noolarimugam: The Crooked Timber Of New India - ra.yesudass நூல் அறிமுகம்: The Crooked Timber Of New India - இரா.இயேசுதாஸ்
noolarimugam: The Crooked Timber Of New India - ra.yesudass நூல் அறிமுகம்: The Crooked Timber Of New India - இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: The Crooked Timber Of New India – இரா.இயேசுதாஸ்

“The Crooked Timber Of New India”
Essays on a Republic in Crisis

Author: Parakala Prabhakar

291பக்கங்கள். விலை :ரூ499/-
Publisher: Speaking Tigers -2023

நூலின் முதல் பக்கத்தில்:

“Out of the crooked timber of humanity, no
straight thing was evermade”

-Immanuel Kant
(வளைந்த மரமாக உள்ள மனித குலத்திலிருந்து
நேரான எதையும் உருவாக்க முடியாது)

குறிப்பு:இவரது இணையர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய அரசின் நிதித்துறை
அமைச்சராக உள்ளார்..

உண்மையை நேரடியாக எடுத்துக் கூறும் தெளிவான தலைப்புகளுடன், இந்திய குடியரசின் நிலைமையையும், 2014ல் இருந்து ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் எடுத்து வைக்கிறது இந்த நூல்.!

“The Accidental Prime Minister” நூலின் ஆசிரியர்
Sanjaya Baru இந்த நூல் பற்றி:
அரசு அதிகாரத்துடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் கூட உண்மையை பேச அஞ்சிடும் இந்தக் காலத்தில், இன்றைய நடப்புகளை விவரிக்கிறது இந்த நூல். விமர்சிக்கும் ஆண்கள், பெண்கள் அனைவர் மீதும் வெறுப்பு உமிழப்படும் சூழலில் பிரபாகர் தொடர்ந்து உண்மையை பேசுகிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள மதிப்புகளை போற்றிப்பாதுகாத்திட அவர் போராடுகிறார் .இந்த நூல் இந்த நாடு முழுவதும்.. ஏன் உலகம் முழுவதும் வாசிக்கப்பட வேண்டும். இந்தியா பற்றிய அக்கறையுள்ள… அதன் எதிர்காலம் மீது கவலை உள்ள ஒவ்வொருவரும் உடனடியாக இந்த நூலை வாசிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

எழுத்தாளர் ,தொழில் முனைவர், தகவல் தொடர்பு விஞ்ஞானி சாம் பிட்ரோடா இந்நூல் பற்றி:

இருட்டில் வெளிச்சத்தை ஏற்றும் ..உண்மையான கள நிலைமையை உணர்த்தும் …அற்புதமான கட்டுரைகளால் இந்நூல் நிரம்பியுள்ளது. உண்மையான புள்ளி விவரங்களுடன், தெளிவான அர்ப்பணிப்பு உணர்வுடனும் ..தைரியத்துடனும் மோடி அரசு தந்த வாக்குறுதிகள் ..அதன் மீதான அதன் செயல்பாடுகள் பற்றி.. அரசின் மறுபக்கத்தை பற்றி.. பிரபாகர் அவர்கள் புட்டு வைக்கிறார் . இந்த நூல் ஓர் எச்சரிக்கை மணி என்கிறார்.

பரக்கலா பிரபாகர் எல்லோராலும் மதிக்கப்படும் அரசியல் பொருளாதார சமூக விமர்சகர் .அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும், லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சிலும் படித்தவர். ஆந்திர பிரதேச அரசில் தகவல் தொடர்பு ஆலோசகராக கேபினட் அந்தஸ்தில் இருந்தவர்.
Midweek Matters என்ற youtube இல் இயங்குகிறார். அன்றாட அரசியல் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் உள்ளடக்கத்திற்கு நான் செல்லவில்லை. நூலுக்கு அறிமுக உரையை ஆசிரியர் பிரபாகர் வழங்கியுள்ளார் .அதில் சில ஆதங்கமான கருத்துக்களை மட்டும் இங்கே நான் பதிவிட விரும்புகிறேன்.

நூலில் உள்ளே ஏராளமான உண்மைத் தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது.நூலைத்தடைசெய்வதற்கு
முன் வாங்கிப் படியுங்கள்.பின் நீங்கள் சொந்த
முடிவுகள்..மதிப்பீட்டிற்கு வரலாம்.

மே 2014 தேர்தல் வெற்றி விழா உரை மற்றும் அதற்குப் பிந்திய சுதந்திர தின விழா உரைகளில் புதிய நம்பிக்கை, புதிய இந்தியா, ஒளிரும் இந்தியா விஷ்வ குரு(உலகத் தலைவன் )என்றெல்லாம் கூறப்பட்டாலும்.. தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தாலும்.. பல பிரச்சனைகளை இந்தியா சந்தித்து வருகிறது.

24*7 நேரம் முழுவதும் செய்தி ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களையே பரப்பி வருகின்றன .
1990க்கு பின் முதல் முதலாக 2021 இல் மட்டும் 75 மில்லியன் இந்திய மக்கள் கூடுதலாக வறுமை கோட்டுக்கு கீழே வந்துள்ளனர். உலகின் 191 நாடுகளில் இந்தியா 132 ம்இடத்தில்(global human development index for 2021 ).Global hunger index 2022 ல்121 நாடுகளில் 107 வது இடம் .2021இல் 101வது இடம் .

2016 முதல் employment data வெளியிடப்படவில்லை .2015- 16 இல் 5 ஆண்டுகளில் மிக உயர்வாக 5% இருந்தது. Leaked NSSO report படி 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1%.. Centre for Monitoring Indian Economy CMIE 2022 unemployment 8.3% என்கிறது. 2.1 million job loss .தற்போது வேலையின்மை 7.76%
. சிறு தொழில் மற்றும் குறு தொழில்ஆலைகள் பணமதிப்பீட்டு நடவடிக்கையால் வீழ்ந்தவை இதுவரை எழவே இல்லை .
கடந்த இரண்டு ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை மட்டும் ஒப்பிட்டு இந்த ஆண்டு 13.5% வளர்ச்சி இருப்பதாக தவறான தகவல் பரப்பபடுகிறது. கொரோனாவிற்கு முன்பே நம்முடைய பொருளாதாரம்வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டது .தற்போது கொரோனா கால வளர்ச்சி கூட இல்லை என்பது உண்மை.

இந்திய முதலாளிகள் யாரும் பெருமளவில் முதலீடு செய்வதில்லை .வெளிநாட்டு முதலாளிகளும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் .மோடி அரசு பொருளாதாரத் துறையில் மிக மோசமான பின்னடைவை சந்தித்து கொண்டு இருக்கிறது. பொருளாதாரத்தைப் பற்றி எந்த உருப்படியான கொள்கையும் அவரிடம் இல்லை. பொதுத்துறைகளை சீர்படுத்தி வெற்றிகரமாக நடத்துவதற்கு பதிலாக அதை விற்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். சில தெரிவு செய்யப்பட்ட கூட்டுக் களவாணி முதலாளிகளிடம் மட்டும் லாபம் சேர்கின்ற வகையில் தேசிய சொத்துக்கள் திருப்பிவிடப்படுகின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கையில் சொல்லப்பட்ட படி அதானி, மோடி அரசிடம் மிக நெருக்கமாக இருக்கிறார். இது பற்றி அரசு இதுவரை தெளிவுபடுத்தவில்லை .

என்ன வகையான பொருளாதார அமைப்பு என்று தெளிவும் கிடையாது.. உருப்படியான ஆலோசனைகளும், பொருளாதார ஆலோசர்களும் இன்றி அரசு தடுமாறுகின்றது .எந்த விதமான ஐடியாவும் இன்றி பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .கொரோனா காலத்தில் வாங்கும் சக்தி இல்லாதவர்களுக்கு எதுவும் தராமல் கொடுக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இப்படிப்பட்ட பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்காக தன்னுடைய அரசியல் திறமைகளை காட்டுவதற்கான பணிகளில் மோடி -அமித்ஷா கட்சி மாநிலங்களை சீர்குலைக்கும் பணியில் இறங்கியுள்ளது. செப். 2022ல் கோவாவில் எட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களை பிஜேபி விலைக்கு வாங்கியது. தலா ஒவ்வொருவருக்கும் ரூபாய் 40/ 50 கோடி தரப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனை கூட்டணி அரசு பற்றியும் அறிவோம். ஜனநாயகத்தில் தேர்தல் மூலமாக வெற்றி பெற முடியாத இடங்களில் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளில் அதிகாரம் பெறுவது சகஜமாகிவிட்டது. மத்திய பிரதேசம், கர்நாடகா, ஹரியானா ,பாண்டிச்சேரி நிகழ்வுகளை நாம் அறிவோம். பிஜேபி கட்சிக்கு ஜனநாயகம் என்பது ஒரு நியூசன்ஸ். அரசின் எந்த ஒரு சட்டமும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்படுவதை நாம் அறிகிறோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் மீது வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டு மூலம் நெடு நேரம் சித்திரவதை விசாரணை.. விசாரணை இன்றி சிறை.. தொடர் விசாரணைக்கு உட்படுத்தி பிஜேபிக்கு ஆதரவான நிலையை எடுக்கும் போது விசாரணை நிறுத்தப்படும் .ஒத்துவராத மீடியா மீதும் இதே போன்ற ரெய்டுகள் . சிந்தனையாளர்கள் மீதும் இதே மாதிரியான தாக்குதல்கள். அரசின் வழிகாட்டல் படி விசாரணை நடத்தி “பலன்களை” காட்டுவதற்காக அதிகாரிகள் ஏஜென்சிகள் ஏவப்படுகிறார்கள். அப்படி காட்டாதவர்கள் ஏஜென்சியை விட்டு மாற்றப்படுகிறார்கள். ஒத்துழைக்காத சிபிஐ தலைவர் நள்ளிரவில் மாற்றப்பட்டார் . ED ஒரு அரசு பயங்கரவாத ஆயுதமாக.. எதிர்க்கட்சிகளை மௌனிக்கச் செய்கின்ற கூச்சநாச்சமற்ற வேலையில் ஈடுபடுகின்றது .இப்படித்தான் போலீஸ் துறையும் ..அவதூறு வழக்குகள் ..பிஜேபி மீது விமர்சனம் செய்யும்பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் சிறையில் பலமாதங்கள், வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்டேன் சாமி சிறையில் இருந்தபோது உறிஞ்சி குழல்(Straw) கூட தரப்படாமல் கொல்லப்பட்டது ஒரு உதாரணம் .இதேபோல ஏராளமான விஞ்ஞானிகள், அறிஞர்கள், பேராசிரியர்கள் கவிஞர்கள் இன்றும் சிறையில் இருக்கிறார்கள் .

நவம்பர் 21ல் தேசிய போலீஸ் அகாடமி அணிவகுப்பில் பேசிய தேசிய பாதுகாப்பு முகமையின் முக்கிய அதிகாரி சிவில் சொசைட்டி தான் தற்போது நம்முடைய போர் எல்லையாக உள்ளது என்று ஆபத்தான தகவலை கூறியுள்ளார். பொதுமக்களின் விழிப்புணர்வு அரசுக்கு ஆபத்தாக உள்ளதாம்! ராணுவ ஆட்சியில்தான் இப்படி பேசப்படும்.

. சிவில் உரிமை நசுக்கப்படுவதற்கு உச்சநீதி மன்றம் அரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. நீதிபதிகள் விசாரணையின் போது அல்லது பொது மேடைகளில் பேசும்போது அதிகார தோரணையாக பேசுவதும் அதை அவர்கள் வழக்குத் தீர்ப்பில் எழுதுவதும் தொடர்கிறது. பெகாசஸ் ஸ்பைவேர் சம்பந்தமாக அவசர அணுகுமுறையை நீதிமன்றம் பின்பற்றியது. மோடி அமித்ஷா அரசு இந்த மென்பொருளை எதிர்க்கட்சிகளை, பத்திரிக்கையாளர்களை வேவு பார்க்க வாங்கியதா, இல்லையா என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

2002 குஜராத் வன்முறையின் போது கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகள் மாநில அரசால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியோடு விடுவிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது .அவர்களை வரவேற்று பெருமளவு கொண்டாட்டங்கள் நடந்தது.

2021ல் உத்தரப்பிரதேச மாநில தேர்தலின் போது பிஜேபியின் முதல்வர் 80% இந்துக்களுக்கும் 20% முஸ்லிம்களுக்கும் இடையான போர் என்று பகிரங்கமாக அறிவித்தார் .உத்தரகாண்ட் தேர்தலில் ஒரு வாரத்திற்கு முன்பாக இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற அழைப்பு Dharma sansad ல் விடப்பட்டது.மியான்மரில் ரோஹியோக்களை வெளியேற்றியது போல நாம் 100 பேர் சேர்ந்தால் கூட 20 மில்லியன் முஸ்லீம்களை கொன்று குவிக்கலாம்..

இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை துடைத்து எறியலாம் என்று பகிரங்கமாக பேசினார்கள். இது பற்றி அந்த மாநில அரசோ, மத்திய அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்திய உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் போலீஸ் இயங்கும் டெல்லி மாநிலத்தில் கைகளில் ஆயுதம் ஏந்தி இந்துத்துவ அமைப்புகள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக முழங்கி கொண்டு போனார்கள் .மாட்டுக்கறி சமைத்ததாக குற்றம் சாட்டி முஸ்லிம்களை பட்டப்பகலில் தோல் உரித்து கொலை செய்தார்கள் .

கர்நாடகாவில் இந்து மாணவர்கள் காவி துண்டை கட்டிக்கொண்டு ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய மாணவிகளிடம் தகராறு செய்தார்கள். சுதந்திரமாக அரசியல் கருத்துக்கள விவாதிக்கும் டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் பிஜேபி தனது ரவுடிகள் மூலமாக கொடூரமான தாக்குதல்கள் நடத்துவதை பார்க்கிறோம்.

அறிவியல் மாநாடுகளில் புராணங்கள் அறிவியலாக பேசப்படுவதை பார்க்கிறோம். கோவிட் 19 போது வினோதமான மருந்துகளை அவர்கள் முன்வைத்தார்கள்.

ஒரு சில நேர்மையான முதுகெலும்புள்ள பத்திரிக்கையாளர்கள், மீடியாவின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு அவர்களும் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக சரணடைந்து வருகிறார்கள். பெரும் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் மீடியாக்கள் சென்றுவிட்டன. சுதந்திரமாக விவாதிப்பவர்கள் மிரட்டப்பட்டு முடக்கப்படுகிறார்கள் .அப்படித்தான் அரசின் அனைத்து ஏஜென்சிகளும் பயன்படுத்தப்படுகின்றன .விவசாயிகள் பிரச்சனை, விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள், விலைவாசி உயர்வு போன்றவற்றை மக்களிடம் பிரச்சாரம் செய்யவும், விவாதிக்கவும் மீடியாக்கள் முன்வருவதில்லை. போலிச் செய்திகளா.. பொய் வர்ணனைகளா..எது சரியான தகவல் என்று கண்டுபிடிக்கும் வாய்ப்பு வாசகர்களுக்கு சவாலாக மாறி வருகிறது. கோடிக்கணக்கான குப்பை செய்திகள் டிஜிட்டல் மீடியாவில் நிரம்பி வழிகிறது. இந்த முறையை கண்காணிக்க அரசு சென்சார் பயன்படுத்தி போலிச்செய்திகளை ஊக்குவிக்கிறது .அரசுக்கு எதிரான செய்திகள் மட்டுமே தடை செய்யப்படுகின்றன. அவதூறு வழக்குகள் மூலம்
எதிர்கட்சிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் பாய்கின்றன. New Internet Technology Act 2021படி அரசின் பிடியில் இருந்து யாரும் தப்பிடமுடியாது.

2014 இல் இருந்து Internet Shutdowns தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. Facebook, YouTube, Instagram,Twitter என அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டன .இந்த நூல்வெளி வருகின்ற சமயத்தில் Press information bureau மூலமாக நூல்களை தணிக்கை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது..
இந்திய குடியரசு தனது குடிமகன்கள் மீது இப்படி தாக்குதல் தொடுத்து கொண்டு இருக்க கூடிய நேரத்தில் சீனா மிக வசதியாக நம் நாட்டின் பல பகுதிகளை ஆக்கிரமித்து அமைதியாக இருக்கிறது.

பொதுமக்கள் நம் பிரதமரிடமும் அரசிடமும் எந்த தகவலையும் ,பொறுப்புணர்வையும் எதிர்பார்க்காத சூழலில் அரசு 2017ல்தேர்தல் பத்திரம் என்ற ஒன்றை கையில் எடுத்தது . 2018 -2022க்கு இடையில் பிஜேபி கட்சி 5270 கோடி ரூபாய்கள் அதாவது மொத்த தொகையில் 57 சதவீதம் தேர்தல் பத்திரமாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 10% தொகையாக 964 கோடியும் மற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து 33 சதவீதமும் பெற்றுள்ளன.இதை பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கிதான் விநியோகிக்கிறது. இதில் தொகையை கொடுக்கும் நபர் யாருக்கு எதற்காக கொடுக்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டியதில்லை. அரசிடம் விவசாயிகள் தற்கொலை பற்றி தகவல் கிடையாது.. கோவிட் 19 நோயினால் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றி தகவல் கிடையாது.. வேலை இல்லாமல் இருப்பவர்கள் பற்றிய தகவல் கிடையாது .இப்படி No Aata Available NDA ஆட்சி நடக்கிறது. அரசு தரும் புள்ளி விவரங்கள் உலக அளவில் எந்த நிறுவனத்தாலும் நம்பப்படுவதில்லை.

திட்டக் குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு National Institute for Transforming India- NITI Aayog என்ற அமைப்பை அரசு உருவாக்கியது. இதுவரை அது என்ன மாற்றத்தை உருவாக்கியது என்பதுதான் தெரியவில்லை. தகவல்களுக்கு பதில் வெறும்ம் உட்டான்ஸ்.. ஜும்லா.. வெற்று பிதற்றல்களை.. கூச்சல்களை கேட்கின்றன!நல்ல கவிஞர்கள் ,எழுத்தாளர்கள் மூலம் திட்டங்களுக்கு பெயர் சூட்டு விழாதான் பெரும் செலவோடு வாண வேட்டிகையாக நடத்தப்படுகிறது .உருப்படியான செயல்பாடுகள் ஏதும் இதன் மூலம் கிடைக்கவில்லை .Skill India, Make in India ,Stand up India ,Startup India ,Digital India, Swachh Bharat என்று பெயர்கள் சூட்டப்பட்டாலும் இவை எல்லாமே ஏற்கனவே இருந்த துறைகளின் மறு பெயர்கள் தான் என்று குறிப்பிடப்படுகிறது .ஒரே ஒரு திட்டத்தைப் பற்றி மட்டும் இங்கே விளக்கினால் நமக்கு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியும்.
The Beti Padhan-Beri Bachao திட்டம் பெண் குழந்தைகளுக்கானது .இது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. 2016 -19 இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணிகளில் 79% வெற்றறுவிளம்பரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சமூகங்களுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் இடையே பிளவினை தூண்டுகின்ற வகையில் சோசியல் இன்ஜினியரிங் என்ற வகையில் பிளவுபடுத்தும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறது. பிஜேபி குடியுரிமை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
தேசப்பற்றுக்கும் பழம்புகழ் பாடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இன்றைய இளைஞர்கள் சரியாக உணரவில்லை. ராணுவத்தை புகழ்வது ,மதத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வது, எந்த விமர்சனமும் இன்றி ஆளுங்கட்சியை ஆராதிப்பது, சுய சிந்தனை -சுயமரியாதை சிறிதுமின்றி கண்ணை மூடிக்கொண்டு பிரதமரை ஆதரிக்கும் கலாச்சாரம் வளர்ந்து கொண்டிருக்கிறது .சுப்ரீம் லீடர்.. பேரரசர் பிம்பம் உருவாகிறது.. எதையும் அழித்து விடுவதில், ஒழித்து விடுவதில் வேகம் இருக்கிறது – ஆக்குவதில் இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் ஏதுமில்லை. தேச ஒற்றுமை பற்றியும் கவலைப்படுவதில்லை. ஜனநாயகத்தை கடத்திச் சென்று விட்ட சர்வாதிகாரிகளை நாம் வெறுமனே விமர்சனம் இன்றி பார்த்துக் கொண்டு, பார்வையாளர்களாக தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும். பொருளாதார நிர்மூலம், அரசியல் முறைகேடுகள், நிறுவனங்கள் முடக்கம், சிவில் உரிமைகள் பறிப்பு தொடர்கிறது. இவைகள் எல்லாம் புதிய இந்தியாவின் சாதனைகள் ..தட்டிக் கேட்கப்படாமலேயே தொடர்கின்றன. தேர்தல்களில் வாக்காளர்கள் தண்டிப்பதில்லை. இந்நேரம் அவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கீழவையில் 303 உறுப்பினர்கள்..56 சதவீதம்..ஆனால் மொத்த வாக்காளர்களின் 38 சதவீதம் மட்டுமே 2019 தேர்தலில் பிஜேபிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இன்றைய ஆட்சிக்கு எதிராக 62% பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்பதை மீடியாவும் கவனிக்கவில்லை.. நடுத்தர மக்களும் அவர்களின் அமைப்புகளும் கவனிக்கவில்லை.
தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை.. பொய்களை… மக்களை பிரித்தாளுவதை.. தெரிவு செய்யப்பட்ட சில முதலாளிகளை மட்டும் வளர்ப்பதைப் பற்றி நடுத்தர வர்க்கம் கவலைப்படவில்லை. உண்மையில் இவர்கள் தலைவர்களுக்கு ஜே போடுவதில்.. துதி பாடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள். பெரும்பான்மை என்ற கட்டுக்கதையை நம்பி அடித்தள மக்கள் அடங்கி உள்ளார்கள் .அத்துடன் அவர்களை யாரும் கண்டு கொள்வதும் இல்லை .பிரதமரை புகழாதோர் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

1975 -77 அவசர நிலை காலத்தில் கூட இல்லாத “பயம்” இங்கு எல்லோரையும் பீடித்திருக்கிறது. நமக்கேன் வம்பு மோடி வாழ்க என்று கூறிவிட்டு போவோம் என்று ஒரு கூட்டம் இருக்கிறது. இன்னும் சிலர் மௌனம் காக்கிறார்கள். இன்னும் சிலர் மோடியை விளம்பரப்படுத்த உதவுகிறார்கள். உண்மையிலேயே நம்புபவர்களும் இருக்கலாம். அதை பரப்புபவர்களாகவும் இருக்கலாம் .அவர்கள் மீது குற்றமில்லை .ஏனெனில் அவர்கள் பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள்.. ஆதரவாளர்கள் .அது அவர்களுக்கு கட்டாய கடமையாகிறது. அவர்களில் கல்வியாளர்கள் ,தொழிலதிபர்கள், சிவில் சர்வீஸ், மீடியாக்களும் இருக்கின்றனர். ஏதோ நல்லது நடப்பதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைக்கின்ற அவர்களுக்கு விலைவாசி உயர்வு, வேலையின்மை ,அரசமைப்பு நிறுவனங்கள் சிதைக்கப்படுதல் ,ஜனநாயக வழிமுறைகள் ஒழிக்கப்படுதல், அடிப்படை உரிமைகள் பறிப்பு போன்ற விஷயங்கள் சாதாரணமாக இருக்கலாம். இவர்களைத் தவிர மற்றவர்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள். இவர்களுக்கு, அவர்களுடைய அரசியல் விளக்கங்கள், இந்துராஷ்டிரா வேண்டாதவையாக இருக்கலாம், ஏனெனில் அது ஜனநாயகம் அற்ற -சர்வாதிகார நாட்டை தங்கள் குழந்தைகளுக்கு அமைத்து விடக்கூடாது என்று கருதுகிறார்கள்.
இன்னும் பல வகையான பிரிவினர் பல வகையான காரணங்களுக்காக இன்றைய மத்திய அரசை ஆதரிக்கின்றனர். நாட்டு நலனுக்கு நல்லது அல்ல என தெரிந்தே ஆதரிக்கிறார்கள். தற்காலிக உடனடி லாபத்திற்காக சிலர் ஆதரிக்கிறார்கள். வெற்றியாளர் பக்கம் நிற்போம் என சிலர் ஆதரிக்கிறார்கள் .சிலர் இந்த வலிமையான அரசை எதிர்க்க முடியாது என ஆதரிக்கிறார்கள். பலவிதமான பயமுறுத்தும் கருவிகள் மூலம் இவர்களிடம் பயம் ஏற்படுத்தப்படுகிறது .எனவே தனி மனிதனும்.. நிறுவனங்களும் பயத்தால் முடக்கப்பட்டுள்ளது. திசை திருப்ப.. நன்கு வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தல்கள்.. காசி, கேதார்நாத், அயோத்தி ஒரு புறம்.. மெகா நிகழ்ச்சிகள் ..மெகா ஊர்வலங்கள்.. வெளிநாட்டில் உள்ள என் ஆர் ஐ பக்தர்கள். இவர்கள் எல்லோரும் மனம் இறும்பூதெய்து அரசின் அசுர தாக்குதலை உணராதவர்களாக இருக்கிறார்கள்.

நான் இந்த அரசை பற்றி எதிர்மறையாகவே குற்றம் சாட்டுவது ஏன் என்கிறார்கள். அதற்கு எனது பதில் நேர்மறையாக எதுவும் இல்லை என்பதுதான். இன்றைய பிரதமருக்கு “மாற்று”ம் மோசமானது தானே என கேட்கிறார்கள் .நீ உன்னுடைய ஏசி அறையில் அமர்ந்து கொண்டு பிரச்சனைகளை மட்டுமே பெரிதாக்கி காட்டுகிறாய்.. இதற்கு என்ன தீர்வு சொல்கிறாய் என்கிறார்கள். வெறுமனே பேசாதே தீர்வு சொல் என்கிறார்கள் .இவர்கள் விரிக்கும் வலையில் நான் விழமாட்டேன் .இது ஒரு வகையான சென்சார்சிப். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சிவப்பு கொடி காட்டுவது தான் எனது வேலை. நம்முடைய குடியரசின் ஜனநாயகம், பன்முகத்தன்மை, சுதந்திரம், மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை சுட்டிக்காட்டுவது எனது கடமை. அரசின் நல்ல செயல்களை சுட்டிக்காட்ட நாட்டில் ஏராளமான பேர் உள்ளார்கள். உண்மையில் அரசு ஆதரவோடு அவர்கள் செயல்படுகிறார்கள். எனது குரல் பாரபட்சமற்ற விமர்சன குரல். தனி நபர்கள் யாருக்கும் எதிரான குரல் அல்ல .எனது குரல் குடியரசு மாண்புகளை பாதுகாப்பதற்கான குரல்.. நான் யாருக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயல்பட வேண்டிய அவசியம் இல்லை .நான் அவ்வப்பொழுது எழுதும் கட்டுரைகளும், பேசும் பேச்சும் சம்பந்தப்பட்டவர்களைமாற்றி விடும் என்று நான் நம்பவில்லை. ஆட்சிகளை மக்கள் மாற்றுகிறார்கள் ..எனது குற்றச்சாட்டுக்கள் என்பது வரையறுக்கப்பட்டது.. சில மீதானது ..குடியரசு நாட்டின் மாண்புகளை மீறி ஆட்சியாளர்கள் செயல்படாமல் அதை சுட்டிக் காட்டுவது எனது கடமை ..அது எல்லா காலங்களிலும்!
எனக்கு மாற்று பற்றி கவலை இல்லை. ஆட்சியாளர்கள் சரியாக செயல்பட வேண்டும். அவர்கள் வாக்குறுதிகளை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் .இல்லை என்றால் நான் என் குரலை எழுப்புவேன்.. அவ்வளவுதான் ஒரு குடிமகனாக நான் செய்ய முடியும்.. ஒரு பிரச்சனை எழுப்பினால் அதற்கான தீர்வை கூற வேண்டும் என்பதில்லை. முதிர்ச்சியான ஜனநாயக நாட்டில் வெளிப்படையான விவாதங்கள் மூலம் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட முடியும். ஆட்சியாளர்களின் புகழ் பாடிக்கொண்டு அவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நாடு 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்திய குடியரசின் மாண்புகள் சிதைக்கப்படும் போது, சிதைப்பவர்கள் மீது அன்பு செலுத்த பலரும் கற்றுக் கொண்டோம். (பன்மைத்துவம், மதச்சார்பின்மை ,மாநில உரிமைகள், மதங்கள் ,கலாச்சாரம், மொழி,)

நம் நாடு கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி.. சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பெரும் கொண்டாட்டங்கள்.. கேலிக்கூத்துகள் நடைபெறுகின்றன. ஜனநாயகம் சிக்கலில் உள்ளது. சமூகம் சிதைந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறது. நாம் மீண்டும் ஒரு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடிமகனும் இதை உரக்கச் சொல்ல வேண்டும்.. வலுவாக. வேகமாக.. திரும்பத் திரும்ப எச்சரிக்கை மணி போல் ஒலிக்க வேண்டும். என்னுடைய பேச்சு, எழுத்து ,இந்த நூல் மூலமாக நான் எனது கடமையை செய்கிறேன்.(ஆசிரியர்: பரக்கலா பிரபாகர்)
*************

கோவையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் திரு கி வீரமணி அவர்கள் இந்த நூலை காட்டி..சில பகுதிகளை வாசித்து.. அறிமுகப்படுத்தி பேசினார். அவருக்கு நன்றி.

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *