noolvimarsanam : romila thaappar oru eliya arimugam - se.thamizhraj நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்
noolvimarsanam : romila thaappar oru eliya arimugam - se.thamizhraj நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம் : ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்-செ. தமிழ்ராஜ்

காலத்தை புலனாய்வு செய்வதென்பது மிக கடினமானது. புனைவுகளாலானது உலகம் என்பதை வரலாற்றின் நெடுங்கதைகளில் இருந்து கற்க முடியும். சரித்திரத்தின் மீது படிந்து கிடக்கும் காலக் குப்பைகளை ஊதித்தள்ளியபடி அதிகபட்ச உண்மைகளைத் தேடி வரலாற்றின் இருள் நிறைந்த நெடும்பக்கங்களில் கைவிளக்கேந்திய அறிஞராய் தடம்பதித்துள்ளார் வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள்.

ரொமிலா தாப்பர் எழுதிய பல புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் மருதன் இன்னும் மிக எளிமையாக ஒரு பன்முக பரிணாமமாய் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அவரை பற்றிய அறிமுகத்தைவிட அவரின் ஆய்வுகள் குறித்த விபரங்கள் நமக்கு அவர் மீதான மரியாதையை ஏற்படுத்துகின்றன.

மெளரியப் பேரரசு குறித்தான ஆய்வுரை நிகழ்த்தி முனைவர் பட்டம் வாங்கியபின்னும் மீண்டும் ஆய்வு நடத்தி தனது பழைய ஆய்வேடு தவறு என்று கண்டறிந்து புதிய ஆய்வுகளை செய்து உலகிற்கு அறிவிக்கின்றார். ஒரு ஆய்வாளர் உண்மையை நிறுவுவதற்காக தன் அத்தனை கால உழைப்பை தீயிடுவதென்பது எவரும் துணியாதது அந்த வகையில்தான் ரொமிலா தாப்பரின் ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தியா குறித்து ஆங்கிலேயர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் எழுதிவைத்த அத்தனை கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்துகிறார். மூன்று வகையான இந்தியா இருப்பதாக எழுதுவது மோசடித்தனம் என்கிறார். இந்து நாகரீகம், இஸ்லாமிய நாகரீகம், பிரிட்டிஷ் நாகரீகம் எவ்வளவு பிழையான முரணானதகவல்கள் இடம்பெற்றுள்ளன என்று சுட்டிக்காட்டி முற்கால இந்தியா எனும் நூலை எழுதி உண்மையான தகவல்களை ஆவணப்படுத்துகிறார். ஒரு நாட்டின் வரலாற்றை அந்த நாட்டில் வசிக்கும் மக்களே எழுத முடியும் என்று நம்புகிறார். பண்பாடு யாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.

தமிழர்களுக்கு கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சம்பூர்ண ராமாயணம் தெரியும். ஆனால் தாப்பரோ இந்தியாவில் 300 வகையான ராமாயணம் இருப்பதாக ஏகே ராமானுஜம் எழுதிய நூலை அறிமுகப்படுத்துகிறார். இந்துத்துவவாதிகளால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்டு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தியையும் கூறுகிறார் வியப்பாக இருக்கிறது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இராமாயணங்கள் விதவிதமான திரைக்கதைகளில் அது மக்கள் மனதை ஆட்சி செய்துகொண்டிருப்பதை ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கின்றார். ராமாயணத்திலிருந்து ராமஜென்மபூமியாகி அது பாபர் மசூதியை இடித்து துடைத்தெரிந்த மதவெறியர்களின் அரசியலையும் உணர்த்துகிறார். இஸ்லாமியர்கள் கூட மாப்ளா ராமாயணக்கதையாடலை கேரளாவில் வைத்து இருப்பதாக சொல்வது புதிய தகவலாக இருக்கின்றது. இன்றும் கூட ராமாயண மகாபாரத கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பதற்றமிகு பாத்திரங்களாக நடமாடித்திரிவது அச்சத்தைத் ஏற்படுத்துகிறது. திரையரங்குகளில் அனுமார் கூட தனியே உட்கார்ந்து படம் பார்க்கும் காமெடி இன்றும் நடக்கின்றது.

சோமநாதர் ஆலயமும் 17 முறை படையெடுத்த கஜினி முகமதுவின் மீதும் புனையப்பட்ட கதைகளை தயவு தாட்சண்யம் இல்லாமல் பிய்த்து எறிகிறார். உண்மையை நிறுவுவதற்காக தரவுகளை தேடி தேடி பொய்களை நீக்குகிறார்.இந்து முஸ்லீம் பகையுணர்வு ஆயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வேரோடிக் கிடப்பதற்கு அதன் துவக்கப்புள்ளியையும் அது யாரால் நன்கு விசிறிவிடப்பட்டதென்பதையும் ஆதாரங்களோடு முன்வைக்கின்றார். சோமநாதர் குறித்து தனித்ததொரு புத்தகத்தையும் எழுதி இருக்கின்றார் அதுவொரு முக்கியமான ஆய்வேடு.

இந்து இந்துத்துவம் ஆரியர்கள் சிந்துசமவெளி நாகரிகத்தை விழுங்க முயற்சித்த ஆரியர்களின் சூழ்ச்சி யாவற்றையும் சந்தேகித்து உண்மையை தேடுகிறார். மதவெறியர்களின் கோபத்திற்கு ஆளாகுகிறார். பண்பாடு குறித்தும் பரிசீலிக்கின்றார் ஒற்றைப் பண்பாடு இருந்ததேயில்லை பன்முகப் பண்பாடுதான் இந்தியாவில் நிலவியது என்று சான்றுகளுடன் நிறுவுகிறார். ஆரியர்களின் பண்பாடே உயர்ந்தது என்ற பொய்ம்மையை உடைக்கின்றார் மதமும் மதச்சார்பின்மையும் இந்தியாவில் இயற்கையாகவே இருக்கின்றது எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் உருவான கதைகளை ஆய்வால் நிறுவி மதங்களுக்கிடையேயான ஒற்றுமையை பதிவிடுகிறார்.

காந்தியின் அகிம்சா தத்துவத்தை பற்றி விசாரணை செய்கிறார் எந்த மத நூல்களிலிருந்து அகிம்சையை பெற்றிருப்பார் எனத் தேடுகிறார். பெளத்தம் சமணம் சிரவணம் எல்லாவற்றிலிருந்தும் கற்றுக்கொண்டு ஒரு புதிய போராட்ட வடிவத்தை கையில் அகிம்சையாக எடுத்திருக்கின்றார் என்பதை சுவைபடக் கூறுகிறார். குப்தர்களின் பொற்காலத்தை விமர்சிக்கின்றார். பொற்காலமும் இருண்டகாலமும் இல்லவே இல்லை என்று நிறுவுகிறார். குதுப்மினார் குறித்த வதந்திகளை அம்பலப்படுத்துகிறார். வரலாறு நெடுக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே பகையுணர்ச்சி இருந்ததில்லை என்ற மெய்ப்பிக்கின்றார்.

ரொமிலா தாப்பரை ஏமாற்றுவது எளிதல்ல நுண்மாண் நுழைபுலத்தோடு செய்தியின் அடிமுடி வரை சென்று தேடுகிறார். அதனால் அவர் முன்வைக்கும் ஆய்வுகள் யாவையும் எதிராளிகள் கூட மறுத்து பேச முடிவதில்லை. வாசகர்களாகிய நமக்கும் விடுக்கும் ஒரே செய்தி உண்மையை தேடி பயணிப்பதே இதில் சமரசத்திற்கு இடமேயில்லை. வரலாறுகள் யாவற்றையும் மறுவாசிப்பிற்கு உட்படுத்துவோம். உண்மைகளை கண்டடைவோம். தோழர் ரொமிலா தாப்பரை எளிய முறையில் நமக்கு அறிமுகம் செய்த தோழர் மருதனின் எழுத்து போற்றத் தகுந்தது வாழ்த்துவோம்.

ரொமிலா தாப்பர் ஒரு எளிய அறிமுகம்
எழுத்தாளர் மருதன்
பக்கம் 176
விலை 200
கிழக்கு பதிப்பகம் வெளியீடு

=================

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்.மதுரை
9965802089
ctamilraj@gmail.com

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *