“வீடும் வாசலும் ரயிலும் மழையும்” நூலை அதன் வெளியீட்டு விழாவில் வாங்கினேன். நூலில் இருப்பவை அனைத்தும் பொறியியல் கட்டுரைகள். ஆனால் அவை ஒரே மூச்சில் படிக்கக்கூடிய சுவாரஸ்யமன முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. மு இராமனாதன் என்கிற பொறியாளருக்கும் படைப்பாளிக்கும் உளம் கனிந்த பாராட்டுகள்! சில கட்டுரைகளை அவை இந்து தமிழ் நாளிதழில் வெளியானபோது படித்திருக்கிறேன். இப்போது ஒரே நூலாகப் படிப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் பல லட்சங்கள் செலவு செய்து வீடு கட்டுகிறோம். ஆனால் நாம் நீராற்றுதலுக்குக் (Curing) முக்கியத்துவம் தருவதில்லை. கூடுதலாக ஒரு ஆளை வேலைக்கு அமர்த்துவது வீண் செலவு என்று நினைக்கிறோம். இதற்குப் பொறியாளர்கள் சிலரே முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் எதார்த்தம். நீராற்றுதல் குறித்த கட்டுரை பொறியியல் படித்தவர்களும் படிக்காதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
பாரம்பரியமான பாரந்தாங்கும் கட்டடங்களுக்குப் பதிலாக ஒப்பந்ததாரர்கள், மேஸ்திரிகள் எப்படித் தேவையில்லாத சமயங்களிலும் கான்கிரீட் தூண்களாலான சட்டகக் கட்டடங்களைக் கட்டி நமது கட்டுமானச் செலவை அதிகமாக்குகிறார்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான வீட்டைக் கட்டிச் சாதாரண மக்கள் மீது சுமத்துகிறார்கள், வலிமை என்ற போர்வையில் வீடு கட்டும் அப்பாவி மக்களை எப்படி பலியாக்குகிறார்கள் என்றெல்லாம் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். என்னைப் போன்ற பல பொறியாளர்களின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
கான்கிரீட்டிலும் சாந்திலும் பயன்படுத்த வேண்டிய தண்ணீர்-சிமெண்ட் விகிதம் குறித்த அறிவியலை இந்தப் புத்தகத்தை படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். உங்கள் தமிழும் தமிழ் நடையும் அதற்கு உதவியாக இருக்கும்.
எம்-சாண்ட் பற்றிய கட்டுரை முக்கியமானது. எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அறிவியல் பூர்வமாக விவரித்திருப்பதும் நன்று. எம்-சாண்ட் விஷயத்தில் பொதுப்பணித்துறை செய்த குளறுபடிகளை நாங்களும் அறிவோம். ஆற்று மணலுக்குப் பதிலாக கருங்கல் தூளை மக்களை ஏற்க வைப்பதில் சவால் இருந்தது என்னவோ உண்மை. வணிகம் என்று வந்த பிறகு, விட்டுவிடுவார்களா மணல் மாஃபியாக்கள்? Political will உள்ள தலைவர்களால் இந்தக் குறைகளைச் சரி செய்ய முடியும் என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை.
மெட்ரோ ரயில் பெரு, நடுத்தர நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அமையும் என்பதையும், சென்னை மெட்ரோ ரயிலில் கணிசமான அளவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதன் முக்கியத்துவத்தையும், நகரின் பாரம்பரிய அழகு கெடாமல் நல்ல அழகுணர்ச்சியுடன் அவை கட்டப்படுவதையும் நூல் விளக்குகிறது. செலவு ஒன்றை மட்டுமே அளவுகோலாகக் கொள்வது சரியன்று என்பதற்குப் பல காரணங்களை அடுக்கி விளக்கியிருப்பது அருமை. பலரும் பிரமிப்புடன் பார்த்து பயணம் செய்யும் வண்ணம் மெட்ரோ ரயில்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
சில கட்டுமானத் துறைகள் மனிதத் தவறுகளை ‘கடவுள் செய’லாக மாற்றுவது எவ்வளவு பெரிய பிழை என்று விளக்கியிருக்கிறீர்கள். ஹாங்காங் போன்ற முன்னேறிய நாடுகளில் பொறியாளர்கள் தவறிழைத்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்
சென்னை நகரின் மழை நீர் வடிகால்களைப் பற்றிய கட்டுரை அவசியமானது. சாதாரண மழையைக்கூட தாங்க முடியாத மழைநீர் வடிகால்களை முன்னேறிய நாடுகளில் காணவே முடியாது என்று எடுத்துக் காட்டுகிறது உங்கள் கட்டுரை.
நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருப்பது ஹாங்காங்கின் மூங்கில் சாரங்கள் பற்றிய கட்டுரை. இந்தக் கட்டுரை வெளியானபோதே படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரை படிக்கப் படிக்கப் புதுமையாக இருக்கிறது. மூங்கில் சாரம் கட்டுபவர் ஒரு நாளைக்கு 750 முதல் 1000 சதுர அடி வரை கட்டுகிறார் என்பது மலைப்பாக இருக்கிறது. மூங்கில் சாரம் கட்டும் பாரம்பரியத் தொழிலைக் குருகுலக் கல்வியாகக் கற்ற நிலையிலிருந்து தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட தொழிற்கல்வியாக மாற்றியதையும், காலத்திற்கேற்ப அத்தொழிலை மென்மேலும் மெருகேற்றி மேம்படுத்திக்கொண்டு வரும் அரசின் செயல்பாட்டையும் பாராட்ட வேண்டும். உயரமிக்க மூங்கில் சாரங்கள், அதனைச் சுற்றி நைலான் வலைகள், கட்டுமானத்தின் போது உடைக்கப்படும் அல்லது அங்கிருந்து தள்ளப்படும் வேண்டாத பொருட்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்கு தாங்கு தட்டிகள், ஒவ்வொரு ஐந்து மாடி இடைவெளியில் இரும்பு நங்கூரங்கள் (permanently fixed triangular steel anchors), மூங்கில்களை இணைத்து அமைக்கப்படும் முடிச்சின் சூத்திரங்கள்- என்பதையெல்லாம் எளிய நடையில் விவரிக்கிறீர்கள்.
புத்தகத்தின் பல இடங்களில் இந்தியத் தர நிர்ணய விதி நூல்களின் எண்களையும் தேசியக் கட்டட விதிகளையும் சுட்டிக்காட்டி இருப்பது பாராட்டத்தக்கது.
இந்த நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளும் பொறியியல் கட்டுரைகள் எவ்வாறு தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதப்பட வேண்டும் என்பதற்கு உதாரணங்களாக அமையும். உங்கள் சேவை ஒரு இயக்கமாக மாற வேண்டும் என்பது என் போன்றோரின் அவா. விரைவில் அந்நாள் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
Publisher: பாரதி புத்தகாலயம்
விலை.190