நூலறிவோம் | பெர்டினன் – கன்றுக்குட்டியின் கதை

ஆங்கிலத்தில் (மூலம்) : மன்ரோ லீப்
தமிழில்: கொ. மா. கோ. இளங்கோ
வெளியீடு: புக்சு ஃபார் சில்றன் (பாரதி புத்தகாலயம்) சென்னை.

‘அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டிமர நிழலில் அமர்ந்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகிற வித்தியாசப் பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை, எசுப்பானிய நாட்டின் தலைநகரான மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் பெர்டினன்?
சண்டையிடாமல், பூக்களின் நறுமணம் தேடி திரும்பிவந்தது.’

இது தான், மிகச்சுருக்கமான அந்த கதையின் சுருக்கம், இதைத்தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று தான் நாம் நினைப்போம், ஆனால் அந்த காலக்கட்டத்தில் இந்தச்சிறிய நூல் செய்த புரட்சி கொஞ்சமில்லை.

இட்லரின் அரசு இந்த நூலை எரித்தது, காளைச்சண்டைக்கு பெயர்போன எசுப்பானிய நாடு இதற்கு தடைவிதித்தது. காரணம் அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த உள்ளநாட்டு போரின் போக்கை இந்த நூல் மாற்றிவிடும் என்று கருதினார் புரட்சியாளர் பிராங்கோ.

அதே நேரம், அண்ணல் காந்தி, அறிவியல் புனைவாசிரியர் திரு. எச் சி வெல்சு, திருமதி. எலனோர் ரூசுவோல்ட் போன்ற உலகப்புகழ்பெற்ற ஆளுமைகளின் ஆதரவும் இந்நூலிற்கு கிடைக்காமலில்லை.

இதே நூல் இரண்டாம் உலகப்போரின் நிறைவில், இட்லரின் மறைவிற்குப் பின், 30,000 பிரதிகளாக அச்சிடப்பட்டு, செருமணி நாடெங்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமா, 1938ல் வால்ட் டிசினி நிறுவனத்தால் ‘பெர்டினன் த புல்’ என்ற பெயரில் திரைப்படமாக பரிணமித்தது. மக்களின் பேராதரவோடு, 1938 ம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான அக்காதமி விருதையும் பெற்றது. பின்னர் 2017ல் திரு. கார்லோ சலந்தனா என்பவரால் ‘பெர்டினன்’ என்ற பெயரில் திரைக்கதை மாற்றங்களோடு, புதிய தொழில்நுட்பத்தின் துணையோடு வெளிவந்தது. இம்முறையும் மக்களின் பேராதரவை பெற தவறவில்லை என்றாலும், அக்காதமி விருதினை மயிரிழையில் இழந்தது வருத்தமே.

தனது நாற்பதாண்டு எழுத்து வாழ்வில் நாற்பது சிறுவர் நூல்களை படைத்த, திரு. வில்பர் மன்ரோ லீப் என்ற அமேரிக்க எழுத்தாளரால் 1936ம் ஆண்டு எழுதப்பட்டது தான் ‘தி சுடோரி ஆப் பெர்டினன்’. தனது நண்பரும் ஓவியருமான திரு. ராபட் லாசன் அவர்கள், படைப்புத்திறன் போட்டியில் கலந்துகொள்வதற்காக, ஒரு கதை எழுதித்தருமாறு மன்ரோ அவர்களிடம் கேட்டுக்கொண்டார், அதற்கினங்க, ஒரு மணி நேரத்தில் எழுதி கொடுத்த சிறிய கதை தான், இந்த பெர்டினனின் கதை.

‘எனது எழுத்துப்பயணத்தின் துவக்க காலத்தில், ஒன்றே உணர்ந்தேன், ஒருவரிடம், மற்றவர்களுக்கு சொல்லவேண்டிய உண்மைகள் இருக்குமாயின், அவர் அதனை சிறுவர்களிடம் சொல்லவேண்டும், அதுவும் அவர்களுக்கு புரிந்திடும் மொழியில்.”

இவ்வாறு, சிறுவர்களுக்காக மட்டுமே எழுதுவதன் பின்னணியினை விளக்குகிறார் திரு. லீப் அவர்கள்.

இதனை தமிழ் மக்கள் பயனடையும்படி சிறப்பாக மொழியாக்கம் செய்தவர், நமது தமிழ்ச்சாரலில் சிறுவர்களுக்கான சிறுகதைகள் எழுதும், திரு கொ. மா. கோ இளங்கோ அவர்கள்.

மேலும் ஒரு அரிய நூலுடன் அடுத்த மாதம் சந்திக்கின்றேன்.

நன்றி, வெல்க தமிழ்!
இராசகுரு கார் பாலன்.

(காங்கோ தமிழ்ச்சாரல், மார்ச் 2019)

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *