“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.”
என்பது தொல்காப்பிய மரபியல்,91-வது சூத்திரம். “அறிவிலே சிறந்த சான்றோரால் ஆராய்ந்து எழுதப்படுவது முதல் நூலாகும்” என்பது இதன் கருத்து.
“வழியெனப் படுவது அதன்வழித் தாகும்.”
என்கிற அடுத்த சூத்திரம் “முதல் நூலை” பின்பற்றி எழுதப்படுவது “வழிநூல்” ஆகும் என்று கூறுகிறது. நவீன இலக்கிய விமர்சகர் க.நா.சுப்பிரமணியன் வழிநூலை “பற்றி நூல்” என்பார்.

“தொடுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து, அதர்படயாத்தலோடு, அனைமா பினவே”
வழி நூல் நான்கு வகைப்படும் என்கிறது மேற்கண்ட சூத்திரம். அவை விரிவாக; 1.முதல் நூலில் விரிவாக உள்ளதை சுருக்கி எழுதுதல், 2.முதல் நூலில் சுருக்கமாக உள்ளதை விரித்து எழுதுதல். 3.விரிவாக உள்ளதை சுருக்கியும், சுருக்கமாக உள்ளதை விரித்தும், மக்களுக்கு புரியும்படி தொடுத்து எழுதுதல். 4.வேற மொழிகளில் உள்ள நூலை மொழிபெயர்த்தல்.
தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றில் வழிநூலுக்கென்று நீண்டநெடிய மரபு இருக்கிறது என்பதை, மேற்கண்ட தொல்காப்பிய சூத்திரத்தின் வழி தெரிந்துக்கொள்ள முடிகிறது. காலத்தினால் ஒரு நூல் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமானால் “வழி நூல்”-களின் பங்கு இன்றியமையாததது ஆகும்.
“நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” என்கிற இந்த “வழிநூல்” காலத்தின் தேவை கருதி தக்க சமயத்தில் மருத்துவர் த.அறம் அவர்களால் எழுதி அளிக்கப்பட்டுள்ளது.
“படைப்பாளி தான் படைக்கும் படைப்பை விட மேன்மையானவனாக இருக்க வேண்டும்” என்கிறார் காரல் மார்க்ஸ். 20-ஆம் நூற்றாண்டில் பிறந்து தமிழ் இலக்கியம், தமிழ்ச்சமூகம் மற்றும் தமிழ் சிந்தனை போக்குகளை வளமைப்படுத்தி, இலக்கியத்தையே தனது முழுநேர பணியாக கொண்ட பேராளுமைகளான தொ.மு.சி.ரகுநாதன்,தமிழ் ஒளி, கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணன் ஆகிய நால்வரின் இலக்கிய வாழ்வினை முன்வைத்து எழுதப்பட்டு இருக்கிறது இந்த நூல்.
சுதந்திரத்திற்கு பிறகான தமிழ்ச்சமூகத்து முதல் தலைமுறை படைப்பாளிகளான இந்நால்வரில் கி.ரா.வை தவிர்த்து மீதம் மூவரும் தனது அன்றாட வயிற்றுப் பாட்டிற்கே பெரும்பாடு பட்டிருக்கின்றனர். காலச்சுவடு 2021-ஆம் வருடம் ஜனவரி மாதம் வெளியிட்ட இதழில் “பொருநை” பக்கங்கள் என்கிற சிறப்பு பகுதியில் கு.அழகிரிசாமியின் இதுவரை வெளிவராத புதிய கண்டெடுப்புகள் சில வெளியிடப்பட்டது. அதிலிருந்து, கு.அழகிரிசாமியின் இரண்டு நூட்குறிப்பபை மட்டுமே கீழே வழங்குகிறேன். இதன் வழி, அவர்களின் பாடுகளை நாம் அவதானிக்க இயலும்.
16 ஜூலை 1951:-
இன்று என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தினம். என் கடந்த காலமும் எதிர்காலமும் இன்று சந்திக்கின்றன.கடந்த காலம் துயரத்திலாவது கழிய சாத்தியமிருந்தது. எதிர்காலம்?
ஸ்ரீ.வை.கோ. இன்று மாலையில் என்னை அழைத்து, இன்றுள்ள பணக்கஷ்டத்தின் காரணமாக என்னையும் ரகுநாதனையும் ஆபீஸிலிருந்து விலகி, புத்தகம் எழுதிக்கொடுத்து அதற்குரிய பணத்தை வாங்கிக் கொள்ளும்படியாகவும் சம்பளம் கொடுப்பதற்கு இயலாதிருக்கும் நிலையையும் சொல்லிவிட்டார். இன்றைய நிலையில் அவரால் வேற என்னதான் செய்ய முடியும்?எதிர்காலமே! என்ன வைத்திருக்கிறாய்.
30 டிசம்பர் 1951:-
இன்று பிற்பகலில் ஸ்ரீ ரகுநாதன் வந்தார். ஸ்ரீ வரத குட்டியும் வந்தான். நானும் அவர்களும் மாலையில் போய் காப்பி சாப்பிட்டு விட்டு பனகல் பார்க்கில் உட்கார்ந்து சிறிது நேரம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தோம். ரகுநாதன் எங்கள் எதிர்கால வாழ்வைப் பற்றி நினைத்து நினைத்து விசாரப்படுகிறார். நம்பிக்கையற்ற சூழ்நிலை. நிரந்தர வறுமை. “செய்வது என்ன?” என்று தெரியாமல் என்னைப் போலவே அவரும் திகைக்கிறார்.ஒரு வாரச் சாப்பாட்டைப் பற்றிக்கூட நிம்மதியோடு இருக்க இயலாதவாறு நித்திய தரித்தரமாக இருக்கிறோம்.
மேற்கண்ட நாட்குறிப்பில் கு.அழகிரிசாமி ஸ்ரீ ரகுநாதன் என்று குறிப்பிடுவது தொ.மு.சி.ரகுநாதனைத் தான். இருவரும் சேர்ந்து வை.கோவிந்தசாமியின் “சக்தி காரியாலயத்தில்” பணி புரிந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது தான் இந்த நாட்குறிப்பு. தனது கிராமமான இடைசெவலில் SSLC யில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவன் என்கிற பெருமையை பெற்றவர் கு.அழகிரிசாமி. பள்ளி ஆசிரியராகவும், பின்பு சார்பதிவு அலுவலகத்து எழுத்தாளராகவும், அரசாங்க பணி பார்த்து வந்தவர்,பின்பு தனது இலக்கிய லட்சியத்தினால் அந்த பணிகளை உதறிவிட்டு பத்திரிக்கை பணியில் வந்து சேர்ந்து கொண்டார்.
கு.அழகிரிசாமி போன்றே தொ.மு.சியும், தமிழ் ஒளியும் தனது இலக்கிய லட்சியத்திற்காக அன்றாடம் துன்புறும், வாழ்க்கைப்பாட்டினை விரும்பி ஏற்றிருக்கின்றனர்.மேற்கண்ட கு.அழகிரிசாமியின் நாட்குறிப்பை வாசிக்கையில், அவர்களின் அன்றாடம் பெரும்பாடாய்க் கழிந்ததை அறிய முடிகிறது. தமிழ் சமூகத்து எழுத்தாளர்களின் வாழ்வு ஒன்றும் சிவப்பு கம்பளத்து சொகுசு வாழ்வு கிடையாது.அன்றும், இன்றும் இலக்கியவாதியின் வாழ்வு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒரு சூனியம் கவ்விய வாழ்வாகவே இருந்து வருகிறது.மிகச் சுருங்கிய எண்ணிக்கையினரே எழுத்துத் துறையில் பணக்கஷ்டம் இன்றி வாழ்கின்றனர்.
இலக்கியமும் மக்களும் வெவ்வேறன்று; இலக்கியப்படைப்பு மக்களின் வாழ்வியல் பாடுகளையே மூலமாக கொண்டிருக்க வேண்டும் ; இலக்கியம், மக்களின் வாழ்வில் மேம்பட உதவுவது முதலான கொள்கைகளையே தத்தமது லட்சியமாக கொண்டிருந்த இந்நால்வரின் மொத்த வாழ்வினையும், 96 பக்கங்கள் கொண்ட இந்நூலில் தெளிவுற விளக்கி கூறியிருக்கிறார் மருத்துவர் த. அறம்.
இது எழுத்தாளர் த.அறம் அவர்களின் முதல் நூலாகும். தனது ஆழமான வாசிப்பின் வழியில் நான்கு மகா படைப்பாளுமைகளின் இலக்கியப் படைப்புகளையும் ஆழ வாசித்து, இந்நால்வரின் முக்கிய இலக்கிய ஆக்கங்களை திறனாய்வு செய்திருப்பது மிகச் சிறப்பு. மேலும் இந்நால்வரின், அனைத்து நூல்களையும் அது வெளியிடப்பட்ட ஆண்டுகள் உட்பட, அவர்கள் பெற்ற விருதுகள், பாராட்டுகள், மற்றும் அவர்கள் ஆற்றிய சாதனைகள் என அனைத்து தகவல்களையும் விளக்கி எழுதியுள்ளார். இது, சமகால இள வாசகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதம் அமைந்திருக்கிறது.
கவிதை,சிறுகதை, நாவல், திறனாய்வு, கட்டுரை, விமர்சனம் என தமிழ் இலக்கிய உலகில் ஆளங்கால் பெற்று பல சாதனைகளையும் நிகழ்த்தி, தமிழ் இலக்கியத்திற்கு என்றே வளமான பாதை அமைத்து வழங்கிய இந்நால்வரின் இலக்கிய வாழ்வை திறம்பட விளக்கிக் கூறிய மருத்துவர் த. அறம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது. “முதல் நூலுக்கு” நிகரான முக்கியத்துவத்தை “வழிநூலும்” பெற்று வரும் நமது தமிழ் சமூகத்தில், “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” என்கிற இந்நூலைப் போல் பல “வழி நூல்கள்” படைக்கப்பட வேண்டும் என்கிற காலத்தின் கட்டாயத்தில், இந்த அறிமுக நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு ரத்தினமே. இந்நூலின் ஆசிரியரான மருத்துவர் த. அறம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆவார். மேலும் இவர், புகழ்பெற்ற எழுத்தாளர் அமரர் தனுஷ்கொடி ராமசாமி அவர்களின் புதல்வர் என்பது கூடுதல் தகவலாகும்.
நன்றி!
நூலின் தகவல்கள்
நூலின் பெயர் : “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்”
நூலாசிரியர் : மருத்துவர் த.அறம்
வெளியீடு : NCBH
பக்கங்கள் : 96
விலை : ₹ 110
வெளியான ஆண்டு : நவம்பர் 2023
நூலறிமுகம் எழுதியவர்

நந்தசிவம் புகழேந்தி
இலக்கிய ஆர்வலர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

