மனித வாழ்வின் வாதைமிகு தருணங்களை ஆற்றாமைகளில் முகிழ்ந்திடும் ஏக்கங்களை, பெருந்துயர்களின் தீரா வடுக்களை கால் நூற்றாண்டாக தொடர்ந்த தனது தீவிர எழுத்துகளால் ஆவணப்படுத்தியுள்ளார் தேவிபாரதி. சற்றே விரிவுபடுத்தி எழுதியிருப்பின் தகழியின் ‘கயிறு’ நாவலுக்கு இணையாக வந்திருக்க வேண்டிய நூல் இது. நாவலின் துவக்கப் பக்கங்களில் நொய்யல் கரை தேவநாத்தாள், சங்கிலியங்காட்டுப் பண்ணாடி வீட்டில் தாண்டவமாடுகிறாள். தேவநாத்தாளுக்கு கோயில் எழுப்பப்படுகிறது. நொய்யல் கரையில் கிரிக் கவுண்டரின் காரிச்சியுடனான உரையாடல்கள் விவரிக்கவியலா தூய அன்பினை எடுத்தியம்புபவை.

தான் வியந்து காண்பவைகளைத்தான் போலி செய்ய எண்ணுகிறார்கள் குழந்தைகள். ஆரம்பச் செயல்கள் அளித்திடும் வெற்றிகள், அவரவருக்கான பாதைகளை தீர்மானித்து விடுகின்றன. மாறாக தவறான செயல்களின்போது கிடைத்திடும் துவக்க நிலைத் தோல்விகள் கேலிக்கு ஆளாக்கும்போதும், பாதைகளை மாற்றி நல்வழிப்படுத்தி விடுகின்றன. பூபதியின் ஆளுமை இவ்வாறுதான் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது. வேம்பணக் கவுண்டர் செல்வாக்கான பண்ணாடியாக அரண்மனையில் வலம் வருகிறார். இடையில் தனது செல்வங்களை இழந்தபோதும், உற்சாகமும், கம்பீரமும் குறைந்துவிடவில்லை அவரிடம்.

அத்தகைய குணம் கொண்டவர், சாமியாத்தாளின் அத்துமீறலின்போது குன்றிப் போகிறார். அவளை நிமிர்ந்து பார்ப்பதுமில்லை அவர். தனது செயல் குறித்த எவ்வித குற்ற உணர்வுக்கும் ஆளாகாதவளாகவே இருக்கிறாள் சாமியாத்தாள். நாவலின் ஆரம்பப் பக்கங்கள் சிறு சிறு அத்தியாயங்களாக, நேர்கோட்டில் அல்லாத கதை சொல்லல் உத்தியில் புனையப்பட்டுள்ளன. பொலிகாளை போன்ற குணங்களை உடையவனாக விளங்குகிறான் குமாரசாமி. காமுகனாகவே வலம்வரும் அவன், தனது வரம்பற்ற தீராக் காம களியாட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துகிறான்.

குமாரசாமியின் நிலையை நன்கு உணர்ந்து கொள்ளும் பூபதி, அவனையே பின் தொடர்கிறான். அவனையும் மிஞ்சிய காமுகனாக, சண்டியராக உருவெடுக்கிறான். தனது கல்வி, தெய்வ பக்தி, தனிநபர் ஒழுக்கத்தினால், பிறப்பினால் கிடைத்த தாழ்ச்சியையும் மீறி தலையெடுக்கும் குமரப்ப பண்டிதன், தான் பெற்றுவிட்ட அபிமானங்களுக்கு இணையாக, கொடும் அவலங்களையும் சந்திக்கிறான். ஆண்டான்- அடிமை சமூக நிலைகளை எடுத்துக்காட்டிடும் ராஜா-குமரப்ப பண்டிதன் இடையேயான உரையாடல்கள் அதிர வைப்பவை.

சவுக்கினால் விளாசப்பட்டு, குதிரை லாயத்தில் எறியப்படுபவன், ஆரூடம் பலிப்பதால் மன்னிக்கப்பட்டு, வாழ்வு கிடைக்கப்பெறுகிறான். வைத்தியனாக, ஜோசியனாக, வாத்தியானாக, பன்முக ஆளுமை கொண்டிருந்த போதும், பணிவு அவனிடம் மாறிவிடுவதில்லை. நாவலின் இறுதிப் பகுதியில் கிணறு தோண்டும் படலத்தின் போது மட்டுமே குறிப்பிட்ட ஒரு தருணத்தில் கோபம் கொண்டு அதிர்ச்சி அளிக்கிறான். சாமி எசமாங்களே!, ராசாங்கமே! போன்ற சொற்கள் அக்காலத்திய கொடுமைகளை நினைவுபடுத்தி விடப் போதுமானவை. காரிச்சியின் தங்கை ஸ்தானத்தை வெள்ளியிடம் விரிவாகக் கூறும் சென்னி மூப்பன், வேம்பணக் கவுண்டர் வம்சத்தின் பல ஆண்டுகால நிகழ்வுகளின் நேரடி சாட்சியாக இருக்கிறான்.

தனது பரம்பரை குறித்த அடுக்கடுக்கான அதிர்ச்சிதரும் உண்மைகளை கேட்டறியும் வெள்ளி, நொய்யல் கரையை நீங்கிச் செல்கிறான். ராணுவத்தில் சேர்ந்து விடும் அவன், தனது நிலை குறித்த அதிர்வுகளை குடும்பத்தில் நிகழ்த்துகிறான். நொய்யல் கரையின் மனிதர்களை, அவர்களின் குணாதிசயங்களை மிகையின்றி எழுதிச் செல்கிறார் தேவிபாரதி. நாவலின் மூன்றாம் பகுதி கொங்கு வட்டார வழக்கு பேச்சு மொழியில் நிறைந்துள்ளது. அச்சிறப்பே நாவலின் இலகுவான வாசிப்பை மட்டுப்படுத்தி, கடினப்படுத்தியும் விடுகிறது. இருந்தபோதும் பிடிபடாத பகுதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகையில் புதிய திறப்புகளும் சாத்தியமாகி விடுகின்றன.

அருக்காணியக்கா கதை சொல்லும் பகுதிகள் மாய யதார்த்த வாதங்கள் ததும்பி நிற்கின்றன. பட்டகதை, படாத கதை வகைப்பாடுகளும், பட்ட கதைகளை பெரும் சோகத்துடன் அழுதபடியே கூறும்படியும், படாத கதைகள் சிறிய அளவு பகடி நிறைந்ததாகவும் அமைகின்றன.

காமமும், முரட்டுத்தனமும் நிறைந்த பூபதியுடன் நம்பவியலா சகிப்புத்தன்மையுடன் வாழ நேரிடும் வேலம்மா, எதனால் அப்படியொரு வெறுப்பை, வன்மத்தைத் தனது மருமகள் பாருவிடம் கொண்டிருந்தாள் என்பதுவும், தறிகெட்ட மனிதனாக, நெறியற்றவனாகவே காலம் கழித்த பூபதி, பாருவை மகளாகவே மனதார ஏற்று அன்பு பாராட்டியமையும், மனித குணங்களின் கணக்கில்லா வியப்புகளுள் அடங்குபவை. வைராக்கியம், குரோதம், வெறி, எல்லை அடைதலில் ஏற்படும் வெறுமையுணர்வு நுண்மையுடன் விவரிக்கப்படுகின்றன. பழிவாங்கலின் தணல், ‘நிழலின் தனிமை’ நாவலை நினைவில் கொண்டு வருகிறது.

நீர்ச்சாரை தனது நாகம் பலியாவதை பெரும் சோகத்துடன் அவதானிப்பதும், சாரையின் செயலூக்கமும், உறுதியும் பல பக்கங்களுக்கு விவரிக்கப்படுகின்றன. கிணறு வெட்டப்பட்டு, ஊற்று பெருகி, மகிழ்ச்சியில் அனைவரும் மூழ்கிய வேளையில், மூப்பன்கள் சாரையின் நாகங்களால் பழி தீர்க்கப்படுகின்றனர். குமரப்ப பண்டிதனின் சொல்லை நொய்யல் கரைவாசிகள் வேதவாக்காக எண்ணி மதிக்கின்றனர். வாக்கு பொய்த்து ப் போய்விடுமோ என்ற பதற்றம் நிரம்பியவனாகவே இருக்கிறார் நூறு வயதினை கடந்துவிட்ட குமரப்ப பண்டிதர்.

அழகு மீனாவினால் கவரப்படும் வெள்ளி, பாருவைத் தீண்டாமல் ஏன் விரக தாபத்தில் தவிக்க விடுகிறான்? மகனைத் தேடியலையும் பூபதி, மிகுந்த எச்சரிக்கையுடன் அழகு மீனாவிடம் சொல்லிக்கூடக் கொள்ளாமல் பதறியபடியே ஊருக்கு ஏன் திரும்புகிறார்? தணலாக எரிந்து, வெந்து தணிந்த பாருவை ஆழ்ந்த வருத்தத்துடன் கவனிக்கிறான் வெள்ளி. நாவலெங்கும் நிறைந்திருக்கும் நொய்யல் கரைப் பகுதியின் படங்கள் மற்றுமொரு அழகியல். தன்னறம் நூல்வெளி நேர்த்தியாக, செம்பதிப்பாக இந்நூலினை வெளியிட்டிருக்கிறது. நொய்யலாக தேவநாத்தாளும், தேவநாத்தாளாக காரிச்சியும், காரிச்சி, பாருவாகவும், தோற்றம் கொள்கின்றனர். கரிய நிறத்தினளான காரிச்சி, அனைத்தையும் ஒருங்கிணைத்து வாசக மனங்களில் நீடிக்கிறாள்.

நொய்யல் கரை மனிதர்களின் வாதைமிகுந்த வாழ்வை, கேள்விக்குட்படுத்தி, நுண்மையுடன் உற்றுநோக்கி, புனைவை நேர்த்தியாக அமைத்து, வாசகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் தேவிபாரதி. முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டது போன்று முந்தைய நாவல்களில் இல்லாத அளவுக்கு ‘நொய்யல்’ அதீத தருணங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. தேவிபாரதி என்ற பெருங்கலைஞன் காலத்தின் தீராத பக்கங்களில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளும் அதீத தருணமும் இதுவே.

நூல்: நொய்யல்
ஆசிரியர் : தேவிபாரதி
வெளியீடு : தன்னறம் நூல்வெளி
பக்கங்கள் : 630 பக்கங்கள்

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *