நூலாசிரியர் பற்றிய அறிமுகமே ஒரு பக்கத்திற்கு மேல் வரக்கூடிய அளவிற்கு சிறப்பான தகுதிகளை பெற்றவர்.
தாய்மொழி கல்வி செயற்பாட்டாளர். திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர். முல்லை பன்னாட்டு கல்வியியல் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்.
பன்னாட்டு தமிழர் பேரவையின் நிறுவனர்களில் ஒருவர்.ஸ்வீடன்நாட்டின் நார்டிக் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்…. என பல பரிணாமங்களில் செயல்படுபவர்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்திலும், இந்திய அறிவியல் கழகத்திலும் ஆராய்ச்சி மாணவராக பணியாற்றியவர் .நோர்வே நாட்டின் பேர்கன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர் . சீனாவின் ஜேஜியாங்க் பல்கலைக்கழகம், சுவீடனின் சால்மர்ஸ் பல்கலைக்கழகம், அயர்லாந்தின் லிமெரிக் பல்கலைக்கழகம் ,ஜெர்மனியின் கார்ல்சுருக பல்கலைக்கழகம் ஆகியவைகளில் பொருட்களின் அறிவியல் ஆராய்ச்சியாளராக அனுபவம் பெற்றவர் .தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் வருகை தரும் துணைப்பேராசிரியராக பணியாற்றுகிறார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் திட்டங்களில் செயல்படுகிறார். பூம்புகார் வரலாற்று ஆவணப்படத்தின் தயாரிப்பு பணிகளில் இருக்கிறார். இதுவரை நான்கு புத்தகங்கள், 75 க்கு மேற்பட்ட கட்டுரைகள் தமிழில் எழுதியுள்ளார் .அமெரிக்கா, ஜெர்மனி, நோர்வே, டென்மார்க், இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட தமிழ் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். மற்றும் பல நாடுகளில் 21 ஆய்வு உரைகளையும் 56 அறிவியல் சிறப்பு உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.
நூலின் சிறப்பு:
ஃபின்லாந்து நாடு உலகில் தலைசிறந்த பள்ளி கல்வியை வழங்குவதை கல்வி செயற்பாட்டாளர்கள் அறிவர். தனது குழந்தைகள் நோர்வே நாட்டிலும், சுவீடன் நாட்டிலும், இந்தியாவிலும் பள்ளி கல்வி பெற்ற நேரடி அனுபவத்தின் பின்னணியில் இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார் .
நோர்வே ,ஸ்வீடன் ,ஃபின்லாந்து ,டென்மார்க் நாடுகளின் கல்வித் துறைகள் பற்றி இந்த நூல் ஆய்வு செய்கிறது.
*தாய்மொழி கல்விக்கென தனித்துவமான சட்ட திட்டங்கள் இங்கே உள்ளன.
*சமூக நலத் திட்டங்களின் கூர்மையான நடவடிக்கைகள் வகுக்கப்பட்டு பள்ளிக்கல்வி– வகுப்பறை செயல்பாடுகளில் அதிகாரப் பரவலாக்கத்தின் வழியாக தன்னாட்சி செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. திட்டக்குழு துணைத் தலைவராக இருந்த பேராசிரியர் நாகநாதன் அவர்களின் வழிகாட்டல் தனக்கு உதவியதாக கூறும் நூலாசிரியர், பேராசிரியர் அமர்த்தியா சென் அவர்களின் பல்வேறு கட்டுரைகள் தனக்கு உந்துதலாக அமைந்ததாக கூறுகிறார். தமிழ்நாட்டின் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயல்பாடுகளை ஸ்காண்டிநேவிய நாடுகளுடன் ஒப்பிட முடியும் என்பது விஜய் அசோகன் அவர்களின் கருத்தாகும். நோர்வே, சுவீடன் இரு நாடுகளிலும் கல்வி, ஆராய்ச்சி ,வாழ்க்கை என அமைந்துவிட்ட 15 ஆண்டு காலத்தில் பல்வேறு அனுபவங்கள்… பல்கலைக்கழகத்தினுள் கண்டு உணர்ந்த ஏற்றத்தாழ்வற்ற உளவியல் நெருக்கடி எதுவும் இல்லாத பணி சூழல், இந்த நாடுகளில் வாழும் காலங்களில் கிடைத்த சமத்துவம், பெருமகிழ்வோடு ஏற்றுக்கொண்ட பொருளாதார நலன் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்கள், குழந்தைகளுக்கும் எவ்வித மன அழுத்தமும் கொண்டு வராத பள்ளிகளும் தேர்வு முறைகளும் என ஒவ்வொன்றும் தன்னுடைய தேடுதலை விரிவு படுத்தியதாக மகிழ்வோடு பதிவு செய்கிறார் நூலாசிரியர் விஜயமோகன் .
இந்த நாடுகளின் சமூக மேம்பாடு, மனித உரிமை, தாய்மொழி உணர்வு, தேசிய கட்டுமானம் மட்டும் அல்ல… உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் முன்னணி பட்டியல்.. உலகின் செழிப்பான நாடுகளின் பட்டியல்… அதிக நாத்திகர்கள் வாழும் நாடுகளின் பட்டியல்.. என எல்லாவற்றிலும் இவைகள் முன்னணியில் இருக்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நாடாக நோர்வேயும் மற்ற நோபல் பரிசுகளை வழங்கும் நாடாக சுவீடனும் உள்ளன. தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாக நிறைந்திருக்கும் சமத்துவ கல்வி.. சமூக நீதிக் கல்வி… அனைவரையும் உள்ளடக்கிய சமமான வளர்ச்சி ஆகியவை பற்றியும் இந்நூல் ஒப்பிட்டு விளக்குகிறது. சமத்துவம் -சமூக நீதி -அதிகார பரவலாக்கம் ..ஆகிய மூன்றினையும் இணைத்த நாடுகளே கல்வித்துறையில் சாதித்துள்ளது என்பதை பல கட்டுரைகள் நிரூபிக்கின்றன. அதே வேளை மொழியுரிமை கொள்கை, தேசிய மறுமலர்ச்சி கோட்பாடுகள் இரண்டும் கல்வித்துறையில் தாக்கம் செலுத்தும் போது அந்நாட்டின் வளர்ச்சி நிலைத்து வலுப்பெற்று உயரும் என்பதையும் நூல் விவாதிக்கிறது. நூலை எழுதும் முன் எழுத்தாளர் தோழர் சமஸ் அவர்களுடன் கலந்து பேசியதையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
இவர் ஏற்கனவே “தாய் மொழிக் கல்வி– உலக அரசியலும் கல்வியியலும் “என்ற நூலை இதே ஆழி பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார் .சுவீடன் நாட்டின் கல்வித் துறையின் வகுப்பறை செயல்பாடுகளை எழுதும்போது தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு தனக்கு உறுதுணையாக இருந்த தனது குழந்தைகள்
கவின் திலீபன் மற்றும் கதிர் நிலவன் இவர்களுக்கு தனது நன்றிகளை பதிவு செய்து கட்டுரைகளை தொடர்கிறார் நூல் ஆசிரியர் முனைவர் விஜய் மோகன் அவர்கள்.
3. இந்திய ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை, தேசிய கல்விக் கொள்கையாக அறிவித்துள்ள பின்னணியில் இந்த நூலின் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இரு பிரபல கல்வியாளர்கள் இந்நூலுக்கு அணிந்துரை செய்துள்ளனர். நூல் அறிமுகமும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சிகரமான மக்கள் வாழும் நாடுகளில் முன்னணியில் நிற்கின்றன இந்த நோர்டிக்நாடுகள் .ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களுக்கான மரியாதை -முக்கியத்துவம் இந்த நாடுகளில் எப்படி உள்ளது என இந்நூல் விவரிக்கிறது .பல நூறாண்டுகள் பிற நாடுகளின் ஆதிக்கத்தில் இந்த நாடுகள் இருந்தாலும் எப்படி கல்வி மூலம் தங்களை நிலைநிறுத்தி முன்னேறின என இந்தநூல் விளக்குகிறது. தாய்மொழியை மீட்டெடுத்து ..தாய் மொழிக் கல்வியை நிறுவியதின் வரலாறை நூல் விரிவாக அலசுகிறது. ஃபின்லாந்தின் கல்வித் துறையில் 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டுவரை நிகழ்ந்த பள்ளிக்கல்வி கோட்பாடுகள் ..ஆசிரியர் பயிற்சி கல்வி கோட்பாடுகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த மிக முக்கிய மாற்றங்களான சமூகநீதி,பள்ளி உணவுத் திட்டம்,ஆண்-பெண் சமத்துவக்கல்வி ஆகியவைகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மாற்றங்களும் நூலில் ஒப்பிடப்படுகிறது.
ஃபின்லாந்து கல்வி துறையின் அதிகாரத்தை பரவலாக்கும் நடைமுறைகள்.. அதனால் விளைந்த பெரும் நன்மைகளையும் தனி கட்டுரை விளக்குகிறது. அதற்கு அடுத்தபடியாக பின்லாந்தின் பள்ளி மற்றும் வகுப்பறை கட்டமைப்புகளையும் ஒவ்வொரு பிரிவின் தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை வகுப்பிற்கான ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் நூல் விளக்குகிறது .வகுப்பறைகளில் கற்றுத் தரப்படும் அரசியல் ஜனநாயகம் ,மனித உரிமைக் கோட்பாடுகள் பற்றிய விளக்கமும், ஜனநாயக வழியில் தேர்தல்கள் வைத்து உருவாக்கப்படும் மாணவர் கழகங்கள் -இளையோர் கழகங்கள் பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன. அரசியல் ஆக்கிரமிப்பில் இருந்து பல்வேறு தன்னாட்சி உரிமைகளோடு கல்வித்துறையை இந்நாடுகள் வளர்த்தெடுக்க வரலாற்று பார்வையை இந்த நூல் சுருக்கமாக தொட்டுச் செல்கிறது. அரசியல் அதிகார பரவலாக்கம்,உள்ளூராட்சிகளின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடு ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு எப்படி உதவியது என்பதை நூல்விளக்குகிறது. சுவீடனில் பல்கலைக்கழக பேராசிரியர்- மாணவர் உறவிலிருக்கும் ஜனநாயகத் தன்மை.. சுவீடன் பள்ளியில் நடக்கும் தேர்வு முறைகள் ..வகுப்பறை செயல்பாடுகள்.. அரசியல் மனித உரிமை மற்றும் ஜனநாயக சிந்தனையை குழந்தைகளுக்கு பயிற்சியாக அளிக்கும் கல்வித் திட்டங்கள் பற்றியும் நூலாசிரியரின் மகன்களின் நேரடி அனுபவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. எல்லா முன்னணிக்கும்..பின்னணியாக!….
அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ள கல்வி !கற்றல் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்ட சமத்துவ கல்வி! பள்ளியில் அனைவருக்கும் சமமான உணவு!… இவையே இந்த நாடுகளின் கல்வித்துறைகளின் பொதுத் தன்மையாக இருந்து வந்துள்ளது.
அதேபோல இந்த நாடுகளின் கல்வித் துறையில் நாம் ஆழமாக கற்க வேண்டிய கோட்பாடுகளாக
1. தாய்மொழி கல்வி
2. சமூக நீதி
3.அதிகார பரவலாக்கம்
4. கல்வியியல் கோட்பாடுகள்
5. பாலின சமத்துவம்…
கல்வித் துறையிலும் ,சமூக வளர்ச்சியிலும் இவர்களின் வெற்றியில் மிக முக்கிய பங்காற்றும் இரண்டு காரணிகளாக 1.தொடக்க கல்வியும் 2.ஆசிரியர் பயிற்சி கல்வியும் என வரையறுக்கிறது இந்த நூல் .
கல்வித்துறையின் பங்களிப்பை தேசிய மறுமலர்ச்சிக்கும் பொருளாதார மறுமலர்ச்சிக்குமான அடிப்படை தத்துவமாக எவ்வாறு பிணைத்து வழங்கினார்கள் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
உலகின் பல சாதனைகளில்.. முன்னணி பட்டியலில்.. இடம் பெற்று.. ஒவ்வொரு ஆண்டும் நமக்கெல்லாம் ஆச்சரியத்தையும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன இந்த நாடுகள்!
உலகின் மகிழ்வான நாடுகளில் முன்னணியில்!
குடிமக்களின் சராசரி ஆயுட்காலம்.. பள்ளிக் கல்வி நிறைவு விகிதம்.. குடிமக்கள் சராசரி வருவாய் ஆகியவைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் மனிதவள மேம்பாட்டு குறியீடு(HDI) அளவிலும் முன்னணியில்…
வாக்களிக்கும் ஜனநாயக உரிமை, கருத்து சுதந்திரம் ,சட்டத்தின் அளவுகோலில் குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை இவற்றின் அடிப்படையான தனிமனித சுதந்திர செயல்பாடுகளிலும் முன்னணியில் …
தனி மனித சுதந்திர அளவுகோலின் அடிப்படையிலும் முன்னணியில் ..
மனித உரிமை கோட்பாடுகளை வலுவாகவும் தொடர்ச்சியாகவும் கடைபிடிக்கும் நாடுகளில் முன்னிலையில்..
உலகின் தலை சிறந்த பெண்ணிய மேம்பாடுகள், ஆண்- பெண் சமத்துவம் உள்ள நாடுகளில் முன்னணியில்..
உலகின் அதிக நாத்திகர் வாழும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில்…
உலகில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முன்னணியில்..
உலகின் சமூக நலத் திட்டங்களுக்கான நாடுகளாக முன்னணியில்..
இவையெல்லாம் கொரோனா பேரிடர் காலத்திலும் பின்பற்றப்பட்டன..
இப்படிப்பட்ட முன்னணிகளுக்கு எல்லாம் பின்னணியாக இருப்பது கல்வித் திட்டங்கள் என்பதுதான் இங்கே அடிக்கோடிட்டு காட்டப்பட வேண்டியதாகும் .
நோர்வே,சுவீடன், டென்மார்க், பின்லாந்து மற்றும் ஐசுலாந்து ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பை நோர்டிக் நாடுகள் என்கிறார்கள் .நோர்டிக் கல்வி,நோர்டிக் சமூகம், நோர்டிக் பாலினச்சமத்துவம் ..நோர்டிக் பெண்ணியம்.. நோர்டிக் மனித உரிமை சட்டங்கள்.. நோர்டிக் மருத்துவம்.. நோர்டிக் சமூக நலத்திட்டங்கள்..என எல்லாமே உலகிற்கே வழிகாட்டுதல்களாக அமைந்துள்ளன..
5. பின்லாந்து ,நோர்வே,சுவீடன் ,டென்மார்க், நூல் நிறைவுரைஎன்று 5 தலைப்புகளில் பல்வேறு பக்கங்களில் இந்த நாடுகள் எந்தவித அரசியல்- பொருளாதார -பண்பாட்டு சூழலில் தங்கள் நாடுகளின் கல்வி முறைக்கு அடித்தளமிட்டு இன்றுவரை காலத்திற்கு ஏற்ற மாற்றங்களோடு பராமரித்து வருகின்றனர் என்பதை புள்ளி விவரங்களோடு இந்த நூலாசிரியர் விளக்குகிறார். இவை அனைத்தையும் ஆர்வம் உள்ளவர்கள்..
ஏன் அரசியல்- சமூக ஆர்வலர்கள் அனைவருமே இந்நூலை நேரடியாக வாங்கி வாசிப்பதன் மூலம் தெளிவாக விவரங்களை உள்வாங்க முடியும். இந்த நூலின் வெற்றி என்பது இந்த நூலின் உள்ளடக்கங்கள் தமிழகத்தில் வெற்றிகரமாக அமலாக்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இங்கே உள்ளது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுவதோடு எவையெல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒவ்வொருவருமே சிந்தித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை நமக்கு ஊட்டுகிறது.
ஃபின்லாந்து நாட்டைப்பொறுத்தவரை பைபிளை வாசிப்பதற்கான கல்வியறிவு எல்லா குடிமகன்களுக்கும் ஆரம்பத்தில் கட்டாயமாக்கப்பட்டது. தேவாலயங்களில் திருமணம் செய்வதற்கான அடிப்படை தகுதியாக கற்றல் அறிவுச் சான்றிதழை முன்னிறுத்தினார்கள். இது எப்படி படிப்படியாக மாறி ஒரு மதச்சார்பற்ற கல்வியாக உருவெடுத்தது என்பதை நூல் சுவாரசியமாக விளக்குகிறது.
அலுவல்மொழி, தாய்மொழிக் கல்விக்கும் தேசிய இறையாண்மை உணர்விற்கும் உலக வரலாற்றில் எப்பொழுதும் பெரும் தொடர்பு இருக்கும் என்பதை இந்த நாடுகளின் வரலாறுகள்நிரூபிக்கின்றன. “குரல் வழி கதைச்சொல்லிகள்” மூலம் அந்த நாட்டின் பண்பாடு பாதுகாக்கப்பட்டது கவனிக்க வேண்டிய செய்தியாகும். தலைமை கல்வித்துறை ஆணையராக இருந்த பின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை -பிதாமகர் யூனோ சைக்னெயெஸ் 1857லேயே ஆட்சி பேரவைக்கு அளித்த பரிந்துரையில் ,அனைத்துஃ பின்னிஷ் நாட்டு குழந்தைகளுக்குமான சம உரிமை உள்ள கல்வியை வழங்க வேண்டும்.. நகர மன்றங்கள் பள்ளிகளை உருவாக்கி நிர்வகிக்க வேண்டும் என்று எடுத்துரைத்தது ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. 1891லேயே ஃபின்லாந்தின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் இரண்டாம் இடத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் பள்ளி செல்லும் வயதுள்ள 30 குழந்தைகள் இருந்தால் அங்கு ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று சட்டம் வலியுறுத்தியது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெசுடோலோசியன்அவர்களின் கல்வியியல் கோட்பாட்டினை ஆங்கிலத்தில் investing in the individual for the development of society என்று விளங்கிக் கொள்ளலாம். ஜெனிவாவில் பிறந்த ஜூயன் ரௌசீயேஅவர்களின் சுதந்திர சிந்தனை கோட்பாடுகள்தான் தனித்த சிந்தனை உடைய குழந்தைகளின் வெளிப்படுத்தும் திறன் வளர்ப்பில் கவனம் செலுத்துவதற்கான அடிப்படையை கொண்டிருந்தன.
வார்த்தைகள்.. எழுத்துக்கள்.. வரைபடங்களை காட்டிலும், செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து ஒவ்வொரு குழந்தையின் தனித்திறன் பாதிக்காத வகையில் வகுப்பறை கற்றல் கூட்டு செயல்பாடுகளாக மாற வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார் .குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை அவர்களேதிட்டமிட்டு, பதில்களை அவர்களே தேடும் விதமாக வகுப்பறை பயிற்சிகள் இடம்பெற வேண்டும் .மாறாக முன்பே தயாரிக்கப்பட்ட கேள்விகள்.. அதற்கான பதில்களை சொல்லும் கருவிகள் போல குழந்தைகள் இருக்கக்கூடாது என்று பெசுடாலேசியன் எடுத்துக் கூறினார்.
“தனிமனித சுதந்திரத்தையும் மேம்பாட்டினையும் உருவாக்கும் அதே வேளை, சமூக பொறுப்புணர்வினை வெளிப்படுத்தும் சிறந்த குடிமக்களை உருவாக்குவதையும் சேர்த்து பிணைப்பதே கல்வி” என்பது பெசுடாலேசியன் கோட்பாடு.
ஏர்பர்டினியக் கோட்பாட்டின்படி பாடத்திட்டங்கள் (Syllabus) ஆசிரியர்களால் ஒவ்வொரு வகுப்பறைகளிலும் அந்தந்த மாணவர்களின் கூட்டு உளவியலை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வாறு நாடு முழுவதும் உள்ள எல்லா பள்ளிகளிலும் ஏராளமான பாடத்திட்டங்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு மறுபுறம் ஒரே மாதிரியான கற்றல் திறன் அனைவருக்கும் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டது.
ஆசிரிய பயிற்சி கல்லூரிகளின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானது. இதை நாம் ஒவ்வொருவருமே தெளிவாகப் புரிந்து கொள்ள இந்த நூலை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தொடர் கற்றலுக்கு உட்படும் ஆசிரியர்களை பயிற்சி கல்லூரிகள் உருவாக்கின.
மழலையர் கல்வி..தொடக்கக்கல்வி.. உயர்நிலைக் கல்வி ..மேல்நிலைக் கல்வி என்று ஒவ்வொரு கல்வி நிலைக்குமென தனித்தனியான ஆசிரியர் பயிற்சி தரப்பட்டது. அருகமைப் பள்ளிகள் என்பது போலவே கல்வியியல் கல்லூரிகளையும் ஏராளமாக பரவலாக உருவாக்கப்பட்டன. பெண்களுக்கும் 19 ஆம் நூற்றாண்டின் மையக் கட்டத்தில்தான் கல்வி விரிவாக்கப்பட்டது.
6. வெகு ஆண்டுகளுக்குப் பிறகு ஆண் -பெண் இருபாலரும் ஒரே வளாகத்தில் பயிலும் வாய்ப்பு உருவானது கவனிக்க வேண்டியது. பன்முக கலவையான கல்வியாகவும், கைவினை பொருட்கள் சார்ந்த கல்வியில் பின்லாந்து இன்று உலகின் முன்னோடியாகவும் திகழ்வதை நாம் கவனிக்க வேண்டும். சுதந்திரமான உள்ளுணர்வு சார்ந்த சிந்தனை வளர மாணவர்கள் தனித்துவமான பார்வையோடு ஓவியங்களை வரைதல் ஊக்கப்படுத்தப்படுகிறது.
ஆசிரியர்களின் தலையாய பணியாக மாணவர்களின் உளவியலை கவனிப்பது இருந்தது. பள்ளி -வீடுகளுக்கு இடையேயான உறவு பாலம் அமைப்பதும் ஆசிரியர்கள் பணியாக இருந்தது .தண்டனைகள் அற்ற ஊக்குவிப்புகள் தரப்பட்டன. அரசு தனது ஆசிரியர்களுக்கு தேசத்தின் மெழுகுவர்த்திகள்” Candles of the Nation”. என்ற பட்டம் தந்து உண்மையாகவே கௌரவித்தது.
போரும் வரலாறும் அது சார்ந்த கல்வியும், எந்த காலத்தில் யாரின் ஆட்சியின் கீழ் பயில்கிறோமோ அதன் பொறுத்து மாறுபட்டு எழுதப்பட்டு கற்றுத் தரப்படும் என்று பின்லாந்து வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுகிறார்கள். கல்வித்துறை மாற்றங்கள் அந்தந்த காலகட்ட அரசியலோடு தொடர்புடையது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
1944 ல்பொதுவுடமைக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் “பின்லாந்து கல்வி முறையின் வழியாக மட்டுமே பின்லாந்தின் சமத்துவ சமூகத்தை படைக்க முடியும்” என்று அறிவிக்கிறார்கள். 1948 ல் பொதுவுடைமைக் கட்சி 49 இடங்களும், சமத்துவ ஜனநாயக கட்சி 50 இடங்களும், வேளாண் மையக் கட்சி 49 இடங்களை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கின்றன. நாட்டின் எல்லாவிதமான சீர்திருத்தங்களுக்கும் பொதுவான அரசியல் இணக்கப்பாடு கருத்து -இசைவு political consensus தேவை என்று உணர்ந்தார்கள்.
ஆசிரியர் -மாணவர் இடையே உரையாடலும் விவாதமும் ஏற்பட்டு, பள்ளிகளின் வழங்கப்படும் பயிற்சிகளில் குடிமகன்களுக்கு உரிய சமூக கடமை, உரிமைகள் நலன் சார்ந்த பார்வையில் மாற்றம் வேண்டும் என்பதை மேட்டி அவர்கள் வலியுறுத்தினார்.
7. நோர்டிக் நாடுகளின் கல்வி சீர்திருத்தங்களை பற்றி விவாதிக்கும் போது அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நீதி கட்சி தொடங்கி இன்று வரை கல்வித்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களையும் ஒப்பிட்டு நூலாசிரியர் விவரங்களை பதிவு செய்திருப்பதும் வாசகர்களுக்கு சுவாரசியமாக உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பின்லாந்து கல்வி பேச்சுகளில் உள் உணர்வு சார் கல்வி emotional education என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகள் பள்ளி சூழல், நட்பு சூழல், சமூகச் சூழல் ,குடும்ப சூழல் என இடத்திற்கு ஏற்ற உணர்ச்சிகளை மாற்றி வெளியிடுவர் என்பதை கணக்கில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எவர் ஒருவர் மீதும் எந்த அடையாளங்களையும் திணிக்காத படி வகுப்பறை பாடங்கள் மாற்றப்பட்டு விட்டன. கல்வி என்பது சமூக நல அரசை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக பார்க்கப்பட்டது.
நாம் பரிசீலிக்கும் இந்த நான்கு நாடுகளிலும் கட்டாய கல்வி இலவசமாக எந்த வயதில் இருந்து தரப்படுகிறது ..ஒவ்வொரு வகுப்பிற்குமான பாடத்திட்டத்தை யார் வகுக்கிறார்கள்.. எந்தெந்த பகுதியில் உள்ள எந்த வகை பள்ளிகளுக்கு எந்த அரசின் பிரிவு பொறுப்பு வகிக்கிறது.. மாணவர்களுக்கான உணவு.. போக்குவரத்து வசதி.. தேர்வு முறை..வகுப்பு நேரம்..விளையாட்டு..நீச்சல் பயிற்சி.. தொழிற்கல்வி என்பது பற்றி எல்லாம் மிக ஆழமாக தெளிவான புள்ளி விவரங்களுடன் இந்த நூல் விளக்குகிறது.. அவற்றைப் பற்றி இங்கே பதிவு செய்வது என்பது முழு நூலையுமே பதிவு செய்வதாக மாறிவிடும். எனவே வாசக அன்பர்கள் இந்த நூலை வாசிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நாம் நினைத்துப் பார்க்க முடியாத ..கற்பனையே செய்ய முடியாத.. இப்படி எல்லாம் செய்ய முடியுமா என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் உண்மையிலேயே அவ்வளவு சமூக உணர்வோடு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பதை தன்னுடைய நேரடி அனுபவங்கள் மூலம் இந்த நூலாசிரியர் விஜய மோகன் பதிவு செய்திருக்கிறார் .
ஒரு உயிர் கரு கொள்வதிலிருந்து அது கல்லூரி கல்வி முடிக்கும் வரை எப்படி அரசாங்கம் ஒவ்வொரு கட்டத்திலும் தலையிட்டு அந்த குடும்பத்தின் வளர்ச்சிக்கும் பெற்றோருக்கும் எப்படி எல்லாம் திட்டமிட்டு உதவுகிறது என்பதெல்லாம் நமக்கு ஏதோ ஒரு கற்பனா சோசலிசம் போல தோன்றும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த நாடுகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்த ஆசிரியரின் அனுபவமே சான்றாக நம்முன் நிற்கிறது.
இந்த நாடுகளில் வேலைக்காக புலம்பெயர்ந்து குடியிருக்கும்.. எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் தாய்மொழி கல்விக்கு கூட அதிக முக்கியத்துவம் தரப்படுவது வியப்பாக உள்ளது .உதாரணமாக ஒரு நகரத்தில் ஒரு ஐந்து பேர் மட்டுமே தமிழ் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கூட அவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து வாரத்தில் ஒரு நாள் அவர்களது தாய்மொழி போதிக்கப்படுகிறது. அது மட்டும் அல்ல ஒரு குழந்தையை தத்து எடுக்கும் பெற்றோர் ஒரு மொழியை பேசுபவராக இருக்கலாம் ..தத்து குழந்தை வேறு மொழியை தாய்மொழியாக கொண்டிருக்கலாம்.. இந்த சூழலில் கூட தத்து குழந்தையின் தாய் மொழி போதிக்கப்படுவது என்பது எவ்வளவு நுணுக்கமாக தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுவது என்பதற்கு ஒரு சிறு உதாரணமாகும் .அதேபோல குழந்தை பிறந்தபின் அதை பராமரிப்பதற்கான ஊக்கத் தொகை என்பது பெற்றோர்களின் மாத சம்பளத்தை விட கூடுதலாக தனக்கு தரப்பட்டதையும் ஆசிரியர் விஜய மோகன் இங்கே பதிவு செய்திருக்கிறார்.
கல்வியை வழங்குவதில் உள்ளூராட்சி நிர்வாகங்கள் தன்னாட்சி உரிமையுடன் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் மிகவும் போற்றத்தக்கவை.
*இன்னொரு மிக முக்கியமான தகவல் ஆசிரியர் சங்கங்கள்.. தொழிற்சங்கங்கள் ஆகியவை கல்வி சீர்திருத்தத்தில்இந்த நாடுகளில் ஆற்றும் பங்கும் நமக்கு முன் உதாரணமாக உள்ளன.
மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ,அரசியல்வாதிகள் இவர்களை விட நாட்டின் முதல் மரியாதைக்கு உரியவர்களாக இந்த நாடுகளில் ஆசிரியர்கள் மதிக்கப்படுகிறார்கள்.. அந்த வகையில் ஊதியமும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிட வேண்டியது.
8.” கல்வி -சமூக நீதி- சமூக நலத் திட்டமே தமிழ்நாடு ஏனைய மாநிலங்களில் இருந்து மாறுபட்டு இருக்கிறது” என்று பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கிய அமர்த்தியா சென் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டு இருப்பதை நூல் ஆசிரியர் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளிக் கல்விக்காக மட்டுமே கல்வி கொள்கை இலக்கு ஆகியவை இந்த நாடுகளில் தீர்மானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது .உலகிலேயே முதன்மையிடத்தில் இருக்கும்போது ஏன் தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு.. வருங்காலத்தைஎதிர்கொள்ளக்கூடிய வலுவுடன் எங்களது இளைய சமுதாயம் இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என்கின்றனர் இந்த நாட்டு கல்வியாளர்கள்..
அனைவருக்கும் கல்வி…பள்ளி நேர இலவச உணவு.. பள்ளி வளாகத்திலேயே மருத்துவ கட்டமைப்பு.. உளவியல் மேம்பாட்டு ஆலோசனை.. வகுப்புகள் ஏழு வயது முதல் 16 வயது வரையிலான கட்டாய கல்வி ..அருகமைப்பள்ளி.. குழந்தைகளின் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை தொடர் கற்றலுக்கு ஒரே ஆசிரியர் அந்த குழந்தையை பின் தொடர்ந்து ஒவ்வொரு வகுப்புக்கும் ஆசிரியராக தொடர்வது.. குறைந்த நேர வீட்டுப்பாடம் ..பள்ளிகளே பாடத்திட்டத்தை உருவாக்குவது போன்றவை இந்த நூல் முழுவதும் திரும்பத் திரும்ப நமக்கு வலியுறுத்தப்படுகிறது.
“பின்லாந்து நாட்டின் கல்விக்கான வெற்றிக்கான ரகசியத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா?.. என்று கேட்டதற்கு அந்த நாட்டின் கல்வி அமைச்சராக இருந்த பேர் ஸ்டேன் பேக் என்ன சொன்னார் தெரியுமா…” ஃபின்லாந்து கல்வி திட்டத்திற்கும்.. ஆசிரியர்களுக்குமான பெரும் மரியாதையை உருவாக்க 150 ஆண்டுகள் ஆனது” என்கிறார்.
குறைவான வீட்டுப் பாடங்கள்.. மன அழுத்தமே இல்லாத கல்வி.. மதிப்பெண்களே இல்லாத கல்வி.. பயமுறுத்தும் தேர்வுகள் இல்லாத கல்வி.. என்று நாம் நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் உலகில்.. கல்வியில் முன்னணியில் இருப்பது இந்த நோர்டிக் நாடுகள்.! மாணவர்களிடையே போட்டிகள் கிடையாது.. ஏற்ற இறக்கம் கிடையாது.. நன்றாக படிப்பவர்.. படிக்காதவர் என்ற வித்தியாசம் கிடையாது. “உண்மையான வெற்றியாளர்கள் போட்டிகளில் மூழ்குவதில்லை” என்கிறார் பின்லாந்து கல்வியியல் அறிஞர் பாசி சாஹ்ல்பர்க். இங்கே யாரும் யாரையும் கண்காணிப்பதில்லை ..ஆதிக்கம் செலுத்துவதில்லை.. அவரவர் பொறுப்பை அவரவர் உணர்ந்து செயல்படுகிறார்கள். பள்ளிகளுக்கு இடையே போட்டி கிடையாது.
மாணவர்களுக்கு வகுப்பறைகளிலேயே அரசியல் கட்சிகள் பற்றி போதிக்கப்படுகிறது .தேர்தல் மூலம் மாணவர் கழகங்கள் ..இளையோர் கழகங்கள் உருவாக்கப்படுகின்றன. அரசியல்வாதிகள் பேசும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் உரைகளை கேட்க வைக்கிறார்கள். சொந்தமாக மாணவர்கள் தங்கள் புரிதலின்படி அரசியல் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மனித உரிமைக் கல்வி போதிக்கப்படுகிறது .சமத்துவ சிந்தனை.. பாலின சமத்துவம்.. இன வேறுபாடு இன்மை ஆகியவை பள்ளி பாடத்திட்டத்திலேயே அங்கமாக உள்ளது.
இப்படி இந்த நான்கு நாடுகள் பற்றிய கல்வி முறைகளில் ஒரு சில வேறுபாடுகளுடன் ஒரே மாதிரியான கல்வி சீர்திருத்தங்கள் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து நவீன மயம் ஆகிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த நூல் நமக்கு எடுத்து விளக்குகிறது.
இந்த நாடுகளில் எப்படிப்பட்ட ஆட்சி முறைகள் இருந்தாலும், கல்வி சீர்திருத்தம் மட்டும் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு முன் நோக்கி அமல்படுத்துவது பாராட்டத்தக்கதாக தொடர்கிறது.
** நிதி என்பது இங்கு ஒரு பிரச்சனையாக இல்லை!
குழந்தைகளை இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணி வரை 11 மணி வரை தூங்க விட வேண்டும் என்பது கட்டாயம் .பள்ளிக்கு சோர்வாக வந்தால் அவர்களுடன் அமர்ந்து ஆசிரியரோ அல்லது பள்ளி வளாக செவிலியரோ உரையாடி சோர்வுக்கான காரணத்தை களைவார்.
சுற்றுச்சூழல் சீர்கேடு.. காலநிலை மாற்றம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் குழந்தைகள் வகுப்புகளில் விவாதிக்கின்றனர்.
தேர்வுகளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் என்பது முன்பே சொல்லப்பட்டு விடும். இந்தத் தேர்விலும் தவறும் குழந்தைகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். எதுவுமே நிறைவு செய்யாத குழந்தைகளுக்கும் தனியாக மீண்டும் பயிற்சி அளிக்கப்படும். எப்பொழுது வகுப்பு குழந்தைகள் தயாராகின்றனரோ அப்போதுதான் தேர்வு நடைபெறும். தேர்வு அன்று வராத குழந்தைக்கு தனியாக பின்னர் தேர்வு நடத்தப்படும்.
பெற்றோர்களுடன் குழந்தைகள் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள் போன்ற பணியிடங்களை ஒருநாள் முழுக்க சென்று பார்வையிட்டு அறிக்கையாக சமர்ப்பிக்கும் திட்டமும் உள்ளது.
9. நூலின் நிறைவுரையில்.. நூலின் மைய நோக்கமாக.. பள்ளிகளின்.. ஆசிரியர்களின் தன்னாட்சி உரிமைகள் குறித்தும்.. தாய்மொழிகளுக்கான கல்வி குறித்தும்.. தேர்வு முறைகள்.. மன அழுத்தம் உண்டாக்காத கல்வி அமைப்புகள்.. ஒவ்வொரு குழந்தைக்கு உள்ள தனித்திறனை கல்வி அமைப்புகளும், ஆசிரியர்களும் எவ்வாறு ஊக்கப்படுத்தி தனித்துவ குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்பதனை ஒட்டியும் இந்நூல் எழுதப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூறி இந்த நூலை நிறைவு செய்கிறார்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் மத்தியிலும்.. தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கை வகுப்பாளர்களின் மத்தியிலும் ஏதேனும் தாக்கத்தை இந்த நூல் செலுத்துமாயின் அதுவே மாபெரும் வெற்றியாக கருதப்படும் என்று கூறுகிறார்.
** இந்த நூல் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்திருக்கும் என்று நம்புகிறோம்.!
ஆழி பதிப்பகத்திற்கு சிறப்பான பாராட்டுகள்!
நூலின் தகவல்கள்
நூல் : “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூக நீதியும்”
நூல் ஆசிரியர்: முனைவர் விஜய் அசோகன்
வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 176
விலை : ரூபாய் 200
பதிப்பு:மார்ச் 2023
நூல் அறிமுகம் எழுதியவர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.