வடக்கில் 24 காதம் (North 24 Kaatham) – பயணம் செய்யும் மாயம் | இரா. இரமணன்

North 24 Kaatham Malayalam Movie Review By Era. Ramanan. வடக்கில் 24 காதம் - பயணம் செய்யும் மாயம் | இரா. இரமணன்2013ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித் திரைப்படம். அனில் ராதாகிருஷ்ணன் மேனன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். அவரது முதல் படமும் கூட. பஹத் பாசில், நெடுமுடி வேணு, சுவேதா ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாள மொழிப் படங்களுக்கான தேசிய விருது பெற்றுள்ளது. மலையாளத்தில் காதம் என்றால் 16 கிலோமீட்டராம். தமிழில் 26கிமீ என்று தோன்றுகிறது.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஹரி OCD (Obsessive compulsory disorder) எனும் குறைபாடு உடையவர். இவர்கள் கைகளை மீண்டும் மீண்டும் கழுவுவது, எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் இருக்க வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களைப் பெற்றிருப்பர். ஹரி கூடுதலாக யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை; யார் குறுக்கிட்டாலும் கடுமையாக கோபித்துக் கொள்கிறார். அவருடைய பெற்றோர்களும் அவரிடம் எதுவும் சொல்வதில்லை. அலுவலகப் பணியாக திருவனந்தபுரம் செல்லும்போது அந்த ரயில் பெட்டியில் ஆசிரியர் ஒருவரும் சமூக செயற்பாட்டாளப் பெண்மணி ஒருவரும் பயணிக்கின்றனர். ஆசிரியரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்ற தகவலினால் அவர் பயணத்தின் பாதியிலேயே இறங்குகிறார். அவருக்கு உதவி செய்வதற்காக நாராயணி என்கிற அந்தப் பெண்ணும் இறங்குகிறாள்.

அவருடைய கைபேசியைக் கொடுப்பதற்காக ஹரியும் இறங்குகிறான். ரயில் சென்றுவிடுகிறது. அவர் உடனடியாக கோழிக்கோடு சென்று மனைவியைப் பார்க்க வேண்டும். அன்று கேரளாவில் முழு அடைப்பு என்பதால் அவர்களால் பேருந்திலோ ரயிலிலோ பயணிக்க முடியவில்லை. நடந்தும் பலவிதமான வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் ஹரியும் அவர்களுடன் பயணிக்கிறான். பல அனுபவங்கள் ஏற்படுகிறது. இறுதியில் கோழிக்கோடு அடையும்போது ஆசிரியரின் மனைவி இறந்துவிடுகிறார். அவரும் அவரது மனைவியும் இடதுசாரி அரசியல்வாதிகள் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெருந்திரளாக திரண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். ஹரியும் நாராயணியும் திரும்புகிறார்கள். இந்த அனுபவங்களால் ஹரி இயல்பான மனிதனாகிறான். அவனுக்கும் நாராயணிக்கும் காதல் மலர்வதோடு கதை முடிகிறது.

North 24 Kaatham: A film full of optimism

தன்னுடைய மனைவியை முதல் முதலில் சந்தித்து காதல் மலர்வது, அவள் உடல் நிலை குறித்து கவலைப்பட்டுக்கொண்டே பயண அனுபவங்களை உற்சாகமாக ஏற்றுக்கொள்வது என நெடுமுடி வேணு சிறப்பாக செய்திருக்கிறார். மனைவியின் உடலைப் பார்த்து அதிர்ந்துபோவது, அந்த நேரமும் கட்சிக் கொடியை எடுத்து வந்து போர்த்துவது என மிக நெகிழ்வான தருணங்கள் நம்மை உணர்வுபூர்வமாக ஒன்ற வைக்கின்றன. ஒரு நவீனப் பெண் குறித்த சித்தரிப்பை இயக்குனர் வெகு இயல்பாக காட்டி செல்கிறார். ஆசிரியர் அதிர்ச்சியினால் சரிந்து விழும்போது சக பயணியான ஹரியை உதவிக்கு அழைக்கிறாள்.

அவன் வராதபோது தானே அவரை ரயிலை விட்டு இறக்குவது, பக்கத்து நகருக்கு செல்ல ஆயிரம் ரூபாய் கேட்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் கடுமையாக பேரம் பேசுவது, உதவி செய்வது போல தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் இளைஞனை செருப்பு பிய்யுமாறு அடிப்பது, ஹரியின் தொட்டால் சுருங்கி இயல்பை ஒரு உதட்டு சுழிப்புடன் புறம்தள்ளுவது என அந்தப் பாத்திரம் சிறப்பான படைப்பு. ஹரியின் பாத்திரத்தை, சிடுசிடுப்பது, வெகுளியாகத் தோன்றுவது, பயப்படுவது, அதே சமயம் கூட வந்த பெண்ணுக்கு ஆபத்து எனும்போது வேகப்படுவது என பல உணர்ச்சிகளை பஹத் பாசில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். திசையை கண்டுபிடிப்பது, காரை ரிப்பேர் செய்வது என அந்த உளவியல் நோயாளிக்குள்ளும் திறமைகள் இருப்பதை காட்டியிருப்பதும் ஒரு நல்ல விஷயம்.

பயணத்தின்போது ஒரு நாடோடிக் குடும்பத்தின் வேனில் பயணிக்கிறார்கள். கணவன் தமிழன்; மனைவி குஜராத்தி. இருவரும் மற்றவர் மொழி பயிலாமலேயே குடும்பம் நடத்துகிறார்களாம். சற்று நெருடலாக இருக்கிறது. அதேபோல் அவருடைய தம்பியின் பாத்திரமும் சற்று செயற்கையாக தோன்றுகிறது. முதல் படத்திலேயே ஒரு சிறப்பான இயக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். 2010இல் தொடங்கிய புதுவகை மலையாள திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்கிறது விக்கிபீடியா.

இரா. இரமணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.