noolarimugam: Thamizhagathil samooga seerthirutham iru nootrandu varalaru-tamilraj நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்
noolarimugam: Thamizhagathil samooga seerthirutham iru nootrandu varalaru-tamilraj நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு- செ. தமிழ்ராஜ்

21ஆம் நூற்றாண்டிலும் நாங்குநேரியில் சாதிய வெறிபிடித்து அரிவாளை தூக்கி அலையும் மாணவர்களை கண்டு சமூகம் அதிர்ந்து போயிருக்கின்ற இவ்வேளையில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள் எந்தளவு சாதியப் புரையோடி இருந்திருக்கும் என்பதை காலத்தின் கண்களை பின்னால் சுழற்றிப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். சின்னத் துரைகள் வெட்டுப்பட்டு கிடக்கும் ரத்தக்கறைபடிந்த படிக்கட்டுகளில் நின்று இந்தப் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அது இன்னும் மிக முக்கியமாக மாறிப்போயிருக்கிறது.

நவீன உலகமானது புதிய புதிய உச்சங்களை தொட்டு சுழன்றுகொண்டிருக்கின்றது. அந்த சுழற்சிக்கு காரணமான காரணகர்த்தாக்களை தெரிந்துகொள்ளாமலேயே பெரும் இளைஞர் கூட்டமொன்றும் அவர்களை தவறான பாதைக்கு வழிநடத்திச் செல்வதற்கென்றே வரலாற்றை திரிக்க கூடிய கோணல் புத்தியுடைய சாதிவெறி தாதாக்களும் மதவெறி மாபியாக்களும் இனவெறி தம்பிகளும் மிக உக்கிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகமானது தனது கருத்தியல் திறனால் உள்ளடக்கத்தின் உண்மையால் 5 ஆம் பதிப்பு கண்டிருக்கிறது என்றால் மதவெறியும் சாதிவெறியும் இனவெறியும் தலைவிரித்தாடுகின்ற சமகாலத்தில் இந்தப் புத்தகம் எவ்வளவு முக்கியமானது என்பதை வாசகர்களால் உணரமுடியும்.

தாத்தா பெயரைத் தெரியாத பேரன்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்கால அவசர உலகில் நம்மை நம் சமூகத்தை செதுக்கிய சிற்பிகளைப் பற்றி ஓரளவேனும் அறிந்துகொள்ளாமல் வாழ்வதென்பது நம் அறிவுக்கு செய்கின்ற துரோகம் என்பேன். நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் இட ஒதுக்கீடு உரிமைகளும் கல்விச் சலுகைகளும் என்றோ ஓர் நாள் நமக்காக போராடி ரத்தமும் சதையும் வேர்வையும் சிந்தி உழைத்த மாபெரும் கனிகளை நாம் இன்று மிக சொகுசாக வேர்களை பற்றிய நன்றியுணர்ச்சியற்று பல நேரங்களில் அவர்களை தரம்தாழ்ந்து விமர்சித்துக் கொண்டே தின்றுகொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு இளைஞனும் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். சமூக வலைதளத்தின் அத்தனை பக்கங்களிலும் பொதுப்புத்தியிலும் குருட்டழுக்காய் படிந்து கிடக்கும் பொய் பிரச்சாரங்களை இந்த ஒரு நூலை வாசிப்பதின் மூலமாக விரட்டி அடிக்கலாம். ஆவணப்படுத்தப்பட்ட 2000 வருட வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகால வரலாறே சமூக மாற்றத்திற்கு வித்திட்ட உண்மையானவரலாறு எனக் கொள்ளலாம். மேலெழுந்தவாரியாக வாசித்தால்கூட ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி வரலாற்றை படம்பிடித்துவிட முடியும். தோழர் அருணன் அவர்கள் சுண்டக் காய்ச்சிய சமுதாயப் பாலாய் திரட்டி தந்துள்ளார். வாசகர்களாகிய நமது கடமை சமகாலத்தை உணர காலக் கண்ணாடி வழியே பின்னோக்கி பயணிப்பதொன்றுதான் வாருங்கள் பயணிப்போம்.

இந்நூலில் மொத்தம் 55 கட்டுரைகளும் இரண்டு இணைப்புக்கட்டுரைகளும் உள்ளன. மனுநீதியின் கொடுமையான சட்டதிட்டங்களில் துவங்கி வர்ணாஸ்ரம பிரிவினைகள் சாதி சமய சனாதான கட்டுமானங்கள் அது சமூகத்திற்கிழைத்த அநீதியாவற்றையும் சொல்லி நம்மை அடிமைபடுத்தி ஆட்சி செய்யவந்த வெள்ளைக்காரர்களில் மனிதநேயமுள்ள கிறிஸ்தவர்கள் வழியே சமூக சீர்திருத்தத்தின் விதைகள் மானுட சாகரத்தில் தூவப்பட்ட வரலாற்றை மிக நேர்த்தியாக சொல்லி வருகிறார். வைகுண்டசாமிகள் வள்ளலார் எனத் தொடர்ந்து மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஜி. சுப்பிரமணிய அய்யர் மாதவையா அயோத்திதாசர் இரட்டைமலை சீனிவாசன் பாரதியார் பெரியார் சிங்காரவேலர் பாரதிதாசன் காந்தி அம்பேத்கர் எனச் சுற்றிவருகிறார்.

இவர்களுடன் சமூக சீர்திருத்த இயக்கங்களும் வருகின்றன. பிரம்ம சமாஜம் நீதிக்கட்சி தியோசாபிகள் சொசைட்டி சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் சமூக சேவைகளையும் இத்துடன் அரசியல் கட்சிகளையும் சுட்டிகாட்டுகிறார் .தி.மு.க. அதிமுக என்று விரிகிற வரலாற்றில் பொது உடமை இயக்கங்களுக்கான தனித்ததொரு கட்டுரை ஏதுமில்லை. திராவிட இயக்க அரசியலும் தனித்து எழுதப்படவில்லை. தோழர் ஜீவாவை பற்றிய குறிப்புகளும் இல்லை. தேவரின் கைரேகை சட்ட ஒழிப்பில் ஒரு இடத்தில் மட்டுமே ஜீவா சுட்டிகாட்டப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது .

19ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதிகளை தனியே பிரித்து அவர்களின் பணியை தனியே தோழரே தொகுத்து வழங்கிவிடுகிறார். அதே மாதிரி 20 ஆம் நூற்றாண்டில்தான் உண்மையான சமூக சீர்திருத்த செயல்பாடு நிகழ்ந்ததை தொகுத்து காண்பிக்கின்றார். 21 ஆம் நூற்றாண்டில் நிகழவேண்டிய மாற்றங்களையும் கனவுகளையும் காட்சிப்படுத்துகிறார். இந்த அருமையான புத்தகத்தின் வாயிலாக நான் கண்டுகொண்டது இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சமூக சீர்திருத்தவாதிகளில் எத்தனையோ பேர் சின்ன சின்ன முயற்சிகளை செய்து சமூகத் தேரை முன்னோக்கி இழுத்து வந்திருந்தாலும் ஒரு பெரும்பாய்ச்சலாக பெரியாரின் வருகையே மூட சமூகத்தை ஒரு உலுக்கு உலுக்கி பழையதை உதிர்த்து புதியவற்றை சேர்த்து நவீன தமிழகத்தை வடிவமைத்ததில் ஒரு முக்கியமான சிற்பியாக பெரியாரை காண்கிறேன்.

வேத மதத்தை மிகக்கடுமையாக சாடியவள்ளலாரின் பங்கு போற்றத்தகுந்ததென்றாலும் எளியவர்கள் பின்பற்ற முடியாமல் இருக்கும் அவரின் சைவ உணவுப்பழக்கமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பெருமளவில் அவரை பின்தொடர்வதும் சனாதனவாதிகளால் சாகடிக்கப்பட்டதை மூடிமறைப்பதையும் பெரும் பின்னடைவாக காண்கிறேன். மதமெனும் பேய்பிடியாதிருக்கட்டும் என்று சொன்னவரின் வழித்தோன்றல்களே தனியொரு மதமாக அறிவிக்க கோருவதையும் சனாதனிகளின் ஆலிங்கனத்திற்குள் வள்ளலாரும் இரையாவதை காணும்போது வருத்தமாக இருக்கிறது.

சாதிக்கு எதிராகவும் பெண்விடுதலைக்கு ஆதரவாகவும் பாடல்கள் வழியே வீரச்சமர் புரிந்த பாரதியும் காலத்தால் மிக முக்கியமான சீர்திருத்தவாதியாக காண்கிறேன். அதே நேரத்தில் மகாத்மாவின் பிம்பம் குறித்தான கேள்விதான் பெரும் முரண்பாடாக இருக்கின்றது.வர்ணாஸ்ரமும் தீண்டாமைக் எதிர்ப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக ஒரு போதும் இருக்க முடியாது. நிச்சயம் அது செல்லாக்காசாகத்தான் இருக்க முடியும். சமூக சீர்திருத்தத்தில் சனாதனிகளின் பக்கம் நின்ற மகாத்மாவின் செயல் நிச்சயம் கேள்விக்குரியதே. சமூக இயக்கங்களில் திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கமும் போராடி களம் கண்டு வெற்றிபெற்ற அளவு எந்த இயக்கமும் அதற்கான அங்கீகாரத்தை பெற்று விட முடியாது என்று எண்ணுகிறேன்.

நூலின் கடைசி பின்னிணைப்பில் சதியின் கோர முகத்தை காட்சிப்படுத்தியிருக்கின்றார். வாசித்து கடந்த பின்னும் இன்னும் நடுக்கமாகவே இருக்கின்றது. மூட நம்பிக்கைகளின் உச்சபட்ச கோரமிது. 30 வருடங்களுக்கு முன் ரூப் கன்வர் எனும் இளம்பெண் கணவனின் சிதையில் தள்ளிவிடப்பட்டு படுகொலை செய்ததை கண்டு நாடே அதிர்ந்தது. அதற்குப் பிறகு இம்மாதிரியான சம்பவங்கள் ஏதும் பதிவானதாக தெரியவில்லை. காலத்தை திரிக்கும் கயவர்களுக்கு நிச்சயம் இப்புத்தகம் சிறந்ததொரு பதிலடியாக இருக்கும். புதிய தலைமுறைகள் இப்புத்தகத்தை வாசிக்காவிடில் இருள் சூழ்ந்த பொய்யர்களின் பாதையாகவே விடியும். தோழர் அருணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thamizhagathil-samuga-seerthirutham-iru-nootrandu-varalaru/

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *