தினமணி ,துக்ளக் ,பாக்கியா, குங்குமம், குமுதம், முத்தாரம் போன்ற பத்திரிகைகளில் ஜெயா ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் துணுக்குகள் எழுதி வந்த ஆசிரியர், பின்னர் பாஞ்சஜன்யம், குங்குமம், கல்கி ,தினமலர் போன்ற இதழ்களில் சிறுகதை எழுத ஆரம்பித்து சில கதைகளுக்கு பரிசுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 45 சிறுகதைகள் எழுதியுள்ளார் .வரும் ஆண்டுகளில் மேலும் நூல்களை வெளியிட உள்ளதாக தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
இந்திய அரசின் அஞ்சல் துறையில் 1972ல்உதவியாளராக பணியில் சேர்ந்து ,2010ல் கண்காணிப்பாளராக பணி நிறைவு செய்தவர். தான் பணியாற்றிய துறையில் பெற்ற அனுபவங்கள், சந்தித்த பிரச்சனைகள் பல கதைகளில் வருகின்றன. அதேபோல கதைகளின் கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட திரும்பத் திரும்ப பல கதைகளில் இடம் பெற்றுள்ளன. அப்பா, அம்மா ஆகிய கதைகளின் முடிவு கூட ஒரே மாதிரியாக உள்ளது.
தனி சிறுகதையாக அவ்வப்போது வாசித்திருந்தால் இப்படி ஒப்பிட வேண்டிய தருணம் வாசகனுக்கு ஏற்பட்டிருக்காது. பல கதைகள் பிராமண குடும்பத்தின் பின்னணியை கொண்டுள்ளது. ஆனாலும் முற்போக்கான கருத்துக்களாக நிரம்பியுள்ளன. சாதி பேதம் இன்றி சமத்துவம் வேண்டும் என்பதற்கு புராணக் கதைகளின் சம்பவங்கள், ஆழ்வார்கள் -நாயன்மார்களின் செயல்பாடுகளை இவர் வாதமாக முன் வைப்பதை பல கதைகளில் பார்க்க முடியும் .எல்லாக் கதைகளுமே சுபமாக ,நேர்மறையாக நிறைவு பெறுகின்றன.
தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவியால் சுதந்திர தின கொடியை ஏற்ற முடியாமல் போவது, நகரத்தின் கழிவுகளும் குப்பைகளும் பக்கத்தில் உள்ள கிராமத்தில் கொண்டு வந்து கொட்டுவதை தடுத்து நிறுத்துவது, கொரோனா கால நெருக்கடிகள், எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் உண்மையான உதவிகள், பால்ய காலத்து விளையாட்டு நினைவுகள், தான் படித்த பள்ளி- வாழ்ந்த ஊர்- சுற்றி வந்த தெருக்கள்.. குறிப்பாக மன்னார்குடி நகர தெருக்கள்-பள்ளிகள்-ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன. உண்மையான சம்பவங்களே கதைகளின் கருக்களாக வந்துள்ளன என்று வாசகன் கருதுகின்ற அளவுக்கு கதைகளின் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. சிறு சம்பவங்களைக்கூட கதையாக்கி விடும் திறமை ஆசிரியருக்கு இருக்கிறது. முன்னுரை எழுதும் சில அன்பர்கள் கதைகளின் உள்ளடக்கத்தை சொல்லி விடுகின்ற போது அது கதையை வாசிக்கின்ற போது விறுவிறுப்பு இல்லாமல் செய்து விடுகிறது. நல்லவேளை மூன்று கதைகளுக்கு மட்டுமே அப்படி உள்ளது.
சோகம், துக்கம் ,மகிழ்ச்சி, நகைச்சுவை, சேவை உணர்வு ,நேர்மை ,சத்தியம், கடவுள் பக்தி, முற்போக்கு சிந்தனை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமத்துவ உணர்வு என்று எல்லாவித சுவைகளும் சிறுகதையின் கருக்களாக ஆசிரியரால் பரவலாக கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த நூலின் வெற்றியாகும்.
சாதாரண ஒரு குடும்பத்தில் நிலவும் கடவுள் நம்பிக்கை ,வழிபாட்டு முறை, விதி நம்பிக்கை, உறவு முறைகள் ,நட்பு, ஏமாற்றம் ,போதை பழக்கங்கள், தீண்டாமை உணர்வு, வஞ்சகம் ,சமூக சேவை உணர்வு ,நவீன பாச முறை என எல்லாமே கற்பனைகளாக இல்லாமல் எதார்த்தமாக பதிவாகியுள்ளன. நம் வீட்டில்- நம்மை சுற்றியுள்ள வீட்டில் நடந்ததை கேள்விப்பட்டு எழுதியது போல எல்லாவற்றையும் கதையாக்கி இருக்கிறார் ஆசிரியர் .இதை வாசித்த பிறகு சாதாரண
வாசகன் கூட தான் தன் வாழ்வில் சந்தித்த நிகழ்ச்சிகளை கதையாக எழுதிவிடலாம் என்ற ஆசையை ஏற்படுத்திவிடுகிறது. ஆனாலும் ஒரு நூலை அச்சிட்டு வெளிக்கொணர்வது எவ்வளவு சிரமமான ஒன்று என்பதையும் அதற்கும் ஒரு கதையை தந்திருக்கிறார் ஆசிரியர். எளிதாக படிக்கக் கூடிய வகையில் நூல் சுவாரசியமாக உள்ளது .எல்லா கதைகளுமே எல்லா வாசகர்களுக்கும் பிடித்தமானது -ஒப்புக் கொள்ளக் கூடியது என்று சொல்ல முடியாது என்றாலும் கூட பெரும்பாலான கதைகள் நேர்மையோடும், முற்போக்கு சிந்தனையோடும் எழுதப்பட்டுள்ளன என்று கூறலாம். மேலும் பல நூல்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது வரும்- வர வேண்டும் என்று வாழ்த்துவோம் .
15 சிறுகதைகள் – 176 பக்கம் – விலை ரூபாய் 180/-
ஆசிரியர்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்
9444958521
பதிப்பகம் :பாண்டியன் – வைகை பதிப்பகம், காரைக்குடி.
இரா இயேசுதாஸ் , மன்னார்குடி.