நொறுங்கிய குடியரசு - அருந்ததிராய்

பழங்குடியினரின் நலன் சார்ந்த மூன்று கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது. “தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மாவோயிஸ்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல்” என்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றிய ப.சிதம்பரமும் மாவோயிஸ்டுகள் மீது அதே போன்ற பார்வையைக் கொண்டிருந்தவர்.

நாகரிகமான மனித வாழ்வில், ஜனநாயக தேசத்தில் பழங்குடியினர் மீதான வலுக்கட்டாயமான இடப்பெயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகள் மிகவும் வருத்தம் அளிப்பவை. சமகால சகிப்பின்மை, மதவாதம் கோலோச்சும் சூழலிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இக்கட்டுரைகள் பெரும் அதிர்ச்சியை அளித்தும், சாமானிய மனசாட்சியை தட்டியெழுப்புவதாகவும் அமைகின்றன.

பழங்குடியினரால் கடும் உழைப்புடன் வனத்திலிருந்து சேகரிக்கப்படும் ‘தேந்து’ இலைகள் கட்டு ஒன்றுக்கு மூன்று பைசாவுக்கு அந்நாட்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்தபின் ஆறு பைசாவாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பழங்குடியினர் பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். சுரண்டிக் கொழுத்தவர்கள் கோடிகளில் புரள, அப்பாவி மக்களுக்கு மிஞ்சியது மிகமிக சாதாரணமான வாழ்வாதாரமே.

வனங்களின் காவலர்களான பழங்குடியினர் ஈவிரக்கமின்றி வேட்டையாடப்பட்டதுடன், வாழ்விடங்களை விட்டு கருணையின்றி துரத்தப்பட்டுள்ளனர்.

பாக்சைட் தாதுவினை வெட்டி சூறையாட மலைகள் அழிக்கப்படுகின்றன. ஒரு டன் அலுமினியம் தயாரிக்க 6 டன் பாக்ஸைட் தாது தேவைப்படுவதும், அத்தகைய தயாரிப்புப் பணியை மேற்கொள்ள சுற்றுச்சூழலை பாதிக்காத வழிமுறைகள் ஏதுமில்லை என்பதும், இந்நூல் அளித்திடும் நுண்மையான தகவல்கள்.

அலுமினியம் தயாரிப்புப் பணிகளின் போது மிக அதிக அளவில் நீரும் தேவைப்படுகிறது. இவ்வளவு பிரயத்தனத்துடன், உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் அலுமினியம் ஆயுதங்களைத் தயாரிக்க வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் காரணங்களுக்காக வளர்ச்சி அடையாத நாடுகளை அலுமினியத் தேவைக்கு குறி வைக்கின்றன வளர்ந்த நாடுகள். தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நம்மிடமே வணிகம் செய்யப்படுவதும் மற்றுமொரு கொடூரம்.

‘தோழர்களுடன் ஒரு நடைப் பயணம்’கட்டுரை கானகத்திலேயே அலைந்து திரிந்தது போன்ற வாசிப்பு அனுபவத்தை அளித்தது. அறிவுச் சுடராகத் திகழும் அருந்ததிராய், மார்க்சிய சிந்தனையுடன், வியக்க வைக்கும் எழுத்தாற்றலும் பெற்றிருக்கிறார். அவரது தீர்க்கமான பார்வை, அரசு, அதிகார வர்க்கம் மீதான கடுமையான விமர்சனங்களை மட்டுமல்ல, மாவோயிஸ்டுகள் மீதான குறைகளையும் நடுநிலையுடன் முன் வைப்பவை.

பாக்சைட் தாதுவிற்காக மலைகள் அழிக்கப்பட்டதும், அலுமினியத் தயாரிப்பு தேவைகளுக்கான நீர், மின்சாரம் போன்றவற்றிற்காக பெரும் அணைகள் கட்டப்பட்டதும், எதிர்ப்பாளர்கள் மிகமிக சுலபமாக ஒடுக்கப்பட்டதும், பெரும் அதிர்ச்சி அளிப்பவை.

முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்கள் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் வெள்ளந்தியான பழங்குடி மக்களை கருணையின்றி அழித்துவிடத் துடிக்கின்றன.

மக்களின் பேராசையைத் தூண்டி விட எண்ணுகிறது அதிகாரவர்க்கம். பேராசை என்றால் என்னவென்றே அறியாத பழங்குடியினருக்கு தொலைக்காட்சி அறிமுகம் செய்துவிட்டாலே போதுமானது, போன்ற செய்திகள் எல்லாம் இந்நூலில் இடம்பெறுகிறது.

தீவிர செயல்பாட்டாளரான அருந்ததிராயின் அறச்சீற்றம் கட்டுரைகளில் விரவியுள்ளது. நூலைத் தமிழாக்கம் செய்த பூரணச்சந்திரனின் பணி மிகவும் சிறப்பானது.

 

நூலின்  தகவல்கள் 

நூல் : நொறுங்கிய குடியரசு

ஆசிரியர் : அருந்ததிராய்

தமிழில் : க.பூரணச் சந்திரன்

 பதிப்பகம் : காலச்சுவடு

பக்கங்கள் : 191 

விலை :  ரூ.225

 

எழுதியவர் 

சரவணன் சுப்ரமணியன்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “அருந்ததிராய் எழுதிய “நொறுங்கிய குடியரசு” – நூலறிமுகம்”
  1. இது போன்று அனைத்து தரப்பு சாதாரண உழைப்பாளிகள் எப்படி வாழ்கிறார்கள் சுரண்டப்படுகிறார்கள் என சமூகத்திற்கு எடுத்து விலக்கிக்கொண்டு கிளர்ச்சியை எதிர்ப்பு போராட்டத்தை வெளிகொணரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *