Subscribe

Thamizhbooks ad

நூல்அறிமுகம் : பாவண்ணன் பாடல்கள் – ஜெயஸ்ரீ

குழந்தைகள் உலகத்தில் ஊடாடும் பாடல்கள்

கனடா இலக்கியத்தோட்டம் வழங்கிய 2023 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றுத் திரும்பும் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு “ பாவண்ணன் பாடல்கள்” என்ற பெயருடன் பாரதி புத்தகாலயத்தின் வெளியீட்டாக வெளிவந்துள்ளது.

பொருத்தமான ஓவியங்களுடன் ஒவ்வொரு பாடலும், மிகச் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு அழகான தொகுதியாக வந்துள்ளது. குழந்தைகளுக்குப் பாடிக் காட்டலாம் என்று நினைத்துத்தான் புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஆனால், நானே குழந்தையாக மாறி ஆட்டம் போடலாம் என்று தோன்றி விட்டது.

பாவண்ணன், சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் 40 ஆண்டு காலமாக எழுத்துலகில் இயங்கி வருபவர். அவர் தன்னுடைய எழுத்துகள் மூலம், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாமல், அடுத்த தலைமுறையினருக்கு, தன்னுடைய எழுத்துகள் மூலம் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாய் இருப்பவர்.

அதனாலேயே, தொடர்ந்து, தான் படித்த நல்ல புத்தகங்களைப் பற்றி அறிமுகக் கட்டுரைகளை எழுதுவதோடு, புதியதாக இலக்கியம் படைக்க வரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுடைய படைப்புகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். அதோடு, நல்ல கவிதைகளை எப்படி ரசிக்க வேண்டும் என்பதை இளம் வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கவிதை ரசனைக் கட்டுரைகளையும் வழங்குபவர். முன்னோர்களை நாம் அறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, காந்தியர்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.

இவ்வளவு செய்யும் பாவண்ணன்தான், குழந்தையாக மாறி, குழந்தைப் பாடல்களையும் படைத்துள்ளார். தொடர்ந்து பல குழந்தைப்பாடல்கள் தொகுப்புகள் வந்துள்ளன. தற்போது வெளிவந்துள்ளது பாவண்ணன் பாடல்கள் என்ற இந்தத் தொகுப்பு.. முன்னுரையில், பாவண்ணன், தனக்கும், தன்னுடைய ஆசிரியர் தங்கப்பா அவர்களுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லியிருக்கிறார்.

எங்கோ இருக்கும் குழந்தைகளுக்காக நாம் பாடல்கள் எழுதுவதாக நினைத்துக் கொள்வதால்தான், அறிவுரைகளாக எழுதி குவிக்கிறோம். நம் ஒவ்வொருக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நினைத்து எழுதினால், அது கட்டாயம் எல்லாக் குழந்தைகளையும் ஆட வைத்து விடும் என்று அவர் சொன்னதைக் குறிப்பிடுகிறார். அது மிகச் சரி என்பதாகவே தோன்றுகிறது இந்தப் பாடல்களை வாசிக்கும்போது.

குழந்தைகள் முதலில் எல்லாவற்றையும் காட்சிகளாகவே பார்க்கின்றனர். இந்தக் காட்சிகளில் கிடைக்கும் இன்பம் என்பது அவர்களை வெளியுலகை, சுற்றுச் சூழ்நிலையை ரசிக்க வைக்கிறது. இப்படி தன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை ரசிக்கக் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு இந்த உலகம் இன்பமயமானதாகத் தோன்றுகிறது. அடுத்தது , தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களை நோக்குகின்றனர். அவர்களிடமிருந்து ஏதோ அவர்கள் மனதிற்கு ஒரு இன்பம் கிடைக்கிறது.
அவர்கள் உலகம் என்பது விளையாட்டுகளால் நிரம்பியது.

அந்த விளையாட்டுகள் தரும் இன்பம் என்பது அந்தக் குழந்தைகள் மனம் உணர்ந்து துள்ள வைக்கிறது. இப்படி, குழந்தைகள் உலகத்தை, குழந்தையாகவே மாறி இந்தத் தொகுப்பிலுள்ள பாடல்களைப் பாவண்ணன் படைத்திருக்கிறார்.
”கண்ணாடி” என்று தலைப்பிட்ட பாடலில், சிறுவன் ஒருவன், சிவப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு, பார்ப்பதெல்லாம் சிவப்பாக இருப்பதைச் சொல்கிறான். கடைசியில்,

உண்மை சொன்னேன் கேளம்மா
உளறல் இல்லை நம்பம்மா
ஐயம் இருந்தால் வாங்கம்மா
அணிந்து பார்த்துச் சொல்லம்மா
என்று பாவண்ணன் பாடலை முடிக்கும்போது, ஒரு சிறுவன் உண்மையிலேயே கெஞ்சுவது போல இருக்கிறது.
ஒரு குழந்தை தான் ரயிலில் பயணித்ததை வந்து விவரிக்கிறது. ரயிலின் ஓட்டத்தில் செடி கொடிகள், வீடுகள் பின்னால் ஓடிப் போனதை, ரயிலின் ஓசை அவற்றைப் பயமுறுத்தியதாக, குழந்தையின் மனவோட்டத்தை அப்படியே இந்தப் பாடலில் கொண்டு வருகிறார் பாவண்ணன்.
வண்டி ஓடத் தொடங்கியதும்
மரங்கள் விலகி ஓடின
மதகு கோயில் பாலம் கூட
விலகி விலகி ஓடின.

ரயிலின் தோற்றம் நடுங்க வைத்ததோ
சிறிதும் புரியவில்லை
கூகூ ஓசை மிரள வைத்ததோ
அதுவும் தெரியவில்லை.
குழந்தையின் கள்ளங்கபடமற்ற மனம் அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.

“ஆசை” என்ற பாடல், ஒரு சிறுவன் வைக்கோல் போர் மேல் படுத்துப் புரள ஆசைப்படுகிறான். ஆனாலும் அம்மா திட்டுவாரோ என்ற பயமும் கூடவே வருகிறது. இப்படி ஆசையும், பயமும் கூடவே வருவதுதான் குழந்தைகள் மனது. அவரே குழந்தையாக மாறினால்தான் இப்படிப் பாடல்களைப் படைக்கமுடியும்..

குழந்தைகள் எப்போதும் விளையாடி விளையாடியே பொழுதைக் கழிக்க விரும்புபவர்கள். வீடு கட்டுதல், தோரணம் கட்டுதல், ரயில் விளையாட்டு, பொம்மைக்கு வேஷம் போட்டு விளையாடுதல் என்று அவர்கள் விளையாட்டுகள் பல விதம். அத்தனை விளையாட்டுகளையும் பாவண்ணன் இந்தத் தொகுப்பில் அழகான பாடல்களாகப் பாடியிருக்கிறார்.

விடுமுறை விளையாட்டு என்றொரு பாடல். இந்தப் பாடலைப் பாடும்போது, நானே சிறுமியாகி விட்டேன். இந்த விளையாட்டெல்லாம், நான் சிறுமியாக இருக்கும்போது, இப்படியே நடந்திருக்கிறது என்று நினைத்து ஆனந்தமும், உற்சாகமும் மனதில் பிறக்க வைத்தது. எலியைப் பிடிப்பது, நாய்க்குட்டியைப் பிடித்துக் கொஞ்சுவது என பல பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பிள்ளை விளையாட்டுகள் ஒரு புறம் என்றால், மனதிற்கு உற்சாகமூட்டும் காட்சிகளைக் கண்டு குழந்தை வியப்பது போல பாடல்கள் மனதை நிறைக்கின்றன.அரும்புகள் என்ற பாடலில், மல்லிகைப் பந்தல் கொடியில் பூக்கள் பூத்திருப்பதைக் கண்டு வியக்கும் சிறுமி வருகிறாள். அவள் பூக்கள் பூத்திருக்கும் அழகை,
பாயசத்தைத் தெளித்தது போல
பந்தல் முழுக்க அரும்புகள் என்றும்,

காற்றில் அசையும்போதிலே
கம்மல் போலத் தோன்றுதே என்றும்
வியக்கிறாள்.

அதே போல நினைவுத் தொகுப்பு என்ற பாடலில்,
கருப்புக் கம்பளம் போல் நெளிந்த
கடலின் அழகைப் படம் பிடித்தோம் என்று வியக்கும் குழந்தை.

ஓலைப் பாம்புகள் என்றொரு பாடல். சிறுவன் தாத்தா செய்த ஓலைப்பாம்புகள் பற்றி வியக்கிறான்.
பளபளக்கும் பச்சை நிறத்தால்
கண்ணைப் பறிக்குது
பட்டுநாடா அசைவது போல
தோற்றம் இருக்குது. என்றும்

சீறாமல் கொத்தாமல்
வாலை அசைக்குது
சின்னப் பிரண்டைக் கொடியைப் போல
வளைந்து நெளியுது என்றும்
வியக்கும் அந்தச் சிறுவனாகவே நம் மாறுகிறோம்.
குழந்தையின் வெகுளித்தனம் வெளிப்படும் இன்னொரு பாடல் மிகவும் அழகு. நூறு மணி என்ற பாடல். சிறுவன் அப்பாவின் கைக்கடிகாரத்தை
எடுத்துத் தன் கையில் கட்டிக் கொள்கிறான்.

கட்டிக் கொள்ளும் ஆசை உள்ள சிறுவனுக்கு மணி பார்த்துச் சொல்லத் தெரியாது. எல்லோரிடமும் காட்டவும் ஆசை. ஆனால், அதை கட்டி கொண்டு அவன் வீட்டை விட்டுப் போக முடியாது. அவன் வீட்டுத் தோட்டத்திலேயே இருக்கும் சேவல், மாடு, ஆடு எல்லாவற்றிடமும் காட்டி, மணி என்ன என்று கேட்கிறான். அவனே , அவற்றிடம், கையை அகல விரித்து நூறு மணி என்கிறான். இந்தப் பாட்டை வாசிக்கும்போது சிரிப்பு ஒரு பக்கமும், நமக்குள் இருக்கும் குழந்தையின் குதூகலம் மறுபக்கமுமாக ஆனந்தம் பொங்குகிறது.

தொகுப்பில் 303 பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கூட விடாமல் அதனதன் அழகை ரசிக்கலாம். சில பாடல்கள் இரு குட்டிக்கதையைப் போன்று அமைந்திருக்கின்றன. நாம் சிறுவராக இருக்கும்போது இப்படியெல்லாம் விளையாடியிருக்கிறோம் என்று நினைத்து உள்ளம் துள்ளுகிறது.

திருமண ஊர்வலம் என்ற பாடல் ஓணான், தவளை இரண்டுக்கும் திருமணம் பற்றியது. பந்து விளையாட்டு என்ற பாடல், பந்தடிப்பது பற்றியே கவனமாக இருக்கும் தம்பி, அம்மா வாங்கி வரச் சொன்ன முட்டையை, பந்து விளையாடும் கற்பனையில் வீசி உடைத்து விடுவது பற்றியது.ஒரே ஒரு ஊரிலே மாம்பழம் பழுப்பதை நாளுக்கு நாள் கவனித்து வரும் சிறுமி பற்றியது.
விளையாட்டுப் பிள்ளை என்ற பாடல், அம்மாவுக்கும், சிறுவனுக்கும் நடக்கும் உரையாடலாக அமைந்துள்ளது. ஊத்துக்காடு வெங்குடுசுப்பையரின் “மாடு மேய்க்கும் கண்ணே, போக வேண்டாம் சொன்னேன்” என்ற பாடல்  அருணா சாய்ராமின் குரலில் மிகவும் பிரபலமான பாடல்.

குறும்புக்காரக் கண்ணனுக்கும், யசோதைக்கும் நடக்கும் உரையாடல் போன்று அந்தப் பாடல் அமைந்திருக்கும். அந்த மாதிரி, பாவண்ணனின், இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. சிறுவர்களின் குறும்புகள் எல்லாமே சின்னக் கண்ணனின் குறும்புகள்தானே??
இன்னுமொரு சிறப்பு பற்றி சொல்லியே ஆக வேண்டும். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல பாடல்களில் ஒரு தாத்தாவோ, பாட்டியோ, மாமாவோ, அக்காவோ, அண்ணனோ வருகிறார்கள். அவர்கள் , குழந்தகளைக் கடிந்து பேசாதவர்களாக, கருணையுள்ளவர்களாக, அன்பைப் பொழிபவர்களாக இருக்கிறார்கள்.

முறுக்கு விற்கும் பாட்டி, தன் வறுமையிலும், அனைத்தையும் விற்றுக் காசாக்க வேண்டும் என்று நினைக்காமல், காக்கைக்கும், குருவிக்கும் கொடுத்து மகிழ்பவளாக இருக்கிறாள். ஐஸ் விற்கும் தாத்தா, காசு இல்லாத சிறுவனுக்கும், அவன் மனம் நோகாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்து ஐஸ் தருகிறார். இப்படியான பாடல்களை குழந்தைகள் வாசிக்கக் கிடைக்கும்போது நம்மையுமறியாமல், அவர்களையுமறியாமல், குழந்தைகள் மனங்களில் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை துளிர் விடுவதோடு, சின்ன வயதிலிருந்தே இது போன்ற குணங்கள் அவர்களிடமும் துளிர்க்கும்.

இப்படி இந்தத் தொகுப்பு, வாசிக்கும் பெரியவர்களை குழந்தைகளாக மாற்றுகின்ற ரசவாதத்தையும், பாடிப் பார்க்கும் குழந்தைகளை உற்சாகம் ததும்ப துள்ள வைக்கும் இன்பத்தையும் அளிக்கும்.
மிகவும் எளிமையாக இந்தப் பாடல்களை எழுதியிருக்கும் பாவண்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். அந்தந்தப் பாடல்களுக்கும் பொருத்தமான படங்களை வரைந்திருக்கும் ரோகிணிகுமார்,  மிகுந்த பாராட்டுக்குரியவர். தொகுப்பினை மிக அழகான முறையில் நேர்த்தியாக வெளியிட்டிருக்கும் பாரதி புத்தகாலயம் பாராட்டுக்குரியது.

—————

பாவண்ணன் பாடல்கள் – ஆசிரியர்:பாவண்ணன் 
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ 320

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here