மக்களுக்கு உதவாத எந்தக்கலையும் , வழக்கழிந்து போகும். இது அறிவியலுக்கும் பொருந்தும் என்பதை அறிந்தவர் பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியம் . நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். சென்னை மாநிலக் கல்லூரி முதல் தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரிவரை தமிழகத்தில் பல கல்லூரிகளில் இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்று தற்போது குமரி மாவட்டத்தில் தோவாளை நகரில் வசித்துவருகிறார். காக்கை சிறகினிலே , தீராநதி, துளிர், செம்மலர்,பூவுலகு போன்ற இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ‘மலையாள மனோரமா’ வெளியிடும் ஆண்டுமலர்களில் தொடர்ந்து பல அறிவியல் கட்டுரைகளை எழுதியும் , பெயர்த்தும் வருகிறார்.இவர் இயக்கவாதியாகவும் இருந்ததால் பல அறிவியல் உண்மைகளை, கண்டுபிடிப்புகளை மக்களுக்கு உதவும் நோக்கில் எளிய, தெள்ளிய தமிழ்நடையில் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு நூலே “சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் “ –இந்நூலில் அறியபடாத அறிவியல் உண்மைகளை மக்கள் அறியத் தருகிறார் .
“தி சைனா சிண்ட்ரோம் “ எனும் கட்டுரையில் சைனா சிண்ட்ரோம் என்ற பெயரிடக் காரணமும், பெயருக்கும் சீனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற உண்மைத் தன்மையும் மெல்லிய எள்ளல் தொனிக்க விளக்குகிறார். அதே தருணத்தில் அணுஉலைகளால் மக்களுக்கும், இந்த பூவுலகிற்கும் ஏற்படும் அழிவுகளையும் கவலையோடு பகிர்கிறார்.
நிறப்பிரிகையை கண்டறிந்த தற்செயல் நிகழ்விலிருந்து சந்திரசேகர வேங்கடராமன் என்ற தமிழகத்துக்காரர் இந்தியாவுக்கு நோபல்விருது பெற்றுதந்த வரைக்கும் , சுவையாக அறிவியல் விளக்கங்களோடு ஆசிரியர் எடுத்துவைக்கிறார்.
“நிலநடுக்கம்-கணிக்கவும் தடுக்கவும் முடியுமா “ என்ற கட்டுரையில் பூமியின் அமைப்பு, நிலநடுக்கம் ஏற்படக் காரணம், நிலநடுக்கத்தை கண்டறியவும், அதை தடுக்கவும் எடுக்கும் முயற்சிகளை எளிமையாக விளக்குகிறார். அறிவியலால் முடிகிறதோ இல்லையோ, இயற்கையை புரிந்து கொண்டு அதனுடன் இணைந்து வாழ்ந்தால் கொடும்விளைவுகளை தவிர்க்கலாம் என்பதே ஆசிரியரின் கருத்து.
இக்கட்டுரையின் பேசுபொருளை ஒத்த எரிமலைகள் குறித்த கட்டுரைகளிலும் எரிமலைகள் தோன்றக் காரணம், எரிமலைகள் வகைப்பாடுகள், அவற்றால் நமக்கு ஏற்படும் தீவிளைவுகள் எல்லாம் விளக்கும் பேராசிரியர் , எரிமளைப்பகுதிகளில் உயிரினம் வாழும் முறைமைகளையும் பட்டியலிடுகிறார்.இயற்கையின் சீற்றங்களை புரிந்து அதனுடன் இணைந்து வாழ்ந்துதான் பழகிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.
“சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் “ என்ற கட்டுரையில் சூரியபுள்ளி என்றால் என்ன, அவை எப்படி தோன்றுகின்றன , அவை தோன்றும் கால அளவுகள் , இளம்வயது மரணங்கள் உட்பட அதன் தீயவிளைவுகள் , சூரியப்புள்ளிகள் நீடிக்கும் கால அளவுகளை சரியாக கூராய்ந்து தீவிளைவுகளைத் தவிர்க்கவேண்டுமே என்ற கவலையோடு பதிவிடுகிறார். இதே போல “கருந்துளை மோதியது ; அண்டம் பேசியது “என்ற கட்டுரையில் கருந்துளை தோன்றக்காரணம், அதனிடமிருந்து நாம் பெரும் பாடம் போன்றவற்றை ஐன்ஸ்டீன் ,ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்ற இயற்பியல் மேதைகளின் ஆய்விலிருந்து இந்நூல ஆசிரியர் சுவைபட விளக்குகிறார் .
இந்நூலில் “ கடந்த காலத்திற்குத் திரும்பிச் செல்வதும், எதிர்காலத்திற்கு முந்திச் செல்வதும் சாத்தியம்தானா “ எனும் கட்டுரையில் காலம் என்றால் என்ன என்பதை விளக்கிவிட்டு, கடந்தகால பயணம், எதிர்காலப் பயணம் போன்ற கருதுகோளில் அமைந்த உலக இலக்கியங்களை சுவைபட நிரல்படுத்துகிறார் . புனைவிலக்கியங்களுக்கு சாத்தியமானது அறிவியல் ரீதியில் சாத்தியமின்மையை உணர்த்துகிறார்.
“பட்டாம்பூச்சி விளைவு “ எனும் சொல்லாடல் எவ்வாறு எங்கு தோன்றியது ; அதன் சிறப்பம்சம் என்னென்ன என்பதை எல்லாம் பகிர்கிறார். இவ்வாய்வுமூலம் சாதிய, மதவாத மோதல்களை தடுக்கும் முறைகளைக் கண்டறியலாமே என்று முன்மொழிகிறார். இந்நூலெங்கும் இயற்கையின் ஊடாக மனிதன் கண்டறியும் அறிவியல் உண்மைகளும் மக்களுக்கும் பயன்படவேண்டும் என்று ஆசிரியரின் ஆதங்கமும், அக்கறையும் விரவிகிடக்கிறது. இந்த எண்ணம் வாசகரையும் பற்றிக்கொள்வது இந்நூலின் சிறப்புகளுள் ஒன்று.!
பிறிதொரு கட்டுரையில் எறும்புகளின் வாழ்வியல் முறைகளை ஆச்சரியமூட்டும் வகையில் அடுக்குகிறார். தன்னை சமூகமனிதன் என்று பீற்றிக்கொண்டே நெறி பிறழும் மனிதன், எறும்புகள் எவ்வாறு சமூகஒழுங்கோடும் , அக்கறையோடும் இயங்குகின்றன என்ற அக்கட்டுரை சிறப்பானது.! இங்கனமே இசைமருத்துவம் கட்டுரையில் பிதொகோரசின் இசைஞானத்தையும் , நமது பெரும்பானாற்றுபடையில் மிளிரும் இசைநுட்பங்களையும் ஒப்பநோக்குவது பேராசிரியர் இராமசுப்பிரமணியனின் அறிவியலோடு சங்கநூல் பரிச்சயத்தையும் பகர்கிறது.! இந்நூலை வாசிக்கும் வாசகர் தம்மை அறிவியல் ரீதியாகவும் , சமூகவியல் ரீதியாகவும் முன்னகர்த்துவதை உணர்வர். இந்நூலை வாசிப்பவருக்கு வெளியிட்ட காக்கை பதிப்பகத்தாரு க்கும், நூலாசிரியர் பேராசிரியர் இராமசுப்பிரமணினுக்கும் பாராட்டத் தோன்றும்,!
“சூரியப்ப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் “- அறிவியல் கட்டுரைகள்.
ஆசிரியர் ;பேரா.சு.இராமசுப்ரமணியன் .
பக்;137 . விலை;ரூ.150/.
காக்கைப் பதிப்பகம்.சென்னை-600117 .தொ.எண்; 9715146652.
