பள்ளிசெல்லா கற்றல் – ச.ரதிகா.

 

கொரானாத்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற முதன்மைச் செய்தி முக்கியத்துவம் அற்று போவதற்கு பல நிகழ்வுகள் நிகழ்ந்திருந்தாலும்இருக்கிற இடம் தெரியாமல் இருந்துட்டு இருக்கிற மாணவர்களை தேடி குறிவைத்தே பலர் தாக்குகிறார்கள். கொரானாவால் ஏற்படும் மரணங்களை மனிதர்களாக மதிக்காமல் வெற்று எண்ணிக்கையாக கணக்கெடுக்கத் தொடங்கி வெகு காலமாயிற்று.அதனால் தான் ஓயாமல் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்விகளும் ஆலோசனைகளும் வஞ்சமின்றி உலாத்துகின்றன. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்”  என்ற ஈழத்து கவிஞரின் ஆசை நம் தமிழ் சமூகத்திற்கும் வந்துவிட்டது போலும். உயிர்/ கல்வி  இதில் எது மலிந்துவிட்டது அல்லது இரண்டுமே முக்கியத்துவம் பெற்று விட்டதா என்ற ஐயம் எழுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்ற குரல்கள் இன்னும் #save educationஎன்று டிரண்ட் ஆக்காமல் இருப்பது மட்டும்தான் தற்காலிக நிம்மதி. கல்வி என்பது பாட புத்தகத்தில் தான் உள்ளது என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இது.

நம்முடைய கல்வி அமைப்பு குழந்தைகளிடமிருந்து புத்தக வாசிப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டது. குழந்தைகளுக்கு  பிடிக்காதவற்றை பட்டியல் இட சொன்னால் முதல் மூன்று இடங்களில் தவறாது புத்தகம் இடம் பிடித்துவிடும். அந்த அளவு புத்தகங்களை குழந்தைகள் வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பை விருப்பமாக மாற்ற சிறு முயற்சியை கூட நாம் செய்ய விரும்புவதில்லை. பல பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிக்க முடியவில்லை எப்படா பள்ளி திறக்கும் இருக்கு என்று கேட்பது வேடிக்கையாக உள்ளது. கட்டிவைத்து சமாளிப்பதற்கு அவர்கள் நம் வீட்டுச் செல்லப் பிராணிகள் அல்ல வீட்டு செல்வங்கள் அதற்காக பணத்தை அடை காப்பது போல் காக்கவும் வேண்டாம்.அவர்களை இந்த காலகட்டத்தில் ஆவது அவர்களாக வாழவிடுங்கள். குழந்தைகளாக வளர விடுங்கள்.

பள்ளி பார்வையின் போது தலைமை ...

இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ஆண்கள் ஏதோ வீட்டு சிறையில் கைதிகள் போல அடைப்பட்டுகிடப்பதாகவும் பெண்கள் ஓய்வற்ற வேளைகளில் அவதியுறுவதாகவும்  சமூக வலைத்தளங்களில் புலம்புகிறார்கள் அல்லது புகார் தெரிவிக்கிறார்கள். குடும்பம் என்பது கணவன் மனைவி குழந்தைகள் மட்டுமே என்றான நிலையில் தற்போது  குடும்பத்தில் குழந்தைகளின் மனநிலை  என்ன என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியே. இவ்வுலகில் அதிஅற்புதமான ஒரு உலகம் உண்டு என்றால் அது குழந்தைகளின் உலகமே.  சுவாரசியமான அவ்வுலகில் நம்மால் நுழையக்கூட முடியவில்லை அல்லது முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை. அதில் எவ்வித ஈ- பாஸ் இன்றி  தாத்தா பாட்டிகள் எளிமையாக நுழைந்து விடுகிறார்கள். அதனால் தான் நமக்கு இருவரையும் சமாளிக்கத் தெரிவதில்லை. சிறுவயது முதல் விடுதியிலேயே காலம் கழித்த பல குழந்தைகளுக்கு இக்காலம் அவர்கள் வாழ்வில் கிடைத்த உன்னத அனுபவம். அவர்களுக்கு  வீட்டு சூழல் புதிதாக தெரியும். இப்படிப்பட்ட அசாதாரணமான சூழல் மீண்டும் வராது வரவும் கூடாது. ஆனால் இந்த வாய்ப்பை மிகச்சரியாக பெற்றோர்கள் பயன்படுத்த வேண்டிய தருணமிது. கற்றுக் கொடுப்பதற்கும் கற்றுக்கொள்வதற்கும் ஏராளமானவை குழந்தைகளிடம் உள்ளன.

கற்றல் என்பது நாம் சாகும் வரை நம்மோடு இணைந்தே இருக்கக்கூடிய அனிச்சை செயலாகும். அதை பாடப்புத்தகத்தில் அடக்க இயலாது அடக்கி வைப்பதும் கூடாது .மற்ற நாடுகள் மாநிலம் என்று கல்வியில் ஒப்பீடு தேவையில்லை தனிமனித விருப்பு வெறுப்புகளை போலத்தான் கல்வியும் கற்றலும். குழந்தைகளுக்கு விருப்பமானவற்றை கண்டறியுங்கள். கதைகள் கூற அவர்களிடம் கதைகள் கேட்க என்று தொடங்கினால் எவ்வளவு நாட்கள் லாக்டவுன் போட்டாலும் நமக்குப் போதாது. குழந்தைகள் சொல்பேச்சு கேட்பதில்லை என்றால் கேட்கும்படி நாம் சொல்லவில்லை என்பதே நிதர்சனம். அதற்கு முன்னர் நாம் கேட்க வேண்டும் அவர்கள் பேச்சையும் மற்றவர்கள் பேச்சையும்.நாம் குழந்தைகளை கட்டுப் படுத்திக் கொண்டே இருக்கிறோம் முதலில் அந்த பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 1 - 8 வகுப்பு வரை உள்ள ...

குழந்தைகளுடன்இணைந்து நாமும் சிரிக்க ,சிந்திக்க, ரசிக்க ,அனுபவிக்க வேண்டும் .இப்படி நம்மால் அவர்களோடு இணைய விடாமல் தடுக்க நம்மிடம் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் குழந்தைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரே பதில் குழந்தைகள் மட்டும்தான். இம்முறை வீட்டில் பாடத்தையும் பாடத்திட்டத்தையும் குழந்தைகளே முடிவு செய்யட்டும் அது இசைக்கச்சேரி ,ஆட்டம் பாட்டம் ,ஓவியம், நடிப்பு ,மிமிக்ரி, கதைகூறல்,கட்டுரை ,கவிதை,வாசிப்பு, எழுத்து பயிற்சி, விளையாட்டு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவற்றோடு சமையல், துவைத்தல், தூய்மைப் பணி ,அலங்காரப்பணி ஆகியவற்றையும் வேலையாக அல்ல கலைகளாக கற்றுக்கொடுங்கள்.இதில் அவர்கள் மிகவும் விரும்பும் ஆன்லைன் கேம் அவசியம் இருக்கட்டும் .ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக இல்லாமல் சுழற்சியாக இவைகள் அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றையும் அவர்களே தேர்வு செய்யட்டும். ஆலோசனை மட்டுமே கொடுங்கள் முடிவை அவர்கள் கையிலேயே விட்டுவிடுங்கள்.

புதியதாக ஒரு பொருள் வந்தால் பழையதை தூக்கி எறிவதுதான் பெரும்பான்மை குழந்தைகளின் வழக்கம் அப்படி இருக்கும் பொழுது விடாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி இருந்தால் அதைவிட விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. சுதந்திரத்தை வழங்குங்கள் அது எல்லை மீறாமல் நடக்கவும் கற்றுக்கொடுங்கள்.  கட்டாயம் அத்துமீறல்கள் நடைபெறும் அதுவும் அனுபவம் ஆகட்டும் சுயமாக கற்று தெளிவாகட்டும்.

மதிப்பெண்களுக்காக கற்காமல் மனிதனாக வாழ கற்கட்டும். உங்களிடமிருந்து கற்கட்டும். உங்களைப்பற்றி கற்கட்டும். சமுதாயத்திடமிருந்து கற்கட்டும் சமுதாயத்தோடு வாழ கற்கட்டும். சமுதாயத்தை மாற்ற கற்கட்டும். பொருளாதார பாதிப்பு ஒவ்வொரு குடும்பத்தையும் அசைத்துப் பார்க்கும் இக்காலகட்டத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும்  சில பெற்றோர்களுக்கு சிறு துரும்பாகவும் பலருக்கு பெரும் பங்காவும் கட்டாயம் இக்குழந்தைகள் திகழ்வார்கள். இனியாவது சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கேள்விகேட்டு கற்றறியும் மாணவர்களாக மாற்றி அனுப்புங்கள். கொரானா காலகட்டம் முடியும் பொழுது பல குழந்தை தொழிலாளர்களை தடுக்க நிச்சயம் #save students என்ற உங்களின் குரல் ஒலிக்க வேண்டும். அதுவரை கற்றுக் கொடுப்போம் கற்றுக்கொள்வோம் குழந்தைகளுக்கு குழந்தைகளிடமிருந்து.

ச.ரதிகா.