நீங்கள் சிறந்த பேச்சாளராக விருது பெற்றதற்கு இந்த பாராட்டு விழா நடைபெறுகிறது, இதன் மூலம் நீங்கள் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை பத்திரிக்கையாளர்கள்  கவிதாவிடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெரும் கூட்டத்தின் இடையே அவள் பதில் சொல்ல தொடங்கும்போது கீங் கீங் என்ற அலாரம் அடிக்க தொடங்கியது நான்கு மணியை காட்டியது கடிகாரம். கனவா? கனவிலாவது என் ஏக்கம்  நிறைவேறுகிறதே என்ற பெருமூச்சுடன் தன் அன்றாட பணிகளை செய்ய தொடங்கினால் கவிதா.

மனதினில் பள்ளிப் படிப்பின் போதே பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பேசிய பல பரிசுகளைப் பெற்ற போது தமிழாசிரியரும், நண்பர்களும் நீ ஒரு சிறந்த பேச்சாளராக வரப்போகிறாய் என்று சொன்னதை நினைத்து ஒரு சிறு புன்னகையுடன் அந்த பழைய நினைவுகளிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தாள்.

அப்பாவின் உடல்நிலையை காரணம் காட்டி கல்லூரி முடித்தவுடன் ஒரே மாதத்தில் திருமணம், திருமணத்திற்குப் பிறகு ஏக்கங்களை  தனக்குள்ளே புதைக்கும் படி ஆனதை  நினைத்து அடிக்கடி வருந்துவதை தவிர கவிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

என்னங்க காபி என்று தன் கணவரை எழுப்பினால், காபியை குடித்துவிட்டு  அவரும்  இன்னிக்கு என் ஆபீஸ்- ல்  மீட்டிங் அதனால் லஞ்ச்  வேண்டாம் அவங்களை அரேஞ்ச் பண்ணிப்பாங்க  என்று சொல்ல, நேற்றே சொல்லி இருக்கலாமே சொன்னால் அதற்கு ஏற்றார்போல் சாதம் வைத்து இருப்பேன் ல்ல என்று சொல்ல, உடனே அவள் கணவர் குமாரோ, ஏன்  இந்த மகாராணி கிட்ட சொல்லிட்டு தான் நான் மீட்டிங் கூட அட்டென்ட் பண்ணனும் போல என்று சொல்லிக்கொண்டே குளியலறையில் நுழைந்தான். இதைக் கேட்ட கவிதாவிற்கு பெண்களின் அடிமைத்தனம் என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பில் பேசிய பேச்சு போட்டியில் தான் பேசி முதல் பரிசு பெற்றதை நினைத்து மனதிற்குள் அழுது கொண்டிருந்தால், என் ஏக்கங்களை நான் யாரிடம் சொல்வது என்ற சிந்தனையுடன் கவிதா தன் மகனின் அறைக்கு சென்று பிரணவ் சீக்கிரம் எழுந்திரு உன்னுடைய ஃபேவரைட் பூஸ்ட் பிரஷ் பண்ணிட்டு குடிச்சுக்கோ குளிச்சிட்டு கிளம்பு, அம்மா டிபன், லன்ச் எல்லாம் பண்ணிட்டேன் ரெடியா இருக்கு. அம்மா, இன்னைக்கு என் ஃபிரண்டு  அசோக்கு பர்த்டே அதனால இன்னிக்கு அவனோட ட்ரீட் மா என்று சொல்ல, ஏன்டா இதை நேற்றே சொல்லக்கூடாதா என்று வாயை எடுத்த கவிதா ஏனோ சரிப்பா என்று நிறுத்திவிட்டாள்.

தனக்கு ஆதரவாய் தோன்றும் ஒரே உறவு தன் மகளிடம் சென்றால் அவள் பிளஸ்டூ படிக்கிறாள் நாலரை மணிக்கே  எழுந்து படித்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா, டீ தம்ளரை நீட்டிக்கொண்டே டைம் ஆகுதுமா  என்று கவிதா சொல்ல அவளும் இதோ அஞ்சு நிமிஷத்தில்  கிளம்புறேன்  அம்மா என்று சொல்லிக்கொண்டே பையில் புத்தகங்களை  வைத்து பள்ளி செல்ல ஆயத்தமானாள்.

எல்லோரும் வீட்டிலிருந்து கிளம்பியவுடன்  சற்று அமைதியாக உட்கார்ந்த கவிதாவிற்கு அமைதி தன் பழைய நினைவுகளில் சென்றது.

என்னங்க நான் பேச்சுப்போட்டியில் கலந்து நிறைய பரிசு வாங்கியிருக்கிறேன் அதையெல்லாம் அம்மா வீட்டில் இருக்கு அதை இங்கே எடுத்து வரவா என்று கவிதா திருமணமான புதிதில் கேட்டதையும் அதற்கு குமார் அதெல்லாம் உனக்கு இனிமேல் எதுக்கு போதும் என்னையும் எங்க அம்மா, அப்பா, இன்னும் நமக்குன்னு குழந்தை குட்டி வரும் அதை கவனிச்சா போதும், போ போய் சூடா ஒரு காபி போட்டு தா தலை வலிக்குது என்று சொன்னது இன்று நினைக்கையிலும் அவள் கண்களில் கண்ணீர் வரத்தான் செய்தது.

ஏனோ அன்று அவள் கண் முன்னே எல்லாம் வந்து சென்றதை அவளால் தடுக்க முடியவில்லை. கனவு கனவாகவே போனதற்கு காரணம் பெண்ணினம் என்றால் சமையலறையும் வீட்டில் உள்ளவர்களை கவனிப்பது மட்டும் என்று நினைக்கும் சில ஆண்களினாலா? கடவுள் எழுதிய என் தலைவிதியா? திருமணத்திற்குப் பின் என் ஆசைகளை வாழ்ந்து காட்டாமல் என் மனதிற்குள் புதைத்த நான் தானா? என்ற கேள்விகளை சுமந்தபடி அன்றைய பகல் பொழுது கழிந்தது.

மாலையில் அவளது கணவர் வீட்டிற்கு வரும்போதே ஏதோ டென்ஷனாக இருப்பது போல் அவள் உணர்ந்தால் உடனே ஒரு கப் காபி எடுத்துக்கொண்டு அருகில் சென்றாள். ஏங்க ஏதாவது பிரச்சனையா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க என்று கவிதா கேட்க, ஆமா பிரச்சனைதான் ஆனா உன்கிட்ட சொல்லி என்ன யூஸ் என்று சொல்ல இதை கவனித்துக் கொண்டிருந்த ப்ரீத்தா ஏம்பா என்ன பிரச்சனைன்னு சொன்னாதானே அதை தீர்க்க முடியுமா? முடியாதா? என்று சொல்ல முடியும் னு சொல்ல, ஏனோ தன் மகள் கேட்கும்போது சொல்லாமல் இருக்க முடியவில்லை, உடனே தன் பிரச்சனைகளை கூறினார். அதாவது இன்னிக்கி நடந்த மீட்டிங் அப்போ ஒரு ப்ரோக்ராம் ஒன்னு பண்ண சொன்னாங்க அது கொஞ்சம் டஃப் டாஸ்க்கா இருந்தது நாளைக்கு சப்மிட் பண்ணனும் என்று குமார் சொல்ல உடனே பிரீத்தா அம்மாவுக்கு ப்ரோக்ராமை பற்றி தெரியும் தான் அப்பா கொஞ்சம் அவங்ககிட்ட கேட்கலாமே என்று சொல்ல, நல்லா சொன்ன போ உங்க அம்மா வா அவளுக்கு என்ன தெரியும் எப்போ பார்த்தாலும் எதையோ பறிகொடுத்தவ மாதிரி எதோ யோசனையோட அமைதியா வே இருப்பா என்று குமார் சொல்ல, ஆமாம் பிரீத்தா அம்மா கு லாம் அந்த அளவுக்கு நாலெட்ஜ் இல்ல என்று பிரணவும் சேர்ந்துகொண்டான்.

உடனே ப்ரீத்தாவிற்கு கோபம் வந்தது அப்பா நீங்கள் அம்மாவை எங்க முன்னாடியே இப்படி பேசறது நால தான் பிரணவும் இப்படி பேசறான் என்று சொல்லிக்கொண்டே அம்மாவிடம் திரும்பி அம்மா இதை உங்களால் செய்ய முடியும் நீங்கதான் இத செய்யறீங்க, எத்தனை முறை நீங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் ல ப்ரோக்ராமிங் ப்ராஜெக்ட் கு எனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அப்பாக்கும், பிரணவுக்கும் நீங்க தான் உங்கள் திறமையை ப்ரூஃப் பண்றீங்க ஓகேவா என்று சொல்லியவுடன் தன் கணவர் குமார் ரை பார்த்தால் அவரும் மகள் சொன்னதால் அதை பற்றி சொல்ல கவிதா கோ இது கனவா?இல்லை நிஜமா? என்று தோன்றினாலும் தன் கணவர் சொல்வதை நன்றாக கவனித்தாள்.

அன்று கொஞ்சம் நேரம் ஆனாலும் அதை முடித்துவிட்டு தான் உறங்க சென்றாள் கவிதா. காலையில் எழுந்து எப்பொழுதும்போல் தன் கணவரை காபி கொடுத்து எழுப்பி விட்டாள். ஏன் கவிதா என்னை நான் சீக்கிரமா தானே எழுப்பிவிட சொன்னேன் எப்போதும் போல எழுப்பிவிட்டு இருக்க ப்ரோக்ராமிங் இன்னும் முழுசா முடிக்கவில்லை இன்றைக்கு கண்டிப்பாக சப்மிட் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அவள் நான் அதை முடித்து விட்டேன் என்று சொன்னவுடன் குமார் ஆச்சரியமாக நம்பாமல் பார்த்தான்.

பிறகு ரிப்போர்ட்ஸ் பார்த்துவிட்டு அவனுக்கு மிகவும் சந்தோசம் முதன் முறையாக ரொம்ப நன்றி கவிதா. நீ எனக்குப் பெரிய ஹெல்ப் பண்ணி இருக்க தெரியுமா என்று சொன்னதை கேட்டவுடன் கவிதாவின் சந்தோஷத்திற்கும் அளவே இல்லை.

எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்பது இந்த சின்ன சின்ன ஆதரவும் பாராட்டுதலும் தானே!

அன்று மாலை மிகவும் சந்தோஷத்துடன் குமார் வீட்டிற்கு வந்து பிள்ளைகள் முன் என்ன மன்னிச்சிடு கவிதா நான் பண்ணது தப்புதான் ஆனா உன்ன பத்தி புரிஞ்சிக்காம உன்ன ரொம்ப மட்டமா பேசி இருக்கேன், இனிமே இப்படி பேசமாட்டேன். பிள்ளைங்க முன்னாடியே எத்தனையோ முறை உன்னை மட்டம் தட்டி பேசி இருக்கேன் அப்போது எல்லாம் ப்ரீத்தா தான் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவா. உன்னோட திறமை எல்லாம் அவளுக்கு தான் புரிஞ்சிருக்கு, நான் காது கொடுத்துக் கூட கேட்காதது என் தப்பு தான் என்று சொல்ல, பிரணவும் சாரி மா நான் கூட உங்க மனச கஷ்ட படுறமாதிரி பேசிருக்கேன் என்று சொல்ல, உடனே குமார் நானும் நீ அப்படி நடந்துகிட்டது ஒரு காரணம் தானே உன் முன்னாடியே அம்மாவை புரிஞ்சிக்காம பேசியிருக்கேன், இனிமேல் நானும் என்னை மாத்திக்கணும் என்று சொல்லிவிட்டு சரி, இன்னிக்கு எல்லோரும் சேர்ந்து டின்னருக்கு வெளியே போகலாம் என்று குமார் முடிக்க எல்லோர் மனதிலும் சந்தோஷமும் நிம்மதியும் தவழ்ந்தது.

எல்லோரும் சேர்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருக்கும்போது, அப்பா அம்மாக்கு ஒரு பெரிய ஆசை இருக்கு தெரியுமா என்று ப்ரீத்தா சொல்ல, தெரியலமா என்று குமார் சொல்லிக்கொண்டே கவிதாவின் பக்கம் திரும்பி நீயே சொல்லு உன்னுடைய ஆசை என்னவென்று என்று கேட்க கவிதாவும் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் எனக்கு நல்ல பேச்சாளர் ஆகணும்னு ஆசை ங்க கல்யாணமான புதிதில் உங்க கிட்ட சொன்னேன் எங்க வீட்டுல நிறைய பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன் அதிலிருந்து பரிசு எல்லாம் எங்க வீட்டுல இருக்கு, எடுத்துட்டு வர வாங்க னு கேட்டேன். நீங்க அப்ப வேண்டாம்னு சொன்னீங்க, என்று கவிதா சொல்ல குமாரின் முகம் மாறியது நான் எவ்வளவு சுயநலத்துடன் இருந்திருக்கிறேன் என்று எண்ணிக்கொண்டே கவிதா உன் ஆசை என்னவோ அதற்கான முயற்சி எடு. நாங்கள் உனக்கு பக்கபலமாக இருப்போம் என்று சொல்ல தன் ஏக்கம் நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையுடன் வீட்டினுள் நுழைந்தாள் கவிதா.

– சுபாஸ்ரீ. செ

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். One thought on “ஏக்கம் சிறுகதை – சுபாஸ்ரீ. செ”
  1. Excellent article….many girls’ dreams are burried without help or support from her husband……This article to b translated to all Indian languages n published 🥳🎉🥳🎉🥳🎉🥳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *