noolarimugam : thalai maraivu vaazhkayil enathu anubavangal by era.esuthaas நூல்அறிமுகம் : தலை மறைவு வாழ்க்கையில் எனது அனுபவங்கள்-இரா.இயேசுதாஸ்
noolarimugam : thalai maraivu vaazhkayil enathu anubavangal by era.esuthaas நூல்அறிமுகம் : தலை மறைவு வாழ்க்கையில் எனது அனுபவங்கள்-இரா.இயேசுதாஸ்

நூல்அறிமுகம் : தலை மறைவு வாழ்க்கையில் எனது அனுபவங்கள்-இரா.இயேசுதாஸ்

அக்டோபர் 29 ,1947 ல் அன்றைய ஒன்றாய் இருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு கமிட்டியின் பொதுக்காரியதரிசி தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் முகவுரையுடனும் ..
தற்பொழுது சிபிஐ(எம்)மின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி.செல்வா அவர்களின் முன்னுரையுடனும் நூல் வெளிவந்துள்ளது.

1947 நூலை ஆய்வாளர் பொ.வேல்சாமி அவர்கள் கண்டுபிடித்து ..முகநூலில் தொடர்ந்து அறிமுகப்படுத்தினார். தற்போது பரிசல் பதிப்பகம் அதை வெளியிட்டுள்ளது பாராட்டத்தக்கது.

“சுந்தர்ராஜ்” என்ற புனைப் பெயரில் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாகாண கமிட்டியின் அங்கத்தினராகவும் தமிழ்நாடு கிசான் சபாவின் பொது காரிய தரிசியாகவும் இருந்த தோழர் பி. சீனிவாச ராவ் அவர்கள் தனது தலைமறைவு வாழ்வில் நடந்தவற்றை மாகாண சென்டரில் இருந்த தோழர் சர்மா (சாகர் என்ற பெயரில் )1947 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எழுதிய இருபது கடிதங்களின் தொகுப்பே இந்த நூலாகும்.

1947 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை தமிழ்நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளானது. பெரு மிராசுதார்கள்.. மில் முதலாளிகள்.. கள்ள மார்க்கெட் பிரபுகள்.. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கம்யூனிஸ்டுகள் மீது ஆத்திரத்துடன் இருந்தார்கள். இவர்கள் காங்கிரஸ் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் வலதுசாரிஆதரவுடன் காங்கிரஸ் என்ற பெயரில் செயல்பட லைசென்ஸ் பெற்றார்கள்.
பலாத்கார் குற்றச்சாட்டுகளுடன் பல பொய் வழக்குகள் கம்யூனிஸ்டுகள் மீது ஜோடிக்கப்பட்டன. சுதந்திரத்திற்கு பிறகும் கூட கட்சி மீதான தடை நீங்க வில்லை. சிறையில் பலர் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக பலர் போலீசாலும்,சிஐடிகளாலும் தொடர்ந்து துரத்தப்பட்டு கொண்டே இருந்தனர்.

“பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்” பெயரால் ஜனவரி 22 நள்ளிரவில் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். கம்யூனிஸ்டுகளை தேடுகிறோம் என்ற பெயரில் கிராமம் கிராமமாக வீடுகள் தோறும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன .என்றாலும் 8 மாத காலம் தலை மறைவு வாழ்க்கைக்குச் சென்றவர்கள் கடைசி வரை போலீசிடம் அகப்படவில்லை.. கட்சியின் வேலைகளும் தடைபடவில்லை.. ஒவ்வொரு கிளையும் தொடர்ந்து செயல்பட்டன.. அந்த அளவுக்கு பொதுமக்கள் கம்யூனிஸ்டுகளை பாசத்தோடும் தோழமையோடும் பாதுகாத்ததை இந்த 20 கடிதங்களும் எதார்த்தமாக பதிவு செய்கின்றன. கட்சி பற்றி அடிமட்டத்தில் உள்ள விவசாயிகள் ..தொழிலாளர்கள் என்ன கருதுகிறார்கள்.. மத்திய வர்க்கத்தில் உள்ளவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் இக்கடிதங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
25 ஆண்டு காலம் பிஎஸ்ஆர் இந்த சேவையில் ஈடுபட்டு இருக்கிறார் .ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் தமிழாக்கப்பட்டு இந்த நூல் வெளிவந்திருக்கிறது .

ஆரம்ப காலத்தில் காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தேசபக்தனாக களமிறங்கிய
பி. எஸ் .ஆர் அவர்கள் காங்கிரஸின் போதாமையை கண்டு பொதுவுடமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
தோழர் அமீர் ஹைதர்கான் அவர்களுடன் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஏற்பட்ட தோழமை தொடர்பும் உரையாடல்களும்” கம்யூனிஸ்ட் அறிக்கை” வாசிப்பும் அவரை முழுமையான கம்யூனிஸ்ட் ஆக மாற்றியது. 1918ல் சென்னையில்தான் அமைப்பு ரீதியான முதல் தொழிற்சங்கம் இந்தியாவிலேயே முதன் முதல் அமைக்கப்பட்டது. 1923 இல் மா .சிங்காரவேலர்
மே தின கொடியை ஏற்றி வைத்து மே தினத்தை அறிமுகப்படுத்தினார். 1932 இல் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்டு கிளை உருவானது .அதில் பிஎஸ்ஆர் உறுப்பினரானார். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளை செங்கொடி இயக்கத்தில் அணி திரட்டுவதில் பிஎஸ்ஆர் பங்கு நாம் அறிந்தது.

இன்று போல தொலை தொடர்பு வசதி கிடையாது.. பேருந்து ..ரயில் வசதி கிடையாது. ரயிலை, பேருந்தைபிடிக்க 4 ,5 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். சிஐடிகள் தொடர்ந்து உளவு பார்த்துக்கொண்டு துரத்திக் கொண்டே இருப்பார்கள். 10 ..15 மைல் தூரங்கள் கொளுத்தும் வெயிலில் பட்டினியாக நடந்தே செல்ல வேண்டிய நிலை பல நேரங்களில் ஏற்பட்டன. சில நேரங்களில் சைக்கிள்.. கூட்ட நெரிசல் ..நிற்க கூட இடமில்லாமல் ஏழு, எட்டு மணி நேரம் நின்று கொண்டே ரயில் பயணம்.. பேருந்து பயணம்.. கிராமங்களில் சாப்பிடுவதற்கு கூட ஓட்டல் வசதி இருக்காது. கிராமங்களில் தலைமறைவாக தங்கும் இடங்களில் மூட்டை பூச்சி.. கொசு..பெருச்சாளி.. குப்பைத்தொல்லை.. சீதபேதியுடன், வயிற்று வலியுடன் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் பொழுது சாய்ந்த பின்தான் ஆற்றங்கரைக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ..

தான் வரவேண்டிய இடத்தை.. சந்திக்க இருக்கிற தோழருக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பி அவர் வர சொன்ன தகவல் கிடைத்த பின்தான் இங்கிருந்து கிளம்பி போக வேண்டும்.. பல்வேறு வாகன வசதிகள் உரிய நேரத்துக்குள் கிடைக்காத போது காலம் கடந்து செல்வதும் ..காத்திருந்த தோழர் சென்று விடுவதும்.. பல நேரங்களில் நிகழ்கிறது.

ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு விவசாயி கூட தன்னை நிலப்பிரபு என்று நினைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார்! சிறு பெட்டிக்கடை வைத்திருந்தவர் கூட தன்னை பெருமுதலாளி என்று நினைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்கள் மீது “காண்ட்டாக” இருந்தார். சிறு மாடி வீடு கட்டியிருந்தவர் கூட தன் வீட்டை பிடுங்கி ..வீடு இல்லாதவர்களுக்கு கம்யூனிஸ்டுகள் கொடுத்து விடுவார்கள் என்று பேசியதை எல்லாம் தன் காதுபடை கேட்டார் பி சீனிவாசராவ் அவர்கள். இவர்களோடு சில நேரங்களில் பேசி புரிய வைக்கவும் வேண்டி இருந்தது.

அதேபோல சாதி பார்ப்பதும் நடந்தது.” சங்கம்” என்றாலே அது அடித்தட்டுமக்களின் அமைப்பே என்கின்ற நிலை அன்றும் இருந்திருக்கிறது. பசி ..பட்டினி ..வறுமை. வேலையின்மை.. வேலை நிறுத்தம் என்று எல்லா துன்பங்களுக்கும் இடையிலேதான் இந்த தலைமறைவாக வருபவருக்கும் உணவு ..இடம்.. தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய நிலையில் அன்றைக்கு கிராமத்து தோழர்கள் இருந்திருக்கிறார்கள். அதுவும் பாசத்தோடு கவனித்திருக்கிறார்கள் என்பதை பல பதிவுகள் சுட்டுக்காட்டுகின்றது. கட்சி குடும்ப உறுப்பினர்களின் கட்சியின் மீதான மாறாத தீவிர உணர்வை பி எஸ் ஆர் பல இடங்களில் மெச்சி.. நெகிழ்வுடன் எழுதுகிறார். சைவம் அசைவம் என்று எந்த வகை உணவு போட்டாலும் சாப்பிடும் பிராமணரான பி எஸ் ஆர் அவர்கள்.. சாப்பிடும் இடத்தில் பிராமணனுக்கு தட்சணை கொடுங்கள் என்று கட்சிக்கு நிதி வசூல் செய்வதும் நடக்கிறது.!
சோற்றில் கருப்பாக எதுவும் கிடந்தால்சாப்பிடாமல் தவிர்த்து விடுவார் ஆரம்பத்தில்… நாற்றம் அடிக்கும் சோற்றில் புழு கிடந்தால் கூட எடுத்து போட்டுவிட்டு சாப்பிடும் நிலையை தனக்கு கிடைத்த படிப்பினையாக பதிவு செய்கிறார் இந்த நூலில். அப்படி பசி பட்டினியோடு வாடி அவஸ்தைப்பட்ட பல நிகழ்வுகள் இந்நூலில் உள்ளன .

கட்சிக்கு நிதி சேர்க்க வேண்டும்.. வயிற்றுக்கு உணவு தேட வேண்டும் ..உண்மையாக கட்சிக்கு உழைக்கக்கூடிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி தர வேண்டும்…

சுதந்திரம் கிடைத்தபின் அடித்தட்டு மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா என்பது ஆகஸ்ட் 14 1947 இரவு கொண்டாட்டங்களுக்குப் பிறகு பெரும் கேள்விக்குறியானதை மிகவும் வருத்தத்தோடு பதிவு செய்திருக்கிறார் தோழர் பி எஸ் ஆர் அவர்கள்.
“இடுக்கண் வருங்கால் நகுக” என்பதற்கு ஏற்ப தலை மறைவு வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்களை மிகவும் நகைச்சுவை உணர்வோடு சகித்துக் கொண்டு பதிவிட்டிருக்கிறார் தோழர் அவர்கள்.. அப்படித்தான் தோழர்கள் பலர் மீதான விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.
தோழர்கள் பி ராமமூர்த்தி.. ஆர் நல்லகண்ணு ஆகியோரைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. தலைமறைவு வாழ்க்கையில் எழுதப்பட்ட கடிதங்கள் என்பதால்.. தான் பயணித்த இடங்களைப் பற்றியோ.. சந்தித்த தோழர்களை பற்றியோ நேரடி பெயர்கள் முழுமையாக இல்லை .ஆனால் நாம் ஊகித்து தெரிந்து கொள்ள முடியும்.

தன்னுடைய களப்பயணங்களின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ..பெண்களுடனும் முதியோர்களுடனும்.. அரசுத்துறை அதிகாரிகளுடனும் உரையாடி யதார்த்த நிலைமையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப கட்சி திட்டமிடுவதற்காக கமிட்டி கூட்டங்களில் பேசுகிறார். எந்தெந்த கிராமங்களில் எந்தெந்த உழைப்பாளிகளுக்கு என்ன கோரிக்கை வைக்க வேண்டும், இயக்கத்தை கட்ட வேண்டும் என்பதையும் களத்தில் நேரடியாக கண்டு தீர்மானிப்பதை இந்த கடிதங்கள் விளக்குகின்றன.

வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும்
தோழர் பி எஸ் ஆர் அவர்கள் கட்சியில் பல தோழர்கள் தனிப்பட்ட நபர்களின் தியாகத்தையும்.. நேர்மையையும் பார்த்தும்.. பேச்சினால் ஈர்க்கப்பட்டும் கட்சிக்கு வருகிறார்கள். ஆனால் அதற்குப்பின் கட்சியின் திட்டம் என்ன.. கொள்கைகள் என்ன என்று புரிந்து கொள்ளாமலே கடைசி வரை காலத்தை கடத்தி விடுகிறார்கள். இதனால் பல சோதனைகளை என்னுடைய தலைமறை வாழ்வில் சந்திக்க வேண்டி இருந்தது. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தேன். தோழர் அமீர் ஹைதர்கான் தெளிவாக கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை விலாவாரியாக விளக்கவில்லை என்று சொன்னால் நானும் மற்றவர்களைப் போல்தான் சாதாரணமாக இருந்திருப்பேன் என்று நமக்குச் சுட்டுகிறார்.

இப்படிப்பட்ட அருமையான அரிய நூலை காலத்தில் வெளியிட்ட பரிசல் பதிப்பகத்திற்கு நம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
இந்நூலை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டு களப்பணியாற்றும் உணர்வை தோழர்கள்பெறுவார்கள்…புதுப்பித்துக்
கொள்வார்கள்என்று நம்புவோம்.!

பி .சீனிவாச ராவ்
136 பக்கங்கள்
ரூ 150/-
பரிசல் வெளியீடு
நூல் தேவைக்கு:
93828 53646&88257 67500

=====  இரா.இயேசுதாஸ்-மன்னார்குடி.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *