரம்” என செய்யுட்களில் பொருள் தருகிறது.
தும்பிக்கை என்று வார்த்தை அன்று இல்லை..பெரும் கை எனப்படுகிறது..ஆனை என்றும் வார்த்தை அன்று இல்லை.யானை தோல்,தந்தம்,தோல் பற்றி வர்ணனைகள் உள்ளன. யானைகள் கூட்டம் கூட்டமாகவே வாழும். பெண் யானை சாப்பிடாமல் ஆண் யானை சாப்பிடாது.3000 யானைகள் மட்டுமே வளர்ப்பு பிராணிகளாக உள்ளன..ஆனால் ஆதிகாலத்தில் யானைப்படை என்று ஒன்று இருந்துள்ளது…போன்ற பல தகவல்கள் உள்ளன.

8“ஓங்குபுகழ் கானகச்செல்வி” கட்டுரை தலைப்பு
சிந்துவெளியில் கிடைத்த தாய் தெய்வ சிற்பங்கள்…குகை ஓவியங்கள் .. அன்றிருந்த பெண் தெய்வ வழிபாட்டு முறையை காட்டுகிறது. ஆண் என்ற உள்ளுணர்வு சமூக சந்தை உணர்வாகவும், பெண் என்ற உள்ளுணர்வு குடும்பத்தின் உருவமாக உள்ளதாகவும் கூறுகிறார் பாலகிருஷ்ணன்… திங்கள், ஞாயிறு,மாமழை வழிபடப்பட்டது. பெண் என்ற வார்த்தைக்கு பேண்…பேணுதல் எனப்பொருள்.
திராவிட மொழிகள் அனைத்திலும் அன்னை என்பதற்கான பொது வார்தாதை “அம்மா”.. செல்வி என்ற வார்த்தைக்கு செல்வம் மிக்கவள் எனப்பொருள்.
ஏழு என்ற எண்ணிற்கு அன்று முக்யத்துவம் தரப்பட்டது…ஆதி தொடங்கி நவீன காலம் வரை எப்படி படிப்படியாக தெய்வ வழிபாடு மாறி வந்துள்ளது என பல புதிய செய்திகள் உள்ளன.காளி..மீனாட்சி…பலியிடல் என பல செய்திகள் உள்ளன.

9.“சாலார் சாலார் பாலர்”கட்டுரை தலைப்பு
சாலார் என்ற வார்த்தை சங்க இலக்கியத்தில் ஒரு இடத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் பண்பில்லாதவர்…பண்பில்லாதவர் பக்கம் நிற்பவர் என்று பொருள்..மன்னனும் கவிஞனுமாகியகோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையார் இருவரும் நேரடியாக பார்த்துக் கொண்டதில்லை; ஆனால் இருவர் இடையே இருந்த நட்பு இன்றும் மேற்கோள் காட்டப்படுவதை கட்டுரை விளக்குகிறது.
வடக்கிருந்து உயிர் நீத்தல் பற்றி விளக்கம் உள்ளது தந்தையை கொன்று விட்டு மகன் ஆட்சிக்கு வந்ததாக தமிழக வரலாற்றில் செய்தி கிடையாது எனச்சொல்லும் ஆசிரியர் வடக்கில் இது சகஜம் என்கிறார்.

10.“அரசு முறை செய்க” கட்டுரை தலைப்பு
அரசு முறை செய்க;களவு இல் ஆகுக…என்பது முழு வாசகம்,..சங்க காலப் பாடல் வரி.. ஐங்குறுநூறில் முதல் பத்துப்பாடல் வேட்கைப்பத்து ஆகும்.
தலைவன் -தலைவி இடையே காதல் பாடல்களில் கூட அரசியல் அறம் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கீழடியில் …பானையோட்டில் உள்ள “ஆதன்”என்ற
வார்த்தை செய்யுளில் உள்ளது. பாலகிருஷ்ணன் அவர்களின் ஆய்வு முறையின் சிறப்பே இங்குதான் தனிமுத்திரை பதிக்கிறது. இலக்கிய செய்யுள் பாடல் செய்தியே அகழ்வாய்வு சான்றாக.. திகழ்கிறது!…கிழவன் என்ற வார்த்தையின் பொருள் தலைவன்.. அரசு அமைப்பு முறை எப்படி உருவானது என கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. கடன் வாங்கி கொடையளித்த மன்னர்கள் பற்றி பல செய்யுட்கள் உள்ளன. பகிர்தல் அறம் அன்று நிலவியதை கட்டுரை வலுவாக முன்வைக்கிறது.
இறுதியாக இன்றைய வாக்குரிமையின் மகத்துவத்தை கூறும் தனது சிறப்பான கவிதையுடன் சட்டுரைத்தொகுப்பை நிறைவு செய்கிறார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *