சாமியாடி சித்திரை
செத்த சடங்கு முடிஞ்சி
தீட்டுக்கழித்தபின்
பிள்ளை ராஜேந்திரன் மீதே
இறங்கிக்கொண்டது
அருள் வாக்கு சொல்லி
ஊர் காக்கும் அம்மன்…..!
ஆடி மாச…
மூன்றாம் வார கூழுற்றுக்கு
ஆத்தங்கரையோரம்
நெடு நேரம்
பம்பையடித்தும் பாட்டுப்பாடியும்
தாமதமாய்த்தான்
ராஜேந்திரன் மேல்
இறங்கி வந்தது சாமி…!
கத்திமேல் ஏறி நின்று
ஆவேசமாய் ஆடத்தொடங்கிய
ஆத்தாவிடம்
ஊர் குறித்து அருள்வாக்கு
கேட்டு முடித்தபின்பு…
மஞ்சள் தோய்த்த துண்டு கட்டி
எலுமிச்சை மாலையிட்டு
அம்மனோட மெட்டியணிந்து…
பறைச்சத்தம் பம்பைச்சத்தம்
ஊரின் எல்லைவரை
ஒற்றைச்சுதியில் ஒலிக்க
கோபுரமாய் அலங்கரித்த
அம்மனின் கிரகத்தை சுமந்து
வீதியில் நடந்து வந்து
வீடு வீடாய் வாசல் முன் நிற்கும்போது…
அம்மனை நினைத்துக்கொண்டு
கால்களுக்கு மஞ்சள்பூசி
சூடம் ஏற்றி ஆலம் சுற்றி
வீடு வீடாய் பெண்களெல்லாம்
விழுந்து வணங்கும் நேரத்தில்
ஆவேசம் கூடி
கரகம் நடுங்க உடல் சிலிர்த்து
அம்மனாகவே மாறி நிற்கும்
ராஜேந்திரனுக்கு…
போன வருசம் கல்யாணம் முடிச்சி
இந்த வருசக்கூழுக்கு
தாய் வீடு வந்திருக்கும்
கலையரசி வீட்டருகே
வந்து நிற்கும்போது மட்டும்
தலைக்குடம் நழுவி
தரையில் விழுவதுபோல் சுற்றியது..
அவன் பாதந்தொட்டு மஞ்சள் பூசி
ஆலம் சுற்ற
கலையரசி நிமிர்ந்தபோது
கை நழுவிப்போன
காதலை நினைத்து
கலங்கிப்போயிருந்த
இருவரின் கண்களையும்
கடைசிவரை
கவனிக்கவேயில்லை
பக்திக்குள் கரைந்திருந்த கூட்டம்…!
#சந்துரு…