ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.

நவம்பர் – 29: சர்வதேச ஜாகுவார் தினம் – ஏற்காடு இளங்கோ

சர்வதேச ஜாகுவார் தினம் (International Jaguar Day)

புதிய உலகில் வாழக்கூடிய பெரும்பூனை இனம் ஜாகுவார் (Jaguar) ஆகும். இது பூனைக் குடும்பத்தில் சிங்கம் மற்றும் புலிக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய விலங்காக உள்ளது. இது சிறுத்தைகளை விட பெரியது. இது இந்தியா மற்றும் ஆசியப் பகுதிகளில் இல்லை. ஆகவே தமிழில் இதற்குத் தனியாகப் பெயர் கிடையாது. இருப்பினும் வலியச்சிறுத்தை என அழைக்கப்படுகிறது.

வாழிடம்
ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.
ஜாகுவார்

அமெரிக்கக் கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விலங்கு ஜாகுவார் ஆகும். மெக்சிகோ முதல் அர்ஜென்டினா வரை 18 நாடுகளை உள்ளடக்கிய இலத்தீன் அமெரிக்காவில் ஜாகுவார் காணப்படுகிறது. இந்த இனம் 1900 ஆம் ஆண்டுகளில் இருந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் முற்றிலுமாக அழிந்துவிட்டது.

இதன் விருப்பமான வாழ்விடங்கள் பொதுவாக மழைக்காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகளாகும். இருப்பினும் புதர்களிலும், பாலைவனங்களிலும் வாழ்கின்றன. தற்போது 64,000 ஜாகுவார்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையில் 89 சதவீத ஜாகுவார் அமேசான் நதிப் படுக்கையில் வாழ்கின்றன.

ஜாகுவார்

இதன் அறிவியல் பெயர் பாந்தெரா ஓன்கா (Panthera onca) என்பதாகும். இதில் 3 துணை இனங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் உடல் ஆரஞ்சு முதல் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதில் ரொசெட்டுகள் எனப்படும் ரோஜா போன்ற குறியீடுகள் உள்ளன. இதன் மையத்தில் ஒரு கருப்பு புள்ளியும் இருக்கும். இது புதர் மற்றும் புற்களில் மறைவதற்கு உதவுகிறது.

இது ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சிறுத்தை போன்ற வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஆனால் சிறுத்தைக்கு கரும்புள்ளி கிடையாது. ஜாகுவார் முதுகின் நடுப்பகுதியில் நீண்ட கரும்புள்ளிகளின் வரிசை காணப்படும். தலை மற்றும் கழுத்தில் உள்ள புள்ளிகள் பொதுவாக திடமானவை. வாலில் உள்ள புள்ளிகள் ஒன்றிணைந்து பட்டைகளை உருவாக்கும்.

ஆண் ஜாகுவார் பெண் ஜாகுவார்களை விட பெரியது. இது வால் உள்பட 5.6 அடி முதல் 9 அடி நீளம் வரை இருக்கும். இதன் உயரம் தோள்பட்டை வரை 68 முதல் 75 சென்டிமீட்டர் இருக்கும். இதன் உடல் எடை 68 முதல் 90 கிலோ வரை காணப்படும். தென் அமெரிக்க ஜாகுவார் மத்திய அமெரிக்காவை விட பெரியது. குறிப்பாக வெனிசுலா மற்றும் பிரேசிலில் உள்ள ஜாகுவார் மிகவும் பெரியது.

ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.
ஜாகுவார்

இது நீரில் நன்றாக நீந்தும். இது சிறந்த நீச்சல் வீரர்கள். இது பனாமா கால்வாயை நீந்துவதும் அறியப்பட்டுள்ளது. இது வேகமாக ஓடக்கூடிய விலங்கு. குறுகிய தூரத்திற்கு மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். இது பெரும்பாலும் இரவு மற்றும் அந்தி நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும்.

இது ஒரு மிகப் பெரிய மாமிச உண்ணி. இது இரையைத் துரத்துவதை விட பதுங்கியிருந்து தாக்கும். ஒரே பாய்ச்சலில் விலங்கைக் கடித்துக் கொன்றுவிடும். இதன் கடிதிறன் மிகவும் வலிமை வாய்ந்தது. பாலூட்டிகளின் மண்டை ஓட்டை துளைத்து, மூளைக்கு அபாயகரமான அடியைத் தரும். மான்கள், பறவைகள், முதலைகள், ஆமைகள் மற்றும் மீன்களையும் வேட்டையாடும்.

ஒரு ஜாகுவார் நீந்தும் போது வேட்டையாடிய ஒரு பெரிய விலங்கைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஒரு மாடு போன்ற பெரிய உடலைக் கூட ஒரு மரத்தின் மேலே இழுத்துச் செல்ல முடியும். இது வேட்டையாடிய விலங்கை ஒரு அடர்ந்த புதர் அல்லது வேறு மறைவான இடத்திற்கு இழுத்துச் செல்லும். இது கழுத்து மற்றும் மார்பில் இருந்து சாப்பிடத் தொடங்கும்.

பெண் ஜாகுவார் 1 முதல் 4 குட்டிகளை ஈனும். குட்டிகள் மூடிய கண்களுடன் பிறக்கின்றன. இரண்டு வாரங்களுக்குப் பிறகு கண்கள் திறக்கின்றன. ஆறு மாதங்களுக்குப் பிறகு தாயுடன் வேட்டைக்குச் செல்கின்றன. இரண்டு ஆண்டுகள் வரை தாயுடன் வாழ்கின்றன. இதன் சராசரி ஆயுள் காலம் 11 ஆண்டுகள் ஆகும். உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் ஜாகுவார்கள் 22 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

கருப்பு ஜாகுவார்
ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.
கருப்பு ஜாகுவார்

மெலனின் நிற குறைபாட்டால் கருப்பு நிற ஜாகுவார் பிறக்கிறது. பொதுவாக இது கருப்பு சிறுத்தை என அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது. கருப்பு ஜாகுவார் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாகுவாரில் உள்ள மெலனிச நிறமியில் மெலனோகாட்டின்- 1 ஏற்பி என்பது மரபணுவில் நீக்கப்படுவதால் கருப்பு நிறம் ஏற்படுகிறது. இந்தக் கருப்பு ஜாகுவார் பகல் நேரத்தில் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஆலன் ராபினோவிட்ஸ்

ஆலன் ராபினோவிட்ஸ் (Alan Rabinowitz) என்பவர் ஒரு அமெரிக்க விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் உலகில் 40 காட்டு பூனைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு இலாப நோக்கமற்ற பாதுகாப்பு அமைப்பை நிறுவினர். இது பாந்தெரா கார்ப்பரேசன் (Panthera corporation) என்பதாகும். இதன் தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார். இந்த விலங்குகளின் பாதுகாப்புக்காக இவர் உலகம் முழுவதும் பயணம் செய்தார்.

ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.
ஆலன் ராபினோவிட்ஸ் (Alan Rabinowitz)

இவர் வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் அறிவியல் மற்றும் ஆய்வுப் பிரிவின் நிர்வாக இயக்குனராக 30 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் உலகின் முதல் ஜாகுவார் சரணாலயத்தை நிறுவினார். இது 1986 ஆம் ஆண்டில் பெலிஸின் ஸ்டான்க்ரிக் மாவட்டத்தில் காக்ஸ்காம்ப் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டது. இது காக்ஸ்காம்ப் வனவிலங்கு சரணாலயம் என அழைக்கப்படுகிறது.

இவர் ஜாகுவார் விலங்கு சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார். ஜாகுவார் விலங்குகளைப் பாதுகாக்க குரல் கொடுத்தார். இதன் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை முழுவதும் அர்ப்பணித்தார். ஆகவே இவரை ஜாகுவார் மனிதன் (Jaguar Man) என்று அழைத்தனர். மேலும் வனவிலங்கு பாதுகாப்பின் இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones of Wildlife Protection) என்று மரியாதையுடன் டைம் இதழால் போற்றப்பட்டார்.

அழிவு

ஜாகுவார் ஒரு மூர்க்கத்தனமான விலங்கு. ஆனால் இது பொதுவாக மனிதர்களைத் தாக்காது. 1880 ஆம் ஆண்டில் இருந்து இது வாழும் இயற்கையான வாழ்விட வரம்பில் 50 சதவீதக்கும் அதிகமான நிலப்பரப்பை இழந்துள்ளது. ஜாகுவார் அழிந்து வரும் நிலையில் உள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் கூற்றுப்படி, மனிதர்களின் அச்சுறுத்தல்களை ஜாகுவார்கள் எதிர்கொள்கின்றன.

விவசாயம், தொழிற்சாலைகள், உணவு பண்ணைகள் மற்றும் கால்நடை பண்ணைகள் ஆகியவற்றிற்காக பெரிய அளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக ஜாகுவார்களை வேட்டையாடுகின்றனர். ஆசிய பாரம்பரிய மருத்துவத்தில் ஜாகுவாரின் தோல், பாதங்கள், பற்கள் மற்றும் பிற பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச வியாபாரம் தடை செய்யப்பட்ட போதிலும், இந்த ஜாகுவார் மனிதர்களால் கொல்லப்படுகிறது. எல் சால்வடார் மற்றும் உருகுவேயில் ஜாகுவார் அழிந்து வருகிறது. கயானாவில் இது அழிந்து வரும் உயிரினமாகக் கருதப்படுகிறது. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு 2002 ஆம் ஆண்டில் இது ஒரு அழிந்து வரும் இனமாக அறிவித்தது.

ஜாகுவார் தினம்
ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29- International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.
ஜாகுவார் தினம்

ஜாகுவார் வாழும் பகுதியில் தினமும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஜாகுவார் 2030 மன்றம் (Jaguar 2030 Forum) உருவாக்கப்பட்டது. இதன் 14 நாடுகளின் பிரதிநிதிகள் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூடினர். இந்த மன்றம் ஜாகுவார் 2030 என்ற அறிக்கையை உருவாக்கியது.

இந்த மன்றம் சர்வதேச ஜாக்குவார் தினத்தை முன்மொழிந்தது. இது சர்வதேச அளவில் ஜாகுவார் பாதுகாப்பிற்கான வழிமுறைகளையும் உருவாக்கியது. மேலும் நவம்பர் 29 ஐ சர்வதேச ஜாகுவார் தினம் (International Jaguar Day) ஆக அறிவித்தது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இது சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் ஒரு தினமாகும். ஜாகுவார் விலங்கு வாழாத நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காக்களிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பல்லுயிர் பெருக்கத்திற்கான அடையாளமாக ஜாகுவாரை பிரேசில் நாடு அங்கீகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் தேசிய ஜாகுவார் தினம் கொண்டாடப்படுகிறது.

பாதுகாப்பு

இது உணவுச் சங்கிலியின் உச்சியில் இடம் பெற்ற விலங்காகும். இது பல்லுயிர் பெருகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மெக்சிகோ முதல் அர்ஜென்டினா வரை இதன் வாழ்வை உறுதி செய்ய வேண்டும். முக்கியமாக இந்த விலங்கிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த விலங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே சர்வதேச ஜாகுவார் தினம் உருவாக்கப்பட்டது.

அமெரிக்காவின் மிகப்பெரிய காட்டுப் பூனையைப் பல்லுயிர் பாதுகாப்பிற்கான குடை இனமாக கருதப்படுகிறது. இது நிலையான வளர்ச்சிக்கான சின்னமாகும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டது.

இது ஆஸ்டெக் மற்றும் மாயா நாகரிகம் உட்பட அமெரிக்க பழங்குடி மக்களின் புராணங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இது சுற்றுச்சூழல் அமைப்புகளை உறுதிபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே மனித ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்புகளில் ஜாக்குவார் மற்றும் மனித மோதலைக் குறைக்க வேண்டும்.

இதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றிய அவசியத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விலங்கை வேட்டையாடுவது என்பது சட்ட விரோதமானது ஆகும். ஜாக்குவார் பற்றிய விழிப்புணர்வு சார்ந்த ஆவணப் படங்களும் வெளிவந்துள்ளன. ஆகவே இந்த விலங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு தற்போது மனிதர்களிடம் மட்டுமே உள்ளது.

கட்டுரையாளர்:

ஜாகுவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நவம்பர் 29 - சர்வதேச ஜாகுவார் தினம் (November 29 - International Jaguar Day) ஆக கடைபிடிக்கப்படுகிறது.

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *